search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணி கேப்டன்கள்
    X
    ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணி கேப்டன்கள்

    டி20 உலகக் கோப்பை பைனல்- ஆஸ்திரேலியா டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு

    டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் வெற்றி பெற்றால் நியூசிலாந்துக்கு அது வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியாக அமையும்.
    துபாய்:

    ஏழாவது டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அமீரகத்தில் கடந்த மாதம் 17-ந்தேதி தொடங்கியது. 16 அணிகள் பங்கேற்ற இந்த கிரிக்கெட் திருவிழாவில் முதல் சுற்று மற்றும் சூப்பர்-12 சுற்று முடிவில் நியூசிலாந்தும், ஆஸ்திரேலியாவும் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன. 

    கோப்பையை வெல்லும் வாய்ப்பில் முன்னணியில் இருந்த இங்கிலாந்து அரைஇறுதியுடன் வெளியேற்றப்பட்டது. விராட் கோலி தலைமையில் பங்கேற்ற இந்திய அணி சூப்பர்-12 சுற்றை கூட தாண்டவில்லை.

    இந்த நிலையில் கோப்பை யாருக்கு? என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி இன்று துபாயில் நடக்கிறது. இதில் நியூசிலாந்து- ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. இப்போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டதில், ஆஸ்திரேலிய அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்கிறது.

    ஆஸ்திரேலிய அணி இதற்கு முன்பு 2010-ம் ஆண்டில் இறுதிப்போட்டி வரை முன்னேறி இங்கிலாந்திடம் கோட்டை விட்டது. நியூசிலாந்து இறுதிச் சுற்றை அடைந்திருப்பது இதுவே முதல் முறையாகும். 

    கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி சூப்பர்- 12 சுற்றில் 4 வெற்றி, ஒரு தோல்வியுடன் அரைஇறுதிக்கு வந்தது.  ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி சூப்பர்-12 சுற்றின் லீக் சுற்றில் 4-ல் வெற்றி, ஒன்றில் தோல்வியுடன் ‘ரன்ரேட்’ அடிப்படையில் அரை இறுதியை எட்டியது. தோல்வியே சந்திக்காமல் வீறுநடை போட்ட பாகிஸ்தானை அரைஇறுதியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா சாய்த்தது.

    உலக கோப்பையை வெல்வதில் இரு அணி வீரர்களும் புது உத்வேகத்துடன் களமிறங்கி உள்ளனர்.  இன்றைய ஆட்டத்தில் வாகை சூடினால் நியூசிலாந்துக்கு அது வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியாக அமையும். மேலும் 2015-ம் ஆண்டு 50 ஓவர் உலக கோப்பை இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியை தழுவியது. அதற்கு பழிதீர்க்க வீரர்கள் தீவிர முயற்சி மேற்கொள்வார்கள். 

    50 ஓவர் உலக கோப்பையை 5 முறை வசப்படுத்தியுள்ள ஆஸ்திரேலியாவுக்கு 20 ஓவர் உலக கோப்பை தான் இன்னும் எட்டாக்கனியாக உள்ளது. அதை வெல்வதற்கு இப்போது அரிய சந்தர்ப்பம் கனிந்துள்ளது.
    Next Story
    ×