search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கும்பிளே
    X
    கும்பிளே

    இலக்கை நெருங்கி தோற்பது பஞ்சாப் அணியின் வழக்கமாகி விட்டது- பயிற்சியாளர் கும்பிளே வேதனை

    ராஜஸ்தான் அணி பந்து வீச கூடுதல் நேரம் எடுத்துக்கொண்டதால் அந்த அணியின் கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு ரூ.12 லட்சத்தை அபராதமாக ஐ.பி.எல். நிர்வாகம் விதித்துள்ளது.
    துபாய்:

    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் துபாயில் நேற்று முன்தினம் இரவு நடந்த பரபரப்பான லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் 2 ரன் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்சை தோற்கடித்தது. இதில் 186 ரன் இலக்கை நோக்கி ஆடிய பஞ்சாப் அணி 4 விக்கெட்டுக்கு 183 ரன்கள் எடுத்து அடங்கியது. கடைசி ஓவரில் வெற்றிக்கு வெறும் 4 ரன்கள் தேவை என்ற நிலையில் கைவசம் 8 விக்கெட்டுகள் இருந்தும் கடும் நெருக்கடிக்கு ஆளான பஞ்சாப் அணி 2 விக்கெட்டை இழந்து ஒரு ரன் மட்டும் எடுத்து பரிதாபகரமாக வெற்றி வாய்ப்பை பறிகொடுத்தது.

    இந்த ஆட்டத்தில் பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் லோகேஷ் ராகுல்-மயங்க் அகர்வால் ஜோடி தொடக்க விக்கெட்டுக்கு 120 ரன்கள் எடுத்தது. ஐ.பி.எல். போட்டியில் இந்த இணை முதல் விக்கெட்டுக்கு 100 ரன்களுக்கு மேல் திரட்டிய 4 முறையும் பஞ்சாப் அணி தோல்வியையே சந்தித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    இறுதி ஓவரை பிரமாதமாக வீசிய ராஜஸ்தான் அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் கார்த்திக் தியாகி, நிகோலஸ் பூரன், தீபக் ஹூடா ஆகியோரின் விக்கெட்டை வீழ்த்தியதுடன், ஒரு ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். அத்துடன் ஆட்டநாயகன் விருதையும் பெற்றார். இந்த ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி பந்து வீச கூடுதல் நேரம் எடுத்துக்கொண்டதால் அந்த அணியின் கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு ரூ.12 லட்சத்தை அபராதமாக ஐ.பி.எல். நிர்வாகம் விதித்துள்ளது.

    போட்டிக்கு பிறகு பஞ்சாப் அணியின் தலைமை பயிற்சியாளர் அனில் கும்பிளே நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், ‘இலக்கை நெருங்கி வந்து தோல்வி அடைவது எங்களுக்கு கொஞ்சம் வழக்கமாகி விட்டது. குறிப்பாக துபாயில் இந்த மாதிரி நடக்கிறது. 19-வது ஓவரில் ஆட்டத்தை முடிக்க வேண்டும் என்பது தான் எங்களது தெளிவான திட்டமாகும். அது தான் எங்களுடைய அணுகுமுறையாகவும் இருந்தது. ஆனால் துரதிருஷ்டவசமாக கடைசி ஓவர் வரை ஆட்டம் சென்றுவிட்டது. கடைசி சில பந்துகளில், அதிர்ஷ்டத்தை பொறுத்தும் எதுவும் நடக்கலாம். கடைசி ஓவரை கார்த்திக் தியாகி வீசிய விதம் பாராட்டுக்குரியதாகும். அவர் சில பந்துகளை ஆப் ஸ்டம்ப்புக்கு வெளியே வைடாக வீசினார். ஆனால் எங்கள் பேட்ஸ்மேன்கள் அதற்கு தகுந்தபடி செயல்படவில்லை.

    இந்த மாதிரி நெருக்கமாக வந்து தோற்கும் பிரச்சினை குறித்து நாங்கள் ஆலோசித்து தீர்வு காண வேண்டியது அவசியமானதாகும். எங்களுக்கு இன்னும் 5 ஆட்டங்கள் இருக்கிறது. இதனால் இந்த தோல்வியால் துவண்டு போய்விடக்கூடாது.’ என்றார்.

    இதையும் படியுங்கள்... ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம்
    Next Story
    ×