என் மலர்tooltip icon

    செய்திகள்

    முகமது ஷமி
    X
    முகமது ஷமி

    இங்கிலாந்து ஆதிக்கத்தால் இந்திய வீரர்கள் சோர்வடையவில்லை: முகமது ‌ஷமி

    லீட்ஸில் இங்கிலாந்துக்கு எதிரான மோசமான செயல்பாடு எங்களை சோர்வுக்கு கொண்டு செல்லாது என வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி தெரிவித்துள்ளார்.
    இந்தியா- இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் போட்டி லீட்சில் நேற்று முன்தினம் தொடங்கியது.  இதில் டாஸ் ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 78 ரன்னில் சுருண்டது. முதல்நாள் முடிவில் இங்கிலாந்து விக்கெட் இழப்பின்றி 120 ரன் எடுத்திருந்தது. நேற்றைய 2-வது நாள் ஆட்டத்திலும் இங்கிலாந்து ஆதிக்கம் செலுத்தியது.

    அந்த அணி வீரர்கள் ரன்களை குவித்தனர். தொடக்க வீரர்களான பர்ன்ஸ் 61 ரன்னும், ஹமீத் 68 ரன்னும், தாவித் மலான் 70 ரன்னும் எடுத்தனர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் மீண்டும் சதம் அடித்தார். அவர் 121 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். இந்த டெஸ்ட் தொடரில் அவர் அடித்துள்ள 3-வது சதம் இதுவாகும்.

    நேற்றைய 2-ம் நாள் முடிவில் இங்கிலாந்து 8 விக்கெட் இழப்புக்கு 423 ரன் எடுத்துள்ளது. அந்த அணி இதுவரை 345 ரன் முன்னிலை பெற்றிருக்கிறது. இந்த 3-வது டெஸ்டில் இங்கிலாந்தின் கையே முழுமையாக ஓங்கி இருக்கிறது.

    2-வது டெஸ்டில் சிறப்பாக பந்து வீசிய இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் 3-வது டெஸ்டில் தொடக்கத்திலேயே விக்கெட்கெட்டுகளை கைப்பற்றி இங்கிலாந்து வீரர்களுக்கு நெருக்கடி கொடுக்க தவறிவிட்டனர். இதனை பயன்படுத்திக் கொண்ட அவர்கள் ரன்களை குவித்துள்ளனர்.

    நேற்றைய 2-ம் நாள் ஆட்டம் முடிந்தபிறகு இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ‌ஷமி காணொலி காட்சி மூலம் பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் 3-வது டெஸ்டில் இந்தியாவின் மோசமான செயல்பாடு அணியை மன ரீதியாக எவ்வாறு பாதிக்கிறது என்று கேள்வி கேட்டனர். அதற்கு முகமது ‌ஷமி கூறியதாவது:-

    அது மன ரீதியாக எங்களை பாதிக்காது. நாங்கள் 3 நாட்களில் டெஸ்ட் போட்டியை முடித்திருக்கிறோம். பல போட்டிகளை 2 நாட்களிலேயே முடித்திருக்கிறோம். சில நேரங்களில் நமக்கு ஒரு மோசமான நாள் அல்லது ஒரு டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சிலேயே நாம் வெளியேறும் சூழ்நிலை ஏற்படும். இது சில நேரங்களில் நடக்கும்.

    ஆனால் அதற்காக சோர்வாக உணர வேண்டிய அவசியமில்லை. ஏனென்றால் இன்னும் 2 டெஸ்ட் போட்டிகள் மீதம் உள்ளன. நாங்கள் 1-0 என்ற நிலையில் இருக்கிறோம். எனவே எதிர்மறையாக சிந்திக்க வேண்டிய அவசியமில்லை. ஒரே ஒரு வி‌ஷயம் உங்கள் திறமையை நம்புங்கள். நீங்கள் மீண்டு வருவீர்கள்.

    எதிரணியினர் நீண்ட பார்ட்னர்ஷிப் ஏற்படுத்தும்போது அதை தடுக்கும் பொறுப்பு பந்து வீச்சாளர்களுக்கு உள்ளது. விக்கெட்டுகளை வீழ்த்துவது எங்களது பணி. பேட்ஸ்மேன்களை எவ்வாறு அவுட் ஆக்க வேண்டும் என்பதை மனதில் திட்டமிட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×