என் மலர்
செய்திகள்

ஒலிம்பிக் மைதானம்
டோக்கியோ ஒலிம்பிக்கில் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை
புதிய கட்டுப்பாடுகள் ஜூலை 12 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 22 வரை இருக்கும் என ஜப்பானின் பொருளாதார மந்திரி யசுதோஷி நிஷிமுரா தெரிவித்தார்.
டோக்கியோ:
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் வரும் 23ம் தேதி தொடங்கி அடுத்த மாதம் 8ம் தேதி வரை நடைபெறவுள்ளன. இந்த போட்டியில் பங்கேற்பதற்காக இந்தியாவைச் சேர்ந்த 120க்கும் மேற்பட்ட வீரர்கள் தகுதி பெற்றுள்ளனர். இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 11 வீரர்களும் இடம்பெற்றுள்ளனர்.
இந்நிலையில், டோக்கியோவிற்கு வைரஸ் அவசர நிலையை ஜப்பான் அரசு அறிவித்து உள்ளது. டோக்கியோவில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், ஒலிம்பிக் போட்டிகள் மூலம் புதிய கொரோனா அலை உருவாகாமல் தடுக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. டோக்கியோ நகரில் நேற்று கொரோனா பாதிப்பு 920 ஆக உயர்ந்தது. இதனால் வைரஸ் அவசர நிலையை அறிவித்துள்ளது அரசு.

இந்த அவசர நிலையின்போது உணவகங்கள், மதுபான விடுதிகளை இரவு 8 மணிக்கு மூடுதல், அத்தியாவசியமற்ற காரணங்களுக்காக மக்கள் வீடுகளை விட்டு வெளியே வருவதைத் தவிா்த்தல் போன்ற நோய்த்தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் வலியுறுத்தப்படுவாா்கள். ஆனால், விதிகளை மீறுபவா்கள் தண்டிக்கப்படமாட்டாா்கள்.
இந்த புதிய கட்டுப்பாடுகள் ஜூலை 12 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 22 வரை இருக்கும் என ஜப்பானின் பொருளாதார மந்திரி யசுதோஷி நிஷிமுரா தெரிவித்தார்.
டோக்கியோ போட்டி அமைப்பாளர்கள் ஏற்கனவே வெளிநாட்டு பார்வையாளர்களை தடை செய்துள்ளனர். உள்நாட்டு பார்வையாளர்களுக்கு 50 சதவீதம் மட்டுமே கலந்து கொள்ள அனுமதிக்கலாம் என திட்டமிட்டு இருந்தனர். ஆனால், வைரஸ் அவசர நிலை அறிவிக்கப்பட்டதால், பார்வையாளர்கள் மீதான கட்டுப்பாடுகள் குறித்து இறுதி முடிவு எடுப்பதற்காக இன்று ஆலோசனை நடத்தப்பட்டது.
சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவர் தாமஸ் பேச், ஒலிம்பிக் ஏற்பாட்டுக் குழு, சர்வதேச பாராலிம்பிக் கமிட்டி, ஜப்பான் மற்றும் டோக்கியோ பெருநகர நிர்வாகங்களின் பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர். இக்கூட்டத்தில், ஒலிம்பிக் போட்டிகள் அனைத்தையும் பார்வையாளர்கள் இன்றி நடத்த முடிவு செய்யப்பட்டது.
பார்வையாளர்கள் இன்றி ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் என்பதை ஒலிம்பிக் மந்திரி தமாயோ மருகவா உறுதி செய்துள்ளார்.
Next Story






