search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    ஐபிஎல் தொடரின் போது டெல்லி மைதானத்தில் 2 சூதாட்ட தரகர்கள் கைது

    ஐ.பி.எல். போட்டியில் கடந்த 2-ந் தேதி டெல்லியில் நடந்த ஆட்டத்தின் போது சூதாட்ட தரகர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

    புதுடெல்லி:

    ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் கிரிக்கெட் வாரியம் இந்த முடிவை மேற்கொண்டது.

    ஐ.பி.எல். போட்டியில் கடந்த 2-ந் தேதி டெல்லியில் நடந்த ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ்-சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின.

    அப்போது சட்ட விரோதமாக சூதாட்டத்தில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

    போலி அடையாள அட்டையை பயன்படுத்தி மைதானத்துக்குள் நுழைந்த அவர்கள் இருவரையும் டெல்லி காவல்துறையின் சிறப்பு ஊழியர்கள் பிடித்தனர். இருவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு 5 நாட்கள் போலீஸ் காவலுக்கு அனுப்பப்பட்டனர்.

    இது தொடர்பாக டெல்லி போலீசின் கூடுதல் ஆணையர் ரோகித் மீனா கூறும்போது, குற்றம் சாட்டப்பட்டவர்கள் வீட்டு பராமரிப்பு ஊழியராக காட்டிக் கொண்டிருந்த மணிஷ்கன்சால் மற்றும் சுகாதாரப் பணியாளராக நடித்து வந்த கிரிசன்கார்க் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

    அவரிடம் இருந்து அங்கீகார அட்டையை பறிமுதல் செய்துள்ளோம். அவற்றை அவர்கள் எவ்வாறு பெற்றனர் என்பதை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம் என்றார்.

    இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் கிரிக்கெட் வாரியத்தின் ஊழல் தடுப்புப் பிரிவுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். குற்றம் சாட்டப்பட்ட 2 பேரும் சூதாட்டத்தில் ஈடுபட்டதை ஒத்துக்கொண்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 45 நிமிடங்கள் கண்காணித்த பிறகு இருவரையும் பிடித்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×