என் மலர்
செய்திகள்

இங்கிலாந்து அணிக்கு இந்தியா பதிலடி கொடுக்குமா? நாளை 2-வது 20 ஓவர் ஆட்டம்
அகமதாபாத்:
இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 4 போட்டிக்கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
ஐந்து 20 ஓவர் தொடரில் நேற்று நடந்த முதல் ஆட்டத்தில் இங்கிலாந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் அந்த அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 2-வது 20 ஓவர் போட்டி அகமதாபாத்தில் நாளை (14-ந் தேதி) நடக்கிறது.
நேற்றைய ஆட்டத்தில் இந்திய வீரர்களின் ஆட்டம் மிகவும் மோசமாக இருந்தது. இந்த தோல்விக்கு நாளைய ஆட்டத்தில் பதிலடி கொடுத்து தொடரை சமன் செய்யுமா என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.
இந்திய அணியின் பேட்டிங் நேற்று சுத்தமாக எடுபடவில்லை. ஆடுகளத்தின் தன்மைக்கேற்றவாறு பேட்ஸ்மேன்களால் ஆட முடியாமல் போனது மிகவும் ஏமாற்றமே. 124 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது பரிதாபமே.
முதல் ஆட்டத்தில் தொடக்க வீரர் ரோகித் சர்மாவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. அவர் இல்லாதது பேட்டிங்கில் பலவீனத்தை ஏற்படுத்தி இருந்தது. இதனால் நாளைய ஆட்டத்தில் அவர் இடம் பெறுவார்.
ரோகித்சர்மா இடம் பெறும்பட்சத்தில் தவான் அல்லது லோகேஷ் ராகுல் அணியில் இருந்து நீக்கப்படுவர். ஸ்ரேயாஸ் அய்யர் மிடில் ஆர்டரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
நாளைய போட்டிக்கான அணியில் ஒரே ஒரு மாற்றம் மட்டுமே இருக்கலாம் என்று கருதப்படுகிறது. பந்துவீச்சில் மாற்றம் செய்வதற்கான வாய்ப்பு குறைவே.
முதல் போட்டியில் இந்தியாவை எளிதில் வீழ்த்தியதால் 2-வது ஆட்டத்திலும் வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கையில் மார்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி உள்ளது.
இங்கிலாந்து அணியில் ஜேசன் ராய், பேர்ஸ்டோவ், கேப்டன் மார்கன், பென்ஸ் ஸ்டோக், ஜோப்ரா ஆர்ச்சர், ஆதில் ரஷித் போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர்.
இரு அணிகளும் 20 ஓவர் போட்டியில் 15 முறை மோதி உள்ளனர். இதில் இந்தியா 7 ஆட்டத்திலும், இங்கிலாந்து 8 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளன.
நாளைய 20 ஓவர் போட்டி இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டெலிவிஷனில் இந்த போட்டி நேரிடையாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.






