search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கருணாரத்னே,  லுங்கி நிகிடி
    X
    கருணாரத்னே, லுங்கி நிகிடி

    கருணாரத்னே 91 நாட்அவுட்: இலங்கை 2-வது நாள் முடிவில் 150/4

    செஞ்சூரியனில் நடைபெற்று வரும் 2-வது டெஸ்டில் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக இலங்கை அணி 2-வது இன்னிங்சில் 4 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்கள் எடுத்துள்ளது.
    தென்ஆப்பிரிக்கா - இலங்கை அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் நேற்று செஞ்சூரியனில் தொடங்கியது. டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு செய்தது. தென்ஆப்பிரிக்கா வேகப்பந்து வீச்சாளர் அன்ரிச் நோர்ஜேயின் (6 விக்கெட்) சிறப்பான பந்து வீச்சால் இலங்கை அணி 157 ரன்னில் சுருண்டது. தொடக்க வீர்ர குசால் பெரேரா அதிகபட்சமாக 60 ரன்கள் சேர்த்தார்.

    பின்னர் தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சை தொடங்கியது. டீன் எல்கரின் சிறப்பான பேட்டிங்கால் தென்ஆப்பிரிக்கா முதல் நாள் ஆட்ட முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 148 ரன்கள் விளாசியது. எல்கர் 92 ரன்களுடனும், டுஸ்சென் 40 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. டீன் எல்கர் சதம் அடித்து 127 ரன்னில் வெளியேறினார். டுஸ்சென் அரைசதம் அடித்து 67 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    அதன்பின் வந்த டு பிளிஸ்சிஸ் (8), டி காக் (10), டெம்பா பவுமா (19) சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 302 ரன்னில் ஆல்-அவுட் ஆனது.

    இலங்கை அணி தரப்பில் விஷ்வா பெர்னாண்டோ 5 விக்கெட் சாய்த்தார். 145 ரன்கள் பின்தங்கிய நிலையில் இலங்கை அணி 2-வது இன்னிங்சில் பேட்டிங் செய்தது.

    லுங்கி நிகிடி அபாரமாக பந்து வீசி குசால் பெரேரா (1), குசால் மெண்டிஸ் (0), திரிமனே (31) ஆகியோரை சொற்ப ரன்னில் வீழ்த்தினார். மினோத் பனுகாவை (1) நோர்ஜோ வெளியேற்றினார். இருந்தாலும் திமுத் கருணாரத்னே சிறப்பாக விளையாடி இலங்கையின் ஸ்கோர் உயர்ந்தது.

    2-வது நாள் ஆட்ட முடிவில் இலங்கை 4 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்கள் எடுத்துள்ளது. தற்போது வரை 5 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. கருணாரத்னே 91 ரன்களுடனும், டிக்வெல்லா 18 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

    இருவரும் நாளை சிறப்பாக விளையாடினால் இலங்கை அணி 150 ரன்களுக்கு மேல் முன்னிலை பெற வாய்ப்புள்ளது. இல்லையெனில் தோல்வியை சந்திக்கும்.
    Next Story
    ×