என் மலர்
செய்திகள்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டி - இந்திய அணியில் 5 மாற்றம்?
மெல்போர்ன்:
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.
இரு அணிகள் இடையேயான ஒருநாள் தொடரை ஆஸ்திரேலியா 2-1 என்ற கணக்கிலும் 20 ஓவர் தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கிலும் கைப்பற்றியது.
4 போட்டிக் கொண்ட டெஸ்ட் தொடரில் அடிலெய்டில் பகல்-இரவாக நடந்த முதல் டெஸ்டில் இந்திய அணி 36 ரன்னில் சுருண்டு மோசமான தோல்வியை தழுவியது. இந்த வெற்றி மூலம் ஆஸ்திரேலியா 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நாளை மறுநாள் (26-ந் தேதி) தொடங்குகிறது. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
முதல் டெஸ்ட் போட்டியில் மோசமான ஆட்டம் காரணமாக இந்திய அணியில் 5 மாற்றம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கேப்டன் விராட் கோலி நாடு திரும்பியுள்ளார். அவரது மனைவி அனுஷ்காவுக்கு குழந்தை பிறக்க இருப்பதால், எஞ்சிய 3 டெஸ்டில் விளையாடவில்லை. இதனால் ரகானே கேப்டன் பொறுப்பை வகிப்பார். விராட் கோலி இடத்தில் கே.எல்.ராகுலுக்கு வாய்ப்பு வழங்கப்படுகிறது.
மோசமான ஆட்டம் காரணமாக தொடக்க வீரர் பிரித்விஷா, விக்கெட் கீப்பர் விர்த்திமான் சகா ஆகியோர் அணியில் இருந்து கழற்றி விடப்படலாம். அவர்களுக்கான இடத்தில் சுப்மன்கில், ரிஷப்பண்ட் ஆகியோருக்கு வாய்ப்பு கிடைக்கலாம்.
மெல்போர்ன் டெஸ்டில் இந்திய அணி 5 பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்க திட்டமிட்டுள்ளது. இதனால் விகாரி நீக்கப்பட்டு அவர் இடத்தில் ஆல் ரவுண்டரான ஜடேஜாவுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிகிறது.
வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி முதல் டெஸ்டில் காயமடைந்தார். இதனால் அவரது இடத்தில் நவ்தீப் சைனி அல்லது முகமது சிராஜ் இடம்பெறலாம்.
தொடக்க வீரராக மயங்க் அகர்வாலுடன் லோகேஷ் ராகுல் களம் இறங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சுப்மன்கில் 6-வது வரிசையில் விளையாடுவார்.






