என் மலர்
செய்திகள்

கவாஸ்கர்
மற்ற அணிகளாக இருந்திருந்தால் 72 அல்லது 80-90 ரன்கள் எடுத்திருக்கும்- கவாஸ்கர்
அடிலெய்டு டெஸ்டில் இந்தியா 36 ரன்களில் சுருண்ட நிலையில், பேட்ஸ்மேன்களை குறை கூறுவது ஏற்கத்தக்கதல்ல என கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் அடிலெய்டில் நடைபெற்றது. முதல் இரண்டு நாள் ஆட்ட முடிவில் இந்தியா 62 ரன்கள் முன்னிலைப் பெற்றிருந்தது. 3-வது நாள் காலையில் ஹசில்வுட், பேட் கம்மின்ஸ் ஆகியோரின் அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 27 ரன்கள் எடுப்பதற்குள் 9 விக்கெட்டை இழந்தது.
பேட்ஸ்மேன்களில் மோசமான ஆட்டமே 36 ரன்னில் ஆல்-அவுட் ஆக காரணம் என விமர்சனம் எழும் நிலையில், கவாஸ்கர் பேட்ஸ்மேன்களை திட்டுவது நியாயம் அல்ல எனத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சுனில் கவாஸ்கர் கூறுகையில் ‘‘ஸ்டார்க் 3 ஓவர்கள் பந்து வீசிய பின்னர் பேட் கம்மின்ஸ், ஹசில்வுட் ஆகியோர் பந்து வீசியதை பார்க்கும்போது, அவர்கள் நிறைய கேள்விகளை கேட்டார்கள். ஆகவே, இந்திய பேட்ஸ்மேன்கள் அவுட்டாகிய விதத்தை வைத்து விமர்சனம் செய்வது சரியல்ல. ஏனென்றால், ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர்கள் அற்புதமாக பந்து வீசினார்கள்.
நீங்கள் தரமான பந்து வீச்சை எதிர்கொள்ளும்போது, லைன் மற்றும் லெந்த் துல்லியமாக இருக்கும்போது ரன்கள் குவிப்பது கடினம். இந்திய பேட்ஸ்மேன்களுக்கு அது நடந்தது.
எந்த ஒரு அணியும் இதுவரை இல்லாத அளவிற்கு மிகவும் குறைவான ஸ்கோர் எடுத்ததை பார்ப்பது சிறந்ததாக இருக்காது. ஆனால், மற்ற எந்தவொரு அணியாக இருந்தாலும், இதுபோன்ற பந்து வீச்சில், விரைவில் சுருண்டு இருப்பார்கள். 36-ல் இல்லை என்றாலும், 72 அல்லது 80-90 ரன்களில் ஆல்-அவுட் ஆகியிருப்பார்கள்.
இதேபோன்றுதான் லண்டனில் 1974-ல் சீதோஷ்ண நிலை பந்து ஸ்விங் ஆவதற்கு சாதகமாக இருந்தது. எந்தவொரு பேட்ஸ்மேனும் மோசமாக ஷாட்ஸ் ஆடவில்லை. நாங்கள் அனைவரும் எல்.பி.டபிள்யூ. அல்லது விக்கெட் கீப்பர் கேட்ச் ஆனோம். ஐந்து நட்சத்திர பேட்ஸ்மேன்கனை நான் பெற்றிருந்தாலும் அவர்கள் 42 ரன்களை தாண்டியிருக்க மாட்டார்கள்’’ என்றார்.
Next Story






