என் மலர்
செய்திகள்

அரைசதம் அடித்த வடே
ஆஸி.க்கு எதிரான கடைசி டி20 போட்டி: இந்தியாவுக்கு 187 ரன்கள் வெற்றி இலக்கு
மேத்யூ வடே, மேக்ஸ்வெல் அரைசதம் அடிக்க இந்தியாவுக்கு 187 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது ஆஸ்திரேலியா.
இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பந்து வீச்சு தேர்வு செய்தார். ஆஸ்திரேலிய அணியில் ஆரோன் பிஞ்ச் இடம் பிடித்தார்.
ஆரோன் பிஞ்ச், மேத்யூ வடே ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். கடந்த போட்டியில் அதிரடியாக விளையாடிய மேத்யூ வடே இந்த போட்டியிலும் அதிரடியாக விளையாடி ரன்கள் விளாசினார்.
2-வது ஓவரை வாஷிங்டன் சுந்தர் வீசினார். 4-வது பந்தில் ஆரோன் பிஞ்ச் ரன்ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அடுத்து ஸ்மித் களம் இறங்கினார்.
மேத்யூ வடே- ஸ்மித் ஜோடி சிறப்பாக விளையாடியது. ஆஸ்திரேலியா 6 ஓவரில் 51 ரன்கள் அடித்தது, 10-வது ஓவரை வாஷிங்டன் சுந்தர் வீசினார். இந்த ஓவரில் ஸ்மித் 24 ரன்கள் எடுத்த நிலையில் க்ளீன் போல்டானர். அப்போது ஆஸ்திரேலியா 9.4 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 79 ரன்கள் அடித்தது.
3-வது விக்கெட்டுக்கு மேத்யூ வடே உடன் அதிரடி பேட்ஸ்மேன் மேக்ஸ்வெல் ஜோடி சேர்ந்தார். மேத்யூ வடே 34 பந்தில் அரைசதம் அடித்தார். ஆஸ்திரேலியா 11.5 ஓவரில் 100 ரன்னைத் தொட்டது. இருவரும் ஆட்டமிழக்காமல் விளையாட ஆஸ்திரேலியாவின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. 16.5 ஓவரில் 150 ரன்னைக் கடந்தது. மேக்ஸ்வெல் 31 பந்தில் அரைசதம் அடித்தார்.
19-வது ஓவரை ஷர்துல் தாகூர் வீசினார். இந்த ஓவரின் 2-வது பந்தில் மேத்யூ வடே ஆட்டமிழந்தார். அவர் 53 பந்தில் 7 பவுண்டரி, 2 சிக்சருடன் 80 ரன்கள் விளாசினார். அப்போது ஆஸ்திரேலியா 69 ரன்கள் எடுத்திருந்தது. 19-வது ஓவரில் ஷர்துல் தாகூர் 7 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார்.

கடைசி ஓவரை டி நடராஜன் வீசினார். முதல் பந்தில் மேக்ஸ்வெல் க்ளீன் போல்டானார். அவர் 3 பவுண்டரி, 3 சிக்சருடன் 54 ரன்கள் அடித்தார். இந்த ஓவரில் நடராஜன் 11 ரன்கள் விட்டுக்கொடுத்த ஆஸ்திரேலியா 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் குவித்துள்ளது.
தீபக் சாஹர் 34 ரன்களும், வாஷிங்டன் சுந்தர் (2 விக்கெட்) 34 ரன்களும், டி நடராஜன் (1 விக்கெட்) 33 ரன்களும், சாஹல் 41 ரன்களும், ஷர்துல் தாகூர் (1) 43 ரன்களும் விட்டுக்கொடுத்தனர்.
Next Story






