search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வருண் சக்ரவர்த்தி
    X
    வருண் சக்ரவர்த்தி

    அடுத்த ஷாக்: வருண் சக்ரவர்த்தியும் காயத்தால் அவதியாம்- சர்ச்சையில் பிசிசிஐ

    கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வந்த வருண் சக்ரவர்த்தி காயத்தால் அவதிப்பட்டு வந்த நிலையில், ஆஸ்திரேலியா தொடருக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளாராம்.
    ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இந்தியாவின் முன்னணி வீரர்கள் விளையாடி வருகிறார்கள். ஒவ்வொரு அணியும் டாக்டர்கள், பிசியோ ஸ்டாஃப்கள் வைத்திருப்பார்கள்.

    இந்திய அணியில் விளையாடும் வீரர்கள் ஐபிஎல் தொடரில் விளையாடும்போது காயம் ஏற்பட்டால் அந்தந்த அணிகள் உடனடியாக பிசிசிஐ-க்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அப்படி தகவல் தெரிவிக்கும்போது சில நேரங்களில் பிசிசிஐ மேற்கொண்டு விளையாட அனுமதிக்காது. இதனால் வீரர்களின் காயத்தை ஐபிஎல் அணிகள் சில நேரங்களில் மறைத்து விடுகின்றன.

    இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாட இருக்கிறது. இதற்கான அணியை பிசிசிஐ தேர்வுக்குழு தேர்வு செய்தது. காயத்தால் ரோகித் சர்மாவை ஆஸ்திரேலியா தொடருக்கு தேர்வு செய்யவில்லை. தொடைப்பகுதியில் ஏற்பட்ட காயத்தால் அவரை தேர்வு செய்யவில்லை என்று பிசிசிஐ தெரிவித்தது.

    ஆனால் ரோகித் சர்மா பிளேஆஃப்ஸ் சுற்றில் களம் இறங்கி விளையாடினார். இது பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது.

    சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் சகா கடைசி லீக் போட்டியின்போது காயம் அடைந்தார். நேற்றைய போட்டியின்போதுதான் வார்னர் அவருக்கு ஹாம்ஸ்டிரிங் இன்ஜுரி (2-ம் நிலை) எனத் தெரிவித்தார். இதனால் ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் விளையாடுவார? என்பது சந்தேகம்.

    இந்த நிலையில் இந்திய டி20 அணிக்கு முதன்முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ள வருண் சக்ரவர்த்தி, காயத்தோடுதான் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் விளையாடியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர் தோள்பட்டை காயத்தால் அவதிப்பட்டு வரும் நிலயில் பிசிசிஐ அவரை தேர்வு செய்துள்ளதாம்.

    அவரால் பந்தை த்ரோ செய்ய முடியாது. 30 யார்டு வட்டத்திற்குள் பீல்டிங் நிற்க வைத்தால் காயம் வீரியம் அடையாது என தேர்வுக்குழுவிடம் தெரிவிக்கப்பட்டதாம்.

    இதனால் வருண் சக்ரவர்த்தியும் காயத்துடன்தான் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். பிசிசிஐ பிசியோ கொடுக்கும் அறிக்கை அடிப்படையில்தான் வருண் சக்ரவர்த்தியை தேர்வு செய்தார்களாம். இதனால் அணித்தேர்வு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர் வரும் 27-ந்தேதியும, டி20 தொடர் டிசம்பர் 4-ந்தேதியும், டெஸ்ட் தொடர் டிசம்பர் 17-ந்தேதியும் தொடங்குகிறது.
    Next Story
    ×