search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விராட் கோலி
    X
    விராட் கோலி

    டெல்லியிடம் 6 விக்கெட்டில் தோல்வி: 2-வது இடத்தை பிடிக்காதது ஏமாற்றம் - விராட்கோலி

    புள்ளி பட்டியலில் 2-வது இடத்தை பிடிக்க முடியாதது ஏமாற்றமே என்று பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
    அபுதாபி:

    ஐ.பி.எல். போட்டியில் பெங்களூர் அணியை மீண்டும் வீழ்த்தி டெல்லி புள்ளிகள் பட்டியலில் 2-வது இடத்தை பிடித்தது. 

    அபுதாபியில் நேற்று நடந்த 55-வது லீக் ஆட்டத்தில் முதலில் விளையாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 152 ரன்னே எடுக்கமுடிந்தது. 

    தொடக்க வீரர் படிக்கல் 41 பந்தில் 50 ரன்னும் (5 பவுண்டரி), டிவில்லியர்ஸ் 21 பந்தில் 35 ரன்னும் (1 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தனர். நோர்டியா 3 விக்கெட்டும், ரபடா 2 விக்கெட்டும், அஸ்வின் 1 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

    பின்னர் விளையாடிய டெல்லி கேப்பிடல்ஸ் 19 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 154 ரன் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில்  வெற்றிபெற்றது. 

    ரகானே 46 பந்தில் 60 ரன்னும் (5 பவுண்டரி, 1 சிக்சர்), தவான் 41 பந்தில் 54 ரன்னும் (6 பவுண்டரி) எடுத்தனர். சபாஷ் அகமது 2 விக்கெட்டும், முகமது சிராஜ், வாஷிங்டன் சுந்தர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

    இந்த வெற்றி மூலம் டெல்லி அணி 16 புள்ளிகளை பெற்று 2-வது இடத்தை பிடித்து பிளேஆப் சுற்றுக்கு முன்னேறியது. அந்த அணி பெங்களூரை மீண்டும் வீழ்த்தியது.டெல்லி குவாலிபையர்-1 ஆட்டத்தில் மும்பை இந்தியன்சுடன் மோதுகிறது. 
    இந்த வெற்றி குறித்து டெல்லி அணி கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் கூறும் போது, இந்த ஆட்டம் எங்களுக்கு வாழ்வா? சாவா? என்பதாகும். நாங்கள் வெற்றி பெறுவதில் தான் கவனம் செலுத்தினோம். ரன் ரேட் பற்றி சிந்திக்கவில்லை. பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர்.

    இந்த ஐ.பி.எல் தொடர் மிகவும் கடினமானது. இந்த போட்டியில் விளையாடும் சிறந்த அணிகளில் ஒன்றாக மும்பை இருக்கிறது என்றார்.

    இந்த போட்டியில் பெங்களூர் அணி தோல்வியை தழுவினாலும் பிளேஆப் சுற்று வாய்ப்பை பெற்றது. டெல்லி அணி 17.3 ஓவருக்கு இலக்கை எட்டி இருந்தால் அந்த அணி இன்றைய ஆட்டத்தின் முடிவுக்காக காத்திருக்க வேண்டும். டெல்லி 19-வது ஓவரில் தான் வெற்றி பெற்றதால் பெங்களூர் அணிக்கு அதிர்ஷ்டம் அமைந்துவிட்டது.

    பெங்களூர் அணி டெல்லியிடம் மீண்டும் தோற்றதால் 2-வது இடத்தை பிடிக்க முடியவில்லை. இதனால் அந்த அணி கேப்டன் விராட் கோலி ஏமாற்றம் அடைந்தார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-

    இந்த ஆட்டத்தின் முடிவு  இரண்டுவிதமான உணர்வை தருகிறது. பிளேஆப் சுற்றுக்கு முன்னேறியது மகிழ்ச்சி அளிக்கிறது. அதேநேரத்தில் 2-வது இடத்தை பிடிக்கமுடியாமல் போனது சற்று ஏமாற்றமே. மிடில் ஓவரில் நாங்கள் சிறப்பாக செயல்பட்டோம். இறுதிப்போட்டியில் நுழைய தற்போது 2 ஆட்டத்தில் வெற்றிபெற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 
    இவ்வாறு அவர் கூறினார்.

    பெங்களூர் அணி எலிமினேட்டர் (வெளியேற்றுதல்) ஆட்டத்தில் கொல்கத்தா அல்லது ஐதராபாத்தை சந்திக்கிறது. இதில் தோல்வி அடைந்தால் பெங்களூர் அணி வெளியேற்றப்படும்.வெற்றி பெற்றால் குவாலிபையர்-2 ஆட்டத்தில் மும்பை அல்லது டெல்லியை எதிர்கொள்ளும்.
    Next Story
    ×