search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மகேந்திரசிங் தோனி
    X
    மகேந்திரசிங் தோனி

    சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து மகேந்திரசிங் தோனி ஓய்வு

    சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்திய கிரிக்கெட் அணி வீரர் தோனி அறிவித்துள்ளார்.
    இந்திய கிரிக்கெட்டை சாதனையின் உச்சத்துக்கு அழைத்து சென்ற கேப்டன்களில் ஒருவர், மகேந்திர சிங் டோனி. கேப்டன் பதவியில் இருந்து விலகிய பிறகு ஒரு வீரராக அணியில் நீடித்தார். அதிரடியாக ஆடுவதில் வல்லவரான டோனியின் ஆட்டத்திறன் சமீப காலமாக வெகுவாக தளர்ந்தது. ஆனாலும் விக்கெட் கீப்பிங்கில் தன்னை மிஞ்ச யாருமில்லை என்று கூறும் அளவுக்கு மிகச்சிறப்பாக செயல்பட்டார். கடந்த ஆண்டு ஜூலை மாதம் இங்கிலாந்தில் நடந்த உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு பிறகு அவர் எந்த போட்டியிலும் விளையாடவில்லை. தனது எதிர்கால திட்டம் குறித்து வாய்திறக்காமல் மவுனம் காத்து வந்தார். அவர் ஐ.பி.எல். போட்டியில் ரன் குவித்து, அதன் மூலம் இந்திய அணிக்குள் மறுபிரவேசம் செய்வார் என்று நிறைய கணிப்புகள் உலா வந்தன. அடுத்த ஆண்டு 20 ஓவர் உலக கோப்பையுடன் அவர் விடைபெறுவார் என்பது தான் நிபுணர்களின் ஆரூடமாக இருந்தது.

    இந்த நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் டோனி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக சென்னையில் இருந்தபடி அதிரடியாக அறிவித்தார். இந்த தகவலை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட அவர் தன் மீது அன்பு காட்டி ஆதரவு அளித்த ரசிகர்களுக்கு நன்றி என்றும் அதில் குறிப்பிட்டுள்ளார். 2014-ம் ஆண்டின் இறுதியில் டெஸ்டில் இருந்து ஓய்வு பெற்ற டோனி இப்போது சர்வதேச ஒரு நாள் மற்றும் 20 ஓவர் போட்டிக்கும் முழுக்கு போட்டுள்ளார். கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் இப்போதைக்கு இந்தியாவில் எந்த சர்வதேச போட்டிகளும் நடக்க வாய்ப்பில்லை. இதனால் ரசிகர்களின் முன்னிலையில் பிரிவுபசார போட்டியில் ஆட முடியாது என்பதை உணர்ந்து ஓய்வுக்கான முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது.

    ஆனாலும் அவர் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தொடர்ந்து விளையாட திட்டமிட்டு உள்ளார். சேப்பாக்கத்தில் நடக்கும் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான பயிற்சி முகாமில் பங்கேற்க டோனி சென்னை வந்தது குறிப்பிடத்தக்கது.

    ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியைச் சேர்ந்த 39 வயதான டோனி 2004-ம் ஆண்டு டிசம்பர் மாதம் வங்காளதேசத்திற்கு எதிரான ஒரு நாள் போட்டியின் மூலம் சர்வதேச கிரிக்கெட்டுக்குள் நுழைந்தார். அப்போது இந்திய அணிக்கு பேட்டிங்குடன் கூடிய விக்கெட் கீப்பர் தேவையாக இருந்தது.

    தனது அதிரடியான பேட்டிங் மூலம் ரசிகர்களை கவர்ந்த டோனி சில ஆண்டுகளிலேயே இந்திய அணியின் கேப்டனாக உயர்ந்தார். அவரது தலைமையில் இந்திய அணி 2007-ம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பையையும், 2011-ம் ஆண்டு 50 ஓவர் உலக கோப்பையையும், 2013-ம் ஆண்டு ஐ.சி.சி. சாம்பியன்ஷிப் கோப்பையையும் உச்சிமுகர்ந்தது. இந்த மூன்று கோப்பைகளையும் வென்றுத்தந்த ஒரே கேப்டன் டோனி தான். அத்துடன் அவரது கேப்டன்ஷிப்பில் இந்திய அணி டெஸ்டில் நம்பர் ஒன் அரியணையிலும் ஏறியது. இலங்கைக்கு எதிரான 2011-ம் ஆண்டு உலக கோப்பை இறுதி ஆட்டத்தில் 91 ரன்கள் திரட்டி ஆட்டநாயகனாக ஜொலித்தது அவரது கிரிக்கெட் வாழ்க்கையில் முத்தாய்ப்பாக அமைந்தது.

    களத்தில் யுக்திகளை வகுப்பதில் சாதுர்யமாக செயல்படக்கூடிய டோனி, களத்தில் எளிதில் உணர்ச்சி வசப்படமாட்டார். கோபத்தை வெளிக்காட்டமாட்டார். அதனால் தான் அவரை ‘கூல் கேப்டன்’ என்று வர்ணிப்பார்கள். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய பிறகு ‘தல’ என்றும் அவரை ரசிகர்கள் செல்லமாக அழைப்பது உண்டு.

    டோனி இதுவரை இந்திய அணிக்காக 90 டெஸ்டுகளில் விளையாடி 6 சதம் உள்பட 4,876 ரன்களும், 350 ஒரு நாள் போட்டிகளில் ஆடி 10 சதம், 73 அரைசதம் உள்பட 10,773 ரன்களும் (சராசரி 50.57) குவித்துள்ளார். இதில் 229 சிக்சரும் அடங்கும். 2005-ம் ஆண்டு இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் 183 ரன்கள் விளாசியது ஒரு நாள் போட்டியில் அவரது அதிகபட்சமாகும். சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் 98 ஆட்டங்களில் விளையாடி 2 அரைசதம் உள்பட 1,617 ரன்கள் எடுத்துள்ளார்.
    Next Story
    ×