search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெங்கால் அணி பயிற்சியாளர் அருண் லால்
    X
    பெங்கால் அணி பயிற்சியாளர் அருண் லால்

    பிரதமரை பதவி விலக சொல்கிறார்களா?- பெங்கால் அணி பயிற்சியாளர் பாய்ச்சல்

    உள்நாட்டு கிரிக்கெட் வீரர்கள் பயிற்சி மேற்கொள்வதற்கு பிசிசிஐ வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ள நிலையில், பயிற்சியாளர் அருண் லால் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
    உள்நாட்டு கிரிக்கெட் வீரர்கள் பயிற்சி மேற்கொள்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை இந்திய கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது. அதில் 60 வயதிற்கு மேற்பட்டோர் பயிற்சியில் ஈடுபடக்கூடாது. குறிப்பாக மற்ற நோய்களுக்கு சிகிச்சை மேற்கொண்டு வருபவர்கள், மாத்திரிகைள் எடுத்துக் கொண்டு வருபவர்கள், குறைந்த நோய் எதிர்ப்பு சக்தி உள்ளவர்கள் கட்டாயம் கலந்து கொள்ளக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பெங்கால் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக அருண் லால் உள்ளார். 65 வயதாகும் இவர் புற்றுநோயை எதிர்த்து போரிட்டு வெற்றி பெற்றவர். தற்போது பிசிசிஐ வழிகாட்டு நெறிமுறைப்படி அவரால் பயிற்சியாளராக செயல்பட முடியாது.

    இதுகுறித்து அருண் லால் கூறுகையில் ‘‘பிரதமருக்கு 69 வயதாகிறது. தற்போதைய நேரத்தில் அவர் நாட்டை வழிநடத்திச் சென்று கொண்டிருக்கிறார். நீங்கள் அவரை பதவி விலக சொல்கிறீர்களா? ஒரு நபராக நான் பெங்கால் அணியின் பயிற்சியாளராக இருப்பேனா அல்லது இல்லையா என்பது முக்கியமல்ல. ஆனல், என்னுடைய வாழ்க்கையை நான் வாழ்வேன்.

    எனக்கு வயது 65. அதனால் இன்னும் 30 வருடத்திற்கு அறைக்குள்ளே முடங்கி கிடக்க வேண்டும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. இதுபோன்று நடக்கக் கூடாது.

    கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்தையும் நான் மேற்கொள்வேன். தேவையில்லாமல் முட்டாள்தனமாக எந்த செயல்களும் நடக்காது. நான் 60 வயதை தாண்டியதால் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொள்ளமாட்டேன். வைரசுக்கு 59 வயதா? 60 வயதா? என்று தெரியாது.

    நான் மிகவும் கட்டுக்கோப்பாகவும், வலிமையாகவும் இருக்கிறேன். உண்மையிலேயே இதுபோன்று கட்டுக்கோப்பாக நான் இருந்தது இல்லை. நான் இது குறித்து கவலைப்படவில்லை’’ என்றார்.
    Next Story
    ×