search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோல் அடித்த மகிழ்ச்சியில் ரியல் மாட்ரிட் அணி வீரர்கள்.
    X
    கோல் அடித்த மகிழ்ச்சியில் ரியல் மாட்ரிட் அணி வீரர்கள்.

    லா லிகா கால்பந்து - ரியல் மாட்ரிட் அணியின் வெற்றி தொடருகிறது

    லா லிலா கால்பந்து போட்டியில் ரியல் மாட்ரிட் அணியின் வெற்றி தொடருகிறது.
    மாட்ரிட்:

    20 அணிகள் இடையிலான லா லிகா கால்பந்து போட்டி தொடர் ஸ்பெயின் நாட்டில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் முன்னாள் சாம்பியனான ரியல் மாட்ரிட் அணி, புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ள எஸ்பன்யோல் கிளப்பை எதிர்கொண்டது.

    இதில் தொடக்கம் முதலே ரியல் மாட்ரிட் அணி வீரர்கள் கட்டுப்பாட்டில் பந்து அதிக நேரம் வலம் வந்தாலும், எதிரணியின் தடுப்பு அரணை தகர்த்து கோல் அடிப்பது அந்த அணிக்கு சவாலாகவே இருந்தது. முதல் பாதி ஆட்டத்தின் கடைசி நிமிடத்தில் ரியல் மாட்ரிட் அணி கோல் அடித்தது. அந்த அணியின் கரிம் பென்ஜிமா பின் குதிகாலால் அற்புறமாக தட்டிக்கொடுத்த பந்தை சக வீரர் கேஸ்மிரோ கோலுக்குள் திணித்தார்.

    பின் பாதியில் பதில் கோல் திருப்ப எஸ்பன்யோல் அணி எடுத்த முயற்சிகளுக்கு பலன் எதுவும் கிடைக்கவில்லை. ரியல் மாட்ரிட் அணி மேலும் கோல் அடிக்க எடுத்த முயற்சிகளும் கைநழுவிப்போனது. முடிவில் ரியல் மாட்ரிட் அணி 1-0 என்ற கோல் கணக்கில் எஸ்பன்யோல் அணியை வீழ்த்தியது. கொரோனா பாதிப்பு காரணமாக போட்டியில் ஏற்பட்ட இடைவெளிக்கு பிறகு ரியல் மாட்ரிட் அணி தொடர்ச்சியாக பெற்ற 5-வது வெற்றி இதுவாகும்.

    இந்த வெற்றியின் மூலம் ரியல் மாட்ரிட் அணி, நடப்பு சாம்பியன் பார்சிலோனா கிளப்பை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை மீண்டும் தனதாக்கியது. ரியல் மாட்ரிட் அணி 32 ஆட்டத்தில் விளையாடி 21 வெற்றி, 8 டிரா, 3 தோல்வியுடன் 71 புள்ளிகள் பெற்று முதலிடம் வகிக்கிறது. பார்சிலோனா அணி 32 ஆட்டத்தில் ஆடி 21 வெற்றி, 6 டிரா, 5 தோல்வியுடன் 69 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தில் இருக்கிறது.

    வெற்றிக்கு பிறகு ரியல் மாட்ரிட் அணியின் நட்சத்திர வீரர் கரிம் பென்ஜிமா கருத்து தெரிவிக்கையில், ‘இது மிகவும் முக்கியமான வெற்றியாகும். பார்சிலோனா அணியை நாங்கள் கண்டுகொள்ளவில்லை என்று சொல்ல முடியாது. அவர்களது செயல்பாடுகளை நாங்கள் கவனித்து வருகிறோம். இருப்பினும் நாங்கள் எங்களது ஆட்டத்தில் தான் அதிக கவனம் செலுத்துகிறோம். இன்னும் நிறைய ஆட்டங்கள் எஞ்சியிருக்கவில்லை. இனிவரும் ஒவ்வொரு ஆட்டமும் இறுதிப்போட்டி போன்றதாகும்‘ என்றார்.
    Next Story
    ×