search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குடும்பத்துடன் விவிஸ் லக்‌ஷ்மண்
    X
    குடும்பத்துடன் விவிஸ் லக்‌ஷ்மண்

    வீட்டில் நேரத்தை செலவிடுவது பற்றி விவரிக்கிறார் விவிஎஸ் லக்‌ஷ்மண்

    ஊரடங்கு உத்தரவால் வீட்டிற்குள்ளே முடங்கிக் கிடக்கும் இந்த நேரத்தில், எப்படி பொழுதை போக்குகிறேன் என்பது குறித்து விவிஎஸ் லக்‌ஷ்மண் விவரித்துள்ளார்.
    கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக கடந்த 25-ந்தேதியில் இருந்து இந்தியாவில் நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் கிரிக்கெட் வீரர்கள், முன்னாள் வீரர்கள், விமர்சகர்கள் வீட்டிற்குள்ளே முடங்கிக் கிடக்கின்றனர்.

    இந்த நேரத்தை எப்படி செலவிடுகிறேன் என்பதை விவிஎஸ் லக்‌ஷ்மண் விவரித்துள்ளார். இதுகுறித்து விவிஎஸ் லக்‌ஷ்மண் கூறுகையில் ‘‘துரதிருஷ்டவசமான கொரோனா வைரஸ் தொற்று காரணமாக எனது கிரிக்கெட் வாழ்க்கையில் நீண்ட நாட்களாக வீட்டில் குழந்தைகளுடன் தங்கி இருப்பது நல்ல விஷயமாக இருக்கிறது. இந்த நேரத்தில் வீட்டில் டேபிள் டென்னிஸ், செஸ், கேரம் போர்டு போன்றவற்றை நாங்கள் விளையாடிக் கொண்டிருக்கிறோம். வீட்டிற்குள்ளேயே இருக்கும்போது சுறுசுறுப்பாக வைக்க இது முக்கியமானது.

    இந்த நேரத்தில் புத்தகங்களை வாசிப்பது, படங்கள் பார்ப்பது, கிரிக்கெட்டின் அற்புதமான காட்சிகளை மீண்டும் பார்ப்பது ஆகியவற்றிலும் நேரத்தை செலவிடுகிறேன். குறிப்பாக நான் அடித்த சில அற்புதமான இன்னிங்ஸ்களையும் பார்க்கிறேன்.

    ஈடன் கார்டன் மைதானத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 281 ரன்கள் விளாசிய டெஸ்ட் போட்டி இன்னிங்சை ஒட்டுமொத்த குடும்பத்துடன் மீண்டும் பார்த்தோம். தற்போது குழந்தைகள் வளர்ந்து அவர்களுடன் பார்ப்பது தனித்தன்மையான உணர்வு.

    லாகூரில் 2004-ல் அடித்த ஒருநாள் போட்டி சதம், ஜோகன்னஸ்பர்க்கில் வெற்றி பெற்ற டெஸ்ட் (2-வது இன்னிங்சில் இக்கட்டான நிலையில் 73 ரன்கள் அடித்தார்.) ஆகியவற்றுடன் 1997-ம் ஆண்டு வெஸ்ட் இண்டீசில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியின் 2-வது இன்னிங்சில் குறைந்த ரன்னில் சுருண்டதையும் பார்த்து மகிழ்ச்சி அடைந்தேன்.

    எனது மகன் இடது கை பேட்ஸ்மேன். டேவிட் வார்னரின் மிகப்பெரிய ரசிகன். அவருடைய ஆட்டத்தை பார்த்து மகிழ்ச்சி அடைவான். பேட்டிங் குறித்து அவனுக்கு சில ஆலோசனைகள் வழங்க முயற்சி செய்து வருகிறேன். குடும்பத்துடன் இருந்து குழந்தைகள் அவர்களது அம்மாவுக்கு அவர்களால் முடிந்த உதவிகளை செய்வதை பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது.

    உலகத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் உலக வழிமுறைப்படி விட்டிற்குள்ளேயே இருக்க வேண்டும் என்பதை கடைபிடிக்க வேண்டும் என்பது மிகவும் கடினமானது. இதை எளிதாக எடுத்துக் கொள்ளக்கூடிய நேரம் இதுவல்ல. ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்காவில் என்ன நடக்கிறது என்பதை ஒவ்வொருவரும் நினைத்துப் பார்க்க வேண்டும். வைரசுக்கு எதிரான அரசாங்கத்தின் நடவடிக்கைகயில் நாம் அனைவரும் ஒற்றுமையை வெளிப்படுத்த வேண்டும்’’ என்றார்.
    Next Story
    ×