search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சுனில் ஜோஷி
    X
    சுனில் ஜோஷி

    இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வு குழு தலைவராகிறார் சுனில் ஜோஷி

    பிசிசிஐ-யின் கிரிக்கெட் ஆலோசனை கமிட்டி இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வு குழு தலைவர் பதவிக்கு சுனில் ஜோஷி பெயரை பரிந்துரை செய்துள்ளது.
    இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வு குழு தலைவர் எம்.எஸ்.கே. பிரசாத், தேர்வு குழு உறுப்பினர் ககன் கோடா ஆகியோரின் பதவி காலம் சமீபத்தில் முடிவடைந்தது. இவர்களுக்கு பதிலாக புதிய தேர்வாளர்களை தேர்வு செய்ய மதன்லால், ஆர்.பி. சிங், சுலக்‌ஷனா நாயக் ஆகியோர் கொண்ட கிரிக்கெட் ஆலோசனை கமிட்டி அமைக்கப்பட்டது.

    இந்த கமிட்டியினர் தேர்வாளர் பதவிக்கு விண்ணப்பித்தவர்களில் இந்திய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வெங்கடேஷ் பிரசாத், சுனில் ஜோஷி, தமிழகத்தை சேர்ந்த சிவராமகிருஷ்ணன், ராஜேஷ் சவுகான், ஹர்விந்தர் சிங் ஆகிய ஐந்து பேரை இறுதி செய்தனர்.

    இவர்களிடம் மும்பையில் இன்று நேர்காணல் நடத்தினர். நேர்காணல் முடிந்த பின்னர் சுனில் ஜோஷியை தேர்வு குழு தலைவர் பதவிக்கும், ஹர்விந்தர் சிங்கை உறுப்பினர் பதவிக்கும் பரிந்துரை செய்துள்ளது.

    ஏறக்குறைய இருவரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். என்றாலும் பிசிசிஐ விரைவில் அதிகாரப்பூர்வமாக இந்தத் தகவலை அறிவிக்கும். அதன்பின் சுனில் ஜோஷி தலைமையிலான குழு தென்ஆப்பிரிக்கா தொடருக்கான அணியை தேர்வு செய்யும்.

    49 வயதாகும் சுனில் ஜோஷி இந்திய அணிக்காக 15 டெஸ்ட் மற்றும் 69 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். டெஸ்ட் போட்டியில் 41 விக்கெட்டுகளும், ஒருநாள் போட்டியில் 69 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார். ஒருநாள் கிரிக்கெட்டில் 6 ரன்கள் விட்டு கொடுத்து ஐந்து விக்கெட் வீழ்த்தியது இவரின் சிறப்பான பந்து வீச்சாகும்.
    Next Story
    ×