search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வாசிம் ஜாபர்
    X
    வாசிம் ஜாபர்

    கிறிஸ்ட்சர்ச்சில் இந்தியா ஆதிக்கம் செலுத்த 400 ரன்களுக்கு மேல் குவிக்க வேண்டும்: வாசிம் ஜாபர்

    கிறிஸ்ட்சர்ச் டெஸ்டில் இந்தியா ஆதிக்கம் செலுத்த வேண்டுமென்றால் 400 முதல் 450 ரன்கள் குவிக்க வேண்டும் என முன்னாள் வீரர் வாசிம் ஜாபர் தெரிவித்துள்ளார்.
    வெலிங்டனில் இந்தியா படுதோல்வியடைந்ததற்கு பதிலடி கொடுக்க வேண்டுமென்றால் கிறிஸ்ட்சர்ச்சில் நாளை தொடங்கும் 2-வது டெஸ்டில் 400 முதல் 450 ரன்கள் வரை குவிக்க வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் பேட்ஸ்மேனும், ரஞ்சி டிராபியில் சாதனைப் படைத்தவருமான வாசிம் ஜாபர் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து வாசிம் ஜாபர் கூறுகையில் ‘‘விராட் கோலி சில போட்டிகளில் ரன்கள் அடிக்காமல் உள்ளார். அவர் மீண்டும் வலுவாக வருவார் என எதிர்பார்க்கிறேன். புஜாரா அதிக அளவில் ரன்கள் அடிக்க வேண்டும். இந்திய பேட்ஸ்மேன்கள் தொடக்கத்தில் அடிக்கும் ரன்களை மூன்று இலக்கமாக மாற்ற வேண்டும். அப்படி அடிக்கவில்லை என்றால் 350 முதல் 400 ரன்கள் வரை அடிக்க முடியாது. பின்னர் கடினமாகிவிடும்.

    200 முதல் 250 ரன்களே அடித்தால், ஆடுகளம் ஒத்துழைக்காவிடில் ஒருபோதும் வெற்றி பெற இயலாது. முதலில் பேட்டிங் செய்தாலும், 2-வது பேட்டிங் செய்தாலும் 400 முதல் 450 ரன்கள் அடிக்க வேண்டும்.

    வெலிங்டனில் முதல் இன்னிங்சில் இந்தியா விளையாடும்போது ஆடுகளம் பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்தது. ஆனால் அவர்கள் பவுன்சர் யுக்தியை பயன்படுத்தியபோது, 2-வது இன்னிங்சில் நாம் சிறப்பான வகையில் ரன்கள் குவித்திருக்க வேண்டும். இரண்டு இன்னிங்சிலும் நம்பர் ஒன் அணி 200 ரன்னைத் தாண்டாதது விரும்பக்கூடியது அல்ல.

    2-வது டெஸ்டில் இந்தியா மிகவும் கடினமான வகையில் பழைய நிலைக்கு திரும்பும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.  இதற்கு முன்பும் அவர்கள் இப்படி செய்திருக்கிறார்கள். எப்போதெல்லாம் நெருக்கடிக்கு ஆளாகிறார்களோ அப்போதெல்லாம், மிகவும் வலுவாக திரும்பியுள்ளனர் ’’ என்றார்.
    Next Story
    ×