search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நான்கு விக்கெட்டுகள் வீழ்த்திய பூனம் யாதவை பாராட்டும் சக வீராங்கனைகள்
    X
    நான்கு விக்கெட்டுகள் வீழ்த்திய பூனம் யாதவை பாராட்டும் சக வீராங்கனைகள்

    பெண்கள் டி20 உலக கோப்பை: தொடக்க ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை துவம்சம் செய்தது இந்தியா

    சிட்னியில் நடைபெற்ற தொடக்க ஆட்டத்தில் பூனம் யாதவ், ஷிகா பாண்டே ஆகியோரின் சிறப்பான பந்து வீச்சால் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா.
    பெண்களுக்கான டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று சிட்னியில் தொடங்கியது. முதல் ஆட்டத்தில் போட்டியை நடத்தும் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவும், இந்தியாவும் பலப்பரீட்சை நடத்தின.

    டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணியின் ஷஃபாலி வர்மா, ஸ்மிரிதி மந்தனா ஆகியோர் தொடக்க வீராங்கனைகளாக களம் இறங்கினர். ஷஃபாலி வர்மா அதிரடியாக விளையாடி 15 பந்தில் 29 ரன்கள் விளாசினார். மந்தனா 11 பந்தில் 10 ரன்கள் சேர்த்து வெளியேறினார்.

    ஆஸ்திரேலிய வீராங்கனைகளின் பந்து வீச்சை எளிதாக எதிர்கொண்டு ரன்கள் குவிக்க இந்திய வீராங்கனைகள் திணறினர். ரோட்ரிக்ஸ் 33 பந்தில் 26 ரன்களும், தீப்தி ஷர்மா 46 பந்தில் 49 ரன்களும் அடிக்க இந்தியா 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்களே சேர்த்தது.

    பின்னர் 133 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா சேஸிங் செய்ய களம் இறங்கியது. தொடக்க வீராங்கனை அலிசா ஹீலி ஒருபக்கம் நிலைத்து நிற்க பெத் மூனி 6 ரன்னிலும், கேப்டன் லானிங் 5 ரன்னிலும், ஹெய்னஸ் 6 ரன்னிலும் வெளியேறினர்.

    அலிசா ஹீலி 35 பந்தில் 51 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். கார்ட்னர் கடைசி வரை அணியின் வெற்றிக்கு போராடினார். ஆனால் மற்ற வீராங்கனைகளின் ஆதரவு கிடைக்காததால் ஆஸ்திரேலியா தோல்வியை நோக்கி சென்றது. கார்ட்னர் 36 பந்தில் 34 ரன்கள் சேர்த்து கடைசி ஓவரில் ஆட்டமிழக்க ஆஸ்திரேலியா 19.5 ஓவரில் 115 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் 17 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.

    இந்திய வீராங்கனைகளில் பூனம் யாதவ் 4 ஓவர்களில் 19 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து நான்கு விக்கெட்டுகள் வீழ்த்தினார். ஷிகா பாண்டே 3.5 ஓவரில் 13 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். நான்கு விக்கெட்டுகள் வீழ்த்திய பூனம் பாண்டு ஆட்ட நாயகி விருதை பெற்றார்.
    Next Story
    ×