search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கபில்தேவ்
    X
    கபில்தேவ்

    கிரிக்கெட் ஜென்டில்மேன் விளையாட்டாக நீடிக்காது: கபில்தேவ்

    U19 உலக கோப்பை இறுதிப் போட்டி முடிந்த பின்னர் இந்தியா - வங்காளதேசம் வீரர்கள் மோதியதற்கு கபில்தேவ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
    19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தென் ஆப்பிரிக்காவில் சமீபத்தில் நடந்து முடிந்தது. இதில் வங்காளதேசம் சாம்பியன் பட்டம் பெற்றது. இறுதிப் போட்டியில் இந்தியாவை வீழ்த்தி அந்த அணி முதல் முறையாக உலக கோப்பையை கைப்பற்றியது.

    வெற்றிக்கு பிறகு வங்காளதேச வீரர்கள் கொண்டாட்டத்தில் வரம்பு மீறி செயல்பட்டதாக இந்திய கேப்டன் பிரியம் கார்க் குற்றம் சாட்டினார்.

    மேலும் இறுதிபோட்டியின் போது வங்காள தேச பவுலர்கள் இந்திய பேட்ஸ்மேன்களை உசுப்பேத்தியதாகவும் கூறப்பட் டது. போட்டிக்கு பிறகு இரு அணி வீரர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதிக்கொண்டனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக வங்காளதேச கேப்டன் அக்பர் அலி மன்னிப்பு கேட்டிருந்தார். இது ஒரு துரதிருஷ்டவசமான நிகழ்வு என்று குறிப்பிட்டு இருந்தார்.

    சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) வீரர்களின் செயல்களுக்கு கடும் கண்டனம் தெரிவித்து இருந்தது. இது தொடர்பாக இந்திய வீரர்கள் ஆகாஷ் சிங், ரவி பிஷ்னோய் மற்றும் வங்காள தேசத்தை சேர்ந்த முகமது தவுகீத், சமீம் உசைன், ரகீபுல் அசன் ஆகிய 5 வீரர்களை எச்சரித்து இருந்தது. 5 பேரும் வீரர்களின் நடத்தை விதிகளை மீறி இருந்தனர்.

    ஜூனியர் உலக கோப்பை இறுதிப்போட்டியில் இளம் வீரர்கள் மோதிக் கொண்டதற்கு இந்திய அணி முன்னாள் கேப்டன் கபில்தேவ் கடுமையாக பாய்ந்துள்ளார். கிரிக்கெட்டை ஜென்டில்மேன் விளையாட்டு என்று அழைப்பார்கள். ஆனால் அது நீண்ட நாட்களுக்கு நீடிக்காது என்று கருத்து தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக கபில்தேவ் கூறியதாவது:-

    இளம் வீரர்கள் மைதானத்தில் நடந்து கொண்ட விதம் மிகவும் பயங்கரமானதாக கருதுகிறேன். கிரிக்கெட் வாரியங்கள் இதில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி செய்தால்தான் எதிர்காலத்தில் இதுபோன்ற தவறுகள் மீண்டும் நடைபெறாமல் இருக்கும்.

    போட்டியில் தோற்றுவிட்டால் மைதானத்துக்கு சென்று யாருடனும் சண்டை போட உரிமை இல்லை. இளம் வீரர்கள் என்பதால் அவர்கள் உணர்ச்சிவசப் படக்கூடியவர்கள். புரிந்து கொள்ளமாட்டார்கள். கேப்டனும், மேனேஜரும்தான் இதற்கு பொறுப்பு.

    கிரிக்கெட்டை ஜென்டில்மன் விளையாட்டு என்று கூறுகிறார்கள். இந்த சம்பவங்களை பார்க்கும்போது அது நீண்ட நாட்களுக்கு ஜென்டில்மேன் விளையாட்டாக நீடிக்காது என்று கருதுகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    1983-ம் ஆண்டு கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி உலக கோப்பையை வென்றது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×