என் மலர்
செய்திகள்

அபினவ் முகுந்த்
ரஞ்சி கிரிக்கெட்: பரோடா அணிக்கெதிராக தமிழ்நாடு இன்னிங்ஸ் வெற்றி
வதோதராவில் நடைபெற்ற போட்டியில் எம். முகமது சிறப்பாக பந்து வீச, அபினவ் முகுந்த் இரட்டை சதம் அடிக்க தமிழ்நாடு பரோடாவை இன்னிங்ஸ் மற்றும் 57 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது
- முதல் இன்னிங்சில் பரோடா 174 ரன்னில் சுருண்டது. எம். முகமது ஏழு விக்கெட்.
- முதல் இன்னிங்சில் தமிழ்நாடு 490/7 டிக்ளேர். அபினவ் முகுந்த் இரட்டை சதம்.
- 2-வது இன்னிங்சில் பரோடா 259 ரன்னில் ஆல்அவுட்
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது. இதில் வதோதராவில் நடந்த லீக் ஆட்டத்தில் தமிழ்நாடு - பரோடா அணிகள் மோதின. பரோடா அணி முதல் இன்னிங்சில் 174 ரன்னில் சுருண்டது. எம். முகமது ஏழு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.
இதனை அடுத்து முதல் இன்னிங்சை ஆடிய தமிழக அணி 7 விக்கெட் இழப்புக்கு 490 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. அபினவ் முகுந்த் இரட்டை சதம் (206 ரன்கள்) அடித்தார். பின்னர் 316 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய பரோடா அணி 2-வது நாள் ஆட்டம் முடிவில் விக்கெட் இழப்பின்றி 10 ரன்கள் எடுத்து இருந்தது.
இந்த நிலையில் 3-வது நாள் ஆட்டம் நேற்று நடந்தது. தொடர்ந்து ஆடிய பரோடா அணியின் விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் வீழ்ந்தன. பரோடா அணி 2-வது இன்னிங்சில் 63.3 ஓவர்களில் 259 ரன்னில் ‘ஆல்-அவுட்’ ஆனது.
இதனால் தமிழக அணி இன்னிங்ஸ் மற்றும் 57 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஓரளவு தாக்குப்பிடித்து ஆடிய குருணால் பாண்ட்யா 74 ரன்னும், அதித் ஷேத் 70 ரன்னும் எடுத்தனர்.
தமிழக அணி தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் கே. விக்னேஷ் 5 விக்கெட்டும் முகமது, சாய் கிஷோர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள். இரட்டை சதம் அடித்த தமிழக வீரர் அபினவ் முகுந்த் ஆட்டநாயகன் விருது பெற்றார். இதுவரை 7 ஆட்டங்களில் விளையாடி இருக்கும் தமிழக அணி 2 வெற்றி, 2 தோல்வி, 3 டிரா கண்டுள்ளது. இந்த வெற்றியின் மூலம் தமிழக அணி ‘நாக்-அவுட்’ சுற்றுக்கான வாய்ப்பில் நீடிக்கிறது.
Next Story






