search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அரைசதம் அடித்த ரோகித் சர்மா
    X
    அரைசதம் அடித்த ரோகித் சர்மா

    3-வது டி20 கிரிக்கெட்: நியூசிலாந்துக்கு 180 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது இந்தியா

    ரோகித் சர்மா அரைசதம் அடிக்க, மிடில் ஓவர்களில் இந்தியா சொதப்ப நியூசிலாந்துக்கு 180 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது இந்தியா.
    இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடி வருகிறது. ஆக்லாந்தில் நடந்த முதல் இரண்டு ஆட்டங்களிலும் இந்தியா அபார வெற்றி பெற்று தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

    இந்த நிலையில் இந்தியா - நியூசிலாந்து இடையிலான 3-வது 20 ஓவர் போட்டி ஹாமில்டனில் தற்போது நடைபெற்று வருகிறது. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார்.

    அதன்படி இந்தியாவின் ரோகித் சர்மா, கேஎல் ராகுல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். முதல் ஐந்து ஓவரில் இந்தியா விக்கெட் இழப்பின்றி 42 ரன்கள் எடுத்திருந்தது. 6-வது ஓவரை பென்னெட் வீசினார். இந்த ஓவரில் ரோகித் சர்மா மூன்று சிக்ஸ், இரண்டு பவுண்டரிகள் விரட்டினார். இதனால் இந்தியா பவர்பிளே-யான முதல் 6 ஓவரில் 69 ரன்கள் குவித்தது. அத்துடன் ரோகித் சர்மா 23 பந்தில் அரைசதம் அடித்தார்.

    இந்தியா 9 ஓவரில் 89 ரன்கள் எடுத்திருக்கும்போது கேஎல் ராகுல் 19 பந்தில் 27 ரன்கள்  சேர்த்து ஆட்டமிழந்தார். அடுத்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்துவதற்காக ஷிவம் டுபே களம் இறக்கப்பட்டார். பென்னெட் வீசிய 11-வது ஓவரில் இந்தியாவுக்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.

    4-வது பந்தில் ரோகித் சர்மா 40 பந்தில் 65 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். 6-வது பந்தில் டுபே 3 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். இந்தியா திட்டம் தோல்வியில் முடிந்ததால், இந்தியாவின் ஸ்கோர் அப்படியே சரிய ஆரம்பித்தது. 15 ஓவரில் 127 ரன்களே எடுக்க முடிந்தது. 36 பந்தில் 38 ரன்களே கிடைத்தது.

    3 விக்கெட் வீழ்த்திய பென்னெட்டை பாராட்டும் சக வீரர்கள்

    ஷ்ரேயாஸ் அய்யர் 16 பந்தில் 17 ரன்கள் எடுத்த நிலையில் 17-வது ஓவரிலும் (இந்தியாவின் ஸ்கோர் 142), விராட் கோலி 27 பந்தில் 38 ரன்கள் எடுத்த நிலையில் 19-வது ஓவரிலும் (இந்தியாவின் ஸ்கோர் 160) ஆட்டமிழந்தனர்.

    கடைசி ஓவரில் மணிஷ் பாண்டே ஒரு சிக்சரும், ஜடேஜா ஒரு சிக்சரும் அடிக்க இந்தியா 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் இந்தியாவுக்கு 18 ரன்கள் கிடைத்தது. மணிஷ் பாண்டே 6 பந்தில் 14 ரன்களும், ஜடேஜா 5 பந்தில் 10 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். 
    Next Story
    ×