search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கிருஷ்ணப்பா கவுதம்
    X
    கிருஷ்ணப்பா கவுதம்

    கடைசி ஓவர் டிராமா: மீண்டும் கர்நாடகாவிடம் தோல்வியை சந்தித்தது தமிழ்நாடு

    கடைசி ஓவரை தாக்குப்பிடித்தால் டிரா செய்து கொள்ளலாம் என்ற நிலையில் கிருஷ்ணப்பா கவுதம் தமிழ்நாடு அணியின் கனவை சிதறடித்தார்.
    ரஞ்சி டிராபி கிரிக்கெட்டில் திண்டுக்கல்லில் நடைபெற்ற ஆட்டத்தில் தமிழ்நாடு - கர்நாடகா அணிகள் மோதின. கர்நாடகா முதல் இன்னிங்சில் 336 ரன்கள் சேர்த்தது. தமிழ்நாடு 307 ரன்கள் அடித்தது.

    29 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சில் விளையாடிய கர்நாடகா 151 ரன்னில் சுருண்டது. விக்னேஷ் 3 விக்கெட்டும், ஆர். அஸ்வின் நான்கு விக்கெட்டும் வீழ்த்தினார்.

    பின்னர் 181 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் தமிழ்நாடு களம் இறங்கியது. அபிநவ் முகுந்த்- முரளி விஜய் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 9 ஓவரில் 49 ரன்கள் எடுத்திருந்தது. இதனால் தமிழ்நாடு அணி எளிதாக வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால் 10-வது ஓவரின் முதல் பந்தில் முரளி விஜய் எதிர்பாராத விதமாக ரன்அவுட் ஆனார். அதன்பின் தமிழ்நாடு அணியின் விக்கெட்டுக்கள் மளமளவென சரிந்தது. அபிநவ் முகுந்த் 42 ரன்னிலும், பாபா அபரஜித் ரன்ஏதும் எடுக்காமலும், ஆர். அஸ்வின் 2 ரன்னிலும், விஜய் சங்கர் 5 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

    இதனால் டிரா செய்தாலே போதும் என்ற நிலைக்கு தமிழ்நாடு தள்ளப்பட்டது. தினேஷ் கார்த்திக் (17), முருகன் அஸ்வின் (23 அவுட் இல்லை), சித்தார்த் (20) ஆகியோரின் போராட்டத்தால் போட்டி டிராவை நோக்கிச் சென்றது.

    கடைசி ஓவருக்கு முந்தைய ஓவர் வரை தமிழ்நாடு 9 விக்கெட் இழந்திருந்தது. கடைசி விக்கெட்டுக்கு முருகன் அஸ்வின் உடன் கே. விக்னேஷ் களத்தில் இருந்தார். கிருஷ்ணப்பா கவுதம் பந்து வீசினார்.

    6 பந்தை தாக்குப்பிடித்தால் டிரா ஆகிவிடும் என்பதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் 3-வது பந்தில் விக்னேஷ் எல்பிடபிள்யூ ஆனார். இதனால் 154 ரன்னில் சுருண்டு 26 ரன்னில் தோல்வியைத் தழுவியது.

    சமீபத்தில் முடிவடைந்த சையத் முஷ்டாக் அலி டிராபி இறுதிப் போட்டியில் தமிழ்நாடு - கர்நாடகா அணிகள் மோதின. கடைசி ஓவரில் நான்கு பந்தில் ஐந்து ரன்கள் தேவைப்பட்டது. அப்போதும் கிருஷ்ணப்பா கவுதம்தான் பந்து வீசினார். பரபரப்பான ஆட்டத்தில் ஒரு ரன்னில் கர்நாடகா வெற்றி பெற்றது.

    ஏற்கனவே கர்காடகாவிடம் கடைசி போட்டியில் தோல்வியடைந்த தமிழ்நாடு,  தற்போதும் கடைசி ஓவரிலேயே தோல்வியடைந்துள்ளது.

    கிருஷ்ணப்பா கவுதம் 2-வது இன்னிங்சில் 8 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார். முதல் இன்னிங்சில் 6 விக்கெட் கைப்பற்றினார்.
    Next Story
    ×