search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தாவித் மலன், மோர்கன்
    X
    தாவித் மலன், மோர்கன்

    தாவித் மலன், மோர்கன் ருத்ர தாண்டவம்: 241 ரன்கள் குவித்து நியூசிலாந்தை துவம்சம் செய்தது இங்கிலாந்து

    நேப்பியரில் நடைபெற்ற 4-வது டி20 கிரிக்கெட் போட்டியில் 241 ரன்கள் குவித்து நியூசிலாந்தை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து.
    • தாவித் மலன் 103 ரன்களும், மோர்கன் 91 ரன்களும் குவிப்பு
    • இங்கிலாந்து 241 ரன்கள் சேர்த்தது, நியூசிலாந்து 165 ரன்னில் சுருண்டது
    • ஐந்து போட்டிகள் கொண்ட தொடர் 2-2 என சமநிலை

    நியூசிலாந்து - இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. 2-வது மற்றும் 3-வது போட்டியில் நியூசிலாந்து வெற்றி பெற்றது.

    இந்நிலையில் 4-வது போட்டி இன்று நேப்பியரில் நடைபெற்றது. இந்த போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே தொடரை உயிரோட்டமாக வைக்க முடியும் என்ற நிலையில் இங்கிலாந்து களம் இறங்கியது.

    நியூசிலாந்து அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி இங்கிலாந்தின் பான்டன், பேர்ஸ்டோவ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். பேர்ஸ்டோவ் 8 ரன்னிலும், பான்டன் 31 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

    அடுத்து தாவித் மலன் உடன் கேப்டன் மோர்கன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நியூசிலாந்தின் பந்து வீச்சை துவம்சம் செய்தது. இதனால் ஸ்கோர் 200-ஐ எளிதாக தாண்டியது.

    அணியின் ஸ்கோர் 19.4 ஓவரில் 240 ரன்னாக இருக்கும்போது மோர்கன் 41 பந்தில் 91 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார். அவரது ஸ்கோரில் 7 பவுண்டரிகள், 7 சிக்சர்கள் அடங்கும். தாவித் மலன் - மோர்கன் ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 74 பந்தில் 182 ரன்கள் குவித்தது.

    மறுமுனையில் தாவித் மலன் 51 பந்தில் 9 பவுண்டரிகள், 6 சிக்சர்களுடன் 103 ரன்கள் குவித்து கடைசி வரை களத்தில் நிற்க இங்கிலாந்து 20 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 241 ரன்கள் குவித்தது.

    இங்கிலாந்து வீரர்கள்

    பின்னர் 242 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களம் இறங்கிய நியூசிலாந்து 16.5 ஓவர்களில் 165 ரன்கள் சேர்த்து ஆல்-அவுட் ஆனது. இதனால் இங்கிலாந்து 76 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்த வெற்றியின் மூலம் தொடர் 2-2 என சமநிலையில் உள்ளது. கடைசி போட்டியில் வெற்றி பெறும் அணி தொடரை கைப்பற்றும்.
    Next Story
    ×