search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சதம் அடித்த மகிழ்ச்சியில் வார்னர்.
    X
    சதம் அடித்த மகிழ்ச்சியில் வார்னர்.

    இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டி: ஆஸ்திரேலியா வெற்றி

    இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலியா 134 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
    அடிலெய்டு:

    ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடுகிறது. இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி அடிலெய்டு நகரில் இன்று காலை தொடங்கியது.

    20 ஓவர் உலக கோப்பை போட்டிகள் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளன.  இதனை முன்னிட்டு ஒவ்வொரு அணிகளும் தங்களது வீரர்களை தயார்படுத்தி வருகின்றன. அந்த வகையில் இந்த தொடர் முக்கியத்துவம் பெறுகிறது.

    டாஸ் வென்ற இலங்கை அணி பந்து வீசுவது என முடிவு செய்தது.  தொடர்ந்து ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான பின்ச் மற்றும் டேவிட் வார்னர் இலங்கை அணியின் பந்து வீச்சாளர்களை திணறடிக்கும் வகையில் ரன்களை குவித்தனர்.

    அவர்களில் பின்ச் 64 ரன்கள் எடுத்து (8 பவுண்டரிகள், 3 சிக்சர்கள்) ஆட்டமிழந்த நிலையில், மறுபுறம் வார்னர் அதிரடியாக விளையாடினார்.  அவருடன் மேக்ஸ்வெல் கைகோர்த்து 62 ரன்கள் (7 பவுண்டரிகள், 3 சிக்சர்கள்) எடுத்திருந்த நிலையில் பெரேராவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

    இதன்பின் வார்னருடன் இணைந்து டர்னர் விளையாடினார்.  வார்னர் ஆட்டமிழக்காமல் சதம் பூர்த்தி செய்துள்ளார்.  அவர் 56 பந்துகளில் 100 ரன்கள் (10 பவுண்டரிகள், 4 சிக்சர்கள்) எடுத்து உள்ளார்.  20 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட்டுகள் இழந்து 233 ரன்கள் எடுத்தது. இதனால் இலங்கைக்கு 234 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

    இலங்கை அணியில் ஆரம்பத்தில் இருந்து ரன்களை சேர்க்க வீரர்கள் தவறி விட்டனர்.  தொடக்க ஆட்டக்காரர்களான குணதிலகா (11) மற்றும் மென்டிஸ் (0) ரன்களில் ஆட்டமிழந்தனர்.  தொடர்ந்து ராஜபக்சா (2), பெரேரா (16), பெர்னாண்டோ (13), சனாகா (17), சில்வா (5), சன்டாகன் (6), ரஜிதா (0) ரன்கள் எடுத்து வெளியேறினர்.

    அந்த அணியின் மலிங்கா 13 ரன்களுடனும், பிரதீப் 8 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.  20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 9 விக்கெட்டுகளை இழந்து 99 ரன்கள் எடுத்தது. இதனால் இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலியா 134 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

    ஆட்ட நாயகனாக டேவிட் வார்னர் அறிவிக்கப்பட்டார்.  அடுத்த போட்டி வருகிற புதன்கிழமை பிரிஸ்பேன் நகரில் நடக்கிறது.
    Next Story
    ×