search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் அஸ்வின்
    X
    விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் அஸ்வின்

    முதல் டெஸ்டில் டீன் எல்கர், டி காக் சதத்தால் மிரட்டிய தென்ஆப்பிரிக்கா: 3-ம் நாள் ஆட்ட முடிவில் 385-8

    விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வரும் முதல் டெஸ்டில் டீன் எல்கர், டி காக் சதத்தால் தென்ஆப்பிரிக்கா 8 விக்கெட் இழப்பிற்கு 385 ரன்கள் சேர்த்துள்ளது.
    இந்தியா - தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா, முதல் இன்னிங்சில் 7 விக்கெட் இழப்பிற்கு 502 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.

    பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய தென்ஆப்பிரிக்கா நேற்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 39 ரன்கள் எடுத்திருந்தது. டீன் எல்கர் 27 ரன்னுடனும், பவுமா 2 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

    இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. பவுமா 18 ரன்கள் எடுத்த நிலையில் இசாந்த் சர்மா பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து டீன் எல்கர் உடன் கேப்டன் டு பிளிசிஸ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. குறிப்பாக டீன் எல்கர் ஜடேஜா, அஸ்வின் ஆகிய இரண்டு நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர்களையும் அட்டகாசமாக எதிர்கொண்டு ரன்கள் குவித்தார்.

    டீன் எல்கர்

    மறுமுனையில் டு பிளிசிஸ் அரைசதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 55 ரன்கள் எடுத்த நிலையில் அஸ்வின் பந்தில் ஆட்டமிழந்தார். டீன் எல்கர் - டு பிளிசிஸ் ஜோடி 5-வது விக்கெட்டுக்கு 115 ரன்கள் சேர்த்தது.

    அடுத்து டீன் எல்கர் உடன் டி காக் ஜோடி சேர்ந்தார். டி காக் தொடக்கத்தில் இருந்தே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். டீன் எல்கர் 175 பந்தில் சதத்தை பூர்த்தி செய்தார். மறுமுனையில் டி காக் 79 பந்தில் அரைசதம் அடித்தார்.

    இந்த ஜோடியை பிரிக்கட் இந்திய பந்து வீச்சாளர்கள் எவ்வளவு முயன்றும் பலனில்லை. ஒரு கட்டத்தில் இந்திய ஸ்கோரை தென்ஆப்பிரிக்கா எட்டுவிடும் என்ற நிலை இருந்தது.

    அந்த நிலையில்தான் 160 ரன்கள் எடுத்திருந்த டீன் எல்கரை ஜடேஜா வீழ்த்தினார். அதன்பின்தான் ஆட்டம் இந்தியா பக்கம் திரும்பியது. டீன் எல்கர் - டி காக் ஜோடி 6-வது விக்கெட்டுக்கு 164 ரன்கள் சேர்த்தது.

    டி காக் 149 பந்தில் சதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர், 111 ரன்கள் எடுத்த நிலையில் அஸ்வின் பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த பிலாண்டரை ரன்ஏதும் எடுக்காமல் வெளியயேற்ற, அஸ்வின் ஐந்து விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

    சதம் அடித்த டி காக்

    9-வது விக்கெட்டுக்கு முத்துசாமி உடன் மகாராஜ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி இன்றைய 3-வது நாள் ஆட்டம் முடியும் வரை விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டது. தென்ஆப்பிரிக்கா 3-வது நாள் ஆட்ட முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 385 ரன்கள் சேர்த்துள்ளது. இன்றைய ஒரே நாளில் 5 விக்கெட்டுக்களை இழந்து 346 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது.

    இந்தியா தற்போது 117 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. நாளை விரைவாக தென்ஆப்பிரிக்காவின் இரண்டு விக்கெட்டுக்களையும் கைப்பற்றி, பேட்டிங்கில் அதிரடி காட்டினால் இந்தியா வெற்றி பெற வாய்ப்புள்ளது.
    Next Story
    ×