search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கெத்து காட்டும் ஆஸ்திரேலிய அணியை நோக்கி காத்திருக்கும் மூன்று கேள்விகள்
    X

    கெத்து காட்டும் ஆஸ்திரேலிய அணியை நோக்கி காத்திருக்கும் மூன்று கேள்விகள்

    உலகக்கோப்பைக்கான இரண்டு பயிற்சி ஆட்டத்திலும் வெற்றி வாகை சூடியுள்ள ஆஸ்திரேலிய அணியை நோக்கி மூன்று கேள்விகள் காத்திருக்கின்றன.
    ஆஸ்திரேலிய அணியின் முன்னணி வீரர்களான டேவிட் வார்னர் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஓராண்டு தடைபெற்றனர். அதன்பின் ஆஸ்திரேலிய அணி, கிரிக்கெட்டில் தனது உத்வேகத்தை இழந்தது. தோல்விமேல் தோல்விகளை சந்தித்தது.

    இதனால் நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா உலகக்கோப்பை தொடரில் அரையிறுதிக்குக் கூட முன்னேறுவது சந்தேகம் எனக் கூறப்பட்டது.

    இந்நிலையில்தான் இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடிய ஆஸ்திரேலியா ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில், கடைசி மூன்று போட்டிகளிலும் தொடர்ச்சியாக வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது. அதன்பின் பாகிஸ்தான் அணிக்கெதிராக ஐந்து போட்டிகளிலும் வெற்றி பெற்று சாதனைப் படைத்தது.

    இதனால் ஆஸ்திரேலியா அணியின் மீதான எதிர்பார்ப்பு மளமள என உயர்ந்தது. இதனால் உலகக்கோப்பையை வெல்லும் அணிகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. வார்னர், ஸ்மித் ஆகியோர் தற்போது தடைக்காலம் முடிந்து மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளனர். இதனால் அந்த அணி கூடுதல் பலத்துடன் விளங்குகிறது.

    வார்னர், ஸ்மித் இல்லாத நேரத்தில் கவாஜா தொடக்க வீரராக களம் இறங்கி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவருடன் ஷேன் மார்ஷ் இணைந்து அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார்.

    உலகக்கோப்பைக்கான பயிற்சி ஆட்டத்தில் வார்னர், கவாஜா சிறப்பாக விளையாடினர். இந்நிலையில் ஆடும் லெவன் அணியை தேர்வு செய்வதில் அந்த அணிக்கு முக்கியமான மூன்று கேள்விகள் காத்துக் கொண்டிருக்கிறன.

    முதல் கேள்வி:-



    வார்னர் மற்றும் ஸ்மித் ஆகியோர் அணிக்கு திரும்பியுள்ளதால் கவாஜா மற்றும் ஷான் மார்ஷ் ஆகியோருக்கு இடம் கிடைக்குமா? என்பது சந்தேகமே. குறிப்பாக கவாஜாவுக்கு இடம் கிடைத்தால், அவரால் தொடக்க வீரராக களம் இறங்க முடியுமா?, அப்படி என்றால் வார்னர் அல்லது ஆரோன் பிஞ்ச் ஆகியோரில் ஒருவர் 3-வது இடத்தில் களம் இறங்க வேண்டிய நிலை ஏற்படும். இதை ஆஸ்திரேலியா எப்படி சரி செய்யும் என்பது மிகப்பெரிய கேள்வியே.

    2-வது கேள்வி:



    கேப்டன் ஆரோன் பிஞ்ச் உலகக்கோப்பையில் ஆடம் ஜம்பாதான் முதல் சுழற்பந்து வீச்சாளராக இருப்பார் என்று கூறினார். ஆனால் பயிற்சி ஆட்டத்தின்போது நாதன் லயனுக்கு அதிக அளவில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. ஆஸ்திரேலியா மூன்று முதன்மை பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்கும். அப்போது இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்கினால், முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவரை நீக்க வேண்டிய நிலை ஏற்படும். இதனால் எத்தனை சுழற்பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்கும் என்பது 2-வது கேள்வி.

    3-வது கேள்வி:



    மிட்செல் ஸ்டார்க் மற்றும் பேட் கம்மின்ஸ் ஆகியோருக்கு ஏராளமான போட்டிகளில் ஓய்வு அளிக்கப்பட்டு, இவரையும் உலகக்கோப்பைக்காக தயார் செய்து வைத்துள்ளது. இவர்களுக்கு துணையாக பந்து வீசும் ஹசில்வுட் அணியில் இல்லை. ஜை ரிச்சர்ட்சன் காயத்தால் அணியில் இடம் பெறவில்லை.

    நாதன் கவுல்டர்-நைல், கேன் ரிச்சர்ட்சன், ஜேசன் பெரேண்டர்ப் ஆகியோர் உள்ளனர். இவர்களில் யாரைத் தேர்வு செய்வார்கள் என்பது மூன்றாவது கேள்வி. இந்த மூன்று கேள்விக்கும் உரிய பதிலோடு ஆஸ்திரேலியா உலகக்கோப்பை தொடரை எதிர்கொள்ளும்.
    Next Story
    ×