search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேசிய சீனியர் கைப்பந்து - தமிழக அணியை வீழ்த்தி கர்நாடகம் சாம்பியன்
    X

    தேசிய சீனியர் கைப்பந்து - தமிழக அணியை வீழ்த்தி கர்நாடகம் சாம்பியன்

    தேசிய சீனியர் கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் கர்நாடக அணி தமிழகத்தை சாய்த்து முதல்முறையாக சாம்பியன் பட்டத்தை உச்சி முகர்ந்தது. #SeniorNationalVolleyball #Championship #Karnataka
    சென்னை:

    67-வது தேசிய சீனியர் கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்தது. இதில் பெண்கள் பிரிவில் நேற்று நடந்த பரபரப்பான இறுதி ஆட்டத்தில் கேரள அணி 20-25, 25-17, 17-25, 25-19, 15-8 என்ற செட் கணக்கில் நடப்பு சாம்பியனான ரெயில்வே அணியை வீழ்த்தி 11-வது முறையாக பட்டத்தை கைப்பற்றியது. அத்துடன் தொடர்ச்சியாக 9 முறை ரெயில்வேயிடம் இறுதிப்போட்டியில் கண்ட தோல்விக்கும் பதிலடி கொடுத்தது. முன்னதாக நடந்த 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் மராட்டிய அணி 25-20, 25-14, 25-18 என்ற நேர்செட்டில் மேற்கு வங்காளத்தை தோற்கடித்தது.

    ஆண்கள் பிரிவில் நடந்த இறுதிப்போட்டியில் தமிழ்நாடு-கர்நாடக அணிகள் சந்தித்தன. விறுவிறுப்பான இந்த மோதலில் முதல் செட்டை தமிழக அணி தனதாக்கியது. 2-வது செட்டை தமிழக அணி மயிரிழையில் இழந்தது. அதன் பிறகு தமிழக அணியால் சரிவில் இருந்து மீள முடியவில்லை. முடிவில் கர்நாடக அணி 21-25, 36-34, 25-18, 25-14 என்ற செட் கணக்கில் தமிழகத்தை சாய்த்து முதல்முறையாக சாம்பியன் பட்டத்தை உச்சி முகர்ந்தது. முன்னதாக நடந்த 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் கேரள அணி 25-23, 25-16, 25-19 என்ற நேர்செட்டில் பஞ்சாப் அணியை பதம் பார்த்தது.

    பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவுக்கு இந்திய கைப்பந்து சம்மேளன பொதுச்செயலாளர் ராம்அவ்தார்சிங் ஜாக்கர் தலைமை தாங்கினார். சென்னை ஸ்பார்டன்ஸ் நிறுவன சேர்மன் ராஜசேகரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு கோப்பையை வழங்கினார். விழாவில் ஜோன்ஸ் பவுண்டேசன் நிர்வாக இயக்குனர் ஜோன்ஸ், வேலம்மாள் கல்வி குழும தலைமை செயல் அதிகாரி வேல்முருகன், எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக இயக்குனர் (விளையாட்டு) வைத்யநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.  #SeniorNationalVolleyball #Championship #Karnataka 
    Next Story
    ×