search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புரோ கபடியில் பிளேஆப் சுற்று நாளை தொடக்கம்
    X

    புரோ கபடியில் பிளேஆப் சுற்று நாளை தொடக்கம்

    புரோ கபடி லீக் தொடரில் லீக் சுற்று ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில் நாளை பிளேஆப் சுற்று தொடங்குகிறது.#ProKabbadi

    கொச்சி:

    6-வது புரோ கபடி ‘லீக்‘ போட்டி கடந்த அக்டோபர் மாதம் 7-ந்தேதி சென்னையில் தொடங்கியது.

    இதில் 12 அணிகள் பங்கேற்றன. அவை இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டது. ஒவ்வொரு அணியும் 22 லீக் ஆட்டங்களில் மோதின. 12 நகரங்களில் ‘லீக்‘ ஆட்டங்கள் நடந்தன. நேற்று முன் தினத்துடன் ‘லீக்‘ ஆட்டம் முடிவடைந்தன.

    ‘ஏ’ பிரிவில் குஜராத் பார்சுன் (93 புள்ளி), மும்பை (86 புள்ளி), தபாங் டெல்லி (68 புள்ளி) ஆகிய அணிகள் முதல் 3 இடங்களை பிடித்து ‘பிளே ஆப்’ சுற்றுக்கு முன்னேறின. புனேரி பல்தான் (52 புள்ளி), ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் (43 புள்ளி), அரியானா ஸ்டீலர்ஸ் (42 புள்ளி) ஆகியவை 4 முதல் 6-வது இடங்களை பிடித்து வெளியேறின.

    ‘பி’ பிரிவில் பெங்களூர் புல்ஸ் 78 புள்ளியுடன் முதல் இடத்தையும், பெங்கால் வாரியர்ஸ் 69 புள்ளியுடன் 2-வது இடத்தையும், உ.பி. யோதா 57 புள்ளியுடன் 3-வது இடத்தையும் பிடித்து ‘பிளே ஆப்’ சுற்றுக்கு தகுதி பெற்றன. நடப்பு சாம்பியன் பாட்னா பைரேட்ஸ் (55 புள்ளி), தெலுங்கு டைட்டன்ஸ் (51 புள்ளி), தமிழ்தலைவாஸ் (42 புள்ளி) ஆகிய அணிகள் 4 முதல் 6-வது இடங்களை பிடித்து வெளியேறின.

    2 நாட்கள் ஓய்வுக்கு பிறகு ‘பிளே ஆப்’ சுற்று கொச்சியில் நாளை (30-ந்தேதி) தொடங்குகிறது.

    இரவு 8 மணிக்கு நடை பெறும், ‘எலிமினேட்டர்-1’ ஆட்டத்தில் ‘ஏ’ பிரிவில் 2-வது இடத்தை பிடித்த மும்பை ‘பி’ பிரிவில் 3-வது இடத்தை பிடித்த உ.பி. யோதா அணிகளும் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி ‘எலிமினேட்டர் 3’ ஆட்டத்துக்கு தகுதி பெறும். தோற்கும் அணி வெளியேற்றப்படும்.

    இரவு 9 மணிக்கு நடை பெறும் ‘எலிமினேட்டர் 2’ ஆட்டத்தில் ‘ஏ’ பிரிவில் 3-வது இடத்தை பிடித்த டெல்லி ‘பி’ பிரிவில் 2-வது இடத்தை பிடித்த பெங்கால் வாரியர்ஸ் அணிகள் மோது கின்றன. இதில் வெற்றி பெறும் அணி ‘எலிமினேட்டர்3’ ஆட்டத்துக்கு தகுதி பெறும் தோல்வி அடையும் அணி வெளியேற்றப்படும்.

    31-ந்தேதி இரவு 8 மணிக்கு நடைபெறும் ‘குவாலிபையர் 1’ ஆட்டத்தில் ‘ஏ’ பிரிவில் முதல் இடத்தை பிடித்த குஜராத்- ‘பி’ பிரிவில் முதல் இடத்தை பிடித்த பெங்களூர் அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும்.

    தோல்வி அடையும்அணி ‘குவாலி பையர் 2’ ஆட்டத்தில் விளையாடும் ‘எலிமினேட்டர் 3’ ஆட்டத்தில் வெல்லும் அணியுடன் ஆடும்.

    எலிமினேட்டர்3’ ஆட்டம் 31-ந்தேதி இரவு 9 மணிக்கு நடக்கிறது. ‘குவாலிபையர் 2’ ஆட்டம் ஜனவரி 3-ந்தேதியும் இறுதிப்போட்டி ஜனவரி 5-ந்தேதியும் நடக்கிறது. #ProKabbadi

    Next Story
    ×