search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெண்கள் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு கேரி கிர்ஸ்டன் ஏன் தேர்வாகவில்லை?
    X

    பெண்கள் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு கேரி கிர்ஸ்டன் ஏன் தேர்வாகவில்லை?

    இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு கேரி கிர்ஸ்டன் தேர்வு செய்யப்படாததற்கு ஐபிஎல்-தான் காரணம் என தகவல் வெளியாகியுள்ளது.
    இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ரமேஷ் பவார் இருந்து வந்தார். வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்ற உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் தொடரின்போது இவருக்கும், மிதாலி ராஜ்-க்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இருவரும் ஒருவர் மீது ஒருவர் பிசிசிஐ-யில் புகார் அளித்தனர்.

    இதனால் பிசிசிஐ ரமேஷ் பவாரின் பதவியை நீட்டிப்பு செய்யவில்லை. புது பயிற்சியாளரை தேர்வு செய்ய முடிவு செய்தது. தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விரும்புவோர் விண்ணப்பம் செய்யலாம் என விளம்பரம் செய்தது. மேலும், பயிற்சியாளர் பதவிக்கு தகுதியான நபர்களை பரிந்துரை செய்ய கபில்தேவ், அன்ஷூமான் கெய்க்வாட், சாந்தா ரங்கசாமி ஆகியோரை கொண்ட இடைக்கால தேர்வு கமிட்டியை நியமனம் செய்தது.

    இவர்கள் நேற்று 10-க்கும் மேற்பட்டோரை நேர்காணல் செய்தனர். இதில் கேரி கிர்ஸ்டன், டபிள்யூ.வி. ராமன் மற்றும் வெங்கடேஷ் பிரசாத் ஆகியோரை பரிந்துரை செய்தனர். இதில் கேரி கிர்ஸ்டன்தான் முன்னணியில் இருந்தார். ஆனால் டபிள்யூ.வி. ராமன் தலைமை பயிற்சியாளராக நியமனம் செய்யப்பட்டார்.

    கேரி கிர்ஸ்டன் நியமிக்கப்படாததற்கு ஐபிஎல் தொடர்தான் காரணம் என்று தகவல் வெளியாகியுள்ளது. தென்ஆப்பிரிக்கா அணியின் முன்னாள் பேட்ஸ்மேனான கேரி கிர்ஸ்டன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் தலைமை பயிற்சியாளராக உள்ளார். பிசிசிஐ-யின் விதிப்படி பிசிசிஐ கட்டுப்பாட்டிற்குள் உள்ள ஒரு அமைப்பில் சம்பளம் வாங்கும் நபர், இன்னொரு அமைப்பில் சம்பளம் வாங்க முடியாது.



    இது ‘இரட்டை ஆதாயம்’ வரைமுறைக்குள் வரும். கேரி கிர்ஸ்டன் ஆர்சிபி-யின் தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து விலக விரும்பாததால் பெண்கள் கிரிக்கெட் அணிக்கான தலைமை பயிற்சியாளர் பதவியை இழந்துள்ளார்.

    இளையோர் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருக்கும் ராகுல் டிராவிட்டிற்கும் இதே பிரச்சனை ஏற்பட்டதால், ஐபிஎல் தொடரில் இருந்து விலகி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    கேரி கிர்ஸ்டன் தலைமை பயிற்சியாளராக இருக்கும்போது இந்தியா 2011-ம் ஆண்டு 50 ஓவர் உலகக்கோப்பையை வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×