search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் - பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய பெண்கள் அணி 2-வது வெற்றி
    X

    20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் - பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய பெண்கள் அணி 2-வது வெற்றி

    பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தி 2-வது வெற்றியை பெற்றது. #WomenT20 #WorldCup #India #Pakistan
    புரோவிடென்ஸ்:

    பெண்களுக்கான 6-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வெஸ்ட்இண்டீசில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் 2 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதி வருகின்றன. ‘பி’ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் 34 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியது. இந்த நிலையில் இந்திய அணி நேற்று தனது 2-வது லீக்கில் பரம எதிரியான பாகிஸ்தானை சந்தித்தது. ‘டாஸ்’ ஜெயித்த இந்தியா முதலில் பாகிஸ்தானை பேட் செய்ய பணித்தது.



    இதன்படி பேட்டிங்கை தொடங்கிய பாகிஸ்தானுக்கு, இந்திய பவுலர்கள் கடும் குடைச்சல் கொடுத்தனர். ஆயிஷா ஜாபர் (0), உமைமா சோகைல் (3 ரன்) இருவரும் ஒற்றை இலக்கை தாண்டவில்லை. அதன் பிறகு மிடில் வரிசையில் பிஸ்மா மாரூப் (53 ரன்), நிதா தர் (52 ரன்) இருவரும் அரைசதம் அடித்து அணியை ஓரளவு நல்ல ஸ்கோரை எட்ட வைத்தனர். 20 ஓவர்களில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட்டுக்கு 133 ரன்கள் எடுத்தது. இந்திய தரப்பில் சென்னையைச் சேர்ந்த ஹேமலதா மற்றும் பூனம் யாதவ் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.



    அடுத்து களம் புகுந்த இந்திய அணி 19 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 137 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதிகபட்சமாக மிதாலி ராஜ் 56 ரன்களும் (47 பந்து, 7 பவுண்டரி), மந்தனா 26 ரன்களும் எடுத்தனர். கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 14 ரன்களுடன் அவுட் ஆகாமல் இருந்தார்.

    முன்னதாக கிராஸ் இஸ்லெட்டில் ஏ பிரிவில் இங்கிலாந்து-இலங்கை அணிகள் இடையே நடக்க இருந்த லீக் ஆட்டம் பலத்த மழை காரணமாக ஒரு பந்து கூட வீசப்படாமல் ரத்து செய்யப்பட்டது. இரு அணிக்கும் தலா ஒரு புள்ளி பகிர்ந்து அளிக்கப்பட்டது. #WomenT20 #WorldCup #India #Pakistan
    Next Story
    ×