search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    2-வது டெஸ்டில் தென்ஆப்பிரிக்காவுக்கு 490 ரன்கள் இலக்கு: வெற்றியின் விளிம்பில் இலங்கை அணி
    X

    2-வது டெஸ்டில் தென்ஆப்பிரிக்காவுக்கு 490 ரன்கள் இலக்கு: வெற்றியின் விளிம்பில் இலங்கை அணி

    கொழும்பில் நடந்து வரும் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி வெற்றியின் விளிம்பில் உள்ளது. #SouthAfrica #SriLanka
    கொழும்பு:

    இலங்கை - தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொழும்பில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் முறையே இலங்கை 338 ரன்களும், தென்ஆப்பிரிக்கா 124 ரன்களும் எடுத்தன. தென்ஆப்பிரிக்காவுக்கு ‘பாலோ-ஆன்’ வழங்காமல் 214 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி 2-வது நாள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள் எடுத்திருந்தது.



    இந்த நிலையில் 3-வது நாளான நேற்று தொடர்ந்து விளையாடிய இலங்கை அணி 2-வது இன்னிங்சில் 81 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 275 ரன்கள் சேர்த்து ‘டிக்ளேர்’ செய்தது. கருணாரத்னே 85 ரன்களும், மேத்யூஸ் 71 ரன்களும் விளாசினர்.

    தென்ஆப்பிரிக்கா தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் கேஷவ் மகராஜ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். வேகப்பந்து வீச்சாளர் ஸ்டெயின் 11 ஓவர்கள் பந்து வீசியும் விக்கெட் எதுவும் எடுக்கவில்லை. தென்ஆப்பிரிக்க பவுலர்களில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவரான பொல்லாக்கை (421 விக்கெட்) சமன் செய்திருக்கும் ஸ்டெயின் அந்த சாதனையை முறியடிக்க இன்னொரு தொடருக்கு காத்திருக்க வேண்டியதாகி விட்டது.

    முதல் இன்னிங்ஸ் முன்னிலையையும் சேர்த்து இலங்கை அணி தென்ஆப்பிரிக்காவுக்கு 490 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. இமாலய இலக்கை நோக்கி களம் இறங்கிய தென்ஆப்பிரிக்க பேட்ஸ்மேன்களுக்கு சுழற்பந்து வீச்சாளர்கள் ஹெராத், தில்ருவான் பெரேரா, அகிலா தனஞ்ஜெயா ஆகியோர் குடைச்சல் கொடுத்தனர். இலங்கை கேப்டன் லக்மல், பந்து வீச்சுக்கு இந்த மூன்று பேரை மட்டுமே இடைவிடாது பயன்படுத்தினார். அதற்கு பலனும் கிடைக்காமல் இல்லை.

    தொடக்க ஆட்டக்காரர் மார்க்ராம் 14 ரன்னில் எல்.பி.டபிள்யூ. ஆனார். மற்றொரு தொடக்க வீரர் டீன் எல்கர் 5 ரன்னில் கேட்ச் கண்டத்தில் இருந்து தப்பினார். 6 ரன்னில் கிளன் போல்டு ஆன போதும், 23 ரன்களில் விக்கெட் கீப்பர் டிக்வெல்லாவிடம் கேட்ச் ஆன போதும், பந்து வீசிய பெரேரா நோ-பாலாக வீசியது தெரிய வந்ததால் அடுத்தடுத்து மறுவாழ்வு பெற்றார். ஆனாலும் இந்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொள்ளாத அவர் 37 ரன்களில் விரட்டப்பட்டார். அம்லா (6 ரன்), கேப்டன் பிளிஸ்சிஸ் (7 ரன்), விக்கெட் தடுப்பாளராக இறக்கப்பட்ட மகராஜ் (0) ஆகியோரும் இலங்கை பவுலர்கள் வீசிய சுழல் வலையில் சிக்கி சிதறினர்.

    3-வது நாள் ஆட்ட நேர முடிவில் தென்ஆப்பிரிக்க அணி 2-வது இன்னிங்சில் 41 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 139 ரன்களுடன் பரிதவித்துக் கொண்டு இருந்தது. டி புருன் (45 ரன், 97 பந்து), பவுமா (14 ரன்) களத்தில் உள்ளனர். இலங்கை தரப்பில் ஹெராத், தனஞ்ஜெயா தலா 2 விக்கெட்டுகளும், பெரேரா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

    தென்ஆப்பிரிக்க அணியின் வெற்றிக்கு இன்னும் 351 ரன்கள் தேவைப்படுகிறது. ஆனால் கைவசம் 5 விக்கெட்டுகள் மட்டுமே உள்ளது. ஆடுகளம் சுழலின் சொர்க்கமாக திகழும் நிலையில் இந்த டெஸ்டில் இலங்கை அணி வெற்றிக்கனியை பறிக்கப்போவது ஏறக்குறைய உறுதியாகி விட்டது. 
    Next Story
    ×