search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உலக கோப்பை கால்பந்து-  இ பிரிவில் இடம் பெற்றுள்ள அணிகள் குறித்து ஒரு பார்வை
    X

    உலக கோப்பை கால்பந்து- இ பிரிவில் இடம் பெற்றுள்ள அணிகள் குறித்து ஒரு பார்வை

    உலக கோப்பை கால்பந்து போட்டி ரஷியாவில் தொடங்க உள்ளது. இந்தப் போட்டியில் ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் இடம் பெற்றுள்ளன. இ பிரிவில் இடம் பெற்றுள்ள நாடுகள் பற்றி ஒரு பார்வை. #FIFA2018
    பிரேசில் (தரவரிசை- 2)

    கால்பந்து விளையாட்டுக்கு பெயர் போனது பிரேசில். தென்அமெரிக்கா கண்டத்தில் உள்ள அந்நாட்டு மக்கள் இந்த விளையாட்டை மிகவும் ரசிக்க கூடியவர்கள். அதற்கு ஏற்ற வகையில் அந்நாட்டு கால்பந்து அணியும் திகழ்கிறது. உலக கோப்பையை பிரேசில் அணி 5 முறை வென்று உலக சாதனை படைத்து இருக்கிறது. மேலும் அனைத்து உலக கோப்பை போட்டியிலும் விளையாடிய ஒரே அணி ஆகும்.

    பீலே, ரொனால்டோ, ரொனால்டினோ, ஜிகோ, கேரின்சா, ரொமாரியோ போன்ற உலகின் தலைசிறந்த வீரர்களை உருவாக்கியது. பிரேசில் அணி 1958, 1962, 1970, 1994, 2002 ஆகிய ஆண்டுகளில் உலக கோப்பையை வென்றது. 5 முறை உலக கோப்பையை வேறு எந்த அணியும் வென்றது கிடையாது. மேலும் பிரேசில் அணி இரண்டு தடவை 2-வது இடத்தையும் (1950, 1998), 3-வது இடத்தையும் (1938, 1978), 4-வது இடத்தையும் (1974, 2014) பிடித்தன. அந்த அளவுக்கு கால்பந்தில் அந்த அணி வலிமையாக உள்ளது. கடந்த முறை சொந்த மண்ணில் நடந்த போட்டியில் பிரேசில் அணி அரை இறுதியில் 1-7 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியிடம் மோசமாக தோற்றது. நட்சத்திர வீரர் நெய்மர் காயத்தால் விலகியது மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது.

    தற்போதுள்ள பிரேசில் அணி பலம் பொருந்தியதாக இருப்பதால் 6-வது முறையாக உலக கோப்பையை கைப்பற்ற அதிக வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. நெய்மர் மிகவும் நல்ல நிலையில் இருக்கிறார். அவரது உத்வேகமான ஆட்டம் பிரேசில் அணியை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர் சர்வதேச போட்டியில் 54 கோல்கள் அடித்து உள்ளார். பிலிப் கோடினோ, ராபர்ட்டோ பிர்மினோ, பிரட், டியோகோ சில்வா போன்ற முன்னணி வீரர்களும் அந்த அணியில் உள்ளனர்.

    உலக கோப்பை போட்டிக்கு முதல் அணியாக நுழைந்த பிரேசில் ‘இ’ பிரிவில் இடம் பெற்றுள்ளது. சுவிட்சர்லாந்து, செர்பியா, கோஸ்டாரிகா போன்ற நாடுகள் அந்த பிரிவில் உள்ளன. இதில் சுவிட்சர்லாந்து சவாலான அணி. இந்த பிரிவில் முதல் இடத்தை பிடிக்கும் நம்பிக்கையுடன் பிரேசில் அணி இருக்கிறது.

    உலக கோப்பையில் 104 ஆட்டத்தில் விளையாடி 70-ல் வெற்றி பெற்றது. 17 ஆட்டத்தில் தோற்றது. மீதியுள்ள 17 போட்டியில் டிரா ஆனது. 221 கோல்கள் அடித்துள்ளன. 102 கோல்கள் வாங்கியுள்ளன.

    சுவிட்சர்லாந்து (தரவரிசை-6 )

    ஐரோப்பா கண்டத்தில் உள்ள சுவிட்சர்லாந்து உலக கோப்பை போட்டியில் 10 முறை விளையாடி உள்ளது. இதில் 3 தடவைகால் இறுதி வரை நுழைந்து உள்ளதே அந்த அணியின் சிறப்பான நிலையாகும். கடைசியாக 1954-ம் ஆண்டு அந்த அணி கால் இறுதிக்கு தகுதி பெற்றது. அதற்கு பின்னர் சுவிட்சர்லாந்து தான் விளையாடிய 7 போட்டியில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. கடந்த முறை 2-வது சுற்றோடு வெளியேறியது. தற்போது அந்த அணி தர வரிசையில் ‘டாப் 10’ இடத்தில் உள்ளது. மேலும் அந்த அணி மிகவும் சிறப்பாக விளையாடுவதால் 64 ஆண்டுகளுக்கு பிறகு சிறந்த நிலையை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ‘இ’ பிரிவில் முதலிடத்தை பிடிக்க கூடிய திறமையுடன் சுவிட்சர்லாந்து உள்ளது. பிரேசில் அணிக்கு கடும் சவாலாக இருக்கும். பெக்ராமி, ஷொர்டான், ஷேபரோவிக் போன்ற முன்னணி வீரர்கள் அந்த அணியில் உள்ளனர். உலக கோப்பை போட்டியை நடத்திய அணிகளில் அந்நாடு ஒன்றாகும். அங்கு 1954-ல் போட்டி நடந்தது.

    சிறந்த நிலை: கால் இறுதி (1934, 1938, 1954)

    கோஸ்டாரிகா (தரவரிசை- 23)

    5-வது முறையாக உலக கோப்பையில் கோஸ்டாரிகா பங்கேற்கிறது. இதற்கு முன்பு (1990, 2002, 2006, 2014) போட்டியில் ஆடி இருந்தது.

    கடந்த உலக கோப்பையில் அந்த அணி கால் இறுதி வரை நுழைந்து இருந்தது. நெதர்லாந்திடம் பெனால்டி ஷூட்டில் தோற்று அரை இறுதி வாய்ப்பை இழந்தது. அந்த அணியில் பிரையன் ரூயிஸ், கிறிஸ்டியன் போலேன்ஸ், மார்கோ யூரினா போன்ற முன்னணி வீரர்கள் உள்ளனர்.

    பிரேசில், சுவிட்சர்லாந்து போன்ற சிறந்த அணிகள் அந்த பிரிவில் இருப்பதால் கோஸ்டாரிகா ‘நாக்அவுட்’ சுற்றுக்கு முன்னேறுவது கடினமானதே.

    சிறந்த நிலை: கால்இறுதி (2014)


    செர்பியா (தரவரிசை- 34)

    8 ஆண்டுகளுக்கு பிறகு செர்பியா உலக கோப்பை போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. செர்பியா தனி நாடாக சுதந்திரம் பெற்ற பிறகு 2-வது முறையாக பங்கேற்கிறது. ஒருங்கிணைந்த யூகோசுலேவியாக இருந்தபோது 2 முறை 4-வது இடத்தை (1930, 1962) பிடித்து இருந்தது.

    ஆஸ்திரியா, வேல்ஸ் அணிகளை வீழ்த்தி உலக போட்டிக்குள் நுழைந்தது. தகுதி சுற்றில் 20-க்கும் மேற்பட்ட கோல்களை அடித்து இருந்தது. அலெக்சாண்டர் மிட்ரோவிக் 6 கோல்கள் அடித்து இருந்தார். இவானோவிக், நெமன்ஜா மோட்டிக் போன்ற முன்னணி வீரர்கள் அந்த அணியில் உள்ளனர். #FIFA2018
    Next Story
    ×