search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்திய கிரிக்கெட் வாரிய புதிய விதிமுறைக்கு ஆலோசனை தெரிவிக்க வேண்டும்- சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
    X

    இந்திய கிரிக்கெட் வாரிய புதிய விதிமுறைக்கு ஆலோசனை தெரிவிக்க வேண்டும்- சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

    இந்திய கிரிக்கெட் வாரியத்தின் புதிய விதிமுறைகளை வகுப்பது குறித்த தங்களது ஆலோசனைகளை இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் வருகிற 11-ந் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
    புதுடெல்லி:

    லோதா கமிட்டி சிபாரிசின் அடிப்படையில் இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாக விதிமுறையில் மாற்றம் செய்ய வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே உத்தரவிட்டு இருந்தது. இது தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான பெஞ்ச் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ‘இந்திய கிரிக்கெட் வாரியத்தின் புதிய விதிமுறைகளை வகுப்பது குறித்த தங்களது ஆலோசனைகளை மாநில கிரிக்கெட் சங்கமும், இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகளும் வருகிற 11-ந் தேதிக்குள் கோர்ட்டுக்கு தெரிவிக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டனர்.

    புதிய விதிமுறை வகுப்பது குறித்த விஷயத்தில் முந்தைய தீர்ப்பில் தெரிவித்த பரிந்துரைகளை பின்பற்ற வேண்டும். புதிய விதிமுறைக்கு இந்த கோர்ட்டின் அனுமதி பெற வேண்டும் என்றும் நீதிபதிகள் தங்கள் உத்தரவில் தெரிவித்தனர். அத்துடன் வழக்கு விசாரணையை வருகிற 11-ந் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

    தேசிய போட்டிகளில் பீகார் கிரிக்கெட் சங்க அணி பங்கேற்க வருகிற செப்டம்பர் மாதம் முதல் அனுமதி அளிக்கப்படும் என்று இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாக கமிட்டி அளித்த உறுதிமொழியை ஏற்று பீகார் கிரிக்கெட் சங்கம் சார்பில் தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும் இன்று நடக்க இருந்த மராட்டிய கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் தேர்தலை வருகிற 11-ந் தேதி வரை தள்ளிவைக்கவும் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.
    Next Story
    ×