என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைவசம் 7 விக்கெட்- தோல்வியை தவிர்க்க கடைசி நாள் முழுவதும் இங்கிலாந்து சமாளிக்குமா?
    X

    கைவசம் 7 விக்கெட்- தோல்வியை தவிர்க்க கடைசி நாள் முழுவதும் இங்கிலாந்து சமாளிக்குமா?

    ஆக்லாந்தில் நடைபெற்று வரும் இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் நியூசிலாந்து கடைசி நாளில் 7 விக்கெட்டுக்களை வீழ்த்தி வெற்றிபெற வாய்ப்புள்ளது. #NZvENG
    நியூசிலாந்து - இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் பகல் - இரவு ஆட்டமாக ஆக்லாந்தில் நடைபெற்று வருகிறது. இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 58 ரன்னில் சுருண்டது. பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய நியூசிலாந்து நேற்றைய 3-வது நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 233 ரன்கள் எடுத்து இருந்தது. நிக்கோல்ஸ் 52 ரன்னுடனும், வாட்லிங் 18 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். மழையால் நேற்றைய ஆட்டம் பெரிதும் பாதிக்கப்பட்டது.

    இன்று 4-வது நாள் ஆட்டம் நடந்தது. தொடர்ந்து விளையாடிய நியூசிலாந்து அணி 8 விக்கெட் இழப்புக்கு 427 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. நிக்கோல்ஸ் அபாரமாக விளையாடி சதம் அடித்தார். அவர் 268 பந்துகளில் 18 பவுண்டரியுடன் 145 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். ஏற்கனவே அந்த அணியின் கேப்டன் வில்லியம்சன் செஞ்சுரி அடித்து இருந்தார். இங்கிலாந்து தரப்பில் ஆண்டர்சன், பிராட் தலா 3 விக்கெட் வீழ்த்தினார்கள்.

    369 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை இங்கிலாந்து விளையாடியது. அலஸ்டைர் குக், ஸ்டோன்மேன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். முதல் இன்னிங்சில் 5 ரன்கள் எடுத்த குக், இதில் 2 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

    2-வது விக்கெட்டுக்கு ஸ்டோன்மேன் உடன் ஜோ ரூட் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இருவரும் அரைசதம் அடித்தனர்.

    அரைசதம் அடித்த இருவரும் நீண்ட நேரம் களத்தில் நிற்க முடியாமல் வெளியேறினார்கள். ஸ்டோன்மேன் 55 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழக்க, ஜோ ரூட் 4-வது நாள் ஆட்டம் முடிவதற்கு சிலநிமிடங்களே இருந்த நிலையில், 51 ரன்கள் எடுத்த நிலையில் போல்ட் பந்தில் ஆட்டமிழந்தார். ஜோ ரூட் அவுட் உடன் 4-வது நாள் ஆட்டம் முடிவிற்கு வந்தது.



    இங்கிலாந்து 4-வது நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் எடுத்துள்ளது. தற்போது வரை இங்கிலாந்து 237 ரன்கள் பின்தங்கிய நிலையில் உள்ளது. கைவசம் 7 விக்கெட்டுக்கள் உள்ளன.

    நாளைய கடைசி நாள் ஆட்டமுழுவதும் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் நிலைத்து நின்று விளையாட வேண்டும். இல்லையெனில் மழை குறுக்கிட வேண்டும். இதில் ஏதாவது ஒன்று நடந்தால் மட்டுமே இங்கிலாந்து தோல்வியை தவிர்க்க முடியும்.
    Next Story
    ×