என் மலர்

  செய்திகள்

  தொடரை வெல்லப்போவது யார்? இன்று கடைசி 20 ஓவர் போட்டி
  X

  தொடரை வெல்லப்போவது யார்? இன்று கடைசி 20 ஓவர் போட்டி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தொடரை வெல்லும் முனைப்புடன் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன. #SAvIND #INDvSA
  கேப்டவுன்:

  இந்திய கிரிக்கெட் அணியின் 2 மாத கால தென்ஆப்பிரிக்க சுற்றுப்பயணம் இன்றுடன் முடிவுக்கு வருகிறது. அங்கு டெஸ்ட் தொடரை 1-2 என்ற கணக்கில் பறிகொடுத்த இந்திய அணி ஒரு நாள் தொடரை 5-1 என்ற கணக்கில் கைப்பற்றி வரலாறு படைத்தது.

  இதைத் தொடர்ந்து 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் முதலாவது ஆட்டத்தில் இந்திய அணி 28 ரன்கள் வித்தியாசத்திலும், 2-வது ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்கா 6 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன. இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையே தொடர் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி கேப்டவுனில் இன்றிரவு (சனிக்கிழமை) நடக்கிறது.

  தொடக்க ஆட்டத்தில் 203 ரன்கள் குவித்து அசத்திய இந்திய அணி 2-வது ஆட்டத்திலும் சவால் அளிக்கும் வகையில் டோனி, மனிஷ்பாண்டே ஆகியோரின் அரைசதத்தின் உதவியுடன் 188 ரன்கள் திரட்டியது. ஆனால் பந்து வீச்சில் சொதப்பியதால் வெற்றி வாய்ப்பு நழுவிப்போனது. குறிப்பாக சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹலின் ஓவரில், எதிரணி பேட்ஸ்மேன்கள் சிக்சர் மழை பொழிந்து விட்டனர். எனவே இன்றைய ஆட்டத்தில் சாஹலுக்கு பதிலாக குல்தீப் யாதவ் சேர்க்கப்பட வாய்ப்புள்ளது.

  ஒரு நாள் தொடரில் வியப்புக்குரிய வகையில் ஆடிய கேப்டன் விராட் கோலி 20 ஓவர் தொடரில் பெரிய அளவில் (26 மற்றும் 1 ரன்) ஜொலிக்கவில்லை. இன்னும் 17 ரன்கள் எடுத்தால் சர்வதேச 20 ஓவர் போட்டியில் 2 ஆயிரம் ரன்கள் சேர்த்த முதல் இந்தியர் என்ற பெருமையை பெறுவார். ரன் குவித்து, பயணத்தை வெற்றியுடன் நிறைவு செய்வதில் கோலி தீவிர முனைப்பு காட்டுகிறார்.

  அதே சமயம் 2-வது ஆட்டத்தில் கிட்டிய வெற்றி தென்ஆப்பிரிக்க அணியின் நம்பிக்கையை அதிகப்படுத்தியுள்ளது. கடந்த ஆட்டத்தில் கேப்டன் டுமினியும், விக்கெட் கீப்பர் ஹென்ரிச் கிளாசென்னும் அதிரடியாக அரைசதம் விளாசினர். அதே உத்வேகத்தை இந்த ஆட்டத்திலும் வெளிப்படுத்த ஆர்வமாக இருக்கிறார்கள். ஜான் ஸ்மட்ஸ், டேவிட் மில்லர் ஆகியோர் போதிய பார்மில் இல்லாவிட்டாலும் அணியில் மாற்றம் இருக்காது என்றே தெரிகிறது.

  கேப்டவுன் நியூலாண்ட்ஸ் மைதானத்தில் இந்திய அணி இதுவரை 20 ஓவர் போட்டிகளில் விளையாடியது கிடையாது. தென்ஆப்பிரிக்க அணி இங்கு 8 ஆட்டங்களில் விளையாடி 3-ல் வெற்றியும், 5-ல் தோல்வியும் கண்டுள்ளது. மெதுவான தன்மை கொண்ட இந்த ஆடுகளத்தில் இந்திய அணி ஒரு நாள் போட்டியில் 124 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது நினைவிருக்கலாம்.

  தென்ஆப்பிரிக்க வீரர் பெஹர்டைன் கூறுகையில், ‘இந்த மைதானத்தில் 160 முதல் 180 ரன்கள் வரை நல்ல ஸ்கோராக இருக்கும் என்று கருதுகிறேன். மாலை 6 மணிக்கு (தென்ஆப்பிரிக்க நேரப்படி) போட்டி தொடங்குவதால் பந்து ஓரளவு ‘ஸ்விங்’ ஆகலாம். செஞ்சூரியன் மைதானத்தில், சில ஷாட்டுகள் எளிதில் சிக்சருக்கு ஓடின. அத்தகைய ஷாட்டுகள் இங்கு எல்லைக்கோடு அருகே கேட்ச் ஆகி விடும். அதனால் தென்ஆப்பிரிக்க வீரர்கள் ஷாட்டுகளை அடிப்பதில் சாதுர்யமாக செயல்பட வேண்டும்’ என்றார்.

  போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

  இந்தியா: ஷிகர் தவான், ரோகித் சர்மா, சுரேஷ் ரெய்னா, விராட் கோலி (கேப்டன்), டோனி, மனிஷ் பாண்டே, ஹர்திக் பாண்ட்யா, குல்தீப் யாதவ் அல்லது யுஸ்வேந்திர சாஹல், புவனேஷ்வர்குமார், ஷர்துல் தாகூர், ஜெய்தேவ் உனட்கட் அல்லது பும்ரா.

  தென்ஆப்பிரிக்கா: ஜான் ஸ்மட்ஸ், ரீஜா ஹென்ரிக்ஸ், டுமினி (கேப்டன்), டேவிட் மில்லர், ஹென்ரிச் கிளாசென், பெஹர்டைன், கிறிஸ் மோரிஸ், ஜூனியர் டாலா, பேட்டர்சன், பெலக்வாயோ, ஷம்சி அல்லது பாங்கிசோ.

  இந்திய நேரப்படி இரவு 9.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை டி.டி.ஸ்போர்ட்ஸ், சோனி டென்1, சோனி டென்3 சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

  முன்னதாக இதே மைதானத்தில் இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு தொடங்கும் 5-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டியில் இந்தியா-தென்ஆப்பிரிக்கா பெண்கள் அணியினர் மல்லுகட்டுகின்றனர். தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கும் இந்திய பெண்கள் அணியும் தொடரை வெல்லுமா? என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது. 
  Next Story
  ×