என் மலர்
சிறப்புக் கட்டுரைகள்

உச்ச செவ்வாய் யாருக்கு நன்மை தரும்
- பொதுவாக ஒரு கிரகத்தின் பலம் என்பது ஆட்சி, உச்சம், நட்பு மூலத்திரிகோணம் என்ற ரீதியில் எடுத்துக் கொள்ளலாம்.
- ஒரு கிரகம் தன் சொந்த வீட்டிலோ நட்பு வீட்டிலோ உச்சமடைவது சாதாரண விஷயமாகும்.
ஒருவரின் குண நலன்களை பிரதிபலிப்பதில் ஒரு ஜாதகத்தில் செவ்வாயின் பங்கு அளப்பரியது செவ்வாய் வலுப்பெற்றவர்கள் பிடிவாதம், அகங்காரம், துணிச்சல், கர்வம், அவசர புத்தி, கலகம், அதீத காம உணர்வு நிறைந்தவராக இருப்பார்கள். அதே நேரத்தில் செவ்வாய் வலுப்பெற்று இருந்தால் மட்டுமே ஒருவருக்கு தைரியம், வீரியம், சொத்துக்கள் சேருதல், உடன் பிறந்த சகோதரர்களின் அன்பு, விவசாயம் கால்நடை வளர்ப்பு போன்றவற்றில் ஆதாயம் போன்ற சுப பலன்கள் நடக்கும்.செவ்வாய் பலம் குறைந்தால் பிரஷர், மாதவிடாய் கோளாறு, சொத்துக்கள் இல்லாத நிலை, ஏமாற்றம் போன்ற அசுபங்கள் அதிகமாக இருக்கும். எந்த கிரகமாக இருந்தாலும் அதன் மூலம் நன்மையும் தீமையும் உண்டு.
இரு ஆதிபத்தியம் கொண்ட கிரகங்கள் ஒரு ஆதிபத்திய ரீதியாக நன்மை செய்தால் மற்றொரு ஆதிபத்திய ரீதியாக ஜாதகருக்கு ஏதாவது ஒரு பின்விளைவுகளை தரலாம். பலம் பெற்ற ஒரு கிரகத்தின் காரகத்துவத்தை ஜாதகர் எளிமையாக அடைய முடியும். பலம் இல்லாத கிரகத்தின் ஆதிபத்திய ரீதியான பலனை ஜாதகர் போராடி அடைவார்கள். அல்லது வாழ்நாள் லட்சியமாக கனவாகவே இருக்கும்.
பொதுவாக ஒரு கிரகத்தின் பலம் என்பது ஆட்சி, உச்சம், நட்பு மூலத்திரிகோணம் என்ற ரீதியில் எடுத்துக் கொள்ளலாம்.அத்துடன் ஒரு ஜாதகத்தில் செவ்வாயின் நட்சத்திரத்தில் ஏதாவது கிரகம் இருந்தாலும் அந்த தசா புத்தியில் ஜாதகருக்கு செவ்வாயால் ஏற்படக்கூடிய அனைத்து நன்மை தீமைகளும் நடக்கும். செவ்வாய் மகர ராசியில் 28 வது பாகையில் அவிட்டம் நட்சத்திரத்தில் உச்சமடைகிறார்.
ஒரு கிரகம் தன் சொந்த வீட்டிலோ நட்பு வீட்டிலோ உச்சமடைவது சாதாரண விஷயமாகும். தனது பகை வீட்டில் தனது சொந்த நட்சத்திரத்தில் ஒரு கிரகம் உச்சம் அடைவது செவ்வாயில் தைரியத்தையும் வீரத்தையும் வெளிப்படுத்தும் அமைப்பாகும். மேலும் தற்போது கோட்ச்சாரத்தில் 16.1.2026 முதல் 23.2.2026 வரை மகரத்தில் உச்சம் பெறப் போகிறார். கடந்த வாரங்களில் சூரியன், சந்திரன் உச்சம் பெற்றால் என்ன பலன் தரும் என்ற கட்டுரையை பார்த்தோம் தற்போது செவ்வாய் உச்சம் பெற்றால் யாருக்கு நன்மை தரும் என்பதை இந்த வாரம் நாம் பார்க்கலாம்.
மேஷ லக்னத்திற்கு ராசி அதிபதி மட்டும் அஷ்டமாதிபதியான செவ்வாய் 10-ம்மிடமான தொழில் ஸ்தானத்தில் உச்சம் பெறும்போது ஜாதகருக்கு செவ்வாய் திசை புத்தி காலகட்டங்களில் விபரீத ராஜயோகமான பலன்கள் நடக்கும்.
ஒன்றுக்கும் மேற்பட்ட தொழில் வாய்ப்புகள் தேடி வரும். தொழில் ரீதியான சிந்தனை ஜாதகருக்கு மிகுதியாக இருக்கும், அரசியல் அரசாங்கம் அரசு சார்ந்த துறைகளில் ஆதாயம் மிகுதியாக இருக்கும் அவரே அஷ்டமாதிபதி என்பதால் ஒரு நல்லது நடந்தாலும் ஒரு அவச்சொல், அவமானம் ஒரு வம்பு, வழக்கு, அறுவை சிகிச்சை, வாழ்நாள் முழுவதும் மருந்து சாப்பிட வேண்டிய நோய், அல்லது கடன் இருந்தே தீரும்.
ரிஷப லக்னத்திற்கு 7, 12-ம் அதிபதியான செவ்வாய் ஒன்பதாம் இடமான பாக்கியஸ்தானத்தில் உச்சம் பெறுவது மிகச் சிறப்பான அமைப்பாகும். ஜாதகருக்கு தந்தையின் வழியில் அதிக சொத்து கிடைக்கும். திருமணத்திற்கு பிறகு சொத்து சேர்க்கை உண்டாகும்.பூர்வ ஜென்மத்து வாழ்க்கை துணை இந்த ஜென்மத்திற்கும் வாழ்க்கை துணையாக வருவார். தம்பதிகள் ஓர் உயிர் ஈர் உடலாக வாழ்வார்கள். கூட்டுத் தொழில் ஆர்வம் அதிகமாக இருக்கும். பரம்பரை கூட்டுத் தொழிலில் ஜாதகர் பங்குதாரராக இருப்பார். சிலருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட திருமண உறவு ஏற்படும். செவ்வாய் தசை, புத்தி நடப்பில் இருந்தால் வெளியூர் வெளிநாட்டில் வாழ்வார்கள் அல்லது அதிக வைத்தியம் செய்வார்கள்.
மிதுன லக்னத்திற்கு செவ்வாய் 6, 11-ம் அதிபதி என்பதால் உச்சம் பெறுவது சிறப்பல்ல. ஆறாமிடம் எனும் கடன், நோய் எதிரி ஸ்தானத்திற்கு அதிபதியான செவ்வாய் அஷ்டம ஸ்தானத்தில் உச்சம் பெறும் போது கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகமாகும். அதிர்ஷ்ட உயில் சொத்து, பணம், நகைகள், இன்சூரன்ஸ் காப்பீட்டு பணம் போன்றவைகள் கிடைக்கும். எதிரியை வெல்லக்கூடிய வலிமை உண்டாகும். அவரே லாப ஸ்தான அதிபதியாக இருப்பதால் செவ்வாய் சுப வலுப் பெற்றால் மிகப் பெரிய லாபம் கிடைத்து எவ்வளவு அதிகமான கடன் இருந்தாலும் விரைவில் தீர்ந்து விடும். செவ்வாயால் கடன், நோய் உருவாகினாலும் கடன், நோய் நிவர்த்தியாகும்.
கடக லக்னத்திற்கு செவ்வாய் 5, 10-ம் அதிபதி. செவ்வாய் இந்த லக்னத்திற்கு ஏக யோகாதிபதி என்பதால் ஜாதகருக்கு மிடுக்கான தோற்றம், ஆளுமைத் திறன் கூடும். தொழில் வளர்ச்சி அபரிமிதமாக இருக்கும். நண்பர்கள், தொழில் கூட்டாளி வாடிக்கையாளர்கள், வாழ்க்கைத் துணையால் ஆதாயம் உண்டு.காதல் திருமணம் நடக்கும். உரிய வயதில் திருமணம் குழந்தை பேரு போன்ற நல்ல சம்பவங்கள் நடக்கும். கவுரவ பதவி உண்டு. ஜாதகருக்கு குலதெய்வமே குழந்தையாக பிறக்கும். குலதெய்வ இஷ்ட தெய்வம் வழிபாட்டில் ஜாதகருக்கு ஆர்வம் அதிகம் இருக்கும். அதிர்ஷ்டகரமான வாழ்க்கையை வாழ்க்கைத் துணை மூலமாக அனுபவிப்பார்கள். சிம்ம லக்னத்திற்கு 4,9-ம் அதிபதியான செவ்வாய் 6-ல் உச்சம் பெறுவதால் நிலையான நிரந்தரமான உத்தியோகம் உண்டு. தாய், தந்தை வழி உறவுகளின் அன்பு, அனுசரனை இருக்கும். தாய் வழி, தந்தை வழி பூர்வீகச் சொத்துக்கள் கிடைக்கும். தீர்த்த யாத்திரை செல்லுதல், தானதர்மம் செய்தல் போன்ற பாக்கிய பலன்கள் நடக்கும். அரச உத்தியோகம், அரச பதவி போன்ற பாக்கிய பலன்கள் நடக்கும். விவசாயம், கால்நடை வளர்த்தல், பண்ணை தொழில், ரியல் எஸ்டேட் போன்றவற்றில் ஆர்வம் மிகுதியாக இருக்கும்.
'பிரசன்ன ஜோதிடர்' ஐ.ஆனந்தி
கன்னி லக்னத்திற்கு 3, 8-ம் அதிபதியான செவ்வாய் ராசிக்கு 5-ல் உச்சம் பெறுவதால் பூர்வீகம், குலதெய்வம், குழந்தை, அதிர்ஷ்டம் சார்ந்த விஷயங்களில் ஜாதகருக்கு மன உளைச்சல் இருக்கும். பாகப்பிரிவினையில் உடன் பிறந்தவர்களால் மனவருத்தம் ஏற்படும். ஆவணங்கள் தொடர்பான பிரச்சினைகள் ஜாதகருக்கு செவ்வாய் தசை புத்தி காலங்களில் வரலாம். சிலருக்கு விபரீத ராஜ யோகமாக ஒரு விபரீதம் ஏற்பட்டு அதன் பிறகு அதிர்ஷ்ட சொத்து, உயில் பணம், காப்பீட்டு பணம் போன்ற வைகள் கிடைக்கலாம். அண்டை அயலாருடன் எல்லைத் தகராறு, உடன் பிறந்தவர்களுடன் சொத்துத் தகராறு, ஆவணங்கள் தொடர்பான பிரச்சினை, விபத்து, கண்டம், சர்ஜரி வம்பு, வழக்கு ஏற்படலாம்.
துலாம் லக்னத்திற்கு 2-ம் அதிபதியான செவ்வாய் ராசிக்கு 4-ல் உச்சம் பெறுவது மிக அதிர்ஷ்டமான யோகமான அமைப்பாகும். இளம் வயதில் காதல் திருமணம் நடக்கும். அல்லது உறவுகளில் வரன் வரும். சொத்துக்களால், கூட்டுத் தொழிலால், வாழ்க்கைத் துணையால் ஆதாயம் உண்டாகும். வாடகை வருமானம் தரக்கூடிய சொத்துக்கள் சேரும். வாழ்க்கைத் துணை மூலமாக உபரி வருமானம் கிடைக்கும். வாழ்க்கைத் துணையின் மூலமாக ஜாதகரின் எண்ணங்கள் கனவுகள் லட்சியங்கள் நிறைவேறும். தம்பதிகள் ஒருவரை ஒருவர் அளவுக்கு அதிகமாக நேசிப்பார்கள்.சில ஆண்கள் வீட்டோடு மாப்பிள்ளையாக சென்று விடுவார்கள்.
விருச்சிக லக்னத்திற்கு 1,6-ம் அதிபதியான செவ்வாய் ராசிக்கு 3-ல் உச்சம் பெறுவதால் ஜாதகரின் முயற்சி எளிதில் வெற்றி பெறும். உடன்பிறந்தவர்களின் அன்பும் அனுசரணையும் இருக்கும். ஒரு நல்லது நடந்தாலும் கெட்டது நடந்தாலும் அதற்கு ஜாதரே காரணமாக இருப்பார். இடப்பெயர்ச்சி நடக்கும். மனதில் வெறுமை தேவையில்லாத கற்பனை பய உணர்வு நிரம்பும். ஞாபக சக்தி குறையும். கடன் தொல்லை அதிகரிக்கும். தேவையற்ற வழக்குகள் மற்றும் பேச்சுகளை தவிர்ப்பது நல்லது. சிலருக்கு விபரீத ராஜ யோகத்தால் அதிர்ஷ்ட சொத்து, நகை, பணம், பாலிசி முதிர்வு தொகை கிடைக்கும்.
தனுசு லக்னத்திற்கு 5,12- அதிபதியான செவ்வாய் தனம் வாக்கு குடும்ப ஸ்தானத்தில் உச்சம் அடைவார். வாக்கு வன்மை பெறும். குடும்ப உறுப்பினர்கள் இவர்களின் கருத்திற்கு மதிப்பு கொடுப்பார்கள். பேச்சை மூலதனமாக கொண்டவர்கள் தொழிலில் வல்லவர்களாக வலம் வருவார்கள். பேங்கிங், ஆடிட்டிங், டீச்சிங், ஐடி, போன்ற துறையில் இருப்பவர்களுக்கு இது வாழ்வியல் மாற்றத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் அமைப்பாகும். பூர்வீகம் குலதெய்வம் குழந்தை அதிர்ஷ்டம் சார்ந்த விஷயங்களில் ஆதாயம் இருந்தாலும் சில விரயங்களும் இருக்கும். சிலருக்கு வெளியூர் வெளி நாட்டில் சென்று குடியேறக்கூடிய அமைப்பு இருக்கும்.கண், பல் போன்றவற்றிற்கு சிகிச்சை செய்வீர்கள்.
மகர லக்னத்திற்கு 3,12-ம் அதிபதியான செவ்வாய் ராசியில் தனது சொந்த நட்சத்திரத்தில் உச்சம் அடைவதால் முன் கோபத்தால் சொந்த செலவில் தனக்கு தானே சூன்யம் வைத்துக் கொள்வார்கள். அடிக்கடி உத்தியோக மாற்றம் செய்வது, கடன் வாங்குவதை தவிர்க்க வேண்டும்.சிறு சிறு நோய் தாக்கம் இருக்கும். கடனால் கவலை, எதிரிகளால், உயர் அதிகாரிகளால் மன சஞ்சலம் இருக்கும். ஜாமீன் சார்ந்த பிரச்சினை இருக்கும். சமாளிக்க முடியாத வீண் விரயங்கள் இழப்புகள் நஷ்டங்கள் வரலாம். வெளியூர் வெளிநாட்டு வாழ்க்கை இவர்களுக்கு வரமாக இருக்கும்.
கும்ப லக்னத்திற்கு 3,10-ம் அதிபதியான செவ்வாய் விரய ஸ்தானத்தில் ராசிக்கு பன்னிரண்டாம் இடமான விரய ஸ்தானத்தில் உச்சம் பெறுவது தொழில், உத்தியோக ரீதியான உயர்வை நிச்சயம் தரும். தொழில் உத்தியோகத்திற்காக அடிக்கடி வாழ்வியல் மாற்றம் தரும் நல்ல இடப் பெயர்ச்சி நடக்கும். ஞாபகசக்தி கூடும். உயில் எழுதுதல், உயிலில் மாற்றம் செய்தல், கடனை புதுப்பித்தல் போன்ற நல்ல நிகழ்வுகள் நடக்கும். உடன் பிறந்தவர்களின் ஆதாயம், ஆதரவு புதிய தொழில் ஒப்பந்தம் கிடைக்கும். வருமானம் ஒன்றுக்கு மேற்பட்ட வழியில் வந்து மனதை மகிழ்விக்கும். தகவல் தொடர்பு சாதனங்கள் மூலமாக ஆதாயம் கிடைக்கும்
மீன லக்னத்திற்கு 2,9-ம் அதிபதியான செவ்வாய் 11ம்மிடமான லாப ஸ்தானத்தில் உச்சம் பெறுவது உயர்வான யோகமாகும். குழந்தை பேறு, குல தெய்வ அனுகிரகம், பங்குச் சந்தை ஆதாயம், பிள்ளைகளுக்கு நல்ல உத்தியோகம், சுப விசேஷங்கள் நடக்கும். பெற்றோர்கள் மற்றும் பிள்ளைகளுக்குள் நல்ல புரிதல் உண்டாகும். அதிர்ஷ்டம் பேரதிர்ஷ்டமாகும். மூத்த சகோதரம், சித்தப்பா, இளைய மனைவி போன்ற உறவுகளால் ஆதாயம் உண்டு. வங்கி, ஆசிரியப்பணி, ஜோதிடம், நிதி நிர்வாகம், அரசியல், ஆன்மீகம் போன்ற பணிகளில் தனித் திறமையுடன் மிளிர்வார்கள்.
இதில் ஆர்வம் ஆதாயமும். அதிகமாகும். முன்னோர்கள் வழிச் சொத்து முறையாக கிடைக்கும். வெளிநாட்டு வேலை வாய்ப்பு, தீர்த்த யாத்திரை செல்லுதல் முன்னோர்களுக்கு பித்ரு சாந்தி செய்தல் போன்ற நல்ல பலன்கள் நடக்கும்.
ஒரு ஜாதகத்தில் செவ்வாய் பலம் பெற்றால் மட்டுமே உரிய வயதில் திருமணம் நடக்கும். பெண்களுக்கு ஆண்மை, தைரியம், நிறைந்த குடும்பத்தை கட்டுக் கோப்பாக வழிநடத்தும் கணவர் கிடைப்பார். அசையும், அசையாச் சொத்துக்களின் சேர்க்கை அதிகரிக்கும். நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்தவராக இருப்பார்கள். செவ்வாய் பலம் குறைந்தால் உடன் பிறந்தவர்கள் கலகம் நிறைந்தவர்களாக இருப்பார்கள். சொத்து தொடர்பான சர்ச்சைகள் இருந்து கொண்டே இருக்கும். பெண்களுக்கு கணவரின் அன்பும், அனுசரனையும் இருக்காது. நோய் எதிர்ப்பு சக்தி குறையும்.
செல்: 98652 20406






