என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    குழந்தை வரம் அருளும் படவேடு ரேணுகாம்பாள்
    X

    குழந்தை வரம் அருளும் படவேடு ரேணுகாம்பாள்

    • பக்தர்களுக்கு படி அளக்கவே அவள் ரேணுகாம்பாளாக படவேட்டில் அமர்ந்திருக்கிறாள்.
    • தமிழகத்தில் அமைந்துள்ள சக்தி பீடங்களில் முக்கியமானது படவேட்டம்மன்.

    அன்னையின் பாததுளி அஞ்ஞானம் குடி கொண்டுள்ள நம் மனத்து இருளை அகற்றுகிறது. சூரியன் எப்படி உலகின் இருளைப் போக்குகிறானோ, அப்படி அன்னையின் அருள் நம் உள்ளத்து இருளை அகற்றி ஒளி தருகிறது.

    தன் ஒளியை அனைவரும் பெற வேண்டும் என்றே பூமியில் சக்தி பீடங்களாக அமர்ந்திருக்கிறாள் அன்னை பராசக்தி.

    சிந்தாமணி என்னும் ரத்னம் நாம் நினைத்ததை எல்லாம் அளிக்கும். அதுபோல்தான் அன்னை சிந்தாமணியாக இருக்கிறாள். அவள் வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்பட்டாலும் அருள் ஒன்றே. அவள்தான் காளி, மகமாயி, மாரியம்மன் என்று அழைக்கப்படுகிறாள்.

    பக்தர்களுக்கு படி அளக்கவே அவள் ரேணுகாம்பாளாக படவேட்டில் அமர்ந்திருக்கிறாள்.

    படவேடு ரேணுகாம்பாள்

    தமிழகத்தில் அமைந்துள்ள சக்தி பீடங்களில் முக்கியமானது படவேட்டம்மன். பெண் தெய்வங்கள் மட்டுமே தனித்து வீற்றிருக்கும் தலங்களில் மிகவும் சக்தி வாய்ந்தது படவேடு. இங்கு அம்மன் சிரசு மட்டுமே இருக்கிறது. சுயம்பு மூர்த்தி. மும்மூர்த்திகள் அடங்கிய ரூபமாக இருக்கிறாள். எனவேதான் இங்கு வந்து அன்னையை வணங்கினால் அனைத்து தேவர்களையும் வணங்கிய பலன் கிடைக்கும் என்கிறார்கள்.

    ஸ்ரீ ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த பாண லிங்கம், சுதையிலான அம்மன் முழு திருவுருவமும் கருவறையில் அமைந்துள்ளது. மற்ற அம்மன் கோவில்களில் குங்குமம் பிரசாதமாக வழங்கப்படுவது போல் இங்கு இல்லை. சிறிது தொலைவில் உள்ள ஜமதக்னி முனிவர் ஆசிரமம் இருந்த இடத்தில் யாகசாலை இருந்ததாகக் கருதப்படும் இடத்தில் வெட்டி எடுத்த மண்ணே பிரசாதமாக அளிக்கப்படுகிறது. இரண்டாயிரம் வருடங்களுக்கு முன் கட்டப்பட்டது இத்திருக்கோவில்.

    தல வரலாறு

    ரைவத மன்னன் அமைதி, நல்ல ஆரோக்கியம் வேண்டி ஒரு யாகம் செய்ய அதிலிருந்து அன்னை தோன்றுகிறாள். அன்னை ரைவத மன்னனின் மகளாகப் பிறந்து சிறந்த தவ ஸ்ரேஷ்டரான ஜமதக்னி முனிவரை மணம் செய்து கொள்கிறாள். பதிவிரதை என்று போற்றப்பட்ட அவளின் மகன்தான் பரசுராமர். கற்பு என்பது மனம் தொடர்பான விஷயம் என்பதை அன்னையின் கதை நமக்கு உணர்த்துகிறது.

    ரேணுகா தேவி எப்போதும் தன் கணவரின் பூஜைக்கு நதியில் இருந்து சுடாத பச்சை மண்ணில் செய்த குடத்தில் இருந்து நீர் எடுத்து வருவது வழக்கம். அன்னையின் கற்பு நெறியால் ஆற்று மணலில் செய்து, சுடப்படாத அந்தக் குடம் நீருடன் எடுத்து வரப்படும்.

    ஒருமுறை அப்படி மண் குடம் செய்து ஆற்றில் நீர் எடுக்கும்போது, வானத்தில் செல்லும் ஒரு கந்தர்வனைக் கண்டு நன்றாக இருக்கிறானே என்று நினைத்த அந்த நொடி, மண் குடம் உடைந்து விடுகிறது. மீண்டும், மீண்டும் குடம் செய்ய முனையும்போது மண்ணில் உருவாக்க முடிவதில்லை. இதைத் தன் ஞான திருஷ்டியால் ஜமதக்னி முனிவர் அறிந்து விடுகிறார்.

    உடனே தன் மகன் பரசுராமனை அழைத்து, ரேணுகாவின் தலையை வெட்டி எடுத்து வரும்படி உத்தரவிடுகிறார். தந்தையின் வார்த்தையை மீறாத தனயன் உடனே சென்று தாயின் தலையைத் துண்டித்தார். அதைத் தடுக்க முயன்ற ஒரு சலவைக்காரப் பெண்ணின் தலையையும் துண்டித்து விடுகிறார். பின் தந்தையிடம் வந்து விஷயம் கூற, முனிவர் மகிழ்ந்து, உனக்கு வேண்டிய வரம் தருகிறேன். கேள் என்கிறார்.

    உடனே பரசுராமர், "தாயை உயிர்பித்துத் தரும்படி கேட்கிறார். முனிவரும் நதிநீரை மந்திரித்து மகனிடம் தந்து, தாயின் உடலோடு தலையைச் சேர்த்து வைத்து, இந்த நீரைத் தெளித்தால் உன் தாய் உயிர் பெறுவாள் என்கிறார். ஆனால் பதட்டத்தில் பரசுராமர், உடலையும் தலையையும் மாற்றி விடுகிறார். சலவைப் பெண்ணின் உடலோடு சேர்க்கப்பட்ட ரேணுகாதேவியே படவேடு கோவிலில் அமர்ந்து காட்சி அளிக்கிறார்.


    ஜி.ஏ.பிரபா

    விழாக் கோலம் காணும் அம்பிகை

    ஆடி மாதம் அனைத்து வெள்ளிக் கிழமைகள்,இங்கு மிகவும் விசேஷம். பத்து லட்சத்திற்கும் மேலான பக்தர்கள் அன்று அம்மனைத் தரிசிக்க வருகிறார்கள்.நவராத்திரி,தை மாத வெள்ளிக் கிழமைகள் இங்கு சிறப்பாகக் கொண்டாடப் படுகின்றன.

    அம்பிகையின் சிறப்பு

    சக்திக்குள் அனைத்தும் அடக்கம் என்பது உண்மை. அம்மை கண்டவர்கள், இங்கு வந்து தங்கி அன்னைக்கு சேவை செய்கிறார்கள். நாலைந்து நாட்களுக்குள் அம்மை இறங்கி விடுகிறது. மேலும் திருமண வரம், குழந்தைப் பேறு போன்றவைகளுடன், அனைத்து விதமான நோய்களைத் தீர்க்கக் கூடிய சக்தி படைத்தவள் அன்னை ஸ்ரீ ரேணுகாம்பாள். முக்கியமாக கண்பார்வைக் குறைபாடு, கண்நோய் தீர்க்கக் கூடியவள். இங்கு துலாபாரம் மிகச் சிறப்பு.

    தங்கள் வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் நேர்த்திக் கடனாக எடைக்கு எடை நாணயம் செலுத்துகிறார்கள். நெய்தீபம் ஏற்றுதல், கண் அடக்கம் சாற்றுதல், புடவை, அபிஷேகம், வேப்பிலை மட்டும் ஆடையாக உடுத்திக் கொண்டு,கோவிலை வலம் வருதல், அங்கப்பிரதட்சணம் செய்தல் என்று பல்வேறு விதமாக தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றுகிறார்கள்.

    குழந்தை வரம் வேண்டுபவர்கள் பரசுராமரை வேண்டி தொட்டில் கட்டுகிறார்கள். சிலர் அங்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் செய்கிறார்கள். வருடா வருடம் ஆனித்திருமஞ்சனம் அன்று ஆசிரமம் இருந்த இடத்தில் பூமியில் பூத்திருக்கும் மண்ணை எடுத்து வந்து, பக்தர்களுக்கு தரப்படுகிறது. அந்த மண்ணை தண்ணீரில் கலந்து குடித்தால் எல்லாவித நோய்களும் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

    கருவறையின் சிறப்பு: இங்கு வேறு எங்கும் இல்லாத சிறப்பாக அன்னை சிரசு மட்டும் உள்ளதாகச் சுயம்பு வடிவில் காட்சி அளிக்கிறார். மும்மூர்த்திகளும் அரூபமாக அங்கு எழுந்தருளி இருக்கிறார்கள். இங்கு ஆதிசங்கரர், பாணலிங்கமும், ஜன ஆகர்ஷன சக்கரமும் பிரதிஷ்டை செய்துள்ளார். பல ஞானியர்கள் தவமிருந்து சித்திகள் பெற்றது இங்குதான் என்கிறார்கள். பரசுராமர் அவதரித்த தலம். அவருக்கென்று தனியாக ஒரு சிலை உள்ளது.

    அம்மன் கோவில் என்றாலும் சுற்றுச் சுவர்களில் சிங்க வாகனம் இல்லை. அதற்குப் பதிலாக பசுவே உள்ளது. கணபதி முனிவர் என்பவர் இங்கு யாகம் செய்துள்ளார். அவர்தான் இக்கோவிலின் சிறப்பை வெளிக் கொணர்ந்தவர்.

    அத்தி மரத்தால் அம்மனின் முழு உருவம் உள்ளது. அதன் கீழ் சுயம்புவாக தோன்றிய அம்மனும், இடப்பக்கம் ரேணுகாதேவியின் சிரசும் உள்ளது. கருவறையில் பரசுராமரின் சிலையும் உள்ளது.

    தொடர்புடைய புராணக் கதை:

    கார்த்தவீர்யாஜுனன் என்னும் அரசன் ஜமதக்னி முனிவரிடம் இருந்த காமதேனு பசுவின் மகிமையை உணர்ந்து அதைத் தனக்குத் தரும்படி முனிவரை வற்புறுத்துகிறான். முனிவர் மறுக்கவே அவரைக் கொன்று காமதேனுவைக் கவர்ந்து செல்கிறான். ரேணுகாதேவியும் உடன் கட்டை ஏறுகிறாள். அப்போது மழை பெய்ததால் தீ அணைந்து உடம்பில் கொப்புளங்களோடு, ஆடை இன்றி இருந்த ரேணுகாதேவி உடலை மறைக்க வேப்பிலை ஆடை கட்டி மகன் பரசுராமரனைச் சந்தித்து விஷயங்களைச் சொல்கிறாள்.

    அதில் கோபம் கொண்ட பரசுராமர் சத்திரிய வம்சத்தையே அழிப்பதாகச் சபதம் பூண்டு அழிக்கிறார். பின் ஈசன் தோன்றி இது விதி என்று கூறி சமாதானப் படுத்த, ஜமதக்னி முனிவர் உயிர் பெறுகிறார். அன்னை ரேணுகாதேவி சிவனை வேண்ட, அவளின் சிரசு மட்டும் பூமியில் தங்கி பூஜைகளை ஏற்க, உடலின் மற்ற உறுப்புகள் முனிவருடன் சொர்க்கம் சென்றது என்பது புராணக் கதை.

    அன்னையே அகிலமும்:

    அன்னையை வேண்டி எந்த ஒரு காரியத்தை ஆரம்பித்தாலும், அது நிச்சயம் வெற்றி அடைகிறது. எத்தனையோ தெய்வங்கள் இருந்தாலும் அம்மா என்றால் உடனே ஓடி வருபவள் அன்னை. ஒரு குழந்தைக்கு ஏதேனும் வேண்டும் என்றால் அது அம்மா என்று தாயிடம்தான் ஓடும்.

    அன்னை உடனே குழந்தைக்கு வேண்டியதைத் தருவாள். நாம் வாழ்வில் சாதிக்க வேண்டும் என்றால் அதைச் சாதித்தவர்களைக் கண்டு அவர்களின் வழிமுறைகளை அறிந்து கொள்வோம். அன்னையை வணங்கினால் யாருடைய வழிகாட்டலும் நமக்குத் தேவையில்லை.

    வழிபாடு முறைகள்: படவேட்டில், அம்பிகைக்கு பலவகையான வழிபாடுகள் நடக்கிறது. குழந்தை வரம் வேண்டி வருபவர்கள் தேவியின் திருவுருவச் சிலையை தங்கள் தலையில் சுமந்து வலம் வருகிறார்கள். குழந்தை வரம் கிடைத்த பின் அக்குழந்தையின் தலையில் பரசுராமனின் சிலா ரூபத்தைச் சுமந்தபடி கோவிலை வலம் வருகிறார்கள். அம்மனின் முன் பணிந்து நம் குறைகளைக் கூறி அது நிறைவேறியபின் பக்தர்கள், நெய்தீபம் போடுதல், மாவிளக்கு போடுதல், வஸ்திரம் போடுதல் என்ற பிரார்த்தனையைச் செய்கிறார்கள்.

    அம்பிகையை மந்திரங்கள் கூறிப் பூஜிக்க வேண்டும் என்ற அவசியமில்லை. அவள் நம்மிடம் எதிர்பார்ப்பது அன்பும், நம்பிக்கையும், பொறுமையும்தான். அம்மா என்று மனம் உருகி அழைத்தால் போதும். ஆனாலும் பக்தர்கள் அவளுக்கான காயத்ரி மந்திரத்தைச் ஜெபிப்பது சிறந்த பலன் தரும் என்கிறார்கள்.

    ("ஓம் ஆதி சக்தியை ச வித்மஹே ஜமதக்னி பத்னியை ச தீமஹி

    தன்னோ ரேணுகாஹ் பிரசோதயாத்)

    என்பது அன்னையின் காயத்ரி மந்திரம்.

    பெயர்க் காரணம்: படை வீடு என்றால் படைகள் தங்கியிருந்த வீடு. அன்னை தன் பரிவாரங்களுடன் வந்து தங்கி அருள் பாலித்ததால் படைவீடு என்றும், ராச கம்பீர சம்புவரையர் தன் படைகளுடன் இங்கு தங்கி போரிட்டதால் படைவீடு எனவும் அழைக்கப்பட்டு மருவி படவேடு என அழைக்கப் படுகிறது என்கிறார்கள். கோவில் அமைந்துள்ள இடம் அம்மன் கோவில் படவேடு என்று அழைக்கப்படுகிறது.

    இருப்பிடம் :திருவண்ணாமலை மாவட்டம் போளூர் வட்டத்தில் அமைந்துள்ளது. பிரசித்தி பெற்ற கோவிலாகையால் போக்குவரத்து வசதிகள் நிறைந்து இருக்கிறது.

    தொடர்புக்கு-gaprabha1963@gmail.com

    Next Story
    ×