என் மலர்
சிறப்புக் கட்டுரைகள்

தொழில், உத்தியோகம் யாருக்கு அமையும்- பிரசன்ன ஜோதிடர் ஆனந்தி
- லக்ன பாவத்தின் பாவத் பாவமான மூன்றாமிடம் ஒருவருக்கு வளர்ச்சியை கொடுக்கும் பாவகம்.
- மூன்றாம் அதிபதி இரண்டில் இருந்தால் முயற்சி, திறமை, முன்னேற்றமான வாழ்க்கை, உறவினர்களால், உடன் பிறந்தவர்களால் லாபம் உண்டு.
வாழ்வில் வெற்றிபெற உழைப்பு அவசியம். ஆனால் வாழ்நாள் முழுவதும் வெற்றி பெற விடாமுயற்சி,திட்டமிடுதல் மிக மிக அவசியம். அறிவியல் மிக மிக வளர்ந்தாலும் தன்னை உணர்ந்து வாழ்வில் உயரும் முயற்சியில் மனிதர்கள் பின் தங்கியே இருக்கிறார்கள். கிடைப்பதை உண்டு வாழ்நாள் முழுவதும் முன்னேற்றத்திற்கு எந்த முயற்சியும் செய்யாமல் வாழ்வை முடித்துக் கொள்ளும் மனிதர்கள் தான் அதிகம். அதே போல் தன் முயற்சியில் ஒருவன் வெற்றி பெறுவதற்கு திட்டமிடுதல் மிக அவசியம். பதறாத காரியம் சிதறாது என்பது போல் முறையாக திட்டமிட்ட காரியம் ஒரு போதும் தோல்வியைத் தராது.
ஜோதிட ரீதியாக ஒருவர் விடா முயற்சியை வீரியமாக கொண்டவரா? திட்டமிடுவதில் வல்லவரா? திட்டமிட்டு காரியத்தை நடத்துபவரா? அல்லது விதியின் மேல் பழி போட்டு வாழ்பவரா?
அல்லது விரல் நீட்டும் தூரத்தைக் கூட தொட முடியாதவரா? போகத்தில் மூழ்கி வாழ்வின் ஒரு பாகத்தை பறி கொடுப்பவரா? அல்லது கண்ணியம் கட்டுப்பாட்டுடன் வாழ்ந்து சாதனையாளராக வலம் வருவாரா? போன்றவற்றை ஒரு ஜாதகத்தின் லக்ன ரீதியான மூன்றாம் இடம், மூன்றாம் அதிபதியின் நிலையை கொண்டு அறிய முடியும்.
ஒருவருக்கு வெற்றியைத் தருவது, வெற்றிக்கு உதவி செய்வது ஜனன கால ஜாதகத்தின் மூன்றாமிடமான உப ஜெயஸ்தானம், சகாய ஸ்தானம் முயற்சி ஸ்தானமாகும். மேலும் இது ஒருவரின் தைரிய, வீரிய ஸ்தானம், ஞாபக சக்தி, மற்றும் வாழ்வில் ஏற்படக்கூடிய மாற்றத்தைப் பற்றி கூறுமிடம். ஒரு சிலருடைய வெற்றிக்கு பின் அவர்களுடைய முயற்சி, திட்டமிடுதலே பிராதனமாக இருக்கும். விடா முயற்சியால் தன்நம்பிக்கையுடன் திட்டமிட்டு வெற்றி பெற்றவர்கள் ஜாதகத்தில் மூன்றாம் இடம் மிக வலிமையாக இருக்கும்.
லக்ன பாவத்தின் பாவத் பாவமான மூன்றாமிடம் ஒருவருக்கு வளர்ச்சியை கொடுக்கும் பாவகம்.
ஆக ஒருவர் வாழ்வில் அனைத்து விதமான சகாயமும் பெற்றிட மூன்றாமிடம் பலமாக இருப்பது மிக அவசியம். ஒரு ஜாதகத்தில் மூன்றாம் அதிபதி, மூன்றாம் இடத்தில் நின்ற கிரகம், பார்த்த கிரகத்தினை கொண்டு ஒரு மனிதன் தன் முன்னேற்றத்திற்கு செய்யும் முயற்சியினை தெளிவாக கூற முடியும்.
அதன்படி மூன்றாம் அதிபதி ஒன்றாம் பாவகங்களோடு தொடர்பு பெற்றால் ஜாதகர் முயற்சியை மூலதனமாக கொண்டு முன்னேறுபவர். திட்டமிட்டு காரியம் சாதிப்பதில் வல்லவர். தோல்வி பயம் இல்லாதவர். விடா முயற்சி, தன்நம்பிக்கை, துணிச்சல் மிகுந்தவர்கள். புகழ், கீர்த்தி, வெற்றி, சுய வருமானம், நேர்மை, திறமை, இளைய சகோதர விருத்தி, மங்காத புகழ் உடையவர்கள்.
எதையும் சமாளிக்கும் திறன் உள்ளவராக இருப்பார். நல்ல உடற்கட்டு, ஸ்திரபுத்தி உள்ளவராக இருப்பார்.
மூன்றாம் அதிபதி இரண்டில் இருந்தால் முயற்சி, திறமை, முன்னேற்றமான வாழ்க்கை, உறவினர்களால், உடன் பிறந்தவர்களால் லாபம் உண்டு.
நம்பிக்கை, நாணயம் மிகுந்தவர்கள். சொல்லாலும் செயலாலும் ஒன்றுபடுவார்கள். இவரின் முயற்சி, திட்டமிடுதலுக்கு குடும்ப உறவுகள் பக்க பலமாக இருப்பார்கள். செல்வாக்கு, சொல்வாக்கு மிகுந்தவர்கள். வாக்குவன்மையால் கொடுத்த வாக்கை காப்பாற்றுபவர்கள். பொருளீட்டுவதிலும், தனம் சேர்ப்பதிலும் கவனம் செலுத்துவார்கள். பேச்சை மூலதனமாக கொண்ட தொழிலில், கமிஷன் அடிப்படையான தொழிலில் தனித்திறமையுடன் மிளிர்வார்கள். இவரின் பேச்சுக்கு கட்டுப்பட்டே குடும்ப உறுப்பினர்கள் இருப்பார்கள்.
மூன்றாம் அதிபதி மூன்றில் இருந்தால் வீரம், விவேகம் நிறைந்தவர்கள். தன் சுய முயற்சியால் வாழ்க்கையில் முன்னேறுவார்கள். கடினமான விடாமுயற்சி உள்ளவராக இருப்பார்கள். தன்னைப்பற்றி உயர்வான சிந்தனை உண்டு. சகல யோகங்களை அனுபவிக்க கூடியவராக இருப்பார்கள். அதே சமயம் கஷ்டங்கள், சோதனைகள் வந்தால் அதை எதிர் கொள்ளும் வல்லமை உள்ளவராக இருப்பார். எந்த தோஷமும் இவரை தாக்காது.
அதிகார வர்க்கத்தின் தொடர்புடையவர்கள். தொட்டது துலங்கும். நல்ல சந்தர்ப்பம், வாய்ப்புகள் தேடி வரும்.
மூன்றாம் அதிபதி நான்கில் இருந்தால் தன் சுய முயற்சியால் நல்ல பொருளாதார வளர்ச்சி உண்டு. நிறைந்த இன்பம், செல்வம், கல்வி அறிவு நிரம்ப பெற்றவர். தாய் வழி, மனைவி ஆதரவு உண்டு. தன்னை சார்ந்தவர்களும் உயர உதவுபவர். வீடு, வாகன வசதி உண்டு.
சொகுசு வாழ்க்கை, ஆடம்பர பொருட்கள் சேர்க்கை, போக சுகம் உண்டு.தாயார், உற்றார்,
உறவினர்களால் போற்றப்படுவார்கள். பள்ளி படிப்பில் முதன்மையான மாணவராக திகழ்வார்கள்.
மூன்றாம் அதிபதி ஐந்தில் இருந்தால் பிறக்கும் போது சாதாரண மனிதராக இருப்பார்கள். வாழ்நாள் முடிவில் சாதனை மனிதராக சரித்திரத்தில் இடம் பிடிப்பார்கள். சமுதாயத்தால் மதிக்கக் கூடிய நபராக இருப்பார்கள். நல்ல குடும்ப வாழ்க்கை, குழந்தைகளால் பெருமை அடைவார்கள். பூர்வீகச் சொத்துக்களால் ஆதாயம் உண்டு.
முன்னோர்களின் சாஸ்திர சம்பிரதாயத்தை முறையாக கடைபிடிப்பார்கள். பிறரின் புகழ்ச்சிக்கு மயங்குவார்கள். நட்புக்கு மரியாதை தருபவர்கள். எதிர்காலம், பொருளாதாரம் பற்றிய சிந்தனை மிகுதியாக இருக்கும். பொதுநலம் சார்ந்த விஷயங்களில் ஈடுபாடு உள்ளவராக இருப்பார்கள்.
ழூன்றாம் அதிபதி ஆறில் இருந்தால் முயற்சியால் உழைப்பால் உயர்ந்த, உயர விரும்பும் உத்தமர். ஜாதகர் தைரியமானவர். பலசாலி.
வீரியம் உடையவர். எண்ணியதை ஈடேற்றும் திறமைசாலிகள். சிலருக்கு கடன் தொகை தள்ளுபடியாகும். அரசியல் ஆதாயம் உண்டு. சமுதாயத்தில் நன்மதிப்பை பெறுவார்கள். தைரியம் வீரியம் நிறைந்தவர். எதிர்பாராத திடீர் திருப்பம் உண்டு. ஜாதகருக்கு முயற்சியால் வளமான வாழ்வு நிச்சயம் மூன்றாம் அதிபதி ஏழில் இருந்தால் திருமணத்திற்கு பிறகு வெற்றி வாய்ப்புகள் பொருளாதார, முன்னேற்றம் தேடி வரும்.முயற்சி, வெற்றி, திட்டமிடுதலுக்கு பின் வாழ்க்கை துணையின் பங்களிப்பு இருக்கும். சமுதாய மதிப்பு, மரியாதை நிறைந்த நல்ல வாழ்க்கைத் துணை அமையும். மனைவிவழி ஆதாயமும் உண்டு. இன்பம், துன்பம் என அனைத்து சூழ்நிலைகளிலும் மனைவியின் ஆதரவும், அரவணைப்பும் உண்டு. அதிக நண்பர்கள் உண்டு. நண்பர்களின் ஆதரவும், ஆதாயமும் கிடைக்கும். கூட்டுத் தொழிலில் ஆதாயம் உண்டாகும்.
மூன்றாம் அதிபதி எட்டில் இருந்தால் வீட்டில் புலியாகவும் வெளியில் எலியாகவும் இருப்பார்கள். தன் காரியத்திற்காக அனைவரையும் பயன்படுத்துவார்கள். குறுக்கு வழியில் முன்னேறுவார்கள். யாரையும் அனுசரித்து செல்ல மாட்டார்கள். உதட்டளவில் மட்டும் உறவாடுவார்கள். உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவார்கள்.
முயற்சிகள், திட்டமிடுதல் தோல்வி தரும். சகோதர பகை, கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாத நிலை, கடன், அவமானம் ஏற்படும்.
வாழ்நாள் முழுவதும் சிறிய முயற்சி கூட பலிதமாகாமல் அடிப்படை தேவைக்கு கூட போராடும் நிலை இருக்கும்.
மூன்றாம் அதிபதி 9-ல் இருந்தால் தைரியம், வீரம், பூர்வ புண்ணியம் மிகுந்தவர். வம்சா வளியாக புதிய முயற்சிகளில் ஈடுபாடு மிக்கவர்கள். வாரிசுகளாலும் , மனைவியாலும் அதிர்ஷ்டம் தேடி வரும். சுமாரான குடும்பத்தில் பிறந்தவர்கள் கூட படிப்படியாக கோடீஸ்வர யோகம் அடைவார்கள். உறவுகளிடம் நல்ல மதிப்பு மரியாதை இருக்கும். நல்ல தேக ஆரோக்கியம் இருக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு, உதவிகள் கிடைக்கும். அனைத்து முயற்சிகளிலும் வெற்றிக் கனியை எட்டிப் பிடித்து விதியை மதியால் வெல்பவர்கள்.
மூன்றாம் அதிபதி பத்தில் இருந்தால் புதிய தொழில் முயற்சியால் சுய வருமானத்தில் செல்வம் சேரும். சுய தொழில் ஆர்வம் மிகுந்தவர்.
கவர்ச்சியான விளம்பரத்தால் தொழிலில் உச்சத்தை அடைவார்கள். உடன் பிறந்தவர்களுடன் இணைந்து கூட்டுத் தொழில் செய்வார்கள். பெரிய அந்தஸ்து, அதிகாரம் நிறைந்த பதவியில் இருப்பார்கள்.
மூன்றாம் அதிபதி பதினொன்றில் இருந்தால் அண்ணன், தம்பி என குடும்பமே முன்னேற்றத்திற்காக முயற்சி செய்வார்கள். கூட்டுக் குடும்பமாக இருந்து தொழில் முயற்சியில் வெற்றி பெற்றவர்களுடைய ஜாதகத்தில் இந்த அமைப்பு இருக்கும். வலிமை பெற்ற சகோதரர்கள் ஒரு பெரிய சாம்ராஜ்யத்தை உருவாக்கி தங்களுக்கு என்று தனி முத்திரை படைத்து வருகிறார்கள்.
மூன்றாம் அதிபதி பனிரெண்டில் இருந்தால் முயற்சியில் தோல்வி, சகோதர இழப்பு, சகோதர சச்சரவு, சொத்து விரயம், தூக்கமின்மை ஏற்படும். செல்வ நிலையும் சீராக இருக்காது.சோம்பேறித்தனம், பயந்த குணம் போன்ற பலன்கள் ஏற்பட்டு ஜாதகர் எந்த முயற்சியும் செய்யாமல் மனோபலமும் குறைந்தவராக இருப்பார்கள். தகுந்த நிரந்தர, தொழில் உத்தியோகம் அமையாது. சிலர் உடன் பிறப்பிற்காக, குடும்பத்திற்காக மாடாக உழைத்தும் கெட்ட பெயர் எடுப்பார்கள். பிழைக்க தெரியாத ஏமாளிகள்.
லக்னாதிபதி, மூன்றாமிடத்து அதிபதி, செவ்வாய் சுப வலிமையுடன் இருந்தால் திட்டமிட்டு செயல்பட்டு தன் வாழ்நாளில் தைரியசாலியாக வலம் வருவார். தன் வாழ்வில் நடக்கும் எத்தகைய நிலைகளையும், சம்பவங்களையும் மிகவும் சர்வ சாதாரணமாக எதிர் கொள்வார்கள். திறமையான, திட்டமிட்ட அணுகு முறையுடைய பெருமைக்குரிய சாமார்த்தியசாலியாக திகழ்கிறார்கள்.
மூன்றாம் இடத்தில் நீசம் ,பகை பெற்ற கிரகம் இருக்க, மூன்றாம் இடத்து அதிபதி 6,8,12 ல் மறைய, மூன்றாம் இடத்து அதிபதி ராகு / கேதுவுடன் இணைய வெற்றி வாய்ப்பு குறையும். 3, 9ம் இடத்தோடு சம்பந்தம் பெறும் ராகு/கேது, சனி இயற்கையாகவே ஒருவருடைய முயற்சிக்கும், திட்டமிடுதலுக்கும் தடை ஏற்படுத்தும். சிறிய முயற்சி கூட பலிதமாகாமல் அடிப்படை தேவைக்கு கூட போராடும் நிலை இருக்கும்.
நீரோடைக்கும் பாறைக்கும் இடையே நடக்கும் இடைவிடாத போராட்டத்தில் நீராடைதான் வெற்றி பெருகிறது. தனது பலத்தினால் அல்ல. தொடர் முயற்சியினால், முயன்றால் எதுவும் முடியும் என்ற நம்பிக்கையும், திட்டமிடுதலும் அவசியம். சுய ஜாதக ரீதியாக மூன்றாமிடம் பலம் குறைந்தவர்கள் செவ்வாய் கிழமை ஸ்ரீ வீரபத்திரரை வெற்றிலை மாலை அணிவித்து வழிபடவும்.






