என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    மழைச் சாரல் தாலாட்டும்  குளுகுளு குற்றாலம்
    X

    மழைச் சாரல் தாலாட்டும் குளுகுளு குற்றாலம்

    • ஒருவர் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை தவறாமல் வந்து இதில் குளித்தால், உடலில் உள்ள செரிமானக் கோளாறுகள் மற்றும் சிறுநீர்ப் பிரச்சினைகள் குணமடையுமாம்!
    • உற்சாகத்தையும் குளிர்ச்சியான மனநிலையையும் தருவதால், ஆண்டுதோறும் லட்சக்கணக்கானோர் இங்கு வந்து குவிகிறார்கள்.

    வாழ்க்கைப் பயணத்தில் அவ்வப்போது சுற்றுப்பயணங்கள் அவசியம். அவை நமக்குப் புத்துணர்ச்சியூட்டும்; புதிய புதிய அனுபவங்களைப் பெற்றுத் தரும். அப்படியானால் தான், வாழ்க்கைப் பயணம் சுவாரஸ்யமாக இருக்கும்.

    இது அவசர யுகம். படிப்பு, வேலை, தொழில், வருமானம் என்று நாம் ஓடிக்கொண்டே இருக்கிறோம். களைப்பு ஏற்படுகிறது. சிலசமயங்களில் சலிப்பு வந்துவிடுகிறது. அந்நிலையில் இருந்து நம்மை மீட்டெடுப்பதற்கும், நம்மை நாமே புதுப்பித்துக் கொள்வதற்கும் சிறு சிறு சுற்றுலா இன்பங்கள் நமக்குத் தேவை.

    நம் நாட்டில் குமரி முதல் காஷ்மீர் வரை ஏராளமான சுற்றுலாத் தலங்கள் இருக்கின்றன. தொலைதூரப் பயணம் என்றால், சென்று வருவதற்கான கால அளவு, பணச்செலவு ஆகியவை மிக அதிகமாகத்தானே இருக்கும். ஆனால் அந்த இடங்களை எல்லாம் விஞ்சக்கூடிய, இயற்கை எழில்சூழ்ந்த ஓர் அற்புதமான சுற்றுலாத் தலம் நம் தமிழ்நாட்டிலேயே இருப்பது நமக்குப் பெருமை அல்லவா!

    சாமான்யர்களின் சிம்லா; சிந்தை மயக்கும் சாரல் பூமி என்றெல்லாம் அனைவராலும் கொண்டாடப்படுகின்ற குற்றாலம்! திருநெல்வேலிக்கு அருகில் தென்காசி மாவட்டத்தில், அழகும் வளமும் ததும்பி வழியும் இயற்கையின் பெருங்கொடை; மழைச்சாரலில் மனதைக் குளிர்விக்கும் குளுகுளு நகரம்!

    அண்டை மாநிலமான கேரளாவில், ஜூன் முதல் செப்டம்பர் வரை தென்மேற்குப் பருவ மழைக் காலம். அப்போது குற்றாலத்தில் ரம்மியமான பருவகாலச் சூழ்நிலை நிலவும். மேற்குத் தொடர்ச்சி மலையில் மழை பெய்யும்போது, அருவிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஆரவாரமாய்ப் பாய்ந்துவரும். அருவிகளின் ஆரவாரம் நம்மை வியப்பில் ஆழ்த்தும்.

    குற்றாலம்-பெயர்க்காரணம்: 'தென்னகத்தின் ஸ்பா', 'ஏழைகளின் ஊட்டி' என்றும் குற்றாலத்தைச் சொல்வதுண்டு. சரி, குற்றாலம் என்ற பெயர் எப்படி வந்தது? முற்காலத்தில் இந்தப் பகுதி முழுவதும் குறுகிய ஆலமரம் நிறைந்து காணப்பட்டதால், குறுகிய + ஆலம் என்பதே குற்றாலம் என்று ஆனது எனச் சொல்லப்படுகிறது. பெயருக்கான இந்த விளக்கம் மிகச்சரியானதாகத் தோன்றுகிறது.

    குற்றால மலைவளம்: குற்றால மலைவளம் பல தமிழ் இலக்கியங்களில் சிறப்பித்துப் பேசப்படுகிறது. எனினும், இந்த மலையின் பெயரில் எழுதப்பட்ட இலக்கியமான 'குற்றாலக் குறவஞ்சி' இதன் சிறப்புகளையும் வளங்களையும், தித்திக்கும் பலாச்சுளைபோல் இனிமையாக விவரிக்கின்றது.

    திரிகூட ராசப்பக் கவிராயர் இயற்றிய இந்நூல், குறவஞ்சி நாடகம் என்று போற்றப்படுகிறது. திருக்குற்றாலநாதரின் முன்னிலையில் இந்நூல் அரங்கேற்றப்பட்டதாம். குற்றால மலைவளத்தைப் பாடல் வரிகளில் இவர் வர்ணிக்கும் அழகைப் பாருங்கள்:

    'வானரங்கள் கனிகொடுத்து மந்தியொடு கொஞ்சும்

    மந்திசிந்து கனிகளுக்கு வான்கவிகள் கெஞ்சும்!

    கானவர்கள் விழியெறிந்து வானவரை அழைப்பார்

    கமனசித்தர் வந்துவந்து காயசித்தி விளைப்பார்!

    தேனருவித் திரையெழும்பி வானின்வழி ஒழுகும்

    செங்கதிரோன் பரிக்காலும் தேர்க்காலும் வழுகும்!

    கூனலிளம் பிறைமுடித்த வேணியலங் காரர்

    குற்றாலத் திரிகூட மலையெங்கள் மலையே!'

    அதாவது, ஆண்குரங்குகள் பழங்களைப் பறித்துக் கொடுத்துப் பெண்குரங்குகளைக் கொஞ்சி மகிழும். அந்தப் பெண்குரங்குகளின் கைகளில் இருந்து சிதறி விழுகின்ற கனிகளைப் பெற வானுலகில் வாழும் தேவர்கள் கெஞ்சிக் கேட்பார்கள்.

    வன வேடர்கள் தங்கள் கண்களை ஏறெடுத்துப் பார்த்து, தேவர்களை அழைப்பார்கள். வானின் வழியாகச் செல்கின்ற சித்தர்கள் கீழிறங்கி வந்து, காயசித்தி மருந்துகளாகிய மூலிகைகளை வளர்ப்பார்கள்.

    தேனருவியின் அலைகள் மேலெழுந்து வானத்தில் இருந்து வழிந்து ஓடும். அதனால், கதிரவனின் தேரில் பூட்டிய குதிரைகளின் கால்களும், தேர்ச்சக்கரங்களும் வழுக்கி விழும்.

    இளம்பிறையைச் சூடி இருக்கின்ற சடைமுடி அழகரான திருக்குற்றாலநாதர் எழுந்தருளியுள்ள திருக்குற்றாலமாகிய திரிகூட மலையே நாங்கள் வாழ்கின்ற மலையாகும் என்று பெருமிதத்துடன் குற்றாலப் புகழைப் பாடி மகிழ்கிறார் ராசப்பக் கவிராயர்.

    சங்க காலத்தில் இதற்குத் 'தேனூர்' என்ற பெயரும் உண்டு. சங்கப் பாடல்களில் இவ்வூர், பெண்களின் அழகுக்கு உவமையாகக் கூறப்படுகிறது. அந்த அளவிற்கு நம் மனதை ஈர்க்கின்ற ஓர் அழகிய ஊர் குற்றாலம்!

    ஆர்ப்பரிக்கும் அருவிகள்: பார்க்கப் பார்க்கப் பரவசமூட்டும் அருவிகள் - அவை இயற்கையின் அற்புதங்கள். இங்கே நவக்கிரகம்போல் ஒன்பது அருவிகள்.

    பேரருவி, ஐந்தருவி, சிற்றருவி, பாலருவி, புலியருவி, பழத்தோட்ட அருவி, செண்பகாதேவி அருவி, பழைய குற்றால அருவி, தேனருவி.

    நீர்வீழ்ச்சிகளுக்குத் தண்ணீர் வரும் பாதைகளில் எண்ணற்ற மருத்துவ மூலிகைகள் இருக்கின்றன. அந்த அரிய மூலிகைகளைத் தழுவி வருவதால், அருவிகளின் நீர் ஆரோக்கியத் தீர்த்தமாகத் திகழ்கிறது. எனவேதான், பல நோய்களுக்கு அருமருந்தாகக் குற்றால அருவிக் குளியலைக் கருதுகிறார்கள்.

    பேரருவி: குற்றாலத்தின் பிரதான நீர்வீழ்ச்சி இதுதான். இதனை 'புத்தருவி' என்றும் அழைக்கிறார்கள். புராணங்கள் இந்த அருவியை 'சிவமது கங்கை' எனவும் 'வட அருவி' எனவும் சிறப்பித்துக் கூறுகின்றன.

    இது சுமார் 60 மீட்டர் உயரத்தில் இருந்து பொங்கி வழிகிறது. இந்தப் பேரருவிக்கு மேலே 19 மீட்டர் ஆழம் கொண்ட 'பொங்குமாங் கடல்' உள்ளது. இயற்கையான அந்தப் பள்ளத்தின் மூலம் நீரின் அதிவேக ஓட்டம் கட்டுப்படுத்தப்பட்டு, நாம் குளிப்பதற்கு ஏற்ற வேகத்தில் அருவியில் தண்ணீர் வழிகிறது. மருத்துவ குணம் நிரம்பியுள்ளதால், அருவி நீர் குடிப்பதற்கும் சுவையாகத்தான் இருக்கிறது.

    ஒருவர் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை தவறாமல் வந்து இதில் குளித்தால், உடலில் உள்ள செரிமானக் கோளாறுகள் மற்றும் சிறுநீர்ப் பிரச்சினைகள் குணமடையுமாம்!

    இதன் கரையில்தான், புகழ்மிக்க திருக்குற்றாலநாதரின் திருக்கோயில் அமைந்துள்ளது. எனவே, இந்த அருவியில் இருந்து பல கோயில்களின் கும்பாபிஷேகத்திற்கும், கொடை விழாக்களுக்கும் புனித தீர்த்தம் எடுத்துச் செல்லப்படுகிறது.

    சிற்றருவி: பெயருக்கு ஏற்றார்போல் இது ஓர் அழகிய சிறிய அருவி. பேரருவி நீர்வீழ்ச்சியில் இருந்து பிரிந்துவரும் தண்ணீர், அதன் பக்கவாட்டில் உள்ள பாறைகளின் வழியே பாய்ந்து வழிகிறது. இங்கே குளிக்கும் இடம், ஆண்களுக்கு ஒரு பகுதி பெண்களுக்கு ஒரு பகுதி என இரண்டு தனித்தனி அறைகளைப்போல் அமைக்கப்பட்டுள்ளன.

    செண்பகாதேவி மற்றும் தேனருவி:

    பேரருவியில் இருந்து மலையில் 2 கி.மீ. தூரம் நடந்தால் செண்பகாதேவி அருவியை அடைத்துவிடலாம். செண்பகாதேவி அருவிக் கரையில் செண்பகாதேவி அம்மன் கோயில் உள்ளது. சித்ரா பவுர்ணமி நாளில் இந்தக் கோயிலில் சிறப்பான விழா கொண்டாடப்படுவதுண்டு.

    செண்பகாதேவி அருவியின் மேல்பகுதியில்தான் தேனருவி உள்ளது.

    ஐந்தருவி: இது குற்றாலத்தில் இருந்து சுமார் 5 கி.மீ. தூரத்தில் உள்ளது. திரிகூட மலையின் உச்சியில் 40 அடி உயரத்தில் இருந்து உருவாகி சிற்றாறின் வழியாக ஓடி வந்து 5 கிளைகளாகப் பிரிந்து விழுகிறது. இங்கு சாஸ்தா கோயிலும் முருகன் கோயிலும் உள்ளன.

    பழத்தோட்ட அருவி: இந்த அருவிக்குச் செல்லும் பகுதி, தோட்டக்கலைத் துறையினரால் இயற்கைப் பூங்காவாக உருவாக்கப்பட்டுள்ளது. பெரியவர்கள் மற்றும் சிறியவர்களின் பொழுதுபோக்கிற்கு இது ஓர் இதமான இடம். இங்கு நமக்குத் தேவையான பூஞ்செடிகளும் மரக்கன்றுகளும் தோட்டக்கலைத் துறையினரால் விற்பனை செய்யப்படுகின்றன.

    புலியருவி: குற்றாலத்தில் இருந்து 2 கி்.மீ. தூரத்தில் உள்ளது. சிறுவர்கள் குளித்து விளையாடி மகிழ புலியருவி மிகவும் பாதுகாப்பானது. இங்கே குழந்தைகள் கும்மாளமிடுவது கண்கொள்ளாக் காட்சி.

    பழைய குற்றாலம் அருவி: குற்றாலத்தில் இருந்து கிழக்குப் பகுதியில் சுமார் 16 கி.மீ. தொலைவில் அழகனாற்று நதியில் அமைந்துள்ளது.

    பாலருவி: தேனருவி அருகே அமைந்திருக்கும் அருவி. இது ஆற்றின் தொடக்கமே என்றாலும், அனைவராலும் அருவி என்றே அழைக்கப்படுகின்றது.

    அருவிகளைக் காண்பது ஆனந்தம்; அருவிகளில் குளித்து ரசிப்பது பேரானந்தம். ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் ஆகிய மாதங்கள் குற்றாலத்தின் வசந்த காலங்கள். தென்மேற்குப் பருவ மழையால் அருவிகளில் தண்ணீர், மிதமான வெப்பநிலை, குளிர்க்காற்று என குற்றாலம் களைகட்டத் தொடங்கிவிடும். மெல்லிய சாரல் காற்றுடன் மழை பெய்யும். அனைத்து அருவிகளிலும் தாளலயத்துடன் தண்ணீர் கொட்டும்.

    குற்றாலம் தென்னகத்தின் 'ஸ்பா'. இது உற்சாகத்தையும் குளிர்ச்சியான மனநிலையையும் தருவதால், ஆண்டுதோறும் லட்சக்கணக்கானோர் இங்கு வந்து குவிகிறார்கள்.

    ஆன்மிகச் சுற்றுலாத் தலம்: அற்புதமான அருவிகளின் தலமாக மட்டுமன்றி, ஆன்மிகச் சுற்றுலாத் தலமாகவும் குற்றாலம் விளங்குகிறது. குற்றாலநாதர் கோயில், சைவ சமயத்தின் முக்கியமான பழம்பெரும் கோயில். சிவபெருமான் திருநடம் புரிந்த பஞ்ச சபைகளில் ஒன்றான சித்திர சபையை குற்றாலம் தன்னகத்தே கொண்டுள்ளது. சைவ சமயத்தைச் சார்ந்த அருளாளர்கள் பலர் இந்தக் குற்றாலத் தலம் மீது பல தேவாரப் பாடல்களைப் பாடி இருக்கின்றனர்.

    குற்றால நகரைச் சுற்றி குற்றாலநாதர் கோயிலைத் தவிர அருள்மிகு இலஞ்சிக்குமார் திருக்கோயில், பண்பொழி திருமலை குமாரசாமி கோயில், புளியரை சிவன் கோயில், பண்பொழி நாகாஸ்வரமுடையார் கோயில், அருள்மிகு தென்காசி சிவன் கோயில், சிவசைலம் ஸ்ரீ சிவலைபதி பரம கல்யாணி திருக்கோயில் மற்றும் கேரள மாநில எல்லையில் அச்சன் கோயில், ஐயப்பன் கோயில், ஆரியங்காவு சாஸ்தா கோயில் போன்ற புகழ்மிக்க திருக்கோவில்களும் உள்ளன. எனவே, பக்தர்களுக்குக் குற்றாலம் ஓர் பக்திப்பூர்வமான ஆன்மிகத் தலம்.

    பார்க்க வேண்டிய பிற இடங்கள்: குற்றாலத்தில் அருவிகளும் கோயில்களும் மட்டும்தானா! இன்னும் எத்தனையோ இருக்கின்றன பார்க்க வேண்டிய இடங்கள்.

    குற்றாலத்திற்கு மிக அருகில் அடவிநயினார் அணைக்கட்டு, குண்டாறு அருவி மற்றும் அணைக்கட்டு, தோரணமலை, ராமநதி அணைக்கட்டு, அத்திரி மலை, கடனா நதி அணைக்கட்டு, பொதிகை மலை, அகத்தியர் அருவி, பாபநாசம் அணைக்கட்டு, சேர்வலாறு அணைக்கட்டு, மணிமுத்தாறு அருவி மற்றும் அணைக்கட்டு, மாஞ்சோலை மலை வாசஸ்தலம் ஆகிய இடங்களும் சுற்றுலாத் தலங்கள்தான்.

    வெண்ணமடைக்குளத்தில் படகு குழாம், பழத்தோட்டங்கள், இயற்கை மூலிகைப் பண்ணைகள், சுற்றுச் சூழல் பூங்கா, சிறுவர் மனமகிழ் பூங்கா.

    தேனருவியில் இருந்து ஒரு மணிநேர பயணத்தில், தெற்குமலை எஸ்டேட்; ஐந்தருவி மற்றும் பழைய குற்றாலம் அருகில் படகு சவாரி; பேரருவி அருகில் பாம்பு மற்றும் மீன் பண்ணைகள்.

    தொல்லியல் அருங்காட்சியகம்: குற்றாலத்தின் பேருந்து நிலையத்தில் இருந்து பேரருவிக்குச் செல்லும் வழியில், கொச்சம்பட்டி சத்திரம் என்னும் கட்டிடத்தில்தான் இயங்கி வருகிறது இந்த அருங்காட்சியகம்.

    திருநெல்வேலி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கண்டெடுக்கப்பட்ட தொல்பொருட்கள்; குற்றாலம் அருகில் உள்ள பகுதிகளில் சேகரிக்கப்பட்ட பழங்காலப் பொருட்கள்; ஆண்டிப்பட்டியில் கிடைத்த 16-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சுடுமண் பொம்மைகள்; கல்லூரணியில் கண்டெடுத்த 13-ம் நூற்றாண்டு சீன தேசத்துக் களிமண் பெண் உருவம்; மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து பெறப்பட்ட மருத்துவக் குறிப்பு ஓலைச் சுவடிகள்; கோயில்களில் பயன்படுத்தப்படும் விசிறி, குடை, சாமரம், ஆலவட்டம் ஆகியவை; கி.மு. முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்த முதுமக்கள் தாழி; கி.பி.19-ம் நூற்றாண்டின் பீரங்கிக் குண்டுகள்; பூலித்தேவன் பயன்படுத்திய கவண் கற்கள்; குற்றால மலைப்பகுதியில் வாழ்ந்த பழங்குடியினர் பயன்படுத்திய மர உரல், தேன் குடுவை, வில், எலிப்பொறி, மரத்தால் ஆன கொண்டை ஊசி - இப்படி காண்பதற்கு அரிதான பல்வேறு தொல்பொருட்களை நீங்கள் இந்த அருங்காட்சியகத்தில் காணலாம்.

    எண்ணற்ற சிறப்புகளைக் கொண்டிருக்கும் குற்றாலத்தில், சுற்றுலாப் பயணிகளுக்கான தங்கும் விடுதிகள், சுகாதாரமான உணவகங்கள், பழக்கடைகள், மசாஜ் சென்டர்கள் என எல்லாமே இருக்கின்றன; நன்றாகவே இருக்கின்றன.

    இந்த வருட சீசன் நெருங்கிக் கொண்டிருக்கிறது. தவற விட்டுவிடாதீர்கள். உங்கள் குடும்பத்துடன் செல்லுங்கள். குழந்தைகளுக்கும் உங்களுக்கும் மிகச்சிறந்த ஆனந்த அனுபவமாக இருக்கும் . உடலிலும் உள்ளத்திலும் மகிழ்ச்சியைப் பெருக்கும்.

    குற்றாலத்திற்கான போக்குவரத்து வசதி:

    தென்காசி மற்றும் செங்கோட்டையில் இருந்து குற்றாலம், பேருந்து போக்குவரத்து மூலம் நன்றாக இணைக்கப்பட்டுள்ளது. மதுரையில் இருந்து செங்கோட்டை வரும் பேருந்துகள், திருநெல்வேலியில் இருந்து தென்காசி மற்றும் செங்கோட்டை வரும் பேருந்துகள் மூலம் குற்றாலத்தை அடையலாம். மேலும், கேரளா மாநிலம் புனலூரில் இருந்து செங்கோட்டை, தென்காசி, திருநெல்வேலி மற்றும் மதுரை செல்லும் பேருந்துகள் மூலமாகவும் குற்றாலத்தை வந்தடையலாம்.

    தொடர்வண்டிப் பயணம்: குற்றாலத்தில் தொடர்வண்டி நிலையம் இல்லை. ஆனால், செங்கோட்டை மற்றும் தென்காசி நிலையங்களில் இருந்து இருபது நிமிடங்களில் குற்றாலத்திற்கு வந்துவிடலாம்.

    இந்த ஆண்டு உங்கள் சுற்றுலாத் திட்டம், குற்றாலத்திற்குச் செல்வதாக இருக்கட்டும். போக்குவரத்து, தங்கும் விடுதி ஆகியவற்றை இப்போதே திட்டமிட்டு முன்பதிவு செய்து கொள்ளுங்கள். பருவ காலத்தில் மகிழ்ச்சியுடன் செல்லுங்கள். பன்னீர்ப் பூக்களாய் மழைச்சாரலைத் தூவி உங்களை வரவேற்கக் குற்றாலம் காத்திருக்கும்!

    Next Story
    ×