search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    பாம்புத் தலைமேலே நடனம் செய்யும் பாதத்தினைப் புகழ்வோம்!
    X

    பாம்புத் தலைமேலே நடனம் செய்யும் பாதத்தினைப் புகழ்வோம்!

    • இந்தியாவில் பல இடங்களில் நாகராஜர் கோவில்கள் உள்ளன. பல ஆலயங்களில் நாகப் பிரதிஷ்டை செய்யப்பட்டு நாகம் பூஜிக்கப்படுகிறது.
    • அமிர்தத்திற்காகப் பாற்கடலைக் கடைந்தபோது அதிலிருந்து கொடிய ஆலகால விஷமும் வெளிப்பட்டது.

    `பரமசிவன் கழுத்திலிருந்த பாம்பு கேட்டது கருடா சவுக்கியமா' என்ற கண்ணதாசன் திரைப்பாடல் அனைவரும் அறிந்தது.

    ஒருவர் சரியான இடத்தில் இருந்தால் யாரை வேண்டுமானாலும் பகைத்துக் கொள்ளலாம், ஆனால் அந்த இடம் பறிபோய்விட்டால் அவர்கள் நிலை ஆபத்தானது என்பதே இந்தப் பாடலின் பொருள்.

    பரமசிவன் கழுத்தில் இருக்கும் வரை பாம்புக்கு கருடனால் பிரச்சினை இல்லை. ஆனால் சிவன் கழுத்தை விட்டு விலகிவிட்டால் அதன்பிறகு பாம்பின் கதி அதோகதிதான்,

    நாகத்தையே ஆபரணமாக சிவன் தன் கழுத்தில் அணிந்துகொண்டுள்ளான்,

    கடவுளின் கழுத்தில் நாகம் உள்ளது என்பது மட்டுமல்ல, நாகமே கடவுளாகவும் வழிபடப்படுகிறது.

    இந்தியாவில் பல இடங்களில் நாகராஜர் கோவில்கள் உள்ளன. பல ஆலயங்களில் நாகப் பிரதிஷ்டை செய்யப்பட்டு நாகம் பூஜிக்கப்படுகிறது.

    நாகர்கோவில் என்ற பெயரிலேயே தமிழகத்தில் ஓர் ஊர் உண்டு. அங்கு புகழ்பெற்ற நாகராஜர் ஆலயம் ஒன்றும் உண்டு.

    சிவன் கழுத்தில் ஆபரணமாக உள்ள பாம்பு, பாற்கடலில் துயிலும் பரந்தாமனுக்கு ஆதிசேஷனாக படுக்கையாக உள்ளது. அதுமட்டுமல்ல ஒவ்வோர் அவதாரத்திலும் பாம்பு ஒவ்வொரு விதத்தில் திருமா லுக்கு சேவகம் செய்கிறது. ராம அவதாரத்தில் ஆதி சேஷனே லட்சுமணனாக உருக் கொள்கிறது.

    பாம்பு பற்பல அவதாரங்களில் எந்த வகைகளில் எல்லாம் உதவுகிறது என்பதை பொய்கையாழ்வார் அருளிச் செய்த முதல் திருவந்தாதி வெண்பா ஒன்று அழகாக விவரிக்கிறது.

    `சென்றால் குடையாம் இருந்தால் சிங்காசனமாம்

    நின்றால் மரவடியாம் நீள்கடலுள் என்றும்

    புணையாம் மணிவிளக்காம் பூம்பட்டாம் புல்கும்

    அணையாம் திருமாற்கு அரவு.'

    பெருமாளுக்கு அவர் உலவும்போது நாகம்தான் குடை. அமரும்போது அதுவே சிம்மாசனம். நிற்கும்போது நாகம்தான் பாதுகை. பாற்கடலில் அதுவே மெத்தை. திருமால் அருகில் எப்போதும் திருவிளக்காக இருப்பவரும் திருமாலுக்குப் பட்டாடையாக இருப்பவரும் அணைப்பதற்கு அணையாக இருப்பவரும் நாகம்தான் என்கிறது அந்த வெண்பா.

    கிருஷ்ண அவதாரத்தில் தன் மனைவி தேவகிக்குக் குழந்தையாகப் பிறந்த கண்ணனை யசோதை இல்லத்திற்குக் கொட்டும் மழையில் கூடையில் எடுத்துச் செல்கிறார் வசுதேவர். அப்போது கண்ணன்மேல் மழைநீர் விழாதவாறு தன் படத்தையே குடையாக விரித்து உடன் செல்வது ஆதிசேஷன் என்ற பாம்புதான் என்பதை விவரிக்கிறது கண்ணன் கதையைச் சொல்லும் பாகவத புராணம்.

    திருமால் கண்ணனாக அவதரித்தபோது சின்னக் கண்ணன் காளிங்கன் என்ற கொடிய பாம்பின் தலைமீது பாதங்களைப் பதித்து நடனமாடினானே, அது அவன் லீலைகளில் ஒன்று.

    `பாம்புத் தலைமேலே நடம்செய்யும்

    பாதத்தினைப் புகழ்வோம்'

    எனக் கண்ணனின் லீலை குறித்துப் பாடி மகிழ்கிறார் பாரதியார்.

    பாற்கடலிலிருந்து அமிர்தம் வெளிப்பட உதவுவது வாசுகி என்ற பாம்புதான். வடவரையை மத்தாக்கி வாசுகியை நாணாக்கித் தான் தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைகிறார்கள்.

    இந்நிகழ்ச்சியை இளங்கோ அடிகள் எழுதிய சிலப்பதிகாரம் பேசுகிறது.

    வடவரையை மத்தாக்கி

    வாசுகியை நாணாக்கிக்

    கடல்வண்ணன் பண்டொருநாள்

    கடல்வயிறு கலக்கினனே

    கலக்கியகை அசோதையார்

    தடக்கயிற்றால் கட்டுண்கை

    மலர்க்கமலப் புந்தியான்

    மாயமோ மருட்கைத்தே

    எனப் புகழ்கிறது அந்தப் பாடல்.

    அமிர்தத்திற்காகப் பாற்கடலைக் கடைந்தபோது அதிலிருந்து கொடிய ஆலகால விஷமும் வெளிப்பட்டது. அதைத் தாம் அருந்தி தேவர்களைக் காப்பாற்றினார் சிவபெருமான்.

    அந்த நஞ்சு சிவனின் வயிற்றுக்குள் போனால் அவர் வயிற்றிலிருக்கும் உலகங்கள் அனைத்தும் பாதிக்கப்படுமே எனக் கவலை கொண்டாள் பார்வதி.

    திருமணத்தின்போது சிவன் கையைப் பிடித்தவள் இப்போது அவன் கழுத்தைப் பிடித்தாள். நஞ்சு சிவன் கழுத்திலேயே நின்றது. அவன் நீலகண்டன் ஆனான். இவ்விதம் அன்னை பார்வதியின் செய்கையால் உலக உயிர்கள் காப்பாற்றப்பட்டன.

    நம் ஆன்மிகம் குண்டலினி சக்தி பற்றிப் பேசுகிறது. முதுகுத் தண்டின் கீழ்ப் பகுதியில் உள்ளதாகச் சொல்லப்படும் குண்டலினி ஒரு பாம்பாகவே உருவகிக்கப் படுகிறது.

    நாகலோகம் என்ற ஒரு தனி உலகம் பூமிக்குக் கீழ் உள்ளதாகவும் அங்கே ஏராளமான நாகங்கள் வசிப்பதாகவும் புராணங்கள் சொல்கின்றன.

    நாக அஸ்திரம் என்பது வலிமை வாய்ந்த ஓர் ஆயுதம். நாகப் பாம்பின் கொடிய விஷ சக்தியைத் தாங்கியுள்ள இந்த அஸ்திரத்தைப் பற்றிய குறிப்பு ராமாயணம், மகாபாரதம் ஆகிய இரு இதிகாசங்களிலும் வருகிறது.

    மகாபாரதத்தில் கர்ணனிடம் இந்த வலிமை வாய்ந்த அஸ்திரம் உண்டு. இதை அர்ச்சுனனை நோக்கி ஒருமுறை மட்டுமே பிரயோகிக்கலாம் எனக் கண்ணனின் ஆலோசனைப்படி குந்திதேவி கர்ணனிடம் வாக்குறுதி வாங்குகிறாள் . அர்ச்சுனன் மீது கர்ணன் நாக அஸ்திரத்தை ஏவிவிடும் தருணத்தில் தேரைச் சற்றே கீழே அழுத்தி கிருஷ்ணர் அது அர்ச்சுனனைத் தாக்காதவாறு காப்பாற்றி விடுகிறார்.

    ராமாயணத்திலும் நாக அஸ்திரம் வருகிறது. ராம ராவண யுத்தத்தின்போது இந்திரஜித் லட்சுமணன் மீது நாக அஸ்திரத்தைப் பிரயோகம் செய்ய லட்சுமணன் நாக பாசத்தால் கட்டுண்டு மயங்கி விழுகிறான் என்பதையும் பின்னர் வானிலிருந்து பறந்துவரும் கருடனால் அந்தக் கட்டுகள் எப்படி விலகுகின்றன என்பதையும் ராமாயணம் யுத்தகாண்டத்தில் விவரிக்கிறது.

    லட்சுமணனே ஆதிசேஷன் என்ற பாம்பின் அவதாரம் தான் என்றும் அவன் ஆதிசேஷனின் அவதாரமாக இருப்பதால்தான் ராமாயணப் பாத்திரங்களிலேயே அவனுக்குக் கோபம் அதிகம் என்றும் சொல்கிறார்கள்.

    இளங்கோ அடிகள் எழுதிய சிலப்பதிகாரத்தில் பாம்பு பற்றிய ஒரு செய்தி வருகிறது. கைக்குழந்தையுடன் இருக்கும் ஒரு பெண் தன் பிள்ளையை வளர்த்ததோடு கூடவே பாசத்துடன் ஒரு கீரிப் பிள்ளையையும் வளர்த்தாள்.

    ஒருநாள் அவள் குளத்தில் தண்ணீர் எடுக்கப் போனாள். வீட்டில் தொட்டிலில் இருந்தது குழந்தை.

    அந்தக் குழந்தையை ஒரு பாம்பு கடிக்க வந்தது. பாய்ந்து சென்ற கீரிப் பிள்ளை அந்தப் பாம்பைக் கடித்துக் குதறிக் கொன்றுவிட்டது. பின் பெருமிதத்தோடு வீட்டு வாயிலில் வந்து நின்றது அது.

    குடத்தில் தண்ணீரோடு திரும்பி வந்த தாய், கீரியின் கோலத்தைப் பார்த்தாள். பாம்பு வந்ததை அறியாத அவள் குழந்தையைத் தான் கீரிப்பிள்ளை கொன்றுவிட்டதாகத் தவறாக நினைத்தாள். உள்ளே சென்று குழந்தையின் அருகே பாம்பு. இறந்து கிடப்பதைக் காணத் தவறினாள். குழந்தையைக் காப்பாற்றிய கீரிப் பிள்ளையின் தலையில் தண்ணீர்க் குடத்தைப் போட்டுக் கீரியைக் கொன்றுவிட்டாள் அவள்.

    அந்தக் கொடும் பாவத்திலிருந்து அவள் விடுபட, கோவலன் எவ்விதம் உதவி செய்தான் என்பதை விவரிக்கிறது சிலப்பதிகாரம்.

    `சீதக் களபச் செந்தாமரை ` எனத் தொடங்குகிறது அவ்வையார் எழுதிய விநாயகர் அகவல். யோக சாஸ்திரம் முழுவதையும் உள்ளடக்கி எழுதப்பட்ட உயர்ந்த ஆன்மிக நூல் அது. ` நான்றெழு பாம்பின் நாவில் உணர்த்தி ` என அது குண்டலினியாகிய பாம்பைப் பற்றிப் பேசுகிறது.

    வயதான நாகங்களின் தலையில் அவற்றின் விஷமே ஒரு ரத்தினமாக உருவாகும் என்றும் அதுவே நாகரத்தினம் என்றும் சொல்வதுண்டு. அந்த நாகரத்தினத்தின் ஒளியிலேயே வயதான நாகங்கள் இரை தேடும் என்றும் ஒரு கருத்தோட்டம் நிலவுகிறது.

    ராமகிருஷ்ண மடத்தின் இலச்சினையில் பாம்பு உண்டு. கார்க்கோடகன் என்ற பாம்பைப் பற்றிய குறிப்பு நளசரிதத்தில் உண்டு. அது கடித்ததால் நளன் உருவம் பெரிதும் மாறியது என்றும் அதனால்தான் குறிப்பிட்ட காலம்வரை அவனால் மறைந்து வாழ முடிந்தது என்றும் நளசரிதம் சொல்கிறது.

    காட்டுத் தீ பற்றியபோது அதில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்தது கார்க்கோடக நாகம். அதைக் காப்பாற்றுகிறான் நளன். அப்போது தன்னைக் கையில் ஏந்தியவாறு பத்தடி நடந்து பத்தாவது அடி முடியும்போது தச என்று சொல்லுமாறு கேட்டுக் கொள்கிறது நாகம். நளனும் அவ்விதமே செய்கிறான்.

    தச என்ற சொல்லுக்கு சமஸ்கிருதத்தில் பத்து என்றும் கடி என்றும் இரண்டு அர்த்தங்கள் உண்டு. கடி என்ற அர்த்தத்தையே தான் எடுத்துக்கொண்டதாகச் சொல்லும் கார்க் கோடக நாகம் நளனைக் கடிப்பதையும் அந்த நாக விஷத்தால் நளனின் தோற்றம் குறுகியதாகவும் கரிய நிறம் உடையதாகவும் மாறுவதை நளசரிதம் படிப்பவர்கள் பிரமிக்கும் வகையில் விவரிக்கிறது.

    பதினெண் சித்தர்களில் ஒருவர் பாம்பாட்டிச் சித்தர் எனப் பெயர் பெற்றவர். அவர் பாம்பை முன்னிலைப்படுத்தி பாம்புக்குச் சொல்வதுபோலப் பல பாடல்கள் எழுதியிருக்கிறார்.

    கொடிய விஷப் பாம்புகளை எவ்விதம் கையாளுவது என்ற கலையில் அவர் தேர்ச்சி பெற்றிருக்கலாம் என்றும் குண்டலினியே பாம்பாக உருவகப் படுத்தப்படுவதால் அவர் குண்டலினி யோகத்தில் சிறந்தவராக இருக்கலாம் என்றும் இருவேறு விதமாகக் கருத்து நிலவுகிறது.

    திருவண்ணாமலையில் மகரிஷி ரமணர் தங்கியிருந்த குகையில் ஒருமுறை பாம்பு வந்துவிட்டது. அன்பர்கள் அதை அடிக்கப் போனார்கள். ரமணர் தடுத்து நிறுத்தினார். பாம்பை ஏன் விரட்டுகிறீர்கள் எனக் கேள்வி எழுப்பினார். நீங்கள் தங்கியிருக்கும் குகையில் பாம்பு வந்துவிட்டது, அதனால் அதை அடிக்கிறோம் என்றார்கள். குகை என்பது பாம்புகள் வசிக்கும் இடமல்லவா…அது தங்கியிருக்கும் இடத்திற்கு நாம் வந்துவிட்டு அதை விரட்டுவது நியாயமா…சற்றுப் பொறுங்கள். அதுவே தானாக விலகிச் சென்றுவிடும் என ரமணர் அறிவுறுத்தினார். அவர் சொன்னபடியே யாரையும் எதுவும் செய்யாமல் சற்று நேரத்தில் பாம்பு ஊர்ந்து வெளியேறிச் சென்றுவிட்டது.

    எண்ணற்ற ஆன்மிகச் செய்திகளை நமக்கு உணர்த்திக் கொண்டேயிருக்கின்றன ஆன்மிகப் பரப்பில் நெடுக ஊர்ந்துசெல்லும் புனிதம் நிறைந்த நாகங்கள்.

    தொடர்புக்கு-thiruppurkrishnan@gmail.com

    Next Story
    ×