என் மலர்
சிறப்புக் கட்டுரைகள்
- புரிதல் என்பது நம் அறிவின் செயல்பாட்டில் ஒரு முக்கியமான அம்சம்.
- நாம் தெளிவாக இருந்தால் மட்டுமே, இந்த உலகத்தில் வாழ முடியும்.
'உங்கள் உள்ளுணர்வுக்குச் செவிசாயுங்கள். நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அனைத்தையும் அது உங்களுக்குச் சொல்லும்'.
-அந்தோனி ஜே.டி.ஏஞ்சலோ
தவறான புரிதல்தான் பல பிரச்சினைகளுக்குக் காரணம். ஒருவர் ஒன்றைச் சொன்னால், அதை நாம் வேறுவிதமாகப் புரிந்து கொள்கின்றோம். நாம் ஒரு விஷயத்தைச் சொன்னால், எதிரில் இருப்பவர் அதற்குக் குதர்க்கமான அர்த்தம் கொள்கிறார்.
'உன் நன்மைக்குத்தான்டா சொல்றேன்' என்று அப்பா சொல்லும்போதெல்லாம், மகனுக்கு அவர் விரோதியாகத் தெரிகிறார்.
'ஒழுங்கா படி. நல்ல மார்க் இல்லேன்னா, இந்தக் காலத்துல வேலை கிடைக்கிறது கஷ்டம்' என்று அவர் அறிவுறுத்தினால், தனக்குச் சாபமிடுவதாகத்தான் பையன் நினைக்கிறான்.
'அதிகாலையில் எழுந்து குளித்துக் கடவுளைத் தொழுது, அன்றைய கடமைகளைத் தொடங்கினால் எல்லாம் சிறப்பாக நடக்கும்' என்று பாட்டி சொல்கிறாள். 'பழங்காலத்துப் பெருசு, ஏதோ உளறுது' என்றுதானே இளசுகள் கேலி பேசுகின்றன.

சில குடும்பங்களில் கணவன் - மனைவி சண்டைகள் பெரும்பிரச்சினை. காலத்திற்கும் அவை ஓய்வதே இல்லை. காரணம் என்ன? ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளாமைதான். வருமானம் இருக்கும்; வசதிகள் இருக்கும்; ஆனால், புரிதல் இருக்காது.
நிலத்தின் தன்மையைத் தவறாகப் புரிந்து கொண்டால், விதைப்பதில் பயனிருக்காது. விளையாட்டிலும்கூட விதிகளைச் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை என்றால், விளையாட்டே வினையாகிவிடும்.
தேர்வெழுத உட்கார்ந்தவனுக்கு வேர்த்து விறுவிறுக்கிறது. நன்றாகப் படித்துவிட்டுதான் வந்திருக்கிறான். எனினும், கேள்விகளில் உள்ள சூட்சுமத்தைப் புரிந்துகொள்ள முடியாமல், பதற்றத்தில் விழிக்கிறான்.
கசாப்புக் கடையில், அந்தக் கடைக்காரருக்கும் வாடிக்கையாளர் ஒருவருக்கும் பயங்கரச் சண்டை. விஷயம் வேறொன்றுமில்லை; ஆட்டு மூளை வாங்க வந்த வாடிக்கையாளர் அவசர கதியில் கடைக்காரரைப் பார்த்து 'மூளை இருக்குதா?' என்று கேட்டிருக்கிறார். பலருக்கு மத்தியில் அவர் அப்படிக் கேட்க, ஒருநொடி நிலைதடுமாறிய கடைக்காரருக்கு ஆத்திரம் வந்துவிட்டது. ஒரே ரகளை. புரியும்படி பேசுவதும், சரியாகப் புரிந்து கொள்வதும் அறிவுடைமை.
பொது இடங்களில் மிக மிக ஜாக்கிரதையாக நடந்துகொள்ள வேண்டும். ஏனெனில், தவறான புரிதல்கள் விபரீதமான விளைவுகளை ஏற்படுத்திவிடும்.
நான் திருநெல்வேலியில் முதுகலைப் பட்டப்படிப்பை முடித்தபின், மார்த்தாண்டத்தில் ஒரு நிறுவனத்தில் திட்ட ஒருங்கிணைப்பாளராகப் பணியாற்றினேன்.
அப்போது, வார இறுதி நாட்களில் நெல்லையிலுள்ள எங்கள் வீட்டிற்கு வந்துவிடுவேன். மீண்டும் திங்கட்கிழமை மார்த்தாண்டம் சென்றுவிடுவேன். அந்த இரண்டு நாட்களும் கொண்டாட்டமாக இருக்கும்.
என்னைப் போலவே, கல்லூரிப் படிப்பை முடித்துக் கோயம்புத்தூரில் பணியாற்றிய என் நெருங்கிய நண்பன் ஒருவன்; அவனும் ஒவ்வொரு வார இறுதியிலும் நெல்லை வந்துவிடுவான். நாங்கள் இருவரும் சினிமா, ஓட்டல் என ஊர்சுற்றுவோம்.
அப்படி ஒருமுறை, நெல்லை டவுணில் உள்ள ஒரு தியேட்டருக்குச் சென்றோம். ஜங்ஷனில் ஒரு பிரபலமான 'கூல் பார்' உண்டு. டவுண் செல்வதற்குமுன், ஸ்நாக்ஸ் சாப்பிட்டுச் செல்லலாம் என்று அங்கே சென்றோம்.
அப்போது, இரண்டு இளம்பெண்கள் எங்கள் இருக்கைக்குப் பக்கவாட்டில் உள்ள இருக்கையில் வந்து அமர்ந்தனர். நாங்கள் பைக்கை வெளியே நிறுத்திவிட்டு வரும்போதே, அந்த இரு பெண்களும் அங்கே ஒதுங்கி நின்றுகொண்டிருந்ததைப் பார்த்தோம்.
சிக்கன் பப் ஆர்டர் செய்தோம். அதைச் சாப்பிட்டு முடித்ததும், சர்வரிடம் 'ரெண்டு ரோஸ் மில்க்' என்றோம்.
உடனே அந்த இருவரில் ஒருத்தி, 'என்னடி, நம்ம ஊர்ப் பசு ரோஸ் கலர்லயா பால் கொடுக்குது' என்று சொல்ல, சர்வர் சிரித்தார்; நாங்களும் சிரித்தோம்.
சரி, நாமும் ஒரு கமென்ட் அடிப்போம் என்ற எண்ணத்தில், 'பச்சைக் குழந்தைனு சொல்றோமே, குழந்தை என்ன பச்சைக் கலர்லயா பொறக்குது' என்றேன். அந்த இளம்பெண்கள் கொஞ்சம் அதிகமாகவே சிரித்தார்கள். நாங்கள் அங்கிருந்து சென்றுவிட்டோம்.
தியேட்டருக்கு வரும்போது, படம் ஆரம்பித்து விட்டது. அவசரமாக டிக்கெட் எடுத்து உள்ளே போய் அமர்ந்தோம். கூட்டம் அதிகம் இல்லை.
சில நிமிடங்களில், அதே இரண்டு பெண்கள் அங்கு வந்து, எங்களுக்குப் பின்னிருக்கையில் அமர்ந்தனர். எங்களுக்கு லேசாக சந்தேகம் எழுந்தது.
'டேய், இவங்க நம்மள பாலோ பண்ணி வர்றாங்களோ' என்று கிசுகிசுத்தான் என் நண்பன். 'இருக்கலாம். அங்க 'கூல் பார்' பக்கத்துல பைக்கை நிறுத்தும்போது பார்த்தோம். அப்புறம் கடைக்குள்ளேயும் பார்த்தோம். ஜோக் அடிச்சாங்க, சிரிச்சோம். அங்கிருந்து கிளம்புற வரைக்கும் நம்மள அவங்க பார்த்துட்டேதான் இருந்தாங்க. தப்பா புரிஞ்சிக்கிட்டுப் பின்தொடர்ந்து வந்திருக்கலாமோ' என்று நான் மெதுவாக என் நண்பனிடம் சொல்லிக் கொண்டிருக்கும்போது, அவர்களில் ஒரு பெண் மெல்ல எங்கள் இருவருக்கும் நடுவில் தன் முகத்தைக் கொண்டு வந்து, 'டைம் என்ன?' என்று கேட்டாள்.
அவர்கள் இருவருமே கையில் வாட்ச் கட்டியிருந்தார்கள். எனவே, எங்களுக்கு சந்தேகம் வலுத்தது. பதில் சொல்லாமல் இருந்தோம். படம் பார்க்கவும் முடியவில்லை. சிறிது நேரத்தில், வாட்டசாட்டமான ஒருவன் வந்து அவர்கள் பக்கத்தில் அமர்ந்தான். 'இனி இங்கே இருப்பது நல்லதல்ல. இடைவேளையில் கிளம்பிவிடுவோம்' என்றேன். 'இப்போதே கிளம்பிடலாம்' என்றான் என் நண்பன். 'சரி' என்றேன்.
இடைவேளைக்கு முன்னதாகவே நாங்கள் இருவரும் எழுந்து வெளியே வர, அந்த மூவரும் எங்களைத் தொடர்ந்து வந்தனர். நாங்கள் நின்று திரும்பிப் பார்த்தோம்.
அந்த வாட்டசாட்டமான ஆள் எங்களிடம் வந்து, 'இடம் இருக்கு, போலாமா?' என்றான். குரல் கரகரப்பாக முரட்டுத்தனமாக இருந்தது.
நாங்கள் சுதாரித்துக் கொண்டோம்.
'என்ன விஷயம்? எங்க மாமாதான் இந்த ஏரியா சர்க்கிள் இன்ஸ்பெக்டர் ஆல்பர்ட் ராஜன். அவரைப் பார்க்கதான் ஸ்டேஷனுக்கு நாங்க போறோம். மூணு பேரும் வாங்க, சேர்ந்து போகலாம்' என்றேன். அடுத்த நொடியில் அந்த மூவரும் எங்கே எப்படிப் போனார்கள் என்றே தெரியவில்லை; ஓடிவிட்டனர்.
இதில், இருபுறத்திலும் தவறான புரிதல்கள். முதலில், அவர்கள் 'அப்படிப்பட்டவர்கள்' என்ற எண்ணமே எங்களிடம் இல்லை. 'கூல் பார்' நிலையத்திற்கு வெளியே பைக்கை நிறுத்திய இடத்திலிருந்தே அவர்கள் எங்களைப் பின்தொடர்ந்து வந்திருக்கிறார்கள் என்பதும் அப்போது எங்களுக்குத் தெரியவில்லை.
அங்கு அவர்களின் 'கமென்'டிற்கு நாங்கள் சிரித்ததையும், பதில் கமென்ட் கொடுத்ததையும், தியேட்டரிலிருந்து இடைவேளைக்கு முன்பே நாங்கள் எழுந்து வந்ததையும் - அவர்களின் நோக்கத்திற்கு நாங்கள் சம்மதம் தெரிவிப்பதாக எண்ணிக்கொண்டது அவர்களின் தவறான புரிதல்.
நம் வாழ்வில் தேவையற்ற பிரச்சினைகளில் நாம் சிக்கிக் கொள்வதற்கு மூல காரணம், நேர்மாறான புரிதல்கள்தான். மாணவனைச் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை என்றால், ஆசிரியர் அவனுக்குப் பாடம் நடத்தி எந்தப் பிரயோஜனமும் இல்லை.
கட்டுமானத்தின் நேர்த்தி, கட்டடக் கலைஞனின் புரிதலில் இருக்கிறது. சிற்பத்தின் தரம், கல்லைப் பற்றிய சிற்பியின் புரிதலில் இருக்கிறது. விளங்கிக் கொள்ளாமல் செய்கின்ற எதுவும் விளங்குவதில்லை.
கிராமத்து விவசாயி தனது நிலத்தின் தன்மையைத் தெளிவாகத் தெரிந்து வைத்திருக்கிறான். பயிர்களைப் பற்றிய விஷயங்கள் அவனுக்கு அத்துப்படி. எந்தப் பயிருக்கு எவ்வளவு உரம், எவ்வளவு நீர் என்பதை அவன் அறிவான். எனவே, நிலம் அவனோடு உறவாடுகிறது; பலன் தருகிறது.
புரிதல் என்பது நம் அறிவின் செயல்பாட்டில் ஒரு முக்கியமான அம்சம். புரிதலின் அடிப்படையான அறிவு என்பது, ஓர் உடனடி செயல். நிலைமையைச் சரியாகப் புரிந்துகொண்டு செயல்பட, நம்மைச் சுற்றி நிகழ்கிற எல்லாவற்றிலும் பார்வையைச் செலுத்துவது அவசியம்.

கவிஞர் தியாரூ, 9940056332
சிலர் எதுவும் புரியாமல் புரிந்ததுபோல் நடிப்பார்கள். சிலர் புரிந்தும் புரியாததுபோல் விழிப்பார்கள். நாம் தெளிவாக இருந்தால் மட்டுமே, இந்த உலகத்தில் வாழ முடியும். கொஞ்சம் ஏமாந்தால் நம் கண்களைக் கட்டிவிட்டு, நம்மிடமே விளையாடிப் பார்ப்பார்கள்.
அறிவாற்றல் என்று சொல்கின்றோமே, அது என்ன? நம்மைச் சுற்றியுள்ள உலகத்தைப் புரிந்து கொள்வதற்கும், சரியான முறையில் தொடர்பு கொள்வதற்கும் நமது திறனை வடிவமைப்பதே அறிவாற்றல்தான்.
ஒவ்வொரு நாளும் எத்தனையோ தகவல்களை நாம் பெறுகின்றோம். அவற்றைச் சேகரித்து வைத்துக்கொள்வதில் நமக்கென்ன பலன்! அவற்றிலிருந்து அர்த்தங்களைப் பெறுவதற்கு, அறிவாற்றலை நாம் பயன்படுத்த வேண்டும்.
மிக முக்கியமாக, முதலில் நம்மைப் புரிந்து கொள்ள வேண்டும். நமக்கு எதைச் செய்ய முடியும், எதைச் செய்ய முடியாது என்பதிலேயே நமக்குக் குழப்பம் என்றால், எப்படி நம் வாழ்வை முன்றகர்த்த முடியும்?
தூக்க முடியாத சுமையை வீம்புக்காகத் தூக்க முயற்சிக்காதீர்கள். அது உங்கள் முதுகுத் தண்டை வளைத்து, உங்களை நிமிரவிடாமல் செய்துவிடும். செய்யக்கூடியதைப் புரிந்து, அதைத் திறம்படச் செய்வதுதான் வளர்ச்சிக்கு வழி.
சிலரைப் பார்க்கும்போது மனதுக்குச் சங்கடமாக இருக்கிறது. என்ன செய்கிறோம் என்பதே தெரியாமல் எதையெதையோ செய்து கொண்டிருக்கிறார்கள். 'நமக்குக் கிடைக்கணும்னு இருந்தா கிடைக்காமலா போயிடும்' என்று சொல்லிக்கொண்டு, தங்களுக்குச் சம்பந்தமே இல்லாத வேலைகளில் நேரத்தை விரயம் செய்வதில் என்ன பிரயோஜனம் என்பதை அவர்கள் சிந்திப்பதே இல்லை.
அறநூல்களைத் தலைமாட்டில் வைத்துக் கொண்டு தூங்கினால் அறிவு வளர்ந்துவிடாது. புரிந்து கொள்வதும், புரிந்து கொண்டவற்றை வாழ்வில் அப்பியாசப்படுத்துவதும்தான் வாழ்வை அர்த்தமுள்ளதாக்கும்.
சீடர்களுக்கு உபதேசித்துக் கொண்டிருந்தார் குரு. இடையிடையே 'புரிகிறதா...புரிகிறதா' என்று கேட்டுக் கொண்டார். அவர்களும், 'புரிகிறது...புரிகிறது' என்று தலையாட்டினார்கள்.
உபதேசம் முடிந்ததும் சீடர்களைப் பார்த்து, 'என்ன புரிந்தது?' என்று கேட்டார் குரு. 'இறுதியில் தாங்கள் இப்படிக் கேட்பீர்கள் என்று எங்களுக்கு அப்போதே புரிந்தது' என்றனர் சீடர்கள்.
'சீடர்களே, புரிந்து கொள்வதில் தாகம் கொள்ளுங்கள். செவியில் வாங்குவது உள்ளே செல்ல வேண்டும். அப்படியானால்தான், புரிந்துகொள்ள வேண்டியவற்றைப் புரிந்துகொள்ள முடியும். அடைய வேண்டியவற்றை அடைய முடியும்' என்றார் குரு.
குடும்ப வாழ்வில், பொது வாழ்வில், சமூகத்தில் ஆரோக்கியமான உறவுநிலை வேண்டுமா? வெற்றி வேண்டுமா? அப்படியெனில், எல்லாவற்றிலும் சரியான புரிதல் நமக்கு வேண்டும்.
- கருவேலம் காட்டுக்குள் நுழைந்தவர்களை தொடர்ந்து மொத்த போலிஸ் டீமும் காட்டுக்குள் நுழைந்தனர்.
- காட்டுக்குள் ‘கண்மண்’ தெரியாமல் ஓடிக்கொண்டு இருந்த திவ்யாவுக்கு மூச்சு வாங்க ஆரம்பித்தது.
ஜீப்பில் இருந்து இன்ஸ்பெக்டர் அழகர் மற்றும் கான்ஸ்டபிள்கள் இறங்க, வேனில் இருந்து டேவிட் மற்றும் அனைவரும் இறங்கினர். மூன்றவதாக காரில் இருந்து இறங்கிய பெருமாள் நிதானமாய் அந்த இடத்தை கண்களால் ஆராய்ந்தான்.
இன்ஸ்பெக்டர் அழகரிடம், பழனியிடம் விசாரித்த விவரத்தை முழுவதுமாய் லோக்கல் இன்ஸ்பெக்டர் சொல்லி முடித்தார்.
"இப்ப என்ன சார் பண்ணபோறீங்க"
"காட்டுக்குள்ளே போய் தேடலாம்... சார்...வாங்க... சார்..." டேவிட் அவசரப்படுத்தினான்...
"இருங்க சார், இப்பதானே விசாரிச்சிகிட்டு இருக்கேன்... அதுக்குள்ளே அவசரப்படுறீங்க? அவ்வளவு அவசரம்னா நீங்க போய் தேடுங்க..." - எரிச்சலாய் அழகர் கூறவும் குறுக்கே புகுந்தான் டேவிட்...
"என்ன இன்ஸ்பெக்டர் பேச்சு எரிச்சலாய் வருது. எங்களுக்கு அவசரம்தான். எங்க பொண்ணு நாங்க தேடுறோம்... இஷ்டம்னா வாங்க.. என கத்திய பெருமாள்,
"டேவிட் நாம மொத்தம் பத்து பேர் இருக்கோம். மூணு குரூப்பா பிரிஞ்சி காட்டுக்குள்ளே போய் தேடலாம்... போலீஸ் அவங்க பார்மாலிட்டீஸ் எல்லாம் முடிஞ்சு நிதானமா வரட்டும்..." என சொல்ல...
இன்ஸ்பெக்டர் அழகர் அவர்களை முறைத்தார்... அப்போது "காப்பாத்துங்க" என்ற திவ்யாவின் குரல் காட்டுக்குள் தூரத்தில் இருந்து கேட்டது..
திவ்யாவின் 'காப்பாத்துங்க' குரல் மொத்த பேரையும் உலுக்க, டேவிட், பெருமாளிடம்.. "நீங்க என் பிரண்ட்ஸ் தியாகு, செந்தில் இரண்டு பேரையும் கூட்டிக்கோங்க... நானும், அப்பா, மாமா ஒரு டீமா போறோம். நெல்சன், மேரி, நீங்க அத்தையும், அம்மாவையும் கூட்டிக்கோங்க… வாங்க போலாம்…" என்று மூன்று குழுக்களாக பிரிந்து, காட்டுக்குள் வேகமாய் நுழைந்தனர்.
"ஹலோ., இருங்க.. சொன்னா கேளுங்க.." அழகர் கத்த கத்த அவரை சட்டை செய்யாமல் மொத்தபேரும் மூன்று குழுக்களாக, காட்டுக்குள் திவ்யாவை தேடி நுழைந்துவிட்டனர்.
ஒரு கணம் 'என்ன செய்வது?' என திகைத்து நின்றார் இன்ஸ்பெக்டர் அழகர். சுதாரித்தவர், லோக்கல் இன்ஸ்பெக்டரிடம், "சார்.. ஒரு கான்ஸ்டபிளை பழனியோட இங்கயே இருக்கவைங்க.. நாம மீதி ஆறுபேர் இருக்கோம். நான், ஒரு கான்ஸ்டபிளோட டீமோட போறன்... நீங்களும், ஒரு கான்ஸ்டபிளும் ஒரு டீமோட போங்க.. மீதி ரெண்டு பேரு மூணாவது டீமோட போங்க.. கமான்.. க்விக்.. அவங்களுக்கு ஏதாவது ஆச்சுன்னா நாம கமிஷனர் ஆபிஸ்ல கைய கட்டிகிட்டு நிக்கணும்..."
இந்த கருவேலம் காட்டுக்குள் நுழைந்தவர்களை தொடர்ந்து மொத்த போலிஸ் டீமும் காட்டுக்குள் நுழைந்தனர். பழனி பாதுகாப்பாக நின்ற அந்த ஒத்தை கான்ஸ்டபிளை பார்த்து பரிதாபமாய் கேட்டான். "ஏன் சார்.. அவங்க எல்லாம் திரும்பி வர்ற வரைக்கும் நாம இப்படி என் கடை முன்னாடி காத்து இருக்கணுமா..?"
"ஆமாய்யா.. நீதான் இந்த கேசுல முக்கிய சாட்சி, மூடிட்டு இரு..!"

இயக்குநர் A. ெவங்கடேஷ்
"அது சரிய்யா.. காட்டுக்குள்ள போனவங்க எல்லாம் திரும்பி வருவாங்களா..?"
பழனி கேட்க கான்ஸ்டபிள் முறைத்தார்.
மேலூர் போலீஸ் ஸ்டேஷன்ல இருந்து இன்ஸ்பெக்டர் உட்பட கிளம்பி இந்த ரிலாக்ஸ் டீ ஸ்டால் இருந்த இடத்திற்கு வருவதற்கும், அதற்கு முன்பு காட்டுக்குள் ஓடிய திவ்யாவுக்கும், அவளை துரத்தி ஓடியவர்களுக்கும் இடையே… இப்போது காப்பாத்துங்க என அவள் கத்திய வரை என்னதான் நடந்தது!
ஒரு சின்ன ரீ-வைண்ட்.
காட்டுக்குள் ஓடிய திவ்யாவை துரத்தி மூவரும் ஓட… ஓடியதில் ஒருவன், "யேய் நீ போனை ஆஃப் பண்ணு. அப்புறம் காரை எடுத்துட்டு, கட்டோட அந்த பக்கம் வா… நாங்க அவளை பாத்துக்குறோம்..!" என கூறவும், ஒருத்தன் திரும்பி ஓடிப்போய் காரை எடுத்து கிளம்பினான்.
காட்டுக்குள் 'கண்மண்' தெரியாமல் ஓடிக்கொண்டு இருந்த திவ்யாவுக்கு மூச்சு வாங்க ஆரம்பித்தது. ஓடிக்கொண்டே திரும்பி பார்த்தாள் திவ்யா. இரண்டு தடியன்களும் கொஞ்சம் கூட களைப்பின்றி ஓடிவந்து கொண்டு இருந்தனர். மூச்சு வாங்க ஓடிக்கொண்டு இருந்த திவ்யாவுக்கு, எந்த பக்கம் செல்வது என தெரியாமல், வளைந்து, வளைந்து கிடைத்த வளைவுகளில் நுழைந்து ஓடினாள். ஒரு அளவுக்கு மேல் ஓட இயலாமல், ஒரு பாறைக்கு அடியில் ஒதுங்கினாள். ஓடிவந்தவர்கள் அவளை காணாமல் திகைத்தனர். பாறையின் மறைவில் அமர்ந்திருந்த திவ்யாவுக்கு அவர்களின் பேச்சுக்குரல் மட்டும் தான் கேட்டது.
"எங்கடா, போனா அவ!"
"எங்க போயிருக்க முடியும். இங்கதான் எங்கேயாவது ஒளிஞ்சு இருப்பா... அவன் காரை எடுத்துட்டு இந்தப்பக்கம் ரோட்டுக்கு வரதுக்கு முன்னாடி அவளை பிடிக்கணும்…"
அவர்கள் பேசிக் கொண்டிருக்க.. மறைந்திருந்த திவ்யா, மூச்சு வாங்கி அமர்ந்திருந்த இடத்தில் இருந்து அவர்கள் நிற்பது தெரிந்தது. ஆனால், அவர்களுக்கு இவள் இருப்பது தெரியாதவாறு மரங்களின் கிளைகள் மறைத்து கொண்டு இருந்தன. அப்போதுதான் திவ்யா கவனித்தாள். அது ஒரு காட்டுப்பன்றி! அவள் அமர்ந்திருந்த இடத்தில் இருந்து நாலு அடி தூரத்தில் இவளை பார்த்து முறைத்தபடி நின்றது. "ஐயையோ.. இப்ப என்ன பண்ணுவது..'- அவள் யோசித்து முடிக்கவும், அது இவளை நோக்கி 'உர்ர்ர்' என உறுமியபடி முன்னேற, என்ன செய்ய..' என திவ்யா யோசிக்க ஒரு கத்தி பறந்துவந்து பன்னியின் முகத்தில் பாய, அது கத்தியபடியே திரும்பி ஓடியது.
'கத்திய வீசியது யார்? - என திவ்யா நிமிர்ந்து பார்க்க, கோரமாய் சிரித்தபடி அந்த ரெண்டு தடியன்கள் நின்றனர். "உன் மேல கீறல் கூட விழாம கடத்திட்டு வந்து ஒப்படைக்கணும்னு உத்தரவு. பன்னி கீறி விட விட்ருவோமா.. என சிரிக்க..
"அண்ணே.. என்னை விட்ருங்க.. நான் போயிடுறேன்.."
"சார் தங்கச்சி.. மன்னிச்சுடு.." என அவளை பாறை மறைவில் இருந்து இழுக்க, அப்போதுதான் தன்னையும் அறியாமல், அது காடு.. காப்பாற்ற யாரும் இல்லை என தெரிந்தும் "காப்பாத்துங்க' என வீறிட்டாள். அந்த சத்தம் கேட்டு இவர்கள் காட்டுக்குள் நுழைந்த சமயம் திவ்யாவின் வாயில் துணியை அடைத்து, அவள் கைகளையும் கால்களையும் கட்டி அவளை அப்படியே தலைக்கு மேல் தூக்கியபடி, காட்டுக்குள் ரோட்டை நோக்கி அவர்கள் வேகமாக நடக்க ஆரம்பித்தனர்.
காட்டுக்குள் மூன்று குழுக்களாக, பிரிந்து தேடி வந்தவர்கள் 'திவ்யா. திவ்யா! என கத்துவது, காடு முழுக்க எதிரொலித்தது. அவர்கள் தூக்கிச் சென்ற திவ்யாவின் காதுகளில் அந்தச் சப்தங்கள், கேட்டது. டேவிட் குரல், அவனது நண்பர்கள் குரல், அப்பா, அம்மா, மேரி, எல்லாத்தையும் தாண்டி அண்ணன் பெருமாளின் குரல். 'ஒட்டுமொத்த பேரும் என்னை காப்பாற்ற வந்துவிட்டார்களா.. முருகா, நன்றிப்பா!' என் அண்ணணும் வந்திருக்கானா... திவ்யாவால் மனசுக்குள் நினைக்க முடிந்தது.
'நான் இங்கே இருக்கேன்!'-என அவளால் பதிலுக்கு கத்த முடியாமல், வாயில் துணியால் அடைக்கப்பட்டு இருந்ததால், அவளையும் மீறி கண்களில் கண்ணீர் வந்தது.
அவர்களில் ஒருவன், "டேய்... மொத்த குடும்பமும் வந்துருக்குடா.. கூடவே பூட்ஸ் கவுண்ட கேட்குது. அப்போ போலீசோட வந்து இருக்காங்க.. சீக்கிரம்.. வேகமா போ..." அவளை தூக்கிக் கொண்டு வேகமாக ஓட்டமும் நடையுமாய் அவர்கள் சென்றனர். திவ்யாவை தேடி வந்த டேவிட் ஒரு பாறையின் மீது ஏறி நின்றான். பாறைக்கு அந்த பக்கம் அறுபது அடி பள்ளம். அழகர் கத்தினார். "சார்.. பார்த்து.. அந்தப்பக்கம் பெரிய பள்ளம்..!" அவர் சொல்வதை டேவிட் கண்டு கொள்ளவே இல்லை. பலமாய் கத்தினான்.
"திவ்யா.. பயப்படாதே.. நாங்க வந்துட்டோம். உனக்கு எதுவும் ஆகாது. உன்னை கூட்டிட்டு போகாம நான் திரும்ப போக மாட்டேன்.. தைரியமா இரு ..!"
அவன் கத்தியது, திவ்யாவின் காதில் விழுந்து, கண்ணீராக கண்ணில் பதில் வழிந்தது. "என்னடா.. பதிலே காணோம்… " தியாகு செந்திலிடம் கேட்க, இன்ஸ்பெக்டர் அழகர், "சரி.. இங்கேயே நிக்க வேணாம்.. வாங்க.." அவர்களை கூட்டிக் கொண்டு காட்டில் முன்னேறினார். மூன்று குரூப்களும், மூன்று இடமாக காட்டுக்குள் தேட, டேவிட் ஓரிடத்தில் நின்று போனில் யாருக்கோ பேசியபடி, காட்டுக்குள் அவனும் வேறு ஓரிடத்தில் திவ்யாவை தேடிக்கொண்டு இருந்தான்.
திவ்யாவை தூக்கிக்கொண்டு காட்டின் மறுபுறம் இருக்கும் ரோடு நோக்கி, அந்த ரெண்டு பேரும் சென்று கொண்டு இருக்க.. சரியாய் அதற்கு ஐம்பதடி தூரத்தில், அவர்களுக்கு எதிர்திசையில் டேவிட் தன் குழுவுடன் தேடிக்கொண்டு இருந்தான். துரதிர்ஷ்டம், ஒரு ஐந்தடி இந்தப் பக்கம் வந்திருந்தால், டேவிட் திவ்யாவை தூக்கிச் செல்லும் அவர்களை பார்த்து இருப்பான். இடையில் மரங்களின் அடர்த்தியில் யாரும் யார் கண்களுக்கும் படாதது, திவ்யாவின் போதாத நேரம்தான். இப்போது காட்டின் இந்த பக்கம் உள்ள அவர்கள் திவ்யாவுடன் வந்து சேரவும், இன்னொருவன் காருடன் வந்து நிற்கவும் சரியாய் இருந்தது. காரை விட்டு இறங்கி ஓடி வந்து, அவனும் ஒரு கை தர, மூவருமாய் சேர்ந்து, அவளை காரின் டிக்கியில் வைக்க முயற்சித்தனர். திவ்யா கட்டப்பட்ட கால்களை உதைத்து போராடினாள்.
"ஒரு நிமிஷம்.."
நடந்து கொண்டிருந்தவர்களை டேவிட் நிறுத்தினான்.
"என்னாச்சு.?-இன்ஸ்பெக்டர் அழகர்.
"சார்.. ஒரு இருபது செகண்ட்ஸ் முன்னாடி ஒரு கார் நின்ன சவுண்ட் கேட்டது. பக்கத்துல ரோடு இருக்குமோனு சந்தேகம் வந்துச்சு... "
"எனக்கும் கார் சவுண்ட் கேட்டது!" செந்தில் ஆமோதித்தான்.
"இப்ப கூர்ந்து கேளுங்க.. - அனைவரும் காதை கூர்மையாக்கினர். "தொம்.. தொம்.."என ஒரு சப்தம் கேட்டது.
"வாங்க, அந்த சப்தம் வந்த திசையை நோக்கி, டேவிட் ஓட, கூடவே தியாகு, செந்தில். இன்ஸ்பெக்டர் அழகர் ஓடினர்.
கால்களால் காரை எட்டி எட்டி உதைத்து, திவ்யா போராட, மூவரும் சேர்ந்து மடக்கி, அவளை டிக்கியில் திணித்து மூடினர். "சீக்கிரம் சீக்கிரம்.." கத்தியயடி, டிரைவர் சீட்டில் ஏறி வண்டியை ஸ்டார்ட் செய்ய, மற்ற இருவரும் ஏறிக்கொள்ள, அந்த கார் புழுதி கிளப்பி கிளம்பவும், டேவிட் உள்பட நால்வரும் ரோட்டுக்கு வரவும் சரியாய் இருந்தது.
புழுதியில் மறைந்தபடி அந்த கார் செல்லவும், கண் எதிரே மீண்டும் திவ்யாவை கோட்டை விட்ட அதிர்ச்சியில் அப்படியே சரிந்து உட்கார்ந்தான் டேவிட்.
(தொடரும்) E-Mail: director.a.venkatesh@gmail.com / வாட்ஸப்: 7299535353
- மனிதனின் உண்மையான எதிரிகள் அவனுக்கு வெளியே இல்லை. அவன் உள்ளத்திலேயேதான் இருக்கிறார்கள்.
- சிவபுராணம், விநாயகர் புராணம் உள்ளிட்ட பல்வேறு புராணங்களில் அகத்தியரைப் பற்றிய செய்திகள் இடம்பெற்றுள்ளன.
தொல்காப்பியத்திற்கும் முற்பட்ட அகத்தியம் என்னும் தமிழ் இலக்கண நூலை எழுதியவர் குறுமுனி அகத்தியர். மகாகவி பாரதியார் தம் கவிதையொன்றில் இந்தச் செய்தியை உறுதிப்படுத்துகிறார்.
`ஆதிசிவன் பெற்றுவிட்டான் - என்னை
ஆரிய மைந்தன் அகத்தியன் என்றோர்
வேதியன் கண்டு மகிழ்ந்தே - நிறை
மேவும் இலக்கணம் செய்து கொடுத்தான்...'
என எழுதுகிறார் மகாகவி.
பதினெண் சித்தர்களுள் ஒருவராகக் கருதப்படும் அகத்தியரை குருமுனி என்றும் குறுமுனி என்றும் இருவிதமாகக் குறிப்பிடுகிறார்கள்.
முனிவர்களுக்கெல்லாம் குருவாக விளங்கும் பெருமையுடைய அவர், அவ்வகையில் குரு முனி ஆகிறார். குள்ளமான வடிவத்தின் காரணமாகக் குறுமுனியும் ஆகிறார்.
ராமனும் கண்ணனும் இருபெரும் இதிகாசங்களில் வரும் இருபெரும் தெய்வங்கள். ராமாயணமும் மகாபாரதமும் எல்லா இந்திய மொழிகளிலும் எழுதப்பட்டிருப்பதால் இவர்கள் இருவரையும் எல்லா இந்திய மொழிகளும் போற்றுகின்றன.
இவர்களுக்கு இணையாக எல்லா மொழிகளாலும் போற்றப்படும் பெருமை அகத்தியருக்கும் உண்டு. காரணம் ராமாயணத்தையும் மகாபாரதத்தையும் பேசும்போது, அவ்விரண்டு இதிகாசங்களிலும் இடம்பெறும் அகத்தியரைப் பற்றியும் அனைத்து இந்திய மொழிகளும் பேசுகின்றன.
தமிழில் முக்கியமான பல புலவர்கள் மாபெரும் சம்ஸ்க்ருத அறிஞர்களாக இருந்து இருக்கிறார்கள். அவர்களில் பெரிதும் குறிப்பிடத்தக்கவர்கள் கம்பரும் வில்லிபுத்தூர் ஆழ்வாரும்.
வால்மீகி ராமாயணத்தைக் கரைத்துக் குடித்தவர் கவிச்சக்கரவர்த்தி கம்பர் என்றால் வியாச பாரத்தில் உள்ளம் தோய்ந்தவர் வில்லிபுத்தூர் ஆழ்வார். அதனால்தான் சம்ஸ்க்ருத மொழியில் புனையப்பட்ட ராமாயணம் மகாபாரதம் ஆகிய இதிகாசங்கள் நமக்குத் தமிழில் கிடைத்தன.
ராமாயணத்தில் அதன் கதாநாயகனான ராமபிரான் மனச் சோர்வு அடைந்த தருணத்தில் அவருக்கு தைரியம் அளிப்பவராக அகத்தியர் வருகிறார். திருமால் ஈரடியால் உலகளந்தது போல் அகத்தியர் தமிழால் உலகளந்தவர் எனப் போற்றுகிறார் கம்பர்.
எந்த அம்பினாலும் ராவணனை வதம் செய்ய இயலவில்லையே என ராமன் சோர்ந்து போகிறான். அப்போது சூரியனை வழிபட்டு மனச் சோர்வு நீங்கப் பெறுவாயாக எனக் கூறிய அகத்தியர் ராமனுக்கு ஆதவனைப் போற்றும் `ஆதித்ய ஹ்ருதயம்` என்ற மந்திர சுலோகங்களை உபதேசம் செய்கிறார்.
அகத்தியர் காட்டிய வழியில் செயல்பட்டு உத்வேகம் பெறுகிறான் ராமன். அதன்பின் அவன் ராவணனை வதம் செய்கிறான்.
`ஆதித்த ஹ்ருதயம் புண்யம் சர்வ சத்ரு விநாசனம்` என்கிறது அந்த மந்திர சுலோகத்தின் பலனைச் சொல்லும் வரிகள். ஆகவே அகத்தியர் அருளிய ஆதித்ய ஹ்ருதய சுலோகத்தைப் பாராயணம் செய்வதன் மூலம் எதிரிகளை வெற்றிகொள்ளத் தேவையான மன வலிமையைப் பெற முடியும்.
மனிதனின் உண்மையான எதிரிகள் அவனுக்கு வெளியே இல்லை. அவன் உள்ளத்திலேயேதான் இருக்கிறார்கள். அகத்தியர் அருளிய ஆதித்ய ஹ்ருதயம், நம் உள்ளத்தின் உள்ளே ஒளிந்திருக்கும் காமம் குரோதம் முதலிய பகைவர்களை அழிக்கும் வல்லமை பெற்றது.
ராமாயணத்தில் தசரதரின் குலகுருவாக வரும் வசிஷ்டரின் சகோதரரே அகத்தியர் என்றும் ஒரு செய்தி உண்டு.
மகாபாரதத்திலும் அகத்தியர் வருகிறார். பஞ்ச பாண்டவர்களின் வனவாச காலத்தின்போது வியாச முனிவர் தருமபுத்திரரைச் சந்திக்கிறார். சோர்வடைந்த தருமபுத்திரருக்கு அகத்தியரின் கதையைக் கூறி அவனைத் தேற்றுகிறார் அகத்தியர்.
வாதாபி, இல்வலன் என்ற இரு அரக்கர்கள் சூழ்ச்சியால் முனிவர்களைக் கொன்று குவிதததையும் அகத்தியர் தம் ஆற்றலால் அவ்விரு அரக்கர்களையும் அழித்ததையும் மகாபாரதம் விவரிக்கிறது.
வாதாபி தன் மாய ஆற்றலால் ஆடாய் மாற, அந்த ஆட்டுக்கறியை முனிவர்களுக்குப் படைப்பான் இல்வலன். பின்னர் தன் சகோரனான வாதாபியை எங்கிருந்தாலும் வரச் சொல்லி அழைப்பான்.
முனிவரால் உண்ணப்பட்ட வாதாபி மீண்டும் அரக்க உரு எடுத்து அவர் வயிற்றைக் கிழித்துக் கொண்டு வெளிப்படுவான். அந்த முனிவர் இறந்து போவார்.
இவ்விதம் ஏராளமான முனிவர்களை அந்த அரக்க சகோதரர்கள் கொன்று குவித்து வந்தார்கள். அவ்விதமே அகத்தியரையும் கொல்ல அவர்கள் முனைந்தபோது நகைத்த அகத்தியர், தான் உண்ட வாதாபி ஜீரணமாகக் கடவது எனக் கூறியவாறே தம் வயிற்றைத் தடவிக் கொண்டார்.
அடுத்த கணம், வாதாபி மறுபடி உருப்பெற இயலாதவாறு ஜீரணமாகி விட்டான். இவ்விதம் வாதாபி அகத்தியரால் அழிக்கப்பட்ட கதையை மகாபாரதம் சொல்கிறது.
கம்பர் வில்லிபுத்தூரார் ஆகிய தமிழ்ப் புலவர்கள் சம்ஸ்க்ருதத்தில் தேர்ச்சி பெற்றிருந்தாலும் சம்ஸ்க்ருத நூல்களைப் படைக்கவில்லை. ஆனால் தமிழுக்கு இலக்கணம் வகுத்தவரும் மருத்துவ நூல்களைத் தமிழில் இயற்றியவருமான அகத்தியர், சம்ஸ்க்ருதத்திலும் நூல்கள் படைத்திருக்கிறார்.
ராமாயண மகாபாரத இதிகாசங்களில் மட்டுமல்ல, அவற்றிற்கும் முற்பட்ட வேதங்களிலேயே அகத்தியரைக் காண்கிறோம். ரிக்வேதத்தில் வரும் சில செய்யுள்கள் அகத்தியரால் எழுதப்பட்டவையே.
தமிழில் மருத்துவ நூல்களை எழுதிய அகத்தியர் வடமொழியிலும் அத்தகைய நூல்களை அருளியுள்ளார். அகத்திய சம்ஹிதை என்ற சம்ஸ்க்ருத நூல் ஒரு மருத்துவ நூலே.
வேத காலம், இதிகாச காலம் தொடங்கி, பின்னர் தமிழிலும் நூல்கள் புனைந்த அகத்தியர் பன்னெடுங்காலம் வாழ்ந்தவராக இருக்க வேண்டும். அவரின் அபாரமான அறிவாற்றலால் சம்ஸ்க்ருதம், தமிழ் ஆகிய இரு மொழிகளும் தழைத்தன.
தொல்லியல் நிபுணரான ஐராவதம் மகாதேவன், பல ஆதாரங்களை எடுத்துச் சொல்லி, அகத்தியர் வடக்கிலிருந்து தெற்கிற்கு வந்த புலவர் என்பது உண்மைச் செய்தியே என நிறுவுகிறார்.
சிவபுராணம், விநாயகர் புராணம் உள்ளிட்ட பல்வேறு புராணங்களில் அகத்தியரைப் பற்றிய செய்திகள் இடம்பெற்றுள்ளன.
சிவனுக்கும் பார்வதி தேவிக்கும் நடைபெற்ற திருமணத்தைக் காண எல்லா தேவர்களும் இமய மலைக்கு விரைந்தார்கள். இமய மலை இருந்த வடக்குப் பகுதி தாழத் தொடங்கியது. உலகைத் தடுமாறாமல் சமன் செய்து நிலை நிறுத்த வேண்டுமே?
சிவபெருமான் அகத்தியரை விந்திய மலையைத் தாண்டித் தெற்கே செல்லுமாறு அறிவுறுத்தினார். அவர் கட்டளைப்படியே அகத்தியர் தமிழகம் வந்தார். அகத்தியர் ஒருவரே அத்தனை தேவர்களுக்கும் சமமானவர் ஆகையால் வையம் தடுமாறாமல் நிலைநின்றது என்கிறது சிவபுராணம்.
விநாயக புராணத்தில் காவிரி தோன்றிய கதை சொல்லப்படுகிறது. அகத்தியரின் மனைவி லோபமுத்ரா நீர் வடிவம் உடையவள். அவளைத் தம் கமண்டலத்தில் தாங்கி நடந்தார் அகத்தியர்.
அவர் கமண்டலத்தைக் கீழே வைத்துவிட்டு ஜபதபங்களில் ஈடுபட்டபோது, காக வடிவாய் வந்த விநாயகர் தம் அலகால் கமண்டலத்தைத் தட்டிவிட்டார். உள்ளிருந்த தண்ணீர் பெருக்கெடுத்து ஆறாய் ஓடியது. அந்த நீரே காவிரி ஆயிற்று.
தான் சென்ற இடமெல்லாம் சோலைகளை விரித்துச் சென்றது காவிரி. கா என்றால் சோலை. எனவே அந்த வகையில்தான் காவிரிக்குப் பெயர் ஏற்பட்டது.
அகத்தியர் கடல் முழுவதையும் அருந்தியதாக ஒரு கதை உண்டு. தாரகன் என்ற அரக்கன் கடலுக்குள் ஒளிய இந்திரன் அவனை அழிக்க வழிதெரியாமல் திகைத்தான்.
அகத்தியரை அணுகி உதவி பெறுமாறு அறிவுறுத்தினார் பிரம்மதேவர். அவ்விதமே அகத்தியரிடம் உதவி கேட்டான் இந்திரன்.
அதற்கென்ன எனக் கடல்முன் வந்து நின்ற அகத்தியர், கையால் அள்ளிக் கடல் முழுவதையும் குடித்துவிட்டார். நீரின்றி வறண்ட கடல் நிலத்திற்குள் பிரவேசித்து தாரகனை வதம் செய்தான் இந்திரன்.
பின் மீண்டும் அவன் அகத்தியரிடம் வேண்ட அகத்தியர் தான் அருந்திய கடலை உமிழவே கடல்நீர் மறுபடித் தோன்றியது என்கிறது அந்தக் கதை. கம்ப ராமாயணத்திலும் இந்தக் கதை இடம்பெற்றுள்ளது.
தமிழகம் முழுவதையுமே ராவணனிடமிருந்து அகத்தியர் காத்தார் எனவும் ஒரு கதை சொல்லப்படுகிறது. ராவணன் தமிழகத்தைப் படையெடுத்து வெல்ல முற்பட்டபோது, மூவேந்தர்களும் அவனை வெல்வதெப்படி என அறியாது அகத்தியரை அணுகினார்கள்.

திருப்பூர் கிருஷ்ணன்
அகத்தியர் ராவணனை இசைப்போட்டிக்கு அழைத்தார். இசைந்தான் ராவணன். தாம் வெற்றி பெற்றால் தமிழகத்தின்மேல் அவன் படையெடுக்கலாகாது என நிபந்தனை விதித்தார் அகத்தியர். ராவணன் வீணை இசைத்தபின் அகத்தியர் பாடல் பாடலானார்.
அகத்தியர் பாடல் கல்லையும் கசிந்துருகச் செய்யும் ஆற்றல் கொண்டதல்லவா? ராவணன் வீணையை எந்தப் பாறையின்மேல் வைத்திருந்தானோ அந்தப் பாறை உருகி இளகி விட்டது!
அகத்தியர் பாட்டை நிறுத்தியதும் பாறை மறுபடி இறுகவே வீணை கல்லில் சிக்கிக் கொண்டது. அந்த வகையில் ராவணன் அகத்தியரிடம் வசமாய்ச் சிக்கிக் கொண்டான்.
அகத்தியர் மீண்டும் பாடல் இசைத்து கல்லை இளகச் செய்து ராவணனை வீணையை எடுத்துக் கொள்ளுமாறு பணித்தார். வீணையை எடுத்துக் கொண்ட ராவணன், நிபந்தனைப்படி தமிழகத்தின்மேல் போர் தொடுக்காமல் இலங்கை திரும்பினான். மூவேந்தர்களும் மகிழ்ச்சி அடைந்தார்கள் என்கிறது ஒரு கதை.
அகத்தியரிடம் அவ்வை கொண்டுவந்து சேர்த்த வாய்பேசாத சிறுவனான தேரையருக்குப் பேசும் ஆற்றலை வரவழைத்தவர் அகத்தியரே என்றும் பின்னர் தேரையர் அகத்தியரின் மாணவரானார் என்றும் அவரே தொல்காப்பியம் எழுதித் தொல்காப்பியர் எனப் பெயர் பெற்றார் என்றும் ஒரு பழங்கதை கூறுகிறது.
அகத்தியருக்குப் பன்னிரண்டு சீடர்கள் இருந்ததாகவும் அவர்களில் ஒருவர் சங்க காலப் பெண்பாற் புலவரான காக்கைப் பாடினியார் என்றும் ஒரு தகவல் கூறுகிறது.
தமிழகத்தில் அகத்தியர் அருவி, அகத்தியர் மலை, அகத்தியர் கோயில் போன்றவை காணப்படுகின்றன. வேதங்களிலும் இதிகாசங்களிலும் புராணங்களிலும் போற்றப்படும் அகத்தியர் வடக்கையும் தெற்கையும் இணைக்கும் கலாசார உருவகமாவார். அவர் நம் தமிழுக்கு இலக்கணம் வகுத்தவர் என்பது குறித்துத் தமிழர்களாகிய நாம் பெருமை கொள்ளலாம்.
தொடர்புக்கு,
thiruppurkrishnan@gmail.com
- ஜெர்ம்லைன் என்ஜினீயர் என்கிற முறையில் அந்த கருவின் ஸ்பிண்டில் குரோமோசோம் பரிமாற்றம் செய்ய முடியும்.
- குரோமோசோம்களை சரிப்படுத்தி அதன் தரத்தை மேம்படுத்த குரோமோசோம் தெரபி இருக்கிறது.
பெரும்பாலான பெண்கள் தற்போது அதிக வயதிலேயே திருமணம் செய்து கொள்கிறார்கள். குழந்தை பேறு பெறுவதையும் தள்ளிப்போடுகிறார்கள். எனவே இன்றைய காலகட்டத்தில் அட்வான்ஸ்ட் மெட்டர்னல் ஏஜ் (மேம்பட்ட தாய்வழி வயது) என்பதை 35 வயது முதல் 40 வயது வரை என்று சொல்கிறோம். அட்வான்ஸ்ட் மெட்டர்னல் வயதில் பெண்களின் கருத்தரிக்கும் திறனை பொருத்து, அவர்களுக்கு வரும் கர்ப்பகால பிரச்சினைகள் என்ன என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.
நல்ல கருவா என்று பரிசோதிப்பது அவசியம்:
அட்வான்ஸ்ட் மெட்டர்னல் வயதில் சிகிச்சை பெற வரும் சில பெண்கள், டாக்டர் இந்த கரு நல்ல கருவா என்று பரிசோதனை செய்து விட்டு வைத்தால் நல்லது தானே என்பார்கள். கண்டிப்பாக அவர்கள் சொல்வது சரிதான். அந்த முட்டைகளின் எண்ணி க்கையை அதிகரிப்பது போல், அது நல்ல கருவா என்று பரிசோதித்து, கருவை பெண்களின் கர்ப்பப்பையில் வைக்கும் போது தேவையில்லாத தாமதம் தவிர்க்கப்படும்.
உதாரணத்துக்கு 5 பிளாஸ்டோசிஸ்ட் (ஆரம்ப நிலை கரு) இருந்தால் ஒரு பிளாஸ்டோசிஸ்டில் தான் குரோமோசோம் நன்றாக இருக்கும். அப்படி இருக்கும்போது 5 பிளாஸ்டோ சிஸ்டில் ஒவ்வொரு முறையும் இரண்டு இரண்டாக பரிமாற்றம் செய்யும் நிலையில், 2 அல்லது 3 முறை தோல்வி ஏற்பட்டால் அந்த பெண்ணுக்கு மன அழுத்தம் ஏற்படும். சிகிச்சை முறைகளிலும் தாமதம் ஏற்படலாம்.
இப்படிப்பட்ட பெண்களுக்கு அந்த கருவை நல்ல கருவா என்று பரிசோதிக்க பி.ஜி.டி. (பிரீஇம்பிளாண்டேஷன் மரபணு நோயறிதல்) பரிசோதனையை செய்வோம். இதில் பரிசோதனைக்காக கருவில் இருந்து செல்லை எடுப்போம். 3 நாள் கருவில் இருந்து எடுக்கலாம், 5 நாள் கருவில் இருந்து எடுக்கலாம்.
ஆனால் ஆரம்ப நிலை கரு என்கிற நிலையில், அதன் வெளியில் உள்ள பிளாஸ்டோமியரில், ஒன்றிரண்டு செல்களை எடுத்து அதனை பரிசோதனை செய்வோம். இதில் பிஷ் (புளோரோசன்ஸ் இன் சிட்டு ஹைப்ரிடைசேஷன்) டெக்னாலஜி செய்யலாம் அல்லது கார்யோடைப்பிங் முறைகளில் என்.ஜி.எஸ் ஸ்கிரீனிங் (அடுத்த தலைமுறை வரிசை முறை) செய்யலாம். தேவைப்பட்டால் எஸ்.என்.பி. (ஒற்றை நியூக்ளியோடைடு பாலிமார்பிசம்) பரிசோதனை செய்யலாம்.
பி.ஜி.டி. பரிசோதனையால் குழந்தைகளுக்கு எதிர்காலத்தில் பாதிப்பு இல்லை:
இந்த பரிசோதனை முறைகளில் ஆரம்ப நிலை கருவின் செல்களை எடுத்து, அவற்றினை பரிசோதித்து இந்த கருவில் குறைபாடு இருக்கிறதா என்பதை அறிந்து, அது நல்ல கருவாக இருந்தால், அந்த கருவை பெண்ணின் கர்ப்பப்பையில் வைக்கும்போது கண்டிப்பாக கர்ப்பப்பையை ஒட்டி வளரும் தன்மை அதிகம். கருச்சிதைவு ஆவதற்கான வாய்ப்பு குறைவு. இதேபோல் குறைபாடுள்ள குழந்தைகள் பிறப்பதற்கான வாய்ப்புகளும் குறைவாகும். இந்த மாதிரி நல்ல ஒரு கருவை தேர்வு செய்து அந்த கருவை, அட்வான்ஸ்ட் மெட்டர்னல் வயது பெண்களின் குழந்தை பேறு சிகிச்சைக்கு பயன்படுத்தும்போது அவர்களுக்கு கருத்தரிப்பதற்கும், ஆரோக்கியமான குழந்தை பேறு பெறுவதற்கும் வாய்ப்புகள் அதிகம்.
இதில் பல கருத்து வேறுபாடுகள் இருக்கிறது. நிறைய பேர் எங்களிடம் கேட்பார்கள். டாக்டர் அடிக்கடி நாம் கருவை காயப்படுத்திக் கொண்டே இருக்கிறோமே, இதனால் நீண்டநாள் பிரச்சினை ஏதாவது ஏற்படுமா என்பார்கள். ஆனால் உலக அளவில் கிட்டத்தட்ட 20 முதல் 25 வருடங்களாக கருமுட்டை தானம், கரு தானம், கருவை உறை நிலையில் வைப்பது ஆகியவற்றை செய்கிறார்கள். இதில் பி.ஜி.டி. பரிசோதனை செய்து கருவை பரிமாற்றம் செய்து சிகிச்சை அளிக்கிறார்கள். ஆனால் கிட்டத்தட்ட 20 வருடங்களாக இதை பின் தொடர்ந்ததில், நிறைய குழந்தைகளுக்கு பெரிய பிரச்சினைகள் மற்றும் எந்தவித பாதிப்பும் வரவில்லை என்பது தெரிய வந்துள்ளது.
அந்த வகையில் பி.ஜி.டி. என்ற முறை மூலமாக கருவினை பரிசோதித்து குரோமோ சோம் இயல்பாக உள்ளதா என்பதை பரிசோதித்த பிறகு அந்த கருவினை பரிமாற்றம் செய்யும்போது, கருத்தரிப்பதற்கான வாய்ப்பு அதிகம். இந்த வகையில் வயதான பெண்களுக்கு கருத்தரிப்பதற்கான வாய்ப்புகளை அதிகப்படுத்த இந்த முறைகளை கடைபிடிக்கலாம். வயது அதிகமான பெண்கள் ஒவ்வொருவருக்கும் இந்த விஷயங்களை தெளிவாக செய்யும் போது கண்டிப்பாக கருத்தரிப்பதற்கு வாய்ப்புகள் அதிகமாகும். நல்ல முறையில் குழந்தை பெறவும் வாய்ப்பு உண்டு.
ஆனால் இவை எல்லாமே முட்டைகள் எண்ணிக்கை எவ்வளவு இருக்கிறதோ அதை வைத்துதான் நாம் செய்ய முடியும். முட்டைகள் குறைவாக இருக்கும் பெண்களுக்கு என்ன செய்ய செய்வது? என்னோட மரபணு குழந்தை பேறு பெற முடியுமா என்று அவர்கள் கேட்டால் அதற்கான வழிமுறை என்ன என்பது எல்லாமே ஒரு ஆராய்ச்சி நிலையில் இருக்கிறது.

வயதான கருமுட்டையில் குரோமோசோம் பரிமாற்றம்:
ஜெர்ம்லைன் என்ஜினீயர் என்கிற முறையில் அந்த கருவின் ஸ்பிண்டில் குரோமோசோம் பரிமாற்றம் செய்ய முடியும். இதற்காக வயதான முட்டை ஒன்றை எடுப்போம், ஒரு நல்ல இளம் பெண்ணின் முட்டையை எடுப்போம். வயதான முட்டையில் வயதாவதற்கான மாற்றங்கள் ஏன் வருகிறது என்றால், அதனோட மைட்டோகான்ட்ரியா குறைவாகிறது. அதில் இருக்கிற ஸ்பிண்டில் காம்ப்ள்க்ஸ் குறைவாகிறது. இதுதான் செல்லுக்கான ஆரோக்கியத்தை கொடுப்பதற்கான விஷயம் ஆகும்.
எனவே வயதான முட்டைகளில் உள்ள மைட்டோகான்ட்ரியா, ஸ்பிண்டில் காம்ப்ள்க்ஸ் ஆகியவற்றை நீக்கி விட்டு, வயது குறைவான பெண்ணின் முட்டைகளில் இருந்து அதை எடுத்து பரிமாற்றம் செய்வோம். எனவே அவர்களின் டி.என்.ஏ. ஒரே மாதிரியாக இருக்கும், ஆனால் அதற்கான வளர்சிதை மாற்றம் குறைவாகாமல் இருப்பதால் இந்த செல்லால் கருத்தரிக்கும் வாய்ப்பு அதிகமாகிறது. அந்த டி.என்.ஏ. அவர்களின் மரபணுவை சார்ந்ததாக இருக்கும். அந்த செல்லின் தன்மையால் கரு கர்ப்பப்பையில் ஒட்டி வளரும் வாய்ப்பு அதிகமாகிறது.
இதைத்தான் திரி பேரண்டிங் என்று சொல்கிறோம். சைட்டோபிளாசத்தை எடுத்துவிட்டு, தானம் கொடுப்பவரின் சைட்டோபிளாசத்தில் இவர்களின் நியூக்ளியர்சை செலுத்துவோம். இது இன்ட்ராசைட்டோபிளாஸ்மிக் நியூக்ளியர் பரிமாற்றம் ஆகும். இது ஒருவகை அணுக்கரு பரிமாற்றமாகும். இந்த வகையில் வயதான முட்டை களை கொண்டவர்கள், திரிபே ரண்டிங் முறையில் தங்களது மரபணு குழந்தைகளை பெறுவதற்கான வாய்ப்புகள் அனைத்தும் ஆராய்ச்சி நிலையில் இருக்கிறது. மேலும் இந்த குரோமோசோம்களை சரிப்படுத்தி அதன் தரத்தை மேம்படுத்த குரோமோசோம் தெரபி இருக்கிறது.

ஜெயராணி காமராஜ், குழந்தையின்மை சிகிச்சை நிபுணர், செல்: 72999 74701
வயதான முட்டைகளை வயது குறைந்த முட்டைகளாக மாற்றும் நவீன முறை:
இனி வரும் காலங்களில் ஸ்டெம் செல் முறைகள் உள்ளது. இந்த ஸ்டெம் செல் மூலமாக வயதான முட்டைகளை வயது குறைந்த முட்டைகளாக்க முடியும். வயதான முட்டைகளில் உள்ள செயல் இழந்த செல்களை ஸ்டெம் செல் மூலம் மீளுருவாக்கம் செய்ய முடியும். இதன் மூலம் வயதான கரு முட்டைகளுக்கு கருத்தரிக்கும் வாய்ப்புகளை அதிகரிக்க வைக்க முடியும். ஸ்டெம் செல் சிகிச்சை என்பது வயதான முட்டைகளை இளமையாக்குவதற்கான வழிமுறையாக கருதப்படுகிறது.
அட்வான்ஸ்ட் மெட்டர்னல் வயது என்பது குழந்தை பேறுக்கு எதிர்மறையான விஷயம். ஆனாலும் வயதான பெண் திருமணத்தை எதிர்நோக்கும் போது இதற்கான வழிமுறைகளை தெரிந்து தெளிவாக கவுன்சிலிங் பெற்று அவர்களின் சிகிச்சை முறைகளை திட்டமிட்டால், எதிர்காலத்தில் தங்களுடைய மரபணு குழந்தையை நல்ல முறையில் பெற முடியும்.
இதற்கான எதிர்கால சிகிச்சை முறைகளான ஸ்டெம்செல் தெரபி, ஜெர்மிலைன் தெரபி, குரோமோசோம் தெரபி, டிரிபிள் பேரண்டிங், சைட்டோபிளாஸ்மிக் பரிமாற்றம் ஆகியவை இன்றும் ஆய்வு நிலையில் இருக்கிறது. இன்னும் 10 வருட காலத்தில் இவை அனைத்தும் சீராக பயன்பாட்டுக்கு வந்து விடும். ஒரு புதிய கரு முட்டையை உருவாக்குவதே தற்போதைய காலத்தில் ரொம்ப அதிகரித்து வருகின்ற விஷயம் ஆகும்.
இப்போதுள்ள ஆராய்ச்சியில் கருக்குழாயின் திசுவை எடுத்து அதனை ரசாயன முறை மூலமாக தூண்டி அந்த முட்டைகளை வளர வைக்கும் போது மிகவும் குறைவான எண்ணிக்கையில் இருக்கின்ற முட்டைகள் கூட வளர்ச்சியாகி ஒரு நல்ல குழந்தை பேறு பெற வைக்க முடியும் என்ற நிலையில் பிரிமெச்சூர் ஓவரியன் தோல்வி அடைந்த பெண்களுக்கு கூட இந்த வழிமுறைகளில் குழந்தை பேறு பெற வைக்க முடியும்.
எனவே வயது அதிகமான பெண்கள் தங்களின் மரபணு குழந்தையை பெறுவதற்கான வழிமுறைகளை சீராக யோசிக்க வேண்டும். 32 வயதாகும் பெண்கள் திருமணத்துக்கு கொஞ்ச நாட்கள் இருந்தால் கூட உடனே மருத்துவரிடம் சென்று, தனது குழந்தை பேறுவை சீராக்குவதற்கு என்னென்ன வழிமுறைகள் இருக்கிறது என்பதை கண்டிப்பாக கலந்தாலோசிக்க வேண்டும்.
இதை பற்றிய தெளிவான கவுன்சிலிங் பெற வேண்டும். முட்டை மற்றும் கருவை உறை நிலையில் வைப்பது, பி.ஜி.டி. பரிசோதனை மற்றும் முட்டைகளை நல்ல முறையில் அதிகமாக எடுத்து பாதுகாப்பது ஆகியவற்றை பற்றி தெளிவாக தெரிந்து கொண்டு அதற்கான வழிமுறைகளை கடைபிடிக்கும் போது தங்களது குழந்தையை எந்த வயதிலும் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கிறது.
- தென்கொரிய நாட்டின் அந்தப் பகுதியில் உள்ள முக்கியமான இடங்களைச் சுற்றிப் பார்க்கவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
- கொரிய நாடு உருவான வரலாறு குறித்தும் ஓரளவிற்கு அறிந்து வைத்திருந்தாள் சாலினி.
இந்த நவீன காலத்திலும், தொழில்நுட்பங்கள் வெகு தொலைவிற்கு முன்னேறி, மனிதர்கள் நிலவிற்கே குடிபோகத் திட்டமிடும் அதிநவீன காலத்திலும் நம்மைச் சுற்றி நம்ப முடியாத, நம் அறிவிற்கும் எட்டாத ஏதேதோ சம்பவங்கள் நடந்து கொண்டுதான் உள்ளன. நம்மை 1ஆம் நூற்றாண்டிற்கு, அதாவது கி.மு.48-ம் காலகட்டத்திற்கு அழைத்துச் செல்லப்போகும் சம்பவம் அது. ஒரு ஆச்சரியமான வரலாற்று உண்மையை உலகறியச் செய்த இச்சம்பவத்தி ற்குள் நம்மு டன் பயணிக்க தமிழ் உறவுகளை அன்போடு அழைக்கிறோம்.
மனிதர்களின் பெயர் என்பது அவர்களை விளித்து அவருடன் கருத்துப் பரிமாற்றத்திற்கானது. ஒவ்வொருவருக்கும் அமையும் பெயர், அவரவர் பிறவிப்பயன் சார்ந்து, உள்ளியங்கும் சமூக, பண்பாட்டுப் புதைவடிவங்களோடும் தொடர்பு கொண்டுள்ளது. இயற்கையின் படைப்பின் கூற்று எப்போதும் அப்படைப்பின் அனைத்து அம்சங்களிலும் நிறைந்திருக்கும். அதேபோலத்தான் மனிதர்களுக்கு அமையப் பெறும் பெயர்களுக்கும் தனிப்பட்ட காரணங்களும் இருக்கத்தான் செய்கின்றன.
சாலினி, மனதெல்லாம் இறக்கை கட்டிப் பறக்க ஏதோ ஒரு கனவுலகில் பறப்பது போன்ற நிலையில் இருந்தாள். இருக்காதா பின்னே… வாழ்க்கையில் முதன் முதலில் விமானப் பயணம் வாய்த்திருக்கிறது. அதுவும் கடல் கடந்து வெகு தொலைவு தென்கொரிய நாட்டிற்கு, இந்த இளம் வயதில், அரசு உதவியுடன் செல்வதென்றால் சாதாரண விசயமா என்ன?
சிலப்பதிகாரத்தில், வேட்டுவவரிப் பகுதியில் இடம்பெறும் எயினர் குலத்தைச் சேர்ந்த ஒரு தேவராட்டியே, சாலினி என்பாள். இவள் தெய்வம் ஏறப்பெற்றுத் தம் குடிக்கு ஒரு வாக்கும், வேற்றுக் குடியைச் சேர்ந்த கண்ணகிக்கு ஒரு வாக்கும் உரைக்கின்றாள். தெய்வமேறிப் பேசிய பேச்சு என்பதனால் சாலினியின் இரண்டு உரையும் தெய்வ வாக்காகக் கருதப்படுகிறது. சிலப்பதி காரத்தின் முதன்மை நோக்கமே பத்தினித் தெய்வ வழிபாட்டினை வரலாற்றுப் போக்கில் பதிவு செய்வதுதான்.
வழங்குவில் தடக்கை
மறக்குடித் தாயத்துப்
பழங்கட னுற்ற முழங்குவாய்ச்
சாலினி
தெய்வ முற்று மெய்ம்மயிர்
நிறுத்துக்
கையெடுத் தோச்சிக் கானவர்
வியப்ப –(வேட்டுவ வரி)
பத்தினித் தெய்வ வழிபாட்டை முன்னிறுத்திய படைப்பின் கூற்று சாலினி தொடங்கி சிலப்பதிகாரக் காப்பியம் முழுமைக்கும் பயணிக்கின்றது. சாலினியின் கூற்றே படைப்பின் கூற்றுக்கான திறவுகோல். கொற்றவையின் கூற்றாக நிகழ்த்தப்படும் சாலினியின் தெய்வமேறிய கூற்றுக்கான தேவையை நன்குணர்ந்தே கண்ணகியின் தெய்வத் தன்மையை சாலினி வாயிலாக உணர்த்துகிறார் இளங்கோவடிகள். அப்படியானால் இதே பெயர் சூட்டப்பெற்ற இவளும் ஒரு உலக வரலாற்றைப் படைக்கப்போகும் சம்பவத்திற்கு அடித்தளம் அமைக்கப்போகும் ஒரு தன்னிகரற்ற பெண்ணாக இருப்பாளோ?
சாலினி, ஒரு சாதாரண கைத்தறி நெசவாளர் குடும்பத்தில் பிறந்து, பல சிரமங்களுக்கு இடையேயும் முதுகலை நெயவியல் நெயவுத் தொழில் நுட்பவியல் M.Tech. (Textile Technology) படித்து முதல் நிலையில் தேறியுள்ளவள். சுகபோகத்திற்காக வெளிநாடு பறந்து செல்ல நினைக்காமல் பிறந்த மண்ணிற்குப் பெருமை சேர்க்க முனைந்தவளுக்குக் கிடைத்த ஒரு சிறப்பான அங்கீகாரம்தான் இந்த அயலகப் பயணம்.
குடும்பத்துடன் கைத்தறி நெசவுத் தொழிலை செய்து வரும் சாலினிக்கு இது குலத்தொழிலாக இருந்தாலும் கல்வி என்ற கனவை விடாமல் துரத்திப் பட்டமும் பெற்று இத்தொழிலிலும் முழுவதுமாக ஈடுபட்டதால் இந்த இளம் வயதிலேயே இத்தகையச் சாதனையைச் செய்ய முடிந்ததுள்ளது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே அமைந்துள்ளது சிறுமுகை. கோராப்பட்டிற்கும், மென்பட்டிற்கும் பெயர் போன பகுதி இது. மாதத்திற்கு தோராயமாக ரூ. 50 கோடி பணப்புழக்கம் கொண்ட இந்த பகுதியில் நெய்யப்படும் கைத்தறி பட்டுப் புடவைகளுக்கும், பருத்தி புடவைகளுக்கும் தமிழகம் முழுவதிலும் நல்ல வரவேற்பு உள்ளது. உழைப்பு மட்டுமே நிரந்தரம் என்று வாழும் இந்த கிராமத்தில் இருந்து வந்த சாலினி அரசு அங்கீகாரம் பெற்றதில் பெரும் வியப்பேதுமில்லை. முதல் விமானப் பயணம் என்ற ஆர்வமும், அயலகத்தில் தம் மண்ணின் பெருமையை நிலைநாட்டப்போகும் பெரிய எதிர்பார்ப்பும் நிறைந்திருக்க அவள் ஆவலோடு எதிர்பார்த்தி ருந்த அந்த நாளும் வந்தது. மேடையேறும் நேரமும் இத்தனை விரைவாக வந்தது அனைத்தும் விமானத்தைக் காட்டிலும் அதி விரைவான அவளுடைய மனோவேகத்தினால்தான்! கொரிய மண்ணின் மேடையில் சாலினியின் ஆங்கில உரையின் சாராம்சம்தான் இது...
"என் பெயர் சாலினி. மதுரைக்காஞ்சி என்ற எங்கள் வளமான சங்க இலக்கியத்தில் சாலினி என்றால் கடவுளைப் பெற்ற பெண் என்று பொருள். நெசவு எங்கள் தேசத்தின் பழமையான தொழில். ஆடைகளின் அவசியத்தையும், அதன் நேர்த்தியையும் உலகிற்கு எடுத்துச் சொன்னவர்கள் எங்கள் மூதாதையர்கள்! எங்கள் தேசியத்தின் உயிர்நாடியான கைத்தறி நெசவுத் தொழில், தமிழகத்தைப் பொறுத்தவரை விவசாயத்திற்கு அடுத்தபடியாக முக்கியப் பங்கு வகிக்கிறது. தற்போது அத்தொழில் பல இன்னல்க ளுக்கிடையேத் திணறும் தொழிலாகிவிட்டாலும், தமிழகத்தின் பல மாவட்டங்களில் மக்களின் வாழ்வாதாரமாக இருப்பது கைத்தறி நெசவுத் தொழில்தான். சேலம், ஈரோடு, கரூர் போன்ற நகரங்கள் கைத்தறி நெசவுக்கும் அதைச்சார்ந்த வணிகத்திற்கும் புகழ் பெற்றவை. ஆண்டிப்பட்டி, எட்டயபுரம், பரமக்குடி அருகே உள்ள எமனேசுவரம், திருவில்லிப்புத்தூர், நெகமம், சிறுமுகை, ஆலாங்கொம்பு, புஞ்சை புளியம்பட்டி, தொட்டம்பாளையம் ஆகிய ஊர்களும் கைத்தறி நெசவுக்கு புகழ் பெற்றவை. இவ்வூர்களில் இருந்து பல விதமான ஆடைகள் உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதில் மிக முக்கியமான விசயம் என்றால் பெண்கள் பெருமளவில் இத்தொழிலில் ஈடுபட்டிருப்பதுதான். நெசவாளர்கள் நூல் கொள்முதல், கடன் வசதி, உற்பத்தியைச் சந்தைப்படுத்துதல் என பல்வேறு நிலைகளில் இன்னல்களை எதிர்கொள்ளும்போதிலும் கைத்தறித்துறை குறிப்பிட்ட அளவு வளர்ச்சியைப் பெற்றுள்ளது என்றே பெருமைப்பட முடிகிறது.
இந்த நிலையில், கைத்தறி ஜவுளி ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் சார்பில், எங்களைப் போன்ற கைத்தறி நெசவாளர்களை வெளி நாடுகளுக்கு அழைத்துச் சென்று நேரடி செயல் விளக்கம் மூலம் ஆர்டர்கள் பெறுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எங்கள் நாட்டின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் கைத்தறி தொழில் 28.2 லட்சம் தறிகளுடன் நாட்டின் மிகப்பெரிய குடிசைத் தொழிலாகும்.
தமிழகத்தில் கரூர், கேரளாவில் கண்ணூர், உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள வாரணாசியும், அரியானா மாநிலத்தில் உள்ள பானிபட் ஆகிய நகரங்கள் கைத்தறி ஜவுளி ஏற்றுமதியின் முக்கிய மையங்களாக திகழ்கின்றன. கைத்தறி மூலம் தயாரிக்கப்படும் துணிகள், படுக்கை விரிப்புகள், மேசை விரிப்புகள், தரை விரிப்புகள், திரைச் சீலைகள், கழிவறைக்கும், சமையலறைக்கும் பயன்பாட்டுத் துணிகள், மெத்தைகள், கம்பளங்கள் உள்ளிட்டவை வெளிநாடுகளுக்கு அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. தற்போது புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள ரசாயனக் கலப்பில்லா இயற்கைப் பருத்தி ஆடைகளுக்கும், திருப்பூரில் தயாராகும் ஆயத்த ஆடைகளுக்கும் சர்வதேச அளவில் மிகப் பெரும் வரவேற்பு உள்ளது.

பவளசங்கரி, 63743 81820
இந்நிலையில், இங்கு நடைபெறும் கண்காட்சியிலும், கருத்தரங்கிலும் கலந்துகொள்ள இந்தியாவில் இருந்து 12 கைத்தறி நெசவாளர்கள் வந்திருக்கிறோம். தமிழகத்தில் இருந்து நான் வந்திருக்கிறேன். இதன் மூலம் நெசவாளர்களாகிய நாங்கள் பயன் அடைவோம் என்று நம்புகிறோம்", என்று பலத்த கரவொலிகளுடன் பேசி முடித்து வந்தாள் சாலினி.
நிகழ்ச்சிகள் வெற்றிகரமாக முடிந்த மன நிறைவில் இருந்தாள். அடுத்த இரண்டு நாட்கள் தென்கொரிய நாட்டின் அந்தப் பகுதியில் உள்ள முக்கியமான இடங்களைச் சுற்றிப் பார்க்கவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் அந்த கொரிய மண்ணில் கால் வைத்த அந்த நொடியில் இருந்து சாலினியின் மனது நிலைகொள்ளாமல் தவித்துக் கொண்டிருந்தது. என்ன காரணம் என்று தெரியாமலே பரபரப்பாக எதையோ எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தது. அவள் கனவிலும் நினைத்திராத, கற்பனைக்கு எட்டாத அப்படியொன்று நடக்கும் என்று யாராவது அவளிடம் சொல்லியிருந்தால் நிச்சயமாக நம்பியிருக்கமாட்டாள். எத்தனையோ சிரமங்கள், தடைகளையெல்லாம் தாண்டி இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு அமைந்ததால் ஏற்பட்டிருக்கும் மன அழுத்தம் போல என்று நினைத்து அமைதியாக முனைந்தாள். ஆனாலும் அது அப்படியல்ல என்பதை அடுத்தடுத்த நாட்கள் உறுதி செய்தன. அவளுடைய உள்ளுணர்வு சொல்ல வந்தது எதுவோ அதை அவளையறியாமலே உலகத் துக்கே காட்சியாக்கிக் கொண்டி ருந்தாள். பல்லாயிரம் மைல்களின் இடைவெளியில் இருக்கும், கிழக்கு ஆசியக் கண்டத்தில் அமைந்துள்ள தென் கொரியா மற்றும் தமிழ்நாடு என இரு நாட்டு மக்களின் மொழி வடிவத்திலும், கலாச்சார அடிப்படையிலும் ஒரு ஒற்றுமை இருப்பது போன்ற சுவையான தகவல்களை பல்வேறு அறிஞர்களின் ஆய்வுகளைப் படித்து அறிந்து வைத்திருந்தாள். தமக்குக் கிடைத்த இந்த முதல் வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக்கொண்டு முக்கியமாகப் பார்க்கக் கூடிய வரலாற்றுச் சிறப்பு மிக்க அனைத்து இடங்களையும் சுற்றிப் பார்த்துவிட வேண்டும் என்ற பேராவல் இருந்தாலும், இந்த குறுகிய காலத்தில் பார்க்கவேண்டிய மிக முக்கியமான இடங்களைப் பற்றியும் விசாரித்து வைத்துக் கொண்டிருந்தாள். கொரிய நாடு உருவான வரலாறு குறித்தும் ஓரளவிற்கு அறிந்து வைத்திருந்தாள் சாலினி.
சியோல், பூசன், இஞ்சியோன், சுவோன், டேகு போன்ற சில சுற்றுலாத் தளங்களையும், சில உலக பாரம்பரியத் தளங்களையும் பார்த்துவிட்டு, அன்று வரலாற்று சிறப்புமிக்க, 157 ஆண்டுகள் வாழ்ந்து அந்நாட்டின் கலச்சாரத்தையே புரட்டிப் போட்டதோடு, மக்களின் மனதில் நீங்காததொரு இடத்தைப் பிடித்துவிட்ட கொரிய அரசியின் கிம்ஹே
கல்லறைக்கு அனைவரும் அழைத்துச் செல்லப்பட்டனர். 2000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த ஒரு அரசியின் கல்லறை இன்றளவும் பாதுகாக்கப்பட்டு வருவதை அறிந்து ஆச்சரியப்பட்டுக் கொண்டிருந்தார்கள். ஆனாலும் அந்த இடத்திற்கு இத்தகையதொரு உயிர்ப்புச் சக்தி இருக்கும் என்று ஒருவரும் கற்பனை கூட செய்திருக்கவில்லை. அதற்குக் காரணமான அடுத்தடுத்து நடந்த சம்பவங்கள் அனைவரையும் அப்படியே மவுனமாக கட்டிப்போட்டு வைத்துவிட்டது!
(தொடரும்)
- நட்சத்திரத்தின் அதிதேவதை தேவேந்திரன்.
- நட்சத்திரத்தில் உச்சம் அடையும் கிரகம் கேது.
ராசி சக்ரத்தில் 18-வது நட்சத்திரம். கேட்டை. இதன் சமஸ்கிருத பெயர் ஜேஷ்டா என்பதாகும். ஜேஷ்டா என்றால் மூத்தது என்று பொருள் இதன் வடிவம் வானில், ஈட்டி, குண்டலம், குடை போன்று ஒளி மிகுந்து தெரியும். இந்த நட்சத்திரம் விருச்சிக ராசியில் அமைந்துள்ளது. இதன் ராசி அதிபதி செவ்வாய் இந்த நட்சத்திரத்தின் வசிப்பிடம் கடைகள். இந்த நட்சத்திரத்தின் அதிதேவதை தேவேந்திரன். இது புதனின் நட்சத்திரம். இந்த நட்சத்திரத்தில் உச்சம் அடையும் கிரகம் கேது. நீச்சம் அடையும் கிரகம் ராகு.
கேட்டை நட்சத்திரத்தின் பொது பலன்கள்
கேட்டை நட்சத்திரம் கால புருஷ 8-ம் வீடான விருச்சிகத்தில் இருப்பதால் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களை எளிதில் யாராலும் புரிந்து கொள்ளமுடியாது. உஷ்ண தேகம் உள்ளவர்கள். கம்பீரமும் கொள்கை பிடிப்பும் உள்ளவர்கள். பிறருக்கு உதவும் குணம் அதிகம் உண்டு. எப்பொழுதும் இவர்கள் கை ஒங்கியே நிற்கும். பிறருக்கு கொடுத்து சிவநத கரம். எப்பொழுதும் யாரிடமும் கையேந்தி நிற்க மாட்டார்கள். இவர்களின் வாழ்க்கையில் ரகசியம் அதிகம் இருக்கும்.
நல்லதாக இருந்தாலும் கெட்டதாக இருந்தாலும் எளிதில் வெளியில் சொல்ல மாட்டார்கள். இவரது மனம் கடல்நீரை போல ஆழமாகவும் மர்மங்கள் நிறைந்ததாகவும் இருக்கும். கோபம் இருக்கும் இடத்தில் தான் குணம் இருக்கும் என்ற பழமொழிக்கு ஏற்ப அதிக கோப பட்டாலும் விரைவில் கோபம் குறைந்து விடும். நன்றாகப் பழகும் குணமும் உடையவர்களாக இருப்பதால் அடுத்தவர்களின் மனக் கோட்டையையும் இவர்கள் ஆள்வார்கள். மற்றவர்களை விடத் தாங்கள்தான் அறிவிலும், அதிகாரத்திலும் உயர்ந்து விளங்க வேண்டும் என்ற எண்ணமும், அதற்கேற்ற உழைப்பும் உண்டு. பிறரைக் கட்டுப்படுத்தி, தனது ஆதிக்கத்தைச் செலுத்த வேண்டும் என்கிற தீவிர எண்ணங்களும் உள்ளவர்கள். தன்னை நம்பியவர்களின் தேவையை நிறைவு செய்ய அதிகம் சிரமம் எடுப்பார்கள்.
கொடுத்த வாக்கை காப்பாற்றுவதிலும் வாக்கு பிரயோகத்திலும் மிக கவனமாக இருப்பார்கள். தன்னைப் போலவே தன்னை சார்ந்தவர்களிடமும் நேர்மையாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். இவர்கள் நாவில் குல தெய்வம் நின்று பேசும். வாக்கு பலிதம் அதிகம் உண்டு. நல்ல குடும்ப வாழ்க்கை இவர்களுக்கு அமையும்.
கேட்டை கோட்டை கட்டும் என்று ஒரு பழமொழியும் உண்டு. இவர்களின் சுய ஜாதகத்தில் சூரியனும், புதனும் வலுவாக அமர்ந்திருந்தால் அந்த ஜாதகர் நிச்சயம் கோட்டை கட்டி ஆள்வார்கள். ராசி அதிபதி புதனுக்கு சுப கிரக சம்பந்தம் இருந்தால், அந்த ஜாதகர் கோட்டை கட்டி ஆள்வார். எப்போதும் இவர்களைச் சுற்றி ஒரு நட்பு வட்டம் இருந்து கொண்டே இருக்கும். எதையும் ஆட்சி செய்யும் தன்மையைப் பெற்றிருப்பதால் அரசியல் ஆர்வம், அரசு வழி ஆதாயம் எப்பொழுதும் உண்டு.
கல்வி
கேட்டை நட்சத்திரத்தின் அதிபதி புதன் ராசிக்கு 5-ம்மிடமான மீனத்தில் நீச்சமடைவதால் கல்வியில் பெரியதாக தனித் தன்மையுடன் மிளிர மாட்டார்கள். ஏட்டுக் கல்வியை விட அனுபவ பாடம் அதிகம் கற்றவர்கள். மனக் கணக்காக எல்லா விசயங்களையும் துல்லியமாக கணக்கீடு செய்யும் வல்லவர்களாக இருப்பார்கள். அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவர், பல் மருத்துவர், காவல்துறை, ஆயுதப் பயிற்சி விளையாட்டுத் துறை, ராணுவம். என்ஜினீயரிங், புவியியல், வண்டி வாகனம் சார்ந்த படிப்புகள். விவசாயம் , சீருடை பணிகள் சார்ந்த கல்விகள், கணிதம் சார்ந்த அனைத்தும் , ஆடிட்டிங், நூலாசிரியர், பேராசிரியர், ஆசிரியர், அறிவு சார்ந்த ஆய்வாளர்கள், பத்திரிக்கை துறை, மார்க்கெட்டிங், புள்ளியல், நில அளவை, பத்திரப்பதிவு துறை, வணிகவியல், நூலகத்துறை தகவல் தொடர்பு துறை, ஓவியம், பெயிண்டிங், ஜோதிடம் போன்ற படிப்புகளை படிக்கலாம்.
தொழில்
இவர்களின் 2, 5-ம் அதிபதி குருபகவான் என்பதால் சிலர் குறிசொல்லுதல் மூலம் வருமானம் ஈட்டுவார்கள். பேங்கிங், ஆடிட்டிங், ஆசிரியர் பணி, குல தொழில், வட்டி வருமானம், வாடகை வருமானம் , பிள்ளைகள் மூலம் வருமானம், பூர்வீகச் சொத்து மூலம் வருமானம் , புரோகிதம், ஜோதிடம், வேதம் ஓதுதல் உண்டு. இந்த நட்சத்திரத்தில் பிறந்த பலர் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் போன்ற உயர் அதிகார பதவியில் உள்ளார்கள். அரசாணை பிறப்பித்தல், நலத்திட்டங்கள் அறிவித்தல் என அரசை ஆளும் நபர்களாகவும் இருக்கிறார்கள். மேலும் இவர்கள் சுய தொழிலை அதிகம் விரும்புவார்கள். அடிமை உத்தியோகத்தை விரும்புவதில்லை.
தனம், வாக்கு, குடும்ப ஸ்தானம்
செவ்வாயின் வீட்டில் உள்ள புதனின் நட்சத்திரம் கேட்டை என்பதால் முயற்சியால் உழைப்பால் உயர விரும்புவார்கள். தைரியமானவர்கள் பலசாலிகள். வீரியம் உடையவர்கள் எண்ணியதை ஈடேற்றும் திறமைசாலிகள். சிறு வயதில் கஷ்டப்பட்டாலும் மத்திம வயதிற்கு பிறகு வாழ்க்கையில் நிலையான முன்னேற்றம் உண்டாகும். எப்பொழுதும் கையில் தேவைக்கு பணம் புழங்கும். காதல் திருமணம் நடக்கும். காதல் திருமணம் செய்து கொண்ட பலர் விவகாரத்தையும் சந்திக்கிறார்கள் அல்லது மன ஆறுதலுக்காக தவறான நட்பில் ஈடுபடுகிறார்கள். இவர்கள் சுதந்திரமாக வாழ விரும்புவார்கள். சொத்துக்கள் விஷயத்தில் உடன் பிறந்தவர்களுக்கு விட்டுக் கொடுக்கு விட்டு எதார்த்தமாக இருப்பார்கள். பார்ப்பதற்குக் கடுமையானவர்களாக தோன்றினாலும், வெள்ளை மனதுடன் அன்பாக மற்றவர்களிடம் பழகுவார்கள்.
தசா புத்தி பலன்கள்:
புதன் தசா: இது ஜென்ம தாரையின் தசாவாகும். இந்த தசா வருடம் 17 ஆண்டுகள். ஜனன கால பிறந்த நேரத்திற்கு ஏற்ப தசா ஆண்டுகள் இருக்கும். புதன் விருச்சிகத்திற்கு அஷ்டமாதிபதி என்பதால் பெரும்பான்மையாக தாய், தந்தையை பிரிந்து வாழ்வார்கள். அல்லது பெற்றோர்களின் அரவணைப்பு சரியாக இருக்காது. அல்லது தாத்தா பாட்டியிடம் வளர்வார்கள். அடிவயிறு தொடர்பான உடல் உபாதைகள் உள்ளவர்கள். அல்லது இளம் வயதிலேயே குடும்ப பாரத்தை சுமப்பார்கள். பாக்கியாதிபதி சந்திரன் ராசியில் நீசமாகுவதால் பாக்கியமே இவர்களுக்கு பாதகமாக இருக்கும். எல்லாம் இருந்தாலும் எதையும் அனுபவிக்க முடியாத வகையில் வாழ்க்கை இருக்கும்.

ஐ.ஆனந்தி
கேது தசா: இது இரண்டாவதாக வரக் கூடிய தன தாரையின் தசாவாகும். இதன் தசா வருடம் 7 ஆண்டுகள். கேது தசாவில் பள்ளி, கல்லூரி வாழ்க்கை கடப்பவர்கள் விடுதியில் தங்கி படிப்பார்கள். சிலருக்கு சிறிய தடைக்கு பிறகு படிப்பை தொடர முடியும். கையில் தாராள பணப் புழக்கம் இருக்கும்.
சிலர் படிக்கும் காலத்திலே நண்பர்களுடன் இணைந்து சம்பாதிக்க துவங்குவார்கள். பிறப்பில் புதன் தசா அதிக ஆண்டுகள் உள்ள பலர் திருமணம், குழந்தை, வீடு, வாகனம் என இளம் வயதில் அனைத்து இன்பங்களையும் கிடைக்கப் பெறுவார்கள். எதிர்காலம் பற்றிய கனவுகளும் லட்சியங்களும் மிகுதியாக இருக்கும். தாய், தந்தைக்கு குறிப்பிடத் தகுந்த வகையில் பொருளாதார மேன்மை இருக்கும்.
சுக்ர தசா: இது மூன்றாவதாக வரக் கூடிய விபத்து தாரையின் தசாவாகும். இதன் தசா வருடம் 20 ஆண்டுகள். வாழ்க்கையின் தெளிவு சுழிவுகளை புரிந்து கொள்ளக் கூடிய கால கட்டம். விருச்சிகத்திற்கு 7-ம் அதிபதி சுக்ரன். 7-ம்மிடம் என்பது வாழ்க்கைத்தணை, நண்பர்கள், தொழில் கூட்டாளிகளைப் பற்றி கூறுமிடம். என்பதால் சுக்ர தசாவில் திருமணம் நடக்கும். புதிய எதிர்பாலின நண்பர்கள் அறிமுகமாகுவார்கள். சிலர் புதிய கூட்டுத் தொழில் துவங்குவார்கள். சுய ஜாதகத்தில் சுக்ரன் பலம் பெற்றவர்களின் பெயர், புகழ், அந்தஸ்து கவுரவம் இந்த தசாவில் உயரும்.
சாதனை மனிதர்களாக வலம் வருவார்கள். சுக்ரன் பலம் குறைந்தவர்களுக்கு சுக்ரன் விரயாதிபதி என்பதால் திருமண வாழ்க்கையில் பிரிவினை. கூட்டுத் தொழிலில் நஷ்டம், கூட்டு குடும்பத்தில் பிரிவினை எதிர்பாலின் நட்பால் அவமானம் போன்ற விரும்பத்தகாத பலன்கள் நடக்கும்.
சூரிய தசா: இது நான்காவதாக வரக் கூடிய ஷேம தாரையின் தசாவாகும். இதன் தசா வருடம் 6 ஆண்டுகள். இது வாழ்வின் வசந்த காலம் எனக் கூறலாம். எவ்வளவு தாழ்வான நிலையில் உள்ளவர்களுக்கும் வசிக்க வீடு கிடைக்கும். விவசாயம், ரியல் எஸ்டேட், கால்நடை வளர்ப்பு என பல வழிகளில் வருமானம் வரும். தேக சுகம் தெளிவாகும். சிலருக்கு கடன் தொகை தள்ளுபடியாகும். சொத்துக்கள் மீதான வழக்குகள் தள்ளுபடியாகும். புதன் புத்தி, விவேகம் நிறைந்த கிரகம் என்பதால்
திட்டமிட்டு நிதானமாக வெற்றிக் கனியை சுவைப்பார்கள். பலருக்கு அரசியல் ஆர்வம் மேலோங்கும். சிலருக்கு அரசியலில் தனி முத்திரை பதிக்கும் வாய்ப்புகள் கிடைக்கும்.
சந்திர தசா: இது ஐந்தாவதாக வரக் கூடிய பிரத்யக் தாரையின் தசாவாகும். இது 10 ஆண்டு கால தசாவாகும். சந்திரன் விருச்சிக ராசிக்கு பாதகாதிபதி என்பதால் சிந்தித்து நிதானமாக செயல்பட வேண்டும். பலருக்கு தீராத, தீர்க்க முடியாத பரம்பரை நோயின் ஆதிக்கம் ஆரம்பமாகும்.
சுய ஜாதகத்தில் புதன் நீச்சம் பெறாமல், பகை வீட்டில் அமராமல், பகை கிரகங்க ளுடன் சேராமல் 6,8ம் அதிபதியுடன் சேராமல், சுப ஆதிபத்யம் பெற்ற கிரகங்களுடன் சேர்ந்திருந்தால் நிச்சயம் ஜாதகர் கோட்டை கட்டி வாழ்வார். புதன் பலம் குறைந்தவர்களுக்கு முரட்டுத்தனம் நிறைந்த சிந்தனைகள் மிகுதியாக இருக்கும்.
இந்த காலகட்டத்தில் நிதான மற்ற, விவேகமற்ற சிந்தனைகள் மிகைப்படுத்துவதால் பலர் தாள முடியாத பின் விளைவுகளை சந்திக்கிறார்கள்.
செவ்வாய் தசா: இது ஆறவதாக வரக் கூடிய சாதக தாரையின் தசாவாகும். இதன் தசா ஆண்டுகள் 7. வயோதிகம் காரமாக தசாவின் பரிபூரண சுப பலன்களை அனுபவிக்க முடியாது.
தன்னம்பிக்கை தைரியம் குறையும். மன சஞ்சலம் பய உணர்வு அதிகமாக இருக்கும். ராசி அதிபதி செவ்வாயே 6ம் அதிபதியாக இருப்பதால் எதிரிகளை வெல்லும் சாமர்த்தியம் மட்டுப்படும். உயில் எழுதுதலாம். பாகப் பிரிவினை நடக்கும். பிள்ளைகளின் அனுசரனையில் வாழ விரும்புவார்கள். சுய ஜாதகத்தில் செவ்வாய் பலம் பெற்றவர்கள் 60 வயதிலும் 40 வயதினரை போல் திடகாத்திரமாக தன்னம்பிக்கையுடன் வாழ்வார்கள்.
ராகு தசா: இது ஏழாவதாக வரக் கூடிய வதை தாரையின் தசாவாகும்.
இந்த காலகட்டம் சிலருக்கு முறையான பராமரிப்பு கிடைக்காது. அதீத உடல் பாதிப்பு இருக்கும். பல்வேறு கண்டங்களை சந்திப்பார்கள்.
கேட்டை நட்சத்திரத்தின் சிறப்புகள்
இதன் அதிபதி புதன் வித்யாகாரகன் என்பதால் ஆயுதம் பயிலவும் ஆயுதப் பிரயோகம் செய்யவும் உகந்த நட்சத்திரமாகும். இந்த நட்சத்திரத்தில் விவாகம், ருது சாந்தி, சாந்தி முகூர்த்தம், கர்ப்பதானம் கிரகப்பிரவேசம் செய்யலாம். ஜோதிடம் மருத்துவம் மாந்திரீகம் போன்ற விஷயங்களை கற்க துவங்கினால் நல்ல தேர்ச்சி கிடைக்கும். மாந்திரீக தகடுகள் எழுந்த உகந்த நட்சத்திரம். செவ்வாயின் வீட்டில் அமைந்த புதனின் நட்சத்திரம் கேட்டை என்பதால் இந்த நட்சத்திரம் வரும் நாளில் வித்யாரம்பம் செய்யக்கூடாது. ரகசிய ஒப்பந்தங்கள் செய்யலாம்.
கேது உச்சமடையும் கிரகம் கேட்டை என்பதால் ஜோதிடம் மருத்துவம் ஆன்மீகம் சம்பந்தமான விஷயங்களில் ஈடுபடலாம். நீச்சம் அடையும் கிரகம் ராகு என்பதால் ஆயுள் தோஷ பரிகாரம் நோய் நீக்கும் பரிகாரம் செய்யலாம்.
நட்சத்திர பட்சி: சக்கர வாளம்
யோகம்: வரியம்
நவரத்தினம்: மரகதம்
உடல் உறுப்பு: வலது விலாப்புறம்
திசை: மேற்கு
பஞ்சபூதம் :காற்று
அதிதேவதை: தேவேந்திரன்
நட்சத்திர மிருகம்: ஆண் மான்
நட்சத்திர வடிவம்: ஈட்டி, குடை
சம்பத்து தாரை: மூலம், அசுவினி, மகம்
சேம தாரை: உத்திராடம், கிருத்திகை, உத்திரம்
சாதக தாரை: அவிட்டம், மிருகசீரிஷம், சித்திரை
பரம மிக்ர தாரை: அனுஷம், உத்திரட்டாதி, பூசம்
பொதுவான பரிகாரங்கள்
கல்வியில் தடை உள்ளவர்கள் கேட்டை நட்சத்திரம் வரும் நாளில் நவதிருப்பதிகளை வழிபட கல்வித்தடை விலகும். அருகம்புல் கேட்டை நட்சத்திர வடிவமாகும். மூல வடிவம் விநாயகராகும். கேட்டை நட்சத்திர நபர்கள் தினமும் புதன் ஓரையில் விநாயகருக்கு அருகம்புல் சமர்பித்து வணங்க செல்வம், புகழ் வளம் பெருகும்.
சாதக தாரையான ஆறாவது நட்சத்திர நாளில் அவிட்டம் நட்சத்திர நாளில் விரதமிருந்து முருகனை வழிபட வறுமை, கடன் தீரும். பொன், பொருள் சேரும்.
செல்: 98652 20406
- திருச்செந்தூர் தலத்தில் முனிவர்கள், சித்தர்கள் இப்போதும் அரூபமாக இருப்பதாக சொல்கிறார்கள்.
- திருச்செந்தூர் தீர்த்தங்களின் மகிமைக்கு ஈடானது இந்த உலகில் வேறு எதுவுமில்லை.
திருச்செந்தூர் முருகனிடம் உங்களை ஒப்படைத்து பாருங்கள். நீங்கள் நினைத்தது எல்லாம் நடக்கும். உங்களது நியாயமான கோரிக்கைகளை நிச்சயமாக திருச்செந்தூர் முருகன் நிறைவேற்றுவார்.
குடும்பம், தொழில், உத்தியோகம், கடன் பிரச்சினை, தோஷங்கள், எதிரிகள் தொல்லை, காரிய வெற்றி என்று எந்த விஷயமாக இருந்தாலும் ஒேர ஒரு தடவை திருச்செந்தூர் தலத்தில் முருகனிடம் சரணடைந்து விட்டால் எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கும்.
புராண காலத்திலேயே இதை அறிந்து, உணர்ந்து இருந்ததால்தான் முனிவர்களும், சித்தர்களும் இந்த தலத்துக்கு படை எடுத்தனர். கணக்கிட முடியாத அளவுக்கு சித்தர்கள் இந்த தலத்துக்கு வந்து தியானித்து தவம் இருந்து முருகன் அருளால் பலம் பெற்றுள்ளனர்.
பொதுவாகவே திருச்செந்தூர் தலத்துக்கும் முனிவர்களுக்கும் தொடர்பு உண்டு. முருகப்பெருமானின் அவதாரத்தின் தொடக்கத்தில் இருந்தே இந்த தொடர்பு இருக்கிறது.
சூரபத்மனின் கொடுமைகள் பற்றி முனிவர்களும், தேவர்களும் சிவபெருமானிடம் சொன்னபோது புதிய அவதாரத்துக்கு வித்திடப்பட்டது. சிவபெருமான் உத்தரவுபடி முனிவர்கள் ஒரு ஐப்பசி மாத அமாவாசை தினத்தன்று வேள்வி வளர்த்து யாகம் தொடங்கினார்கள். 6 நாட்கள் நடந்த அந்த யாக குண்டத்தில் எழுந்த தீயில் இருந்து ஒவ்வொரு நாளும் ஒரு வித்து விதமாக 6 வித்துகள் சேகரிக்கப்பட்டன.
அந்த வித்துகள் 6-ம் நாளில் ஒன்றாக சேர்க்கப்பட்டபோது முருகப்பெருமான் அவதரித்தார். இவ்வாறு முனிவர்கள் யாகத்தால் ஐப்பசி மாதம் முருகப்பெருமான் அவதாரம் எடுத்ததாக மகாபாரதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்படி முனிவர்களுக்கும், முருகப்பெருமானுக்கும் பிரிக்க முடியாத உறவு இருக்கிறது.
இதனால்தான் திருச்செந்தூர் தலத்தில் முனிவர்கள், சித்தர்கள் இப்போதும் அரூபமாக இருப்பதாக சொல்கிறார்கள். திருச்செந்தூர் தலத்துக்கு வந்த கணக்கில் அடங்காத முனிவர்கள் அந்த தலத்தின் பெருமையையும், சிறப்பையும் சொல்லி சென்றுள்ளனர்.
அத்தகைய முனிவர்களின் கருத்துக்களில் வியாகரபாதர் முனிவரின் கருத்து சிறப்பானதாக கருதப்படுகிறது. வியாகரபாதர் சிவன் மீது மிகுந்த பக்தி கொண்டவர். சிவனுக்கு எப்போதும் தூய மலர்களால் வழிபாடு செய்ய வேண்டும் என்பதில் தீவிரமாக இருந்தவர்.

மரத்தில் இருந்து கீழே விழும் மலர்கள் மற்றும் வண்டுகள், பூச்சிகள் கடித்த மலர்களை எடுத்து அவர் ஒருபோதும் சிவனுக்கு படைத்ததில்லை. ஆனால் அதிகாலையில் இருளில் மரம் ஏறி மலர்களை பறிப்பதற்கு அவர் சிரமப்பட்டு வந்தார்.
எனவே தனக்கு இருளில் பார்க்கும் சக்தியும், மரம் ஏறும் சக்தியும் வேண்டும் என்று சிவனை நோக்கி தவம் இருந்தார். சிவபெருமான் அவரது தவத்தை மெச்சி அவருக்கு மரம் ஏறுவதற்கு வசதியாக புலியினுடைய கால்களை போன்று உருவாகட்டும் என்று வரம் கொடுத்தார். மேலும் துல்லியமான பார்வையையும் வழங்கினார்.
இதன் காரணமாகவே அவர் வியாகரபாதர் என்று அழைக்கப்பட்டார். சமஸ்கிருதத்தில் வியாகரம் என்றால் புலி என்று அர்த்தமாகும். அதில் இருந்துதான் வியாகரபாதர் என்ற பெயர் அவருக்கு ஏற்பட்டது. தமிழில் புலிக்கால் முனிவர் என்று அழைத்தனர்.
சிதம்பரம் உள்பட பல தலங்களில் தங்கி இருந்து வழிபட்ட இவர் திருப்பட்டூரில் ஜீவசமாதி அடைந்ததாக குறிப்புகள் உள்ளன. சிதம்பரத்தில் இவரும், பதஞ்சலி முனிவரும் இருந்தபோது நடராஜரின் ஆனந்த தாண்டவத்தை கண்டுகளிக்கும் பாக்கியம் கிடைத்தது.
சிதம்பரத்தை போலவே மற்ற தலங்களிலும் இறைவனது அருளை பெற வேண்டும் என்று புலிக்கால் முனிவர் விரும்பினார். அதற்கு அருள் புரிய வேண்டும் என்று நடராஜ பெருமானை பிரார்த்தனை செய்தார்.
நடராஜரும் அவருக்கு அனுமதி வழங்கி ஆசி புரிந்தார். இதையடுத்து புலிக்கால் முனிவர் தமிழகம் முழுவதும் தல யாத்திரை மேற்கொண்டார். ஒவ்வொரு ஆலயமாக சென்று சிவபெருமானை வழிபட்டு வந்தார். ஒவ்வொரு ஆலயத்திலும் அவருக்கு ஒவ்வொரு விதமான அனுபவம் கிடைத்தது.
தமிழகத்தின் தென் பகுதிக்கு சென்றபோது தாமிரபரணி நதிக்கரையில் உள்ள சிவாலயங்களை வழிபட்டுக் கொண்டே வந்தார். தினமும் தாமிரபரணி நதியில் நீராடி சிவாலயத்துக்கு சென்று வழிபட்டார். தாமிரபரணி நதி நிறைவுபெறும் பகுதிக்கு வந்ததும் திருச்செந்தூருக்கு செல்ல முடிவு செய்தார்.
திருச்செந்தூரில் லிங்கப் பிரதிஷ்டை செய்து முருகப் பெருமான் வழிபட்டு சிறப்புப்பெற்றதை அறிந்திருந்த புலிக்கால் முனிவர் அந்த தலத்தில் தாமும் வழிபட வேண்டும் என்று ஆசைப்பட்டார். அதன்படி திருச்செந்தூர் ஆலயத்துக்கு சென்றார்.
அங்கு சிவன் அருளையும், முருகன் அருளையும் ஒருங்கே பெறும் வகையில் சண்முக கடவுளுக்கு யாகம் செய்தார். அப்போது அவரது உடல் சிலிர்த்தது. ஆலய வழிபாட்டை முடித்தபிறகு மீண்டும் சிதம்பரம் நோக்கி புலிக்கால் முனிவர் பயணத்தை மேற்கொண்டார். அப்போது புலிக்கால் முனிவர் திருச்செந்தூர் ஆலயத்தில் வழிபட்ட அனுபவத்தை மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டார்.
அவர் கூறுகையில், 'இந்த உலகம் முழுவதிலும் உள்ள புண்ணிய தீர்த்தங்களில் நீராடி தல யாத்திரையை நிறைவு செய்து விட்டோம் என்ற திருப்தி, மன உணர்வு எனக்கு திருச்செந்தூர் தலத்தில் மட்டுமே கிடைத்தது' என்று கூறினார். இதன் மூலம் யாத்திரை செல்பவர்களுக்கு மன ஆறுதலும், திருப்தியும் தரும் தலமாக திருச்செந்தூர் தலம் திகழ்கிறது என்பது உறுதியாகிறது.
புலிக்கால் முனிவர் போன்றே திருச்செந்தூரின் மகிமையை வேறு பல முனிவர்களும் கூறியுள்ளனர். சில முனிவர்கள் கூறி இருக்கும் கருத்துக்கள் வருமாறு:-
வசிஷ்டர்: இந்த பூமியில் போக மோட்சங்களைத் தரும் பல தலங்கள் இருந்தாலும் அவை யாவும் சந்தேகமின்றி திருச்செந்தூர் தலத்திற்கு அடுத்தவையே.
வாமதேவர்: பிரம்மஹத்தி பாவம் செய்தவனும், வேதங்களை பழித்தவனும்கூட திருச்செந்தூரில் ஒருநாள் வசித்தால் பரிசுத்தம் ஆனவனாக மாறி விடுவான்.
ஜாபாலி: திருச்செந்தூர் தீர்த்தங்களின் மகிமைக்கு ஈடானது இந்த உலகில் வேறு எதுவுமில்லை.
விசுவாமித்திரர்: நூறு அஸ்வமேத யாகங்களின் பலனை திருச்செந்தூர் தலத்துக்கு சென்று ஒருநாள் தங்கி இருந்து வழிபடுவதன் மூலம் கோடி பங்கு அதிகமாக பெறலாம்.
காசியப்பர்: ஒருவன் பிரயாகையில் வாழ்நாள் முழுவதும் நீராடும் பலனை கார்த்திகை நட்சத்திரத்தன்று ஒருமுறை இந்த தலத்தில் நீராடினால் அடைந்து விடுகிறான்.
மார்க்கண்டேயர்: ரிஷிகள் காசியில் ஒரு வருடம் தவம்செய்து பெறும் புண்ணியத்தை திருச்செந்தூரில் ஒரே ஒரு நாளில் தவம் இருந்து அடைந்து விடலாம்.
மவுத்கல்யர்: பல நாட்கள் செய்துவரும் தவத்தை திருச்செந்தூர் தரிசனம் ஒன்றினாலேயே அடைந்துவிடலாம்.
குரு மகாதசை அல்லது குரு புக்தி குரூரமாக இருந்தால் அவர்கள் திருச்செந்தூர் ஆறுமுகனை தரிசித்து ஸ்ரீஆதிசங்கரரின், சுப்ரமணிய புஜங்கத்தையோ குமரகுருபரரின் கந்தர் கலிவெண்பாவையோ ஒருமுறை பாராயணம் செய்தால் அனைத்து துன்பங்களும் நீங்கிவிடும் என்றும் முனிவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
திருச்செந்தூரில் கணக்கற்ற முனிவர்கள் வாழ்ந்தனர் என்பதற்கு இப்போதும் அடிக்கடி ஆதாரங்கள் கிடைத்தவண்ணம் இருக்கின்றன. சமீபத்தில் திருச்செந்தூர் கடற்கரையில் ஏற்பட்ட கடல் அரிப்பு காரணமாக சில கல்வெட்டுகள், சிலைகள் கிடைத்தன. இவை வரலாற்று பொக்கிஷங்களாக கருதப்படுகின்றன.

கடல் அரிப்பு மூலம் திருச்செந்தூர் கடற்கரை மண்ணில் புதைந்து கிடந்த ஒரு முனிவரது சிலை கிடைத்துள்ளது. அந்த சிலை சுமார் 300 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று கருதப்படுகிறது. 2 கைகளிலும் ருத்ராட்சம் கட்டப்பட்டு அந்த சிலை காட்சி அளிக்கிறது.
அந்த சிலையுடன் ஒரு நாகர் சிலையும், பெண் உருவம் கொண்ட மற்றொரு சிலையும் கிடைத்தன. இந்த சிலைகள் மூலம் ஆதி காலத்தில் திருச்செந்தூர் தலத்தில் முனிவர்கள் செய்த நாகர் வழிபாடு மிகவும் மேன்மை பெற்று இருந்ததாக ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.
குறிப்பாக முருகனை வழிபட முனிவர்கள் அலை அலையாக வந்தனர் என்பதும் உறுதியாகி இருக்கிறது. எனவே முனிவர்கள் சொன்னபடி திருச்செந்தூரில் நாமும் வழிபட்டால் அவர்கள் பெற்ற பலனை நம்மாளும் பெற முடியும்.
அடுத்த வாரம் திருச்செந்தூர் முருகனின் மற்றொரு அற்புதத்தை காணலாம்.
- ஞானம் அடைவதற்கு நிறையத் தோன்றும் கேள்விகளும்கூடப் படிக்கட்டுகள் ஆகலாம்.
- நன்றின்பால் வாழ்க்கையைச் செலுத்தி உய்வடையச் செய்யும்.
ஞானத்தின் தன்மைகள் அறிய அறிவுத் தாகத்தோடு காத்திருக்கும் அன்பின் வாசகர்களே! வணக்கம்!.
ஞானம் என்பது நாம் அன்றாடம் வாசிப்புக்களாலும், ஆலோசனைகளாலும், ஆராய்ச்சிகளாலும் பெறுகிற அறிவுக்குச் சற்றுக் கூடிய நிலை ஆகும். இதனைப் 'பேரறிவு' என்று தூய தமிழில் கூறலாம். 'மெய்ப்பொருள் காண்பது அறிவு' என்று வள்ளுவப் பெருந்தகை வலியுறுத்திக் குறிப்பிடும் 'அறிவு' இந்த ஞான நிலையையே ஆகும். "யார் சொன்னார்கள் என்பதை வைத்தோ, அல்லது சொல்லப்படும் பொருளின் தரத்தை வைத்தோ பொத்தாம் பொதுவாக ஒரு முடிவுக்கு வந்து விடாதே!; எதை யார் சொன்னாலும் உன்னிடமுள்ள உண்மை அறிவுகொண்டு, அதாவது சொந்த அறிவுகொண்டு ஆழ்ந்திருக்கும் மெய்ப்பொருளைக் காண முற்படு!" என்பதே வள்ளுவப் பெருமகனார் பயன்படுத்த வற்புறுத்தும் 'ஞான நிலை' ஆகும்.
ஞானம் என்பது அன்றாட அறிவுக்கும் மேம்பட்ட 'பேரறிவு நிலை' என்றால், அதனைக் கைவரப்பெறுவதற்கு அறிவின் முதிர்ந்த முயற்சிகளில் ஈடுபட வேண்டுமோ? என்று சிலருக்கு ஐயம் வரலாம். ஞானம் என்பது ஞானியருக்கு மட்டுமே வசப்படுகிற சங்கதி; அதனைப் பெறுவதற்குத் துறவு நிலையை மேற்கொள்ள வேண்டுமோ? அல்லது காடு மலைகளுக்குச் சென்று துறவிகளைச் சந்தித்து அவர்களிடம் ஞானம் கற்றுவர வேண்டுமோ? என்றெல்லாம்கூடக் கேள்விகள் தோன்றலாம். ஞானம் அடைவதற்கு நிறையத் தோன்றும் கேள்விகளும்கூடப் படிக்கட்டுகள் ஆகலாம்.
ஞானம் என்பது, இவருக்கு வரும்!; இவருக்கு வராது! என்கிற இன வர்ண பேதங்கள் கிடையாது; இந்த வயதில்தான் வரும்!; இந்தப் படிப்பில் தான் வரும் என்கிற காலக் கட்டாயங்களும் கிடையாது; இளம் வயதிலேயே பக்திஞானம் முற்றப்பெற்ற திருஞானசம்பந்தரும் நம் வரலாற்றில் உண்டு; அவரது காலத்திலேயே, பழுத்த வயதில் தொண்டு செய்து ஞானம் அடைந்த திருநாவுக்கரசு பெருமானின் வரலாறும் நமக்குத் தெரியும்.. ஞானம் என்பது ஒருவரிடமுள்ள அறிவும் அனுபவமும் ஒருங்கிணைந்து உளவியலில் ஏற்படுத்துகின்ற உன்னத நிலை ஆகும். அந்த அறிவும் அனுபவமும் சொந்த நிலையில் பெற்றவையாக இருக்கலாம்; அல்லது காண்பன, கற்பன வாயிலாகப் பெற்றவையாகவும் இருக்கலாம். எல்லாருக்கும் அறிவிருக்கலாம்; எல்லாருக்கும் அனுபவமும் இருக்கலாம்; ஆயினும் எல்லாரும் ஞானி ஆகிவிட முடியாது. பெற்றுள்ள அறிவையும் அனுபவத்தையும் கொண்டு அவற்றை வாழ்வியலில் எப்படிக் கடைப்பிடித்துக் கையாளுகிறோம் என்பதைப்பொறுத்தே ஞானம் வெளிப்பட்டு நிற்கும். பாலில் இருந்து நெய் எடுப்பதுபோல இதற்குப் பக்குவப் படிநிலைகள் உண்டு.
வாழ்வில் பலதுறைகள் உள்ளன; ஆனால் எல்லாத்துறைகளிலும் ஒட்டுமொத்த ஞானம் பெற்றோர் எண்ணிக்கை என்பது மிகமிகக் குறைவு. ஒவ்வொரு துறையில் ஒவ்வொருவர் ஆழ்ந்த நுட்பங்கள் கற்றவராகவும் சிறப்பறிவு உடையவராகவும் திகழும்போது, அவர் ஆழ்ந்த ஞானம் மிக்கவர் என்று கொண்டாடப்படுவார். ஒருவர் தான் சார்ந்துள்ள ஓவியம், நாட்டியம், பாட்டு, நாடகம், இசை போன்ற துறைகளில் சிறந்து விளங்கினால் அவரை நாம் 'கலை ஞானம் மிக்கவர்' என்று பாராட்டுகிறோம். அறிவியல் துறையில் சிறந்திருப்போரை 'அறிவியல் ஞானம் மிக்கோர்' என்றும், ஆழ்ந்த பொருள்கள் குறித்து ஆழமாக எழுதுவோரையும் பேசுவோரையும் 'விஷய ஞானம் உள்ளவர்' என்றும் குறிப்பிட்டுச் சொல்வோம். அந்த வகையில் இசை ஞானி, கலை ஞானி, அரசியல் ஞானி, விஞ்ஞானி, மெய்ஞானி எனப் பல ஞானியர் உண்டு. தத்துவத்தில், கல்வியில், ஆன்மிகத்தில் சிறந்திருக்கும் தன்மை, தத்துவ ஞானம், கல்வி ஞானம், கேள்வி ஞானம், ஆத்ம ஞானம் போன்ற பல்வேறு பொருண்மைகளில் விதந்து பாராட்டப் படுகின்றன.
எதை எடுத்துக்கொண்டாலும் அதில் நேர்த்தியான ஈடுபாட்டையும், ஆழ்ந்த நுட்பங்களையும் வெளிப்படுத்தி நிற்பதே ஞானம். ஞானம் என்பது விஷயங்களின் துல்லியத்தை வெளிப்படுத்துவதும் கண்டறிவதும் மட்டுமல்ல; அந்த அறிவில் ஆழ்ந்திருக்கும் உண்மையினை உணரச் செய்வதும் ஆகும். இத்தகு ஞானம் அடைவதற்குப் பல படிநிலைப் பயிற்சிகளில் நாம் பக்குவப்பட்டிருக்க வேண்டும். ஞானம் என்பது பொருள்களை அறியும் அறிவு மட்டுமல்ல; பொருள்களுக்கு அப்பாலுள்ள அர்த்தப்பாடுகளையும் உணர்ந்து அறிவதும் ஆகும்.

சுந்தர ஆவுடையப்பன்
ஒரு துறவி ஒரு காட்டில் ஓர் ஆசிரமம் அமைத்துச் சீடர்களுடன் வாழ்ந்து வந்தார். ஒருநாள் தன்னுடைய சீடர்களில் ஒருவரை அழைத்து, " அதோ அங்கே தொலைவில் நகரத்தில் ஓர் அரண்மனை தெரிகிறதே அங்கு சென்று ஞானம் கற்று வா!" என்று கூறினார். " குருவே! முற்றும் துறந்த துறவியும் ஞானியுமான உங்களிடம் கற்க முடியாத ஞானத்தையா நான் அங்கு அரண்மனைக்குச் சென்று கற்று வரப் போகிறேன்?" என்று எதிர்க்கேள்வி கேட்டார் சீடர். "நான் சொன்னதைச் செய்!; அங்கே அந்த நாட்டு அரசனிடம் நீ ஞானம் கற்று வரலாம்! "என்றார் துறவி. அப்படி அந்த அரசன் ஞானியாக இருந்திருந்தால் துறவியாக அல்லவா மாறியிருப்பான்; அரசனாக இருக்க மாட்டானே! என்று யோசித்துக் கொண்டே காட்டிலிருந்து அரண்மனை நோக்கி நடந்தார் சீடர்.
சீடர் அரண்மனையை அடையும்போது நன்றாக இருட்டிவிட்டது; உள்ளே அரசரைக் காணச் சென்றால், வழிநெடுகக் குடியும் விருந்துமாகக் குதூகலமாக இருந்தது அரண்மனை. அரசரைப் பார்த்துத், தன்னை வனத்திலுள்ள துறவி அனுப்பி வைத்திருப்பதாகவும், சில நாள்கள் அரண்மனையில் விருந்தினனாகத் தங்க அனுமதிக்க வேண்டுமென்றும் கூறினார் சீடர். இளந்துறவியை வணங்கிய அரசர், அமைச்சரை அழைத்து, சீடர் தங்குவதற்குரிய அனைத்து வசதிகளையும் செய்து தருமாறு உத்தரவிட்டார். வசதிமிக்க அந்த அரண்மனையில், அன்றிரவு வேண்டா வெறுப்புடன் தங்கினார் இளந்துறவி.
காலை விடிந்ததும், இளந்துறவி தங்கியிருந்த அறைக்கு வந்த அரசர், அவரை வணங்கி, "வாருங்கள் துறவியாரே அருகேயுள்ள ஆற்றிற்குச் சென்று நீராடிவிட்டு வரலாம்" என்று அழைத்தார். அரசரும் துறவியும் அரண்மனையை விட்டு வெளியே வந்து ஆற்றை நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது, திரும்பி அரண்மனையைப் பார்த்த அரசன் இளந்துறவியையும் திரும்பிப் பார்க்குமாறு கூறினான். அங்கே அரண்மனை தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது.
"ஐயோ! அரண்மனை தீப்பற்றி எரிந்து கொண்டிருக்கிறதே! "என்று பதறிப்போய்க் கதறினார் இளந்துறவி. எந்தவிதப் பதற்றமும் இல்லாமல் அரசன் இளந்துறவியைப் பார்த்து "அரண்மனை எரிவதற்கு நீங்கள் ஏன் இப்படிப் பதறுகிறீர்கள்?" என்று கேட்டான். " ஐயா என்னுடைய ஒரே ஒரு காவி ஆடையை அரண்மனையில் விட்டுவிட்டு வந்துவிட்டேன்!; இந்நேரம் அந்தத் துணி எரிந்து போயிருக்குமே!; அதற்காகப் பதறுகிறேன்" என்று கூறிய இளந்துறவி, அரசனைப் பார்த்து, " அது சரி! நானாவது என்னுடைய அந்தக் கந்தல் காவி உடைக்காகப் பதறுகிறேன்! ஆனால் ஒட்டுமொத்த அரண்மனைக்கும் சொந்தக்காரனாகிய அரசன், நீ எந்தவிதப் பதற்றமும் இல்லாமல் இருக்கிறாயே! அது எப்படி?" என்று கேட்டான்.
சிரித்துக்கொண்டே அரசன் பதில் சொன்னான், " ஐயா இளந்துறவியே! என்னைப் பொறுத்தவரை, அது 'அரண்மனை என்றால் அரண்மனை!' அவ்வளவுதான். இங்கு 'நான் என்பது எப்போதும் நான் மட்டுமே!'. இரண்டையும் ஒன்றாக்கிக் குழப்பிக்கொள்ளும் பழக்கமோ, ஒன்றின்மீது பற்று வைத்து ஆசையில் திளைத்து, பிறகு இழப்பில் பரிதவிக்கும் வழக்கமோ என்னிடத்தில் எப்போதும் இல்லை!" என்று உறுதியாகத் தெரிவித்தான் அரசன். " பெற்றேன்! ஞானம் பெற்றேன்! இந்த அரசனிடமிருந்து ஞானம் பெற்றேன்!. துறவில் சிறந்து காட்டில் வாழும், வேறு எந்த ஞானியரிடமிருந்தும் பெற முடியாத ஆத்ம ஞானத்தை இல்லற வாசியாக நாட்டை ஆளும் இந்த அரசனிடமிருந்து இப்போது பெற்றேன்!" என்று கூறிக்கொண்டே காட்டை நோக்கி ஓடத் தொடங்கிவிட்டார் இளந்துறவி.
எல்லாப் பற்றையும் விட்டொழித்த அந்த இளந்துறவி, துறவின் அடையாளமாகத் தன்னிடமிருந்த ஒற்றைக் காவியுடை மீது கொண்டிருந்த பற்றை அழிக்க முடியாதபோது, அரண்மனை அழிந்தபோதும், பற்றொழித்த நிலையில் பதறாமல் நின்ற அரசன் பெரும் ஞானியல்லவா?.
"யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்"
என்பது வள்ளுவத்தின் ஞானப் பெருக்கல்லவா? ஆசையே துன்பத்திற்கு அடித்தளம்; அந்த ஆசை அகற்றலே! பற்றை ஒழித்தலே ஞானத்தின் திறவுகோல்!. பொருள்களினாலேயே துன்பங்கள் பெருகுகின்றன என்றால், அவற்றின்மீதான விருப்பங்களையும் ஆசைகளையும் நீக்கி விட்டாலே இன்பப் பெருக்குதானே! அதுவே ஞானப் பெருக்கும்தானே!. உண்மையான ஞானம், காடுகளில் தனித்திருந்து பெறுவதைவிட, மனிதரோடு மனிதராய்ச் சமூகத்தில் கலந்திருந்து பெறுவதே ஆகும். இன்னும் சொல்லப்போனால் மனிதரோடு மனிதராய்ச் சகித்திருந்து பெறுவதும் ஆகும். அந்த வகையில் மகாத்மா காந்தியடிகள் விடுதலைப்போரில் தவமிருந்து பெற்ற ஞானம், அகிம்சை, சகிப்புத் தன்மை, சத்தியாக்கிரகம் ஆகியவை தானே!.
எல்லாவற்றையும் காட்சி அளவையில் கண்டு, மூளைக்கும், மனத்திற்கும் அனுப்பி, பொருள்கள் குறித்த கருத்துருக்களை உருவாக்கிக் கொள்ள நமக்கு கண்கள் உதவுகின்றன. அறிந்துகொண்டு அறிவு பெறும் இந்த இரண்டு கண்களுக்கு அப்பால், ஒவ்வொரு மனிதரும் மூன்றாவது கண்ணாய் ஞானக்கண் பெற வேண்டும் என்கின்றோம். அதுவே நீதியின் கண்ணாகச் சமுதாயம் காக்கும்.
புராணக் கண்ணோட்டத்தில் சிவனுக்கு மூன்றாவது கண்ணாக நெற்றிக்கண்ணும் இருப்பதனால் அவன் முக்கண்ணன் என்று போற்றப்படுகின்றான். கடவுளுக்கு மட்டுமல்ல; கடவுளின் படைப்பான மனிதருக்கும் முக்கண் தேவை; அந்த மூன்றாவது கண்ணே ஞானக்கண்.
அது வேண்டுதல் வேண்டாமை இல்லாத நிலையில் எல்லாரையும் சமமாகப் பார்த்து, பேதங்களற்று மனிதம் போற்றுகிற மகத்தான செயலைச் செய்யும். உண்மையைத் தவிர வேறு எப்பக்கமும் சாயாது, எவர்மீதும், எப்பற்றையும் வைக்காது, நன்றின்பால் வாழ்க்கையைச் செலுத்தி உய்வடையச் செய்யும்.
ஞானம் என்பது செருக்கை ஏற்படுத்தாது; உலகிலுள்ள ஞானத்தையெல்லாம் ஒப்பிடு கையில் நம்மிடமுள்ளது ஒரு ஞானமே இல்லை என்று அடங்கிப்போகக் கற்பிக்கும். தமக்கு மட்டுமே ஆக்கம் விளைகிற செயல்களை விடுத்து, ஒட்டுமொத்த மானுடமே வளம்பெறும் வகையில் செயல்களில் ஈடுபடும். பாரபட்சம் இல்லாமல் அனைவரிடமும் அன்பைப் போதிக்கும் அறிவுநிலையே ஞான நிலை ஆகும்.
தொடர்புக்கு 9443190098
- கதிரவனின் முதலாளியாகும் எண்ணத்திற்கு பச்சைக்கொடி காட்டினார்கள்.
- நல்ல நண்பர்கள் ஒருபோதும் தன் நண்பர்களுக்கு இடைஞ்சல் தரும் எதையும் செய்ய மாட்டார்கள்.
விதி எப்பொழுதும் எளிய மனிதர்களின் வாழ்க்கையில் விளையாடி வேடிக்கை காட்டுவதில் பெருமை கொள்கிறது. காலம் எல்லாவற்றையும் கலைத்துப் போடும் ஒரு கருவி. சிலர் காலத்தோடு கைகோர்த்துக்கொண்டு கலைத்தவற்றை சரி செய்து கொண்டு வாழ்கிறார்கள். ஆனால் ஒரு சிலர் காலத்தோடு போராடத் திறனின்றி மனம் உடைந்து போய் கோழைத்தனமான முடிவுகளை எடுத்து விடுகிறார்கள். நெருக்கடிகளில் நிதானத்தை இழந்து விடுகிறார்கள். கதிரவனின் வாழ்க்கையையும் காலம் புரட்டிப் போட்டது.
கதிரவன் வேலை பார்த்த அந்தத் தனியார் நிறுவனம் நஷ்டத்தில் இயங்கி இழுத்து மூடப்பட்டதும் நிலைகுலைந்து போனான். மாதச் சம்பளத்தை மட்டுமே நம்பிக்கொண்டிருந்த அவனுக்கு வேலை இல்லாமல் போனது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கையில் இருந்த சொற்பப் பணத்தை வைத்து ஒரு மாதம் குடும்பத்தை நடத்த முடிந்தது.
"வேறு எங்காவது வேலை கிடைக்குமா?" என்று முயற்சி செய்ய அவன் ஏனோ விரும்பவில்லை.
" நாற்பத்தி ஐந்து வயதுக்கு மேல் ஆகிவிட்டது இனிமேல் எங்கே சென்று வேலை தேடுவது?" என்ற தயக்கத்தில் இருந்தான். கவுரவமான ஒரு வேலையில் இருந்து விட்டோம். இப்பொழுது அது இல்லை என்றாகிவிட்டது. இனிமேல் யாரிடம் போய் அடிமைத்தனமாக இருப்பது சொந்தமாகவே தொழில் ஒன்றைத் தொடங்கலாம் என்ற முடிவுக்கு வந்தான். அவனுடைய நெருங்கிய நண்பர்களும் "அதுதான் சரி. அப்பொழுதுதான் நீ வாழ்க்கையில் முன்னுக்கு வரமுடியும். மாதச் சம்பளம் மட்டும் வாங்கி நீ ஒருபோதும் பெரியவனாக முடியாது" என்று அவனை உற்சாகப்படுத்தினார்கள். அவர்கள் தொழில் நடத்துவதில் ஏற்படக்கூடிய லாப நஷ்டங்களை சொல்லாமல் நிறைகளை மட்டுமே சொன்னார்கள். கதிரவனின் முதலாளியாகும் எண்ணத்திற்கு பச்சைக்கொடி காட்டினார்கள்.
நண்பர்களின் இலவச அறிவுரைகளால் கதிரவனுக்கும் முதலாளி ஆகும் ஆசை வந்தது. நண்பர்களே அவனுக்கு ஒரு தொழிலையும் தேர்ந்தெடுத்துச் சொன்னார்கள். நல்ல நண்பர்கள் ஒருபோதும் தன் நண்பர்களுக்கு இடைஞ்சல் தரும் எதையும் செய்ய மாட்டார்கள். கதிரவனைச் சுற்றி இருந்த நண்பர்கள் தங்களின் ஆதாயத்திற்காகச் சொன்ன சில ஆலோசனைகளை கதிரவன் அப்படியே நம்பி அவர்கள் சொல் கேட்டான். தொழில் தொடங்குவது பற்றி தன் மனைவியிடம் ஒருபோதும் கதிரவன் கலந்தாலோசிக்கவில்லை.
தொழில் தொடங்க முதலீட்டுக்கு சில லட்சங்கள் தேவைப்பட்டது. மனைவியின் நகைகளை விற்று கொஞ்சம் பணம் சேர்த்தான். பற்றாக்குறைக்கு அவனுடைய நண்பர்கள் சொன்ன இடத்தில் வட்டிக்குக் கடன் வாங்கினான். அனுபவம் இல்லாத தொழில் ஒன்றைத் தொடங்கினான். முதலில் ஓரளவுக்கு வருமானம் வந்தது. நண்பர்கள் சேர்ந்து கொண்டனர். செலவுகளும் அதிகமானது.
ஆரம்பத்தில் அவனுக்கு கை கொடுத்த அந்தத் தொழில் இரண்டு வருடங்களாகப் பெருத்த நஷ்டத்தையே கொடுத்தது. போலியான நண்பர்கள் அவனை விட்டு விலகினர். அவன் வேலைக்குச் சென்று மாதச் சம்பளம் வாங்கி குடும்பம் நடத்திய பொழுது கிடைத்த நிம்மதி இப்பொழுது அவனிடமிருந்து பறிபோனது. வீட்டிற்கும் வாடகை கொடுக்க முடியாத நிலைமை. பல மாதங்களாக வீட்டு வாடகை பாக்கி இருப்பதால் வீட்டு உரிமையாளரும் அவனை நெருக்கிக் கொண்டிருந்தார். வாங்கிய கடனுக்கு வட்டி கூடக் கொடுக்க முடியாத நிலைமை. கடன் சுமையையும் அதனால் ஏற்பட்ட மனச்சுமையையும் இறக்கி வைப்பதற்கு என்ன வழி என்று தெரியாமல் திணறிக் கொண்டிருந்தான். கடன் வட்டியும் முதலுமாக பத்து லட்சத்தைத் தாண்டியது. கடன் கொடுத்தவர் கதிரவனை நெருக்கிக் கொண்டிருந்தார். கடந்த மூன்று மாத காலமாக எவ்வளவோ சாக்குபோக்குச் சொல்லிச் சமாளித்தான்.
கடன் கொடுத்தவர் இப்பொழுது விடுவதாக இல்லை. "இன்னும் ஒரு வாரத்திற்குள் பணத்திற்கு வழி செய்யவில்லையென்றால் வீட்டிற்கு வந்து கத்துவேன். வழக்குப் போட்டு உன்னையும் உன் குடும்பத்தையும் ஜெயிலுக்கு அனுப்புவேன்" என்று எச்சரித்தது இன்னும் கண் முன்னே நின்று கொண்டே இருந்தது.
அந்த நினைப்பே சட்டென்று உள்ளே ஆழமான வலியை ஏற்படுத்தியது. உறக்கம் கொள்ள முடியாத வலி. தன்னையும் மறந்து தூங்கினாலும் எழுந்தவுடன் தொடரும் வலி. ஒரு வாரமாகச் சரியான தூக்கமும் சாப்பாடும் இல்லாமல் தவித்துக் கொண்டிருந்தான்.

பொ.வைரமணி
கடன் கொடுத்தவர் கெடு முடிந்தது. நாளை காலை கடன் கொடுத்தவர் நிச்சயம் வீட்டுக்கு வந்து கடனைக் கேட்டு சத்தம் போடுவார். அப்படி அவர் வீட்டிற்கு வந்து கத்தினால் மானம் மரியாதை எல்லாம் பறி போய்விடும். வெளியில் எப்படித் தலை காட்டுவது? குடும்பத்தில் உள்ள எல்லோருக்கும் அசிங்கமாகப் போய் விடுமே! எப்படி சமாளிக்கப் போகிறேன் தெரியவில்லையே? தூக்கம் இன்றி தவித்துக் கிடந்தான் கதிரவன்.
குழப்பத்தில் இருந்தவனுக்கு அறிவு புரண்டது. உணர்வு குலைந்து போனது. கலங்கி? போயிருந்த அவனுக்கு கடன் தொல்லையிலிருந்து விடுபட ஒரு வழி தான் தெரிந்தது. குடும்பத்தோடு விஷம் குடித்துச் சாவது ஒன்றே வழி என்ற முடிவுக்கு வந்தான். அன்று காலை வெளியே சென்றவன் இரவு வீட்டிற்கு திரும்பினான்.
தனக்கும், மகன், மகள், மனைவி, ஆகியோருக்கும் ஓட்டலில் உணவு வாங்கிக் கொண்டு வந்தான். அதில் கலந்து சாப்பிடுவதற்கு விஷப்பாட்டிலையும் வாங்கிக் கொண்டு வந்தான்.
வீட்டிற்கு வந்தவன் மகனையும், மகளையும் அருகே உட்கார வைத்துக் கண்கள் கலங்கப் பேசினான்.
"குடும்பத்தோடு விசம் குடிச்சு சாவது ஒன்றே வழி. மானத்தக் காப்பாத்த இதத் தவிர எனக்கு வேற ஒண்ணும் தெரியல. தயவு செஞ்சு என் பேச்சக் கேளுங்க. என்னை மன்னிச்சிருங்க" என்று கதறினான்.
அவனுடைய முடிவை அவனுடைய மனைவியும் கண்ணீரோடு ஏற்றுக்கொண்டாள்.
இருந்தாலும் அவளுடைய உள் மனது பிள்ளைகளை நினைத்து துடித்தது. எந்தத் தவறும் செய்யாமல் இந்த சின்ன வயதிலேயே ஏதுமறியாமல் இந்தப் பிள்ளைகளும் சாகப் போகிறதே என்று நினைத்து வேதனைப்பட்டாள். கண்ணீரோடு மகனையும் மகளையும் கட்டி அணைத்தபடி அழுது கொண்டிருந்தாள்.
கதிரவன் தன் பிள்ளைகள் இருவரிடமும் கடன் தொல்லையிலிருந்து விடுபட இது ஒன்றுதான் வழி. நாம நாலு பேரும் குடும்பத்தோடு விஷம் குடித்துச் சாவோம் என்று சொல்லியதை கேட்டதும் அவனுடைய பதினேழு வயது மகள் அவனைப் பார்த்துக் கேட்டாள்.
"ஏம்பா இது மாதிரி சாகுறது தான் உங்க முடிவா?"
"ஆமாம்மா. இத விட்டா எனக்கு வேற வழி தெரியல. நாளைக்குக் காலையில விடிஞ்சதும் கடன்காரன் வந்தா நம்ம மானம் மரியாத எல்லாம் கெட்டுப் போகும்" "வியாபாரத்துல உங்களுடைய கவனக்குறைவால் ஏற்பட்ட நஷ்டத்திற்கு நாங்களும் அம்மாவும் எப்படிப்பா பொறுப்பாக முடியும்? தொழில் எப்படி நஷ்டமானது? என்ன செய்தீர்கள்? அப்படின்னு கூட எங்களுக்கு தெரியாதே அப்பா! நாங்க மூணு பேரும் ஏம்பா விஷம் குடிச்சு சாகனும்? இது நியாயமாப்பா? கடனைத் திருப்பிக் கொடுக்காம சாவுறது கடன்காரர்களுக்கு நீங்க செய்யுற பெருத்த துரோகம் இல்லையா?"
"அவ்வளவு பெருந்தொகைய நா எப்படிப் புரட்ட முடியும்?" என்றான் கதிரவன்.
"ஏம்பா முடியாது? தொழில மூடுங்க. ஏதாவது வேலைக்குப் போங்க. அம்மாவையும் ஏதாவது வீட்டு வேலைக்கு அனுப்புங்க. எல்லோருமாச் சேர்ந்து கஷ்டப்படுவோம். உழைப்போம். மானம் மரியாதையைக் காப்பாத்தணும்னா நேர்மையா ஏதாவது ஒரு வேல செஞ்சு கடனக் கட்டலாமே! மாசா மாசம் கொஞ்சம் கொஞ்சமா பணம் தந்துடுறேன்னு கடன் கொடுத்தவர்கிட்ட அவகாசம் கேட்டிருக்கலாமே! தொழிலில் நஷ்டம்னா வேல செஞ்சு கொடுக்கலாமேப்பா! நீங்க சொல்லுற இழப்பு பத்து லட்சம் வெறும் நம்பர்ல ஏற்பட்ட இழப்புப்பா. அத மீண்டும் எப்படியும் சம்பாதிக்க முடியும். ஆனா நம் வீட்டு மெம்பரை இழந்துட்டா அத எப்படிச் சம்பாதிப்பது? போனா போனதுதானேப்பா"கதிரவனின் மகள் உருக்கமாகச் சொன்னாள்.
"அதெல்லாம் முடியாதும்மா. இனி எங்கே வேல கெடைக்கப் போகுது?" என்று விரக்தியில் சொன்னான்.
"அப்படின்னா நீங்க செத்துப்போங்கப்பா. எங்க மூணு பேரையும் ஏன் விஷம் குடிக்கச் சொல்லி வற்புறுத்துறீங்க. நீங்க பண்ணுன தப்புக்கு வாழ வேண்டிய நாங்க ஏன் சாகணும்?" கதிரவனின் மகள் சற்று கோபமாகவே பேசினாள்.
"கடன்காரன் உங்களைச் சும்மா விட மாட்டான். துன்புறுத்துவான்" என்று கதிரவன் விரலை நீட்டிச் சொன்னான்.
"நீங்க கடன் வாங்கினீங்க. தொழில் தொடங்குறத பத்தி அம்மாக்கிட்ட கூட ஒரு வார்த்த நீங்க கேட்கல.யார் யாரோ சொல்றாங்கன்னு அவங்க சுயநலத்துக்காக சொன்ன தொழில நீங்க ஆரம்பிச்சிங்க. உங்களோட கவன குறைவுல பணத்தை இழந்தீங்க. இதுக்கு நாங்க எப்படி பொறுப்பாக முடியும்?"
"நீ சின்ன புள்ள தானே. நா சொல்லுறது உனக்குப் புரியாது. கடன்காரன் இதையெல்லாம் பாக்க மாட்டான். குடும்பத்துல இருக்கிற எல்லாரையும் தான் நெருக்குவான்" என்று கதிரவன் தன் மகளைப் பார்த்துச் சொன்னான்.
"அப்படி ஒரு நெலம வந்தா உங்கள் கடனை நா ஏத்துக்குறேன்ப்பா. இந்த வருஷம் படிப்பு முடிஞ்சதும் ஏதாவது ஒரு கடையிலாவது வேல செஞ்சு எத்தனை வருஷமானாலும் கடனை நா அடைக்கிறேன். கடன் கொடுத்தவரிடம் நா கெஞ்சி மன்றாடி அவகாசம் கேட்டுக்குறேன். உங்களுக்கு ஒண்ணு தெரியுமாப்பா? வாழ முடியலையே அப்படின்னு எந்த ஒரு பறவையும் எந்த ஒரு விலங்கும் தற்கொலை பண்ணிக்கிறதில்ல. எல்லாம் தெரிஞ்ச மனுஷன் தான் தற்கொலைங்கிற முடிவுக்குப் போறான். நீங்க வேணும்னா செத்துப் போங்கப்பா. நானாவது இவ்வளவு தூரம் உங்கக்கிட்ட இதப் பத்திச் சொல்றேன். தம்பியப் பாருங்க பாவம் அவனுக்கு விஷயம் என்னான்னு கூட தெரியாம முழிக்கிறான். எங்கள கட்டாயப்படுத்தாதீங்கப்பா" என்று கண்கள் கலங்க கதிரவனின் மகள் சொன்னாள்.
"மறுபடியும் சொல்றேன். நீ சின்னப் புள்ளத் தனமாத்தான் பேசுற"
"எதுப்பா சின்னப் புள்ளத்தனம்? நா சின்ன புள்ளையா இருந்தாலும் எனக்கு மனசுல தைரியம் இருக்கு. நா கோழை இல்ல. மனசுல உரம் உள்ளவங்க வீழ்ச்சி அடைஞ்சாலும் தரையில தூக்கி வீசினாலும் சுவத்துல எறிஞ்ச பந்து மாதிரி மீண்டும் மீண்டும் எந்திருச்சு வருவாங்க. கோழைகள்தாம்பா தரையில உருட்டி விட்ட கல்லைப் போல விழுந்து கெடப்பாங்க. உங்களுக்கு மனசுல உரம் இல்ல. நீங்க வேண்டுமானால் செத்துப் போங்க. எங்கள விஷம் குடிக்கச் சொல்லி வற்புறுத்தாதீங்க" ஆத்திரத்தோடும் அழுகையோடும் அவனுடைய மகள் பேசினாள்.
மகள் பேசியதைக் கேட்டுக் கொண்டிருந்த கதிரவனுக்கு முகமெல்லாம் வியர்த்துக் கொட்டியது. உடம்பெல்லாம் வியர்த்து வழிந்தது. அவர்கள் மூன்று பேரையும் சில வினாடிகள் கண்களைச் சிமிட்டாமல் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தான். அதற்கு மேல் அவன் அவர்களிடம் எதுவும் பேசவில்லை. விஷப் பாட்டிலைக் கையில் எடுத்துக் கொண்டான். விறுவிறுவென்று கொல்லைப் பக்கம் சென்றான். அருகேயிருந்த மண்வெட்டியை எடுத்துப் பள்ளம் தோண்டினான். விஷப்பாட்டிலை திறந்து அதிலிருந்த விஷத்தை ஊற்றி மண்ணைத் தள்ளிப் புதைத்து விட்டு வீட்டிற்குள் வந்தான். வந்தவன் தீர்க்கமான தெளிவான முகத்துடன் மிகவும் கம்பீரமாகச் செல்போனை எடுத்துத் தனக்குக் கடன் கொடுத்தவரை அழைத்தான்.
- “அய்யா சிவ, சிவ அரகரா அரகரா” என்ற ஒரே மந்திரத்துள் சிவனையும், மாலையும் அடக்கி ‘ஒருவனே தேவன்’ என்ற ஒப்பற்ற நெறியினை சுவாமிகள் ஓங்கி ஒலிக்கச் செய்தார்.
- ஆணும் பெண்ணுமாய்க் கூடி, தானதர்மம் செய்து தழைத்து வாழ்ந்திடுமாறு கேட்டுக்கொண்டார்.
சுவாமிகள் புதிய சமயத்தையோ, புதிய கோட்பாட்டையோ, ஏற்படுத்தவில்லை. மேலும், எந்த ஒரு குறிப்பிட்ட தெய்வத்தையும் வணங்கிடுமாறோ, சமய ஆசாரங்கள் செய்திடுமாறோ வற்புறுத்தவில்லை. அவரது சித்தாந்தத்தில் இறைவன் 'தர்மம்' என்ற கோவிலில் உறைகின்றான். அவரது சமயமெல்லாம் 'ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்பதில்' தான் அடங்கிக் கிடந்தது. மனிதன் தன் குறை நீக்கத்திற்கும் நிறைநலம் பெறுவதற்கும் இன்றியமையாத சமயத்தை, மனிதனை நெறிப்படுத்தி அவன் உள்ளத்தைப் பக்குவப்படுத்தும் சாதனமாக சுவாமிகள் கருதியமையால், தாழக்கிடப்பாரையெல்லாம் தற்காத்துக் கொள்ளும் வழியாக எண்ணினார். அவ்வழியே இறைவனை அடைவதான உன்னத வாழ்க்கைநெறி என்பதையும் நன்கு உணர்த்தினார். இரப்போரை ஆதரித்து வாழும் வாழ்க்கை முறையே அவர் புகட்டிய சமய வாழ்வின் உயிர்நாடியாக அமையலாயிற்று.
'கடவுள் ஒருவரே' என்பதில் எல்லாச் சமயங்களும் கொள்கை அளவில் ஒன்றுபட்ட போதிலும் 'அந்த' ஒரே கடவுள் யார்? என்பதில்தான் அவைகளுக்குள்ளே பல்வேறுபட்ட கருத்துகள் எழலாயின. வைணவத்தில் திருமாலும், சைவத்தில் சிவனும், இஸ்லாமில் அல்லாவும், கிறிஸ்தவத்தில் இயேசுவுமென இறை நாயகர்கள் ஏற்றப்பட்டு 'பிறவிப் பெருங்கடலை' நீந்த வெவ்வேறு மார்க்கங்கள் ஏற்படலாயின. ஒவ்வொரு மார்க்கத்திலும் பல்வேறான நம்பிக்கைகளும், பழக்க வழக்கங்களும், சடங்குகளும் இணைந்தன.
சமய நம்பிக்கைகளை மையமாக கொண்டு ஏராளமான புனைந்துரைகள் உருவாக்கப்பட்டன. பல்வேறு பிரிவினை பேதங்களை கற்பித்த சமயங்கள் ஒன்றுக்கொன்று சண்டையிட்டு, மக்கள் பெருமளவில் மாண்டு போன துயர சம்பவங்கள் வரலாற்றின் பக்கங்களில் மட்டுமல்லாது, இன்றைய நாளிலும் காணக்கூடியதாய் உள்ளது.
சமுதாயத்திற்கு நன்னெறி புகட்டப்போகிறோம் என புறப்பட்ட சமயங்கள் சகிப்புத் தன்மையும், சமத்துவ நோக்கமும் தம்முள் இல்லாத காரணத்தால் பேரரசுகளை போன்று ஒன்றையொன்று மேலாண்மை செலுத்துவதில் போட்டியை தங்களுக்குள்ளே வளர்த்துக் கொண்டன; சேவை செய்ய வேண்டியவை செருக்கினை வளர்த்துக் கொண்டன; அன்பைச் காட்ட வேண்டியவை ஆணவத்தைக் காட்டலாயின; சகோதரத்துவத்தை வளர்க்க வேண்டியவை சச்சரவுகளை வளர்க்கலாயின.
மானிட ஒருமைப்பாட்டை ஊக்குவிக்க வேண்டியவை வேறுபாடுகளை உண்டாக்கின. தனிமனித முன்னேற்றத்திற்காகப் போராட வேண்டியவை தன்னிலையை உயர்த்திடலாயின.
மனிதனுள் மறைந்துள்ள தெய்வீகப் பண்புகளை வெளிப்படுத்த வேண்டியன, தீவிரவாத வெறிச்செயல் மூலம் மனிதனை மனிதன் மாய்க்கும் மறப்பண்பினை உசுப்பி விட்டன. எனவே, ஒரே பரம்பொருளை மையமாக கொண்டு தோன்றிய சமயங்கள் யாவும் வேறுபாடுகளை வளர்த்து, சமுதாயத்துக்குள்ளே எதிர் வினைகளை ஏற்படுத்திடலாயின.
தென்பொதிகை தென்றலென சமுதாய வானில் இன்னிசை பாடவேண்டியன முகாரி ராகத்தை ஆங்காங்கே எழுப்பிக் கொண்டிருந்தன. இந்த சமயங்களின் சல்லாபங்களை தான் சுவாமிகள்
"நீ பெரிது நான் பெரிது
நிச்சயங்கள் பார்ப்போமென்று
வான்பெரிது அறியாமல்
மாள்வார் வீண்வேதமுள்ளோர்
ஒருவேதம் தொப்பி
உலகமெல்லாம் போடுவென்பான்
மற்றொரு வேதம் சிலுவை
வையமெல்லாம் போடுவென்பான்
குற்றம் உரைப்பான்
கொடுவேதக்காரனவன்
ஒருவருக்கொருவர்
உனக்கெனக்கென்றே தான்
உறுதியழிந்து ஒன்றிலும்
கை காணாமல்
குறுகி வழிமுட்டிக்
குறை நோவு கொண்டுடைந்து
மறுகித் தவித்து மாள்வார்கள்
வீண் வேதமுள்ளோர்"
என இடித்துரைத்தார். பல்வேறு சமயங்களை சார்ந்தவர்கள் சண்டையிட்டு மாள்வதுடன், சமயங்களுக்கு வெளியே உள்ளவர்கள் கூடக் குற்றம் உரைத்து உறுதியழிந்து போவதையும் எடுத்துரைத்தார்.
சமுதாயத்தில் நிலவிய சமயப் பிரிவுகளையும் அவற்றின் தாக்கத்தையும் கருத்தில் கொண்டு சுவாமிகள் 'ஒரே கடவுள் என்ற கொள்கையை அறிவுறுத்தினார். பல தெய்வ வழிபாட்டில் மக்கள் திருப்தி காணவோ, மனஅமைதி பெறவோ இயலாது என்பதனை தெளிவுற உணர்ந்த சுவாமிகள் இறைஒருமையினை மக்களுக்கு உணர்த்தினார்.
"மண்ணிலே பிறக்கவும்
வழக்கலா துரைக்கவும்
எண்ணிலாத கோடி தேவரென்ன
துன்ன தென்னவும்
கண்ணிலே மணியிருக்கக் கண்
மறைந்தவாறு போய்
எண்ணில் கோடி தேவரு மிதின்
கணவரி ழப்பதே"
என்று கூறுகின்ற அளவிற்கு சமயவாதிகள் தத்தம் சமயத்தையே உயர்வானதென அரற்றித் திரிந்த காலத்தில், விஷ்ணு, சிவன், பிரம்மன், சக்தி அனைத்தும் தன்னுள் அடக்கம் என சுவாமிகள் தெளிவுப்படுத்தினார். விஞ்சை பெற்ற வேளையில்
"சிவனும் நீ நாதனும் நீ திருமாலும் நீ
தவமும் நீ வேதனும் நீ"
என்று வைகுண்டருக்குள் அனைத்தும் அடங்கியுள்ள நிலையைத்தான் அகிலம் வெளிப்படுத்துகின்றது.
சுவாமிகள் தன்னை நாடி வந்தோரிடத்து போதித்தருளுகையில்,
"வைகுண்டருக்கே பதறி
வாழ்வதல்லாமல்
பொய்கொண்ட மற்றோர்க்குப் புத்தி
அயர்ந்து அஞ்சாதுங்கோ"
என்று அறிவுறுத்தினார்.
"தாணுமால் வேதன் தற்பரனார்
ஆணையதாய் ஒன்றில் அடங்குவதே"
என்று அத்வைத தத்துவம் அகிலத்தில் உணர்த்தப்படுகின்றது.
"அய்யா சிவ, சிவ அரகரா அரகரா" என்ற ஒரே மந்திரத்துள் சிவனையும், மாலையும் அடக்கி 'ஒருவனே தேவன்' என்ற ஒப்பற்ற நெறியினை சுவாமிகள் ஓங்கி ஒலிக்கச் செய்தார். மேலும், ஒடுக்கப்பட்ட பிரிவினருக்கு மறுக்கப்பட்ட சிவன், மால் வழிபாட்டை ஒன்றாக இணைத்து புதிய வழிபாட்டு நெறியினை வகுத்து அய்யா ஒரு புரட்சியினை அமைதியாக அரங்கேற்றம் செய்தார்.
அரும்பெறல் யாக்கையைப் பெற்றதின் பெரும்பயன் வறியார்க்கீந்து மகிழ்வதற்காகவே ஆகும். சமண, சாக்கிய சமயங்கள், அன்னதானம், அபயதானம், மருத்துவதானம், சாஸ்திரதானம் என நால்வகை தானங்களை வலியுறுத்தின. மண்ணுயிர்க்கெல்லாம் உண்டியும், உடையும், உறையுளும் அளிப்பதனை அறமாக மணிமேகலை போற்றியது. உண்டி கொடுத்தோரை உயிர் கொடுத்தோராகவே தமிழ்கூறும் நல்லுலகு பாராட்டியது. பின்னாளில் சுவாமி விவேகானந்தரும் 'ஏழை மக்களே நாம் வழிபடும் கடவுள், இடையறாது ஏழைகளைப் பற்றியே எண்ணுங்கள், அவர்களுக்காகவே உழையுங்கள். அங்ஙனம் அவர்களுக்காக யார் உள்ளம் கசிந்துருகி கண்ணீர் வடிக்கிறார்களோ அவர்களே மகாத்மாக்கள்' எனப் புகட்டினார்.
அன்பின் வழியதாக உயிர்நிலையைக் கண்ட சுவாமிகள் தர்மத்தை உயர்நெறியாகக் கண்டார். நாடிவந்த மக்களிடம் தர்மமிட்டு வாழ்ந்திடுமாறு அறிவுறுத்தினார். 'தர்மமே வாழும் சக்கரங்கள்' எனச் சுருங்க கூறி வாழ்வின் முழுப்பொருளும் தர்மத்துள் அடங்குவதாக உரைத்தார்.
"அன்போர்க்கு மீயு
வழிபோவோர்க்கு மீயு
சகலோர்க்கு மீயு
வலியோர்க்கு மீயு
மெலியோர்க்கு மீயு"
என தன்னால் இயன்றவரை கிடைக்கும் சந்தர்ப்பங்களை நழுவவிடாது, எல்லோர்க்கும் ஈந்து இசைபட வாழுமாறு அறிவுறுத்தினார். எனினும் எளியோர்க்கீயும் பண்பினை போற்றினார். எனவே தான்
"தாழக் கிடப்பாரை தற்காப்பதுவே
தர்மம்"
என வரையறை செய்து, தன்னை விடத் தாழ்ந்துள்ளோரை பேணி உயர் நிலைக்கு கொண்டு வருதலையே தர்மம் என விளக்கம் அளித்தார். தர்மம் வழங்குகையில் உண்மை அன்புடையோராய் இரப்போர்க்கு இரங்கிடும் இளகிய மனத்தராய் வாடிய முகம் மலர்ச்சியுறும் வண்ணம், தான் கொடுப்பது சிறிதெனினும் அகமும் முகமும் மலர
"இரப்போர் முகம் பார்த்து ஈவதுவே
நன்று"
என விளக்கினார். அங்ஙனம் இரப்பாரைக் கை கொண்டோரே எனை ஏற்றவர் ஆவர் எனத் தெளிவுறுத்தினார். நல்லவர் இட்ட தர்மம் நாள்தோறும் பெருகும் ஆற்றல் மிக்கது எனவும், அழிக்க நினைத்தாரையே அழித்துவிடும் வல்லமை உடையது' எனவும் எடுத்துரைத்தார். ஆணும் பெண்ணுமாய்க் கூடி, தானதர்மம் செய்து தழைத்து வாழ்ந்திடுமாறு கேட்டுக்கொண்டார். பரம்பொருளை அடைவதற்கான வழி தர்மம் ஒன்றே என்று அவர் கூறினார். அதனை அடுத்த தொடரில் காண்போம்.
- ஞானம் அடைந்த நிலையில் தான் நமது வாழ்க்கை அர்த்தம் உள்ள வாழ்க்கையாக உள்ளது.
- ஞானம் பற்றிய பலவிதமான கதைகள் உள்ளன.
மனித வாழ்வின் மாபெரும் இலக்கு தான் ஞானம் அடைதல்.
" உண்மையில் நாம் அனைவரும் ஞானம் அடைந்த பிறகு தான் வாழவே ஆரம்பிக்கிறோம்", என்று மஹாராஷ்டிரா ஞானி நிசர்க தத்த மகாராஜ் கூறுகிறார்.
ஞானம் அடையாத வரையிலும் நடைபெறும் நம்முடைய வாழ்க்கை அனைத்தும் வாழ்க்கையே கிடையாது என்று அவர் கூறுகிறார்.
ஞானம் அடைந்த நிலையில் தான் நமது வாழ்க்கை அர்த்தம் உள்ள வாழ்க்கையாக உள்ளது.
ஞானம் அடைவது என்றால் என்ன?
நமது தமிழ் நாட்டைச் சேர்ந்த ஒருவர் அமெரிக்காவிலிருந்து போன் செய்தார்: "அய்யா ஞானம் அடைவதாக இருந்தால் நாற்பது வயதுக்குள் ஞானம் அடையவேண்டும் என்று கூறுகிறார்களே அப்படிதானா?"
"ஏன் அப்படிக் கூறுகிறீர்கள்?" என்று அவரிடம் கேட்டபோது அவர், "ஞானம்
அடையும்போது தலையில் ஒரு இடி இறங்கியது போல் இருக்குமாம். நாற்பது வயதைக் கடந்தவர்களால் அதனைத் தாங்க முடியாதாம்" என்று கூறினார்.
"நாற்பது வயதைக் கடந்துவிட்டால் ஒரு இடி தாங்கியை வைத்துக் கொள்ளுங்கள்! " என்று அவரிடம் விளையாட்டாகக் கூறினோம்.
இப்படி ஞானம் பற்றிய பலவிதமான கதைகள் உள்ளன.
என்னுடைய சொந்த வாழ்க்கையில் என்னுடைய கவனம் பதினெட்டாவது வயதில் ஆன்மிகத்தை நோக்கித் திரும்பியது.
நான் வசித்து வந்தது ஒரு சிறிய கிராமம். அந்த காலத்தில், செல்போன், டிவி என்று எவையும் கிடையாது.
ராமகிருஷ்ண பரமஹம்சரது உபதேச மஞ்சரி என்ற பழைய நூல் ஒன்று மட்டும் எங்கள் வீட்டில் இருந்தது. ஆன்மிகம் சம்பந்தமாக அவருடைய கருத்துகள் மட்டுமே எனக்கு அறிமுகம் ஆயின.
இறைவனிடம் பக்தி செய்யவேண்டும், இறைவனை நினைத்து தியானம் செய்ய வேண்டும் என்று அவர் கூறியிருந்தார்.
தியானத்தை எப்படி செய்ய வேண்டும் என்பதெல்லாம் தெரியாது. ஏதோ எனக்குத் தெரிந்தபடி தியானம் செய்து பார்ப்பேன்.
என்னைச் சுற்றிலும் இறைவனே நிறைந்திருப்பது போல் எண்ணிக் கொண்டு தியானம் செய்வேன்.
அப்படி செய்யும் தியானங்கள் கூட ஒரு விதமன அமைதியைக் கொடுக்கும். நாட்கள் செல்லச் செல்ல ஆன்மிகம் சார்ந்த நண்பர்களின் அறிமுகம் கிடைத்தன. ஞானிகள் பலருடைய கருத்துகளும் தெரியவந்தன. இதனால் எனது ஆன்மிக முயற்சிகள் தீவிரமடைய ஆரம்பித்தன.
ஆன்மிகம் சம்பந்தமான முயற்சிகளில் ஈடுபடும் போது நமது மனம் ஒருவிதமான ஆனந்த அனுபவத்துக்குப் போய்விடும். அந்த அனுபவம் சில நாட்களில், நாள் முழுவதும் இருக்கும். பிறகு அது நம்மை விட்டுப் போய் விடும்.
சில சமயங்களில் அந்த அனுபவங்கள் இரண்டு மூன்று நாட்கள் கூட நீடித்திருக்கும். பிறகு அது நம்மை விட்டுப் போய் விடும்.
இப்படி வந்து வந்து போய்க் கொண்டிருக்கும் ஆனந்த அனுபவம் நிரந்தரமாக நம்மிடமே தங்கிவிட்டால் அதுதான் ஞானம்.
இப்படிதான் நாங்கள் நண்பர்கள் அனைவருமே எண்ணிக் கொள்வோம். ஒவ்வொரு ஞானிகளும் இதையே உபதேசிப்பதாக எங்களுக்குத் தோன்றியது.

ஸ்ரீ பகவத்
எங்களுடைய முயற்சி தொடர்ந்தது. அவ்வப்போது நல்லவிதமான அனுபவங்களும் கிடைத்து வந்தன. ஆனால் ஞானத்தை நோக்கிய எங்களுடைய தேடல்கள் ஒரு முடிவுக்கு வராமல், தொடர்கதையாகவே இருந்து வந்தன.
எங்களுடைய முயற்சி என்றுதான் நிறைவு பெறும்? என்றுதான் நாங்கள் ஞானம் அடைவது?
ஜே.கிருஷ்ணமூர்த்தி எனும் ஞானியைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். அவருடைய நூல்கள் ஆரம்பகால சொற்பொழிவுகள் மற்றும் பிற்கால சொற்பொழிவுகள் என இரண்டு வகையாக வெளிவந்துள்ளன.
அவர் தனது ஆரம்பகால சொற்பொழிவுகளில் இவ்வாறு கூறுவார்: "நீங்கள் ஒரு திராட்சையை உருவாக்க வேண்டுமானால் நீங்கள் முதலில் திராட்சை விதையை தோட்டத்தில் விதைக்க வேண்டும். அது முளைத்து செடியாக வளரும். பிறகு பூக்கும், காய்க்கும். அதன் பின்னரே திராட்சை பழம் உங்களுக்குக் கிடைக்கும்...
"ஆனால் எனது சொற்பொழிவைக் கேட்க நீங்கள் வரும் போது நீங்கள் திராட்சை விதையோடு மட்டும் வந்தால் போதும். கூட்டத்தின் முடிவில் நீங்கள் திராட்சைப் பழத்துடன் திரும்பிச் செல்லலாம்!"
ஞானம் அடைவது அவ்வளவு சுலபம் என்பது போல் கூறுவார்.
பிறகு அவர் தமது பிற்கால சொற்பொழிவுகளில் இவ்வாறு கூறுவார்: "நானும் உங்களிடம் அறுபது வருடங்களாகப் பேசி வருகிறேன். நீங்களும் கேட்டு வருகிறீர்கள். ஆனால் மாற்றம் எதுவுமே உங்களிடம் ஏற்பட்டதாக தெரியவில்லை."
ஞானம் அடைவது சுலபமானதா அல்லது கடினமானதா? எவ்வளவு காலம் தான் முயற்சி செய்ய வேண்டும் ? அரசு விடுமுறை நாட்களில் தியானம் செய்வதற்காக, நண்பர்களுடன் மலைப் பிரதேசங்களுக்கு நாங்கள் செல்வதுண்டு. ஒரு முறை மேற்கு தொடர்ச்சி மலையில் கடனா நதியை ஒட்டியிருக்கும் அத்ரி மகரிஷி ஆஸ்ரமத்துக்குப் போயிருந்தோம்.
போகும் வழியில் மலைப் பாதையில் மலைக்குகை ஒன்று இருந்தது. முஸ்லிம்கள் அதனை தர்காவாக்கி வழிபாடு செய்து வந்தனர். அந்த குகையில் முஸ்லிம் துறவி ஒருவர் வந்திருந்து தியானம் செய்வதாகக் கூறினார்கள்.
'நாமும் தியானம் செய்கிறோம்; அவரும் தியானம் செய்கிறார். நாம் இங்கு தங்கியிருக்கும் காலத்தில் அவரும் வந்தால் சந்தித்துப் பேசலாமே ' என்று நாங்கள் பேசிக் கொண்டோம்.
ஆனால் அன்று இரவே அந்த முஸ்லிம் துறவி எங்களைப் பற்றி கேள்விப்பட்டு நாங்கள் இருக்கும் இடத்துக்கே வந்து விட்டார்.
அவர் என்னைப் பார்த்து, "இரவு எத்தனை மணிக்குத் தூங்குவீர்கள்?" என்று கேட்டார்.
அது செல்போன் எதுவும் இல்லாத காலம்.
"இரவு ஒன்பது மணிக்கெல்லாம் படுத்துவிடுவோம்" என்று கூறினேன்.
அவர் மிகவும் ஆதங்கப்பட்டார்:
"அய்யய்யோ! ஒன்பது மணிக்கே படுத்து விடுவீர்களா? இரவில் நாம் தூங்கவே கூடாது. இரவு தான் விழித்திருந்து தவம் செய்ய வேண்டும்!"
அவர் பேசிக்கொண்டு இருந்துவிட்டுப் போய்விட்டார்.
தூக்கம் கண்ணைக் கட்டிக் கொண்டு வந்தது. அவர் சொல்லி விட்டாரே என்று தூங்கவும் பயமாக இருந்தது. பிறகு ஒரு வழியாக தூங்கி விட்டோம்.
இது போல் இன்னும் ஒரு சம்பவம். திருச்செந்தூர் கடற்கரையில் உள்ள ஒரு ஜீவசமாதி ஆலயம் எனது பொறுப்பில் இருந்து வந்தது. வழக்கமாக பூஜை செய்து வருபவர் ஒரு முறை விடுப்பில் சென்றிருந்தார். அங்கு தங்கி இருந்த எண்பது வயதுள்ள சாது ஒருவரை பூஜை செய்ய வைத்திருந்தோம்.
ஓய்வு நேரத்தில் அவருடைய ஆன்மிக அனுபவங்களைக் கேட்டோம்.
அவரும், "ஞானத்தைத் தேடி நான் எனது பதினாறாவது வயதில் வீட்டை விட்டு வெளியேறினேன். நான் போகாத கோயில்களும் கிடையாது; ஆசிரமங்களும் கிடையாது. அது போல் நான் பார்க்காத ஞானிகளும் கிடையாது. எனக்கும் எண்பது வயது ஆகிவிட்டது. இன்னும் அந்த ஞானம் எனக்குக் கிடைத்தபாடில்லை. எப்போதுதான் அது எனக்குக் கிடைக்கும் என்பதும் எனக்குத் தெரியவில்லை" என்று கூறி கண்ணீர் விட்டு அழுதார்.
அதைக்கண்டு எங்களுக்கு பரிதாபம் எதுவும் ஏற்படவில்லை. மாறாக, ஒரு விதமான பயம்தான் எங்களுக்கு ஏற்பட்டது.
பதினெட்டாவது வயதில் ஆரம்பித்த என்னுடைய பயணம் முடிவடைய இன்னும் நான் எவ்வளவு காலம் பாடுபடவேண்டுமோ தெரியவில்லையே என்ற பயம்தான் ஏற்பட்டது.
ராமகிருஷ்ணருடைய படத்தைப் பார்த்து இருக்கிறீர்களா? ஒரு வித பரவச நிலையில் இருப்பது போன்றே அவருடைய புகைப்படங்கள் எல்லாம் காணப்படும்.
வந்து வந்து போய்க் கொண்டிருக்கும் அந்தப் பரவச நிலை நிரந்தரமாக நம்மோடு தங்கிவிடுமேயானால் அது தான் ஞானம் என்பது என்னுடைய கருத்து. அதனை அடையவே தேடு தேடென்று தேடிக் கொண்டிருந்தேன். பதினெட்டாவது வயதில் ஆரம்பித்த எனது தவ முயற்சிகள், இருபத்து ஒன்பது வருட போராட்டத்திற்குப் பிறகு எனது நாற்பத்து ஏழாவது வயதில் பூர்த்தி அடைந்தது.
எந்தவொரு நிரந்தரமான பரவசநிலையைத் தேடி, படாத பாடுபட்டு வந்தேனோ, அந்தப் பரவச நிலை என்னை ஆட்கொண்டுவிட்டது.
இருபத்து நான்கு மணி நேரமும் பரவசநிலைதான். தூங்கும் போது கூட அந்தப் பரவச நிலையும் இயங்கிக் கொண்டுதான் இருக்கும்.
அந்தப் பரவச நிலையானது, ஒரு நாள் இரண்டு நாட்கள் மட்டும் அல்ல, வருடம் முழுவதும் இயங்கியது.
ஒவ்வொரு விநாடியிலும் ஆனந்த போதையில் மிதந்து கொண்டிருந்தேன்.
அந்த போதை உணர்வை என்னால் மட்டுமே உணரமுடியும். என்னோடு தொடர்பு கொள்பவர்களால் எனது அனுபவ நிலையை உணர முடியாது.
அக்காலத்தில் நான் வழக்குரைஞராக பணியாற்றி வந்தேன். இந்த அனுபவத்தின் காரணமாக எனது பணிகளில் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை.
ஆன்மிகத்தின் உச்சநிலையான ஞானத்தை அடைந்து விட்டோம் என்ற திருப்தி ஏற்பட்டது. ஆன்மிக ஆய்வுகளில் கரை கண்ட நமது நண்பர்களும் நான் அடைந்த ஞானத்தை உறுதி செய்து அங்கீகரித்தனர்.
வாழ்க்கை என்றால் ஆயிரமாயிரம் பிரச்சனைகள் இருக்கத்தான் செய்யும்.
ஆனால் எந்தப் பிரச்சனையாக இருந்தாலும் எள் அளவு கூட என்னைப் பாதிக்கவில்லை.
எனது ஆனந்த அனுபவங்களே கவசமாக இருந்து என்னைக் காவல் காத்தன.
இதுதான் ஞானமா?
தொடர்புக்கு வாட்ஸப் - 8608680532
- கல்லூரிக்குச் சென்ற பின்பு நிறைய போட்டிகளில் பங்கேற்பதற்கான வாய்ப்புகள் கிட்டின.
- வெளியூர்களில் மட்டுமல்ல, நாம் வசிக்கின்ற ஊர்களிலும் பொய் புரட்டு பித்தலாட்டம் அவலட்சணமான செயல்கள் எல்லாமே உண்டு.
'கடந்த காலத்தின் தவறுகளைச் சரிசெய்வது சாத்தியமற்றது. ஆனால், அவற்றினால் கிடைத்த அனுபவத்தின் மூலம் நாம் பயனடையலாம்'.
-ஜார்ஜ் வாஷிங்டன்
ஒவ்வொரு நாளும் வாழ்க்கை நமக்குப் பல பாடங்களைக் கற்றுத் தருகின்றது. கற்றுக்கொண்டு யாரும் வாழ்க்கையைத் தொடங்குவதில்லை, அன்றாட வாழ்க்கையிலிருந்தே நாம் கற்றுக் கொள்கின்றோம்.
குழந்தைப் பருவத்திலிருந்தே 'கற்றல்' தொடங்கிவிடுகிறது. அன்றாட அனுபவங்கள் அரிய உண்மைகளை நமக்கு உணர்த்துகின்றன. வீட்டிலிருந்து கடைவீதிக்குச் சென்று வருவதற்குள் எத்தனையோ காட்சிகளைப் பார்க்கின்றோம்.
முடித்திருத்தகத்தில் காத்திருக்கும் நேரத்தில், நம் செவிகளுக்குப் பல கதைகள் கிடைக்கின்றன. வீட்டு வாசலில் கீரைக் கூடையை இறக்கிவைத்துவிட்டு நிற்கும் கிழவியிடம், கீரை வாங்கும் சில நிமிட நேரத்திற்குள் அவள் தன் பாடுகளைக் கூறிவிடுகிறாள்.
பூங்காக்களிலும் பொழுதுபோக்குக் கூடங்களிலும் காதலர்கள் ஜோடி ஜோடியாய்க் கைகோத்துத் திரிகின்றனர். ஒரு ஐஸ்கிரீம் வாங்கி இருவரும் ருசிக்கின்றனர்; ரசிக்கின்றனர். வாய்ப்புக் கிடைக்காதவனுக்கோ ஏக்கம்.
ஒருவன் தன் தொழிலில் தான் அடைந்த நஷ்டத்தைச் சொல்லிப் புலம்புகின்றான். அவனுக்கு ஆறுதல் சொல்கின்றவன், அவன் கஷ்டங்களை எல்லாம் கதைபோல் கேட்கின்றான்.
கேட்பதிலும் பார்ப்பதிலும் பெறுகின்ற அறிவு ஒருவகை; பட்டறிவதால் பெறுகின்ற ஞானம் தனிவகை.
பள்ளிப் பருவத்திலேயே கவிதை எழுதத் தொடங்கிய எனக்கு, இலக்கியப் போட்டிகளில் பங்கேற்பதிலும் பரிசுகளைப் பெறுவதிலும் ஓர் அலாதி பிரியம்.
கல்லூரிக்குச் சென்ற பின்பு நிறைய போட்டிகளில் பங்கேற்பதற்கான வாய்ப்புகள் கிட்டின. பல்வேறு கல்லூரிகளில் நடைபெற்ற கவிதை மற்றும் பேச்சுப் போட்டிகளில் கலந்துகொண்டு பெற்ற பரிசுகள் ஏராளம்.
அப்போது, சென்னையிலிருந்து வெளிவந்து கொண்டிருந்த ஓர் இலக்கிய மாத இதழ், மாணவர்களுக்கான ஒரு கவிதைப் போட்டியை அறிவித்திருந்தது. அதற்கான தலைப்பும் கொடுக்கப்பட்டிருந்தது. அதைப் பார்த்ததும், உடனடியாகக் கவிதை எழுதி அஞ்சல் செய்து விட்டேன்.
ஒரு மாதம் கழித்து, என் பெயரில் கல்லூரி முகவரிக்கு அந்தப் பத்திரிகை அலுவலகத்திலிருந்து ஒரு கடிதம் வந்தது. பிரித்துப் பார்த்த போது எனக்கு இன்ப அதிர்ச்சி. என் கவிதை முதல் பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாகவும், சென்னையில் நடைபெறும் விழாவில் அதற்கான பரிசு வழங்கப்பட உள்ளதாகவும் அதில் தகவல் இருந்தது. விழா நாள், தேதி, நேரம் ஆகியவற்றுடன், எனக்கு முறையான அழைப்பும் விடுக்கப்பட்டிருந்தது.
குறித்த நாளில் நெல்லையிலிருந்து சென்னைக்குப் பயணமானேன். செலவுக்குப் போதுமான பணம் தந்து, என் பெற்றோர் ரயில் நிலையம் வரை வந்து என்னை வழியனுப்பி வைத்தனர். சென்னைக்கு அதுதான் என் முதல் பயணம்.
மறுநாள் காலை சென்னை எழும்பூர் வந்து இறங்கியதும், அங்கு கண்ட ஜனத்திரளும் பரபரப்பும் என்னை வியப்பில் ஆழ்த்தின. நான் என் சூட்கேஸை தூக்கிக்கொண்டு வெளியே வரவும், ஆட்டோ டிரைவர்கள் வேகமாக என்னை நெருங்க, அவர்களில் ஒருவன் என் சூட்கேஸை வலுக்கட்டாயமாகப் பற்றிக்கொண்டு, 'எங்கப்பா போகணும்' என்றான்.
'லா்டஜூக்கு' என்றேன் தயக்கத்துடன்.
'எந்த லாட்ஜ்?'
'ஏதாவது...'
'சரி, வா...'
பிராட்வேயில் ஒரு லாட்ஜ் முன் என்னை இறக்கிவிட்டான். அவனிடம் பேரம் பேச எனக்குத் தெரியவில்லை. கேட்ட தொகையைக் கொடுத்துவிட்டேன். அந்த லாட்ஜ் பொறுப்பாளர் என்னை ஏற இறங்கப் பார்த்தார். கடிதத்தைக் காட்டினேன். பின்னர்தான் சம்மதித்தார். மூன்று நாட்களுக்கு அறை எடுத்தேன்.
மறுநாள் விழா. எனவே, அன்று பகல் முழுவதும் சென்னையில் சில முக்கிய இடங்களைக் கண்டு களித்தேன். மாலையில் மூர் மார்க்கெட் செல்ல ஆசைப்பட்டு, ஆட்டோவில் அங்கு சென்றேன். வெளியூர்க்காரன் என்பதைத் தெரிந்துகொண்ட அந்த ஆட்டோகாரனும், என்னிடம் மிக அதிகமாகவே வாங்கிக் கொண்டான்.
மூர் மார்கெட்டிற்குள் நுழைந்தபோது எனக்கு ஒரே ஆச்சரியம். எத்தனை எத்தனைக் கடைகள்! ஊசி பாசி, புடவை, துணிமணி, டேப் ரிக்கார்டர், பிரிட்ஜ், டிவி, வாஷிங் மெஷின் காஸ்மெடிக்ஸ் டாய்ஸ்... அப்பப்பா அங்கு இல்லாத பொருட்களே இல்லை. வேடிக்கை பார்த்தபடி நடந்து கொண்டிருந்தபோது, நன்கு பழக்கமானவனைப்போல் ஒருவன் சிரித்துக்கொண்டு என் முன்னே வந்து நின்றான். அவன் கையில் ஒரு 'ஷர்ட் பிட்' இருந்தது.
'வா சார்... ஷர்ட் பிட் பாக்குறியா?' என்றான்.
'இல்ல, வேண்டாம்' என்று சொல்லிவிட்டு நகர்ந்தேன். அவன் என்னைத் தொடர்ந்தான்.
'சும்மா பாரு சார்... புடிச்சா வாங்கு' என்று சொல்லி, என் கையில் அந்த 'ஷர்ட் பிட்'டை தினித்துவிட்டான்.
அவன் சொன்னதுக்காக பார்த்துவிட்டு, அதனை அவனிடம் திருப்பிக் கொடுத்தேன். 'ஏம்ப்பா?' என்றான். 'வேண்டாம்' என்றேன். அவன் முகம் கடுகடுப்பானது.
'ஏய் இன்னா... பொருள தொட்டு வாங்கிக்கினு காசு குடுக்காம போயிடுவியா... இருநூறு எடு' என்று அவன் சொல்ல, வேறு நாலுபேர் அங்கு வந்துவிட்டனர்.
'இன்னாத்துக்கு வம்பு. நூத்தம்பது குடுத்துட்டு எடுத்துக்கினு போ' என்றான் அவர்களில் ஒருவன்.
அந்தக் கும்பலிடமிருந்து தப்பிக்க எனக்கு வழி தெரியவில்லை. எனது பேன்ட் பாக்கெட்டுகள் மற்றும் சட்டைப்பை ஆகியவற்றில் பணம் வைத்திருந்தேன். எதில் எவ்வளவு என்று தெரியாமல், வலதுபுற பேன்ட் பாக்கெட்டிலிருந்து மெல்ல பணத்தை எடுக்கவும் வெடுக்கென்று பிடுங்கிக்கொண்டு நகர்ந்தான் அவன். மற்ற நால்வரும் கலைந்து சென்றனர். முப்பது ரூபாய்கூட பெறாத அந்த ஷர்ட் பிட்டிற்கு முந்நூறு ரூபாயைப் பறிகொடுத்து நின்றேன். 'போதுமடா சாமி' என்று மூர் மார்க்கெட்டில் இருந்து வெளியேறி, சில பத்திரிகைகளை வாங்கிக்கொண்டு, ஆட்டோ பிடித்து லாட்ஜூக்கு சென்றுவிட்டேன். இங்கு எல்லா இடங்களிலும் ஏமாற்றுவதற்கென்றே ஒரு கூட்டம் திரிகிறதே என்பதை எண்ணி மனம் சங்கடப்பட்டது.

கவிஞர் தியாரூ, 9940056332
மறுநாள், அந்தப் பத்திரிகை வளாகத்தில் பரிசளிப்பு விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. கவிதைப் போட்டிக்கான முதல் பரிசினை மேடையில் பெற்றபோது பெருமிதமாக இருந்தது.
விழா முடிந்து லாட்ஜ் அறைக்கு வந்தேன். பொழுது போகவில்லை. அதே சாலையில் அங்குமிங்குமாகச் சிறிது நேரம் நடந்தேன். பக்கத்தில் இருந்த ஒரு ஓட்டலில் இரவு உணவை முடித்துவிட்டு லாட்ஜூக்கு வந்தபின், 'சினிமாவுக்குப் போய்வரலாமே' என்ற எண்ணம் வந்தது. அப்போது இரவு ஒன்பது மணி இருக்கும்.
அங்கிருந்து நடக்க ஆரம்பித்தேன். சற்றுத் தொலைவில் ஒரு தியேட்டர். அந்தத் தியேட்டரில் பத்து மணிக் காட்சி, படம் பார்த்துவிட்டு வெளியே வந்தபோது பன்னிரெண்டரை மணி. பைக்குகளில் வந்திருந்தவர்கள் விருட் விருட் என்று போய்விட்டனர். நடந்து வந்தவர்களும் ஒருசில நிமிடங்களில் வெவ்வேறு திசைகளில் சென்றுவிட்டனர். நான்மட்டும் தனியாளாய்...பயம் உந்தித் தள்ள வேக வேகமாக நடந்தேன். என்னைத் தவிர வேறு யாருமே இல்லை. பதற்றத்தில் பயம் அதிகமானது. மங்கலான தெருவிளக்கு விட்டுவிட்டு எரிந்தது.
எப்படியோ லாட்ஜை நெருங்கிவிட்டேன். ஓட்டமும் நடையுமாய்க் கிட்ட வந்தபோது - லாட்ஜூக்கு சற்று முன்னதாக, சிதிலமடைந்து பயனற்றுக் கிடந்த பிளாட்பாரத்தின் ஓரத்தில் கண்ட காட்சி என்னைத் தூக்கிவாரிப் போட்டது. அந்தரங்க விஷயம் அங்கே வெளியரங்கமாய் நடந்து கொண்டிருந்தது.
யாரோ ஒருவன் யாரோ ஒருத்தியுடன், உல்லாசத்தின் உச்சத்தில் இயங்கிக் கொண்டிருந்தான். எனக்கு வியர்த்துக் கொட்டியது. தடதட என்று ஓடிச் சென்று லாட்ஜ் கதவைத் தட்டினேன். தூக்கத்திலிருந்து எழுந்து வந்து கதவைத் திறந்த லாட்ஜ் பொறுப்பாளருக்குக் கோபம் பொத்துக்கொண்டு வந்தது.
'எதுவும் சொல்லாம கொள்ளாம வெளியே போய்ட்டு நடுச்சாமத்துல வந்து நிக்கிறியே... எவனாவது அடிச்சிப்போட்டுப்போனா என்ன பண்ணுவே. இந்த மாதிரி விளையாட்டெல்லாம் இங்க வச்சிக்காத' என்று சொல்லிவிட்டுப் படுக்கச் சென்றுவிட்டார்.
நான் என் அறைக்குச் சென்றபின்னும், எனக்குள் பதற்றம் தணியவில்லை. 'இப்படிகூட தெருவில் நடக்குமா! இது என்னடா ஊரு... மானங்கெட்ட பொழைப்பால்ல இருக்கு'. கண்ட காட்சியினால் ஏற்பட்ட அதிர்ச்சியோ கிளர்ச்சியோ, வெகுநேரம் வரை தூங்க முடியவில்லை.
காலையில் எழுந்ததும் வெளியே வந்து, ஆட்கள் புளங்காத அந்த பிளாட்பாரத்தைப் பார்த்தேன். மூட்டை முடிச்சுகளுடன் கந்தலான அழுக்கு விரிப்பின்மேல், ஒரு பிச்சைக்காரி படுத்திருந்தாள்.
என் முதல் சென்னைப் பயணம் மிக மிக வித்தியாசமான அனுபவங்களை எனக்குத் தந்தது. அவற்றிலிருந்து பல பாடங்களைக் கற்றுக்கொள்ள முடிந்தது. முன்பின் தெரியாத இடங்களுக்குச் செல்கின்ற போதும், சம்பந்தமே இல்லாமல் சிரித்துக்கொண்டு நம்மை நெருங்கி வருகின்றவர்களை எதிர்கொள்கின்ற தருணங்களிலும் அதிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
வெளியூர்களுக்குப் பயணிக்கும்போது, கையிருப்பை ஒரே இடத்தில் வைக்கக்கூடாது. பேன்ட் உள்பாக்கெட், வெளி பாக்கெட், மணிபர்ஸ், சூட்கேஸ் என்று பலவற்றில் பிரித்து வைத்துக்கொள்ள வேண்டும். தங்கியிருக்கும் இடத்தை விட்டு, இரவு ஒன்பது மணிக்குமேல் தனிநபராக எங்கும் செல்லக் கூடாது.
கடைவீதிகளில் நடக்கும்போது, 'வெளியூர் வாசி' என்பதைக் காட்டிக்கொண்டால், ஏமாற்றிப் பறிப்பதற்கென்றே அங்கே ஒருசிலர் இருப்பார்கள். விபரம் தெரியாதவன்போல் பேந்தப் பேந்த விழித்துக்கொண்டு நின்றால், அடுத்த நிமிடமே எவனோ ஒருவன் நம் தோளில் ஏறி உட்கார்ந்து கொள்வான்.
வெளியூர்களில் மட்டுமல்ல, நாம் வசிக்கின்ற ஊர்களிலும் பொய் புரட்டு பித்தலாட்டம் அவலட்சணமான செயல்கள் எல்லாமே உண்டு. எனினும், உள்ளூரென்றால் உதவிக்குக் குடும்பத்தினர் நண்பர்கள் எனப் பலர் நமக்கு இருப்பார்கள். ஆனால், பழக்கமில்லாத வெளியூர்களில் நமக்கு நாம்தானே பாதுகாப்பு. எனவேதான், கூடுதல் கவனமும் சாதுர்யமும் அவசியமாகின்றன.
எல்லோருக்கும் அனுபவங்கள் ஏற்படுகின்றன. பல விஷயங்களைக் கேட்டு, பல விஷயங்களைச் செய்து பார்த்து, இனியும் அதைச் செய்வதா வேண்டாமா, செய்தால் என்ன பலன், செய்யாமலிருந்தால் என்ன நன்மை என்று தெரிந்து கொள்கின்றோம். நல்லவற்றைப் பற்றிப் பிடித்துக்கொள்ள வேண்டும். ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும் காரியங்களில் இருந்து விலகிவிட வேண்டும்.
வாழ்வில் எல்லாமே அனுபவங்கள்தான்; பாடங்கள்தான். அனுபவங்களைப் பெறுவதற்காகவே தவறான செயல்களில் ஈடுபடுவது, வாழ்வை அழிவிற்குள் கொண்டு செல்லும். எதிர்பாராமல் ஏற்படுகின்ற மோசமான அனுபவங்களில் இருந்து, நாம் விழிப்புணர்வைப் பெற்றுக்கொள்ள வேண்டும். அதுதான் நமக்கும், நம்மைச் சார்ந்திருப்போர்க்கும் நம்பகமான பாதுகாப்பு.






