என் மலர்
2025 - ஒரு பார்வை

REWIND 2025: போட்டியில் அதிரடி... களத்தில் அடிதடி... ஐபிஎல் தொடரில் மோதிக்கொண்ட வீரர்கள்
- கருண் நாயர் மற்றும் பும்ராவுக்கு இடையே மோதல் எழுந்தது.
- ஹர்திக் பாண்ட்யா மற்றும் சுப்மன் கில் இடையே ஈகோ மோதல் எழுந்தது.
ஐபிஎல் தொடரின் 18-வது சீசன் மார்ச் 22-ந் தேதி தொடங்கி ஜுன் 25-ந் தேதி வரை நடந்தது. இந்த தொடரின் போது வீரர்கள் களத்தில் மோதிக் கொண்ட சம்பவங்கள் அரங்கேறியது. அது தொடர்பான விவரங்களை இந்த செய்தியின் மூலம் பார்க்கலாம்.
ஐபிஎல் தொடரின் லீக் போட்டியின் ஒரு ஆட்டத்தில் டெல்லி-மும்பை அணிகள் மோதின. இதில் முதலில் விளையாடிய மும்பை அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 19 ஓவரில் 193 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
ஒரு கட்டத்தில் டெல்லி அணி எளிதாக வெற்றி பெறும் என்ற நிலையில் இருந்தது. அதற்கு முக்கிய காரணமாக கருண் நாயர் இருந்தார். அவர் மும்பை இந்தியன்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர்களான தீபக் சாஹர், ட்ரென்ட் போல்ட் மற்றும் பும்ரா ஆகியோரின் பந்துவீச்சில் பவுண்டரி சிக்சர்களுமாக பறக்க விட்டார்.
அந்த சூழலில் கருண் நாயர் மற்றும் பும்ராவுக்கு இடையே மோதல் எழுந்தது. பும்ராவின் ஒரே ஓவரில் கருண் நாயர் 18 ரன்கள் விளாசினார். அந்த ஓவரில் 2 ரன்களுக்காக ஓடும் போது பும்ரா மீது எதிர்பாராத விதமாக கருண் நாயர் மோதினார். மோதியவுடன் கருண் நாயர் மன்னிப்பும் கேட்டுக் கொண்டார்.
அந்த ஓவர் முடிந்தவுடன் இடைவேளை விடப்பட்டது. அப்போது பும்ரா, கருண் நாயர் அருகே சென்று அவரை சீண்டும் வகையில் பேசினார். தான் எந்த தவறும் செய்யவில்லை என தனது பக்க நியாயத்தை சொல்ல முன் வந்தார் கருண் நாயர்.
நிலைமை எல்லை மீறி செல்வதை பார்த்த மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா கருண் நாயர் அருகே சென்று அவரை சமாதானம் செய்து அனுப்பி வைத்தார். பும்ராவை மற்ற மும்பை இந்தியன்ஸ் வீரர்கள் சமாதானம் செய்தனர்.
மற்றொரு ஆட்டத்தில் டெல்லி- கொல்கத்தா அணிகள் மோதின. இந்த போட்டியில் கொல்கத்தா அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. போட்டி முடிந்த பிறகு வழக்கம் போல இரு அணி வீரர்களும் நட்பாக பேசிக்கொண்டனர். அப்போது கொல்கத்தா வீரர் ரிங்கு சிங் கன்னத்தில் டெல்லி வீரர் குல்தீப் யாதவ் இருமுறை அறைவார். இதனால் ரிங்கு சிங் சோகமான ரியாக்ஷன் கொடுத்தார். இது சமூக வலைதளங்களில் வைரலாகி வந்தது.
இது ரசிகர்களிடையே பெரும் விவாதமாக மாறியது. இது குறித்து ஐபிஎல் நிர்வாகம் விசாரிக்க வேண்டும் என்றும் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பிசிசிஐ-யை கேட்டுக் கொண்டனர்.
இதனையடுத்து குல்தீப் யாதவ் - ரிங்கு சிங் ஆகியோருக்கிடையே எந்த சண்டையும் இல்லை என்று கொல்கத்தா மற்றும் டெல்லி அணி நிர்வாகங்கள் தெளிவுபடுத்தியுள்ளன.
அதாவது குல்தீப் யாதவ் 2016 முதல் 2021 வரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடினார். அந்த காலகட்டங்களில் இருவரும் ஹோட்டலில் ஒன்றாக தூங்குவது, சாப்பிடுவது உட்பட பல விஷயங்களில் நட்பாக இருந்துள்ளனர். அந்தப் புகைப்படங்களை ஒன்று சேர்த்து எக்ஸ்தளத்தில் வீடியோ ஆதாரமாக கொல்கத்தா பதிவிட்டது.
மேலும் குல்தீப் - ரிங்கு ஆகிய இருவரும் ஒன்றாக சேர்ந்து வித்தியாசமாக போஸ் கொடுத்து எடுத்துக்கொண்ட வீடியோவையும் கொல்கத்தா நிர்வாகம் சேர்த்து பதிவிட்டுள்ளது. அதே வீடியோவை "நட்பு மட்டுமே" என்ற தலைப்பில் டெல்லி அணியும் வெளியிட்டுள்ளது.
குவாலிபையர் 1 சுற்றில் புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்த பஞ்சாப் கிங்ஸ், 2-வது இடம் பெற்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்கொண்டது. இதில் ஆர்சிபி அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த ஆட்டத்தில் பஞ்சாப் அணியில் 20-வயதான முஷீர் கான் அறிமுக வீரராக களமிறங்கினார். இருப்பினும் 3 பந்துகளை எதிர்கொண்ட அவர் டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார்.
அவர் பேட்டிங் செய்ய வந்தபோது ஸ்லீப் பகுதியில் பீல்டிங் நின்ற விராட் கோலி, சைகை மூலம் சக வீரரிடம் 'வாட்டர் பாய்' என்று கூறுவார். இதனை கண்ட ரசிகர்கள் பலர் இப்படி ஒரு ஜாம்பவான் வீரர் அறிமுக வீரரை ஸ்லெட்ஜிங் செய்வது மிகவும் தவறானது என்று விராட் கோலியை விமர்சித்தனர்.
இந்த போட்டியில் முஷீர் கான் பேட்டிங் செய்ய களமிறங்குவதற்கு சில ஓவர்களுக்கு முன் பெவிலியனில் இருந்து களத்தில் இருந்த சக வீரர்களுக்கு தண்ணீர் கொண்டு வந்தார். இதனை குறிப்பிட்டு விராட் கோலி கிண்டலடித்ததாக ரசிகர்கள் விமர்சித்தனர்.
69-வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் குவாலிபையர் சுற்றுக்கு பஞ்சாப் அணி முன்னேறியது.
இந்த போட்டி முடிவடைந்த பின்னர் ஹர்திக் மற்றும் ஷ்ரேயாஸ் தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகியது.
அந்த வீடியோவில், போட்டி முடிந்ததும் இரு அணி வீரர்களும் கைகுலுக்கி கொண்டனர். அப்போது ஹர்திக் மற்றும் ஷ்ரேயாஸ் இருவரும் கைகுலுக்கி கொள்ளாமல் சென்றனர். ஒருவரை ஒருவர் பார்க்க கூட இல்லை.
இரண்டு முறை ஷ்ரேயாஸ் ஐயரை நோக்கி வரும் ஹர்திக் அவரை கண்டுகொள்ளாமல் சென்றார். இது சமூக வலைதளங்களில் பேசும் பொருளானது.

இருவரும் முன்னரே கைகுலுக்கி கொண்டிருக்கலாம். அதனால் மற்ற வீரர்களுடன் மட்டும் கைகுலுக்கி சென்றிருக்கலாம். ஆனாலும் இந்த வீடியோவை வைத்து மும்பை மற்றும் பஞ்சாப் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தங்களது கருத்துக்களை கூறினர்.
இதனை தொடர்ந்து எலிமினேட்டர் போட்டியில் மும்பை- குஜராத் அணிகள் மோதின. இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று குவாலிபையர் 2-க்கு முன்னேறியது.
இந்த போட்டியின் போது ஹர்திக் பாண்ட்யா மற்றும் சுப்மன் கில் இடையே ஈகோ மோதல் எழுந்துள்ளதாக சமூக வலைதளங்களில் வீடியோ மூலம் கருத்துக்கள் வெளியாகியது.
டாஸ் நிகழ்வின் போது ஹர்திக் பாண்ட்யா, எதிர் அணியின் கேப்டனான சுப்மன் கில்லுக்கு கை குலுக்க வந்தார். ஆனால், சுப்மன் கில் கண்டுகொள்ளாமல் அவரை கடந்து சென்றார். இதனை தொடர்ந்து சுப்மன் கில் 1 ரன்னில் வெளியேறினார். அப்போது ஹர்திக் பாண்ட்யா ஓடிவந்து சுப்மன் கில் முகத்துக்கு நேராக சத்தமிட்டு, அவரது விக்கெட்டை கொண்டாடினார். இந்த இரண்டு சம்பவங்களும் சமூக வலைதளங்களில் பேசும் பொருளாக மாறியது.

சுப்மன் கில் இதற்கு முன்பும் இதே போல எதிர் அணி கேப்டன்களுக்கு கை கொடுக்காமல் சென்ற விவகாரம் சர்ச்சையாக மாறி இருந்தது. இதற்கு முன், ரிஷப் பண்ட் ஒரு போட்டியின் முடிவில் பேசுவதற்கு வந்த போது சுப்மன் கில் அவரைத் தவிர்த்து விட்டுச் சென்றார்.
இந்நிலையில் அன்பைத் தவிர வேறொன்றுமில்லை (இணையத்தில் நீங்கள் பார்க்கும் அனைத்தையும் நம்பாதீர்கள்) குறிப்பிட்டு ஹர்திக் பாண்ட்யாவை டேக் செய்து இன்ஸ்டாகிராமில் கில் ஸ்டோரி வைத்துள்ளார். இது வைரலாகியது.






