என் மலர்
புதுச்சேரி

முருகன் மாநாடு தமிழக அரசியலில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் - எல்.முருகன்
- மோடி தலைமையிலான அரசின் கொள்கை முடிவுகளால் நாடு வளர்ச்சி பெற்றுள்ளது கண்கூடாக தெரிகிறது.
- ராகுல் காந்தி கண்களை மூடிக்கொண்டு கருத்து தெரிவிக்கிறார்.
புதுச்சேரி:
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் 11 ஆண்டு கால சாதனை விளக்க புத்தக்கத்தை புதுச்சேரி பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் வெளியிட்டு மத்திய அமைச்சர் முருகன் நிருபர்களிடம் கூறியதாவது:-
பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 3-வது முறையாக ஆட்சியை பிடித்து 11 ஆண்டுகளை முடித்து 12-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. மோடி தலைமையிலான அரசின் கொள்கை முடிவுகளால் நாடு வளர்ச்சி பெற்றுள்ளது கண்கூடாக தெரிகிறது.
2014-ம் ஆண்டுக்கு முன்பு ஆட்சியில் இருந்தவர்கள் முடிவு எடுக்கும் தைரியமற்றவர்களாக இருந்தனர். அதோடு 2-ஜி, காமன்வெல்த் என அனைத்து துறைகளிலும் ஊழல், முறைகேடுகள் தலைவிரித்தாடியது. பிரதமர் மோடி நாட்டின் வளர்ச்சி ஒன்றையே குறிக்கோளாக கொண்டு சேவை, சிறந்த நிர்வாகம், ஏழைகளின் நலன் ஆகியவற்றை முன்வைத்து நாட்டை சீரான வளர்ச்சிக்கு கொண்டு சென்றார்.
நாடு சுதந்திரம் அடைந்து 100-வது ஆண்டை 2047-ல் அடியெடுத்து வைக்கும்போது வல்லரசாக்க திட்டமிட்டு பிரதமர் செயல்பட்டு வருகிறார். புதுச்சேரியிலும் பல்வேறு மத்திய அரசு திட்டங்கள் 100 சதவீதம் செயல்படுத்தப்பட்டுள்ளது. கடந்த ஆட்சியில் நிறுத்தப்பட்ட இலவச ரேஷன் அரிசியானது தற்போது ரேஷன் கடைகள் திறக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளது.
சேதராப்பட்டில் கிடப்பில் கிடந்த 750 ஏக்கர் புதிய தொழிற்சாலைகளை கொண்டு வர ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் 4000-ம் பேருக்கு அரசு வேலை தரப்பட்டுள்ளது. பெஸ்ட் புதுச்சேரியாக மாற்றும் பணி தொடர்கிறது.
ராகுல் காந்தி கண்களை மூடிக்கொண்டு கருத்து தெரிவிக்கிறார். அவர் கண்ணை திறந்து நாட்டின் வளர்ச்சியை பார்க்க வேண்டும். நம்மால் தயாரிக்கப்பட்ட ராணுவ தளவாடங்கள் மூலம் பாகிஸ்தானுக்கும், தீவிரவாதிகளுக்கும் "ஆபரேஷன் சிந்தூர்" நடவடிக்கை மூலம் பதிலடி தந்துள்ளோம். உலகத்துக்கும் ஒரு செய்தி சொல்லியுள்ளோம்.
மணிப்பூரில் அமைதி நிலவ பிரதமர் நேரடியாக கவனம் செலுத்தி வருகிறார். 2026-ல் தேசிய ஜனநாயகக்கூட்டணி தமிழகத்தில் பெரும் வெற்றி பெறும். அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி அமைந்ததில் இருந்து தி.மு.க. கூட்டணி கலகலத்து போயுள்ளது.
இதனால் அந்த தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சித் தலைவர்கள் தடுமாற்றத்தை வெளிப்படுத்தி பேசிவருகிறார்கள்.
தமிழகத்தில் 2024 பாராளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி இல்லாமல் சந்தித்து கணிச ன வாக்கு பெற்றுள்ளோம். தற்போது கூட்டணி அமைந்துள்ளதால் பலம் பெற்றுள்ளோம். இதனால் தி.மு.க.வினர் தூக்கத்தை தொலைத்துள்ளனர். தி.மு.க. நிர்வாகிகளுக்கு பயமும் பீதியும் ஏற்பட்டுள்ளது. தி.மு.க. ஆட்சி விரட்டியடிக்கப்படும் நாள் நெருங்கி விட்டது.
புதுவையின் வளர்ச்சிக்கு தேவையான திட்டங்களை கருத்துகளை முதலமைச்சர் ரங்கசாமி பிரதமரிடம் தெரிவித்து வருகிறார். புதுச்சேரிக்கு தேவையான நிதி, திட்டங்களை மத்திய அரசு அளித்து வருகிறது.
திராவிடர் கழகம் என்றாலே கலவரம்தான். அவர்கள் தங்களை போலவே பிறரையும் நினைத்து கலவரம் ஏற்படுத்த வருவதாக கூறுகிறார்கள்.
திருப்பரங்குன்றம் முருகன் மாநாடு தமிழக அரசியலில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். உலகம் முழுவதும் இருந்து முருக பக்தர்கள் மாநாட்டில் பங்கேற்பார்கள். இந்த மாநாடு திருப்பரங்குன்றத் தில் நடந்த சம்பவத்தில் காயம் அடைந்த முருக பக்தர்களுக்கு மருந்தாக அமையும். கூட்டணி பற்றி கட்சி தேசிய தலைவர்கள் முடிவு எடுப்பார்கள். தமிழகம் புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.






