என் மலர்
புதுச்சேரி

புதுச்சேரியில் மீண்டும் மின் கட்டணம் உயர்கிறது
- கடந்த ஏப்ரல் மாதம் முதல் யூனிட்டுக்கு 45 பைசா வீதம் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது.
- ஒரே ஆண்டில் 2 முறை கட்டணத்தை உயர்த்துவதா? என அரசியல் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.
புதுச்சேரி:
யூனியன் பிரதேசமான புதுச்சேரிக்கு மின் கட்டணத்தை இணை மின்சார ஒழுங்குமுறை ஆணையம் நிர்ணயிக்கிறது.
இதற்காக ஆண்டுதோறும் புதுச்சேரி மின்துறை வருவாய், செலவினங்களை ஆணையத்திடம் சமர்பிக்கும். வரவு, செலவு அடிப்படையில் உத்தேச மின் கட்டண உயர்வு பட்டியலையும் ஆணையத்திடம் சமர்பிக்கும்.
இதில் வீட்டு உபயோகம், பொது சேவை, வணிகம், ஓட்டல் மற்றும் பண்ணை வீடுகள், தொழிற்சாலைகள் ஆகியவற்றுக்கு உத்தேச கட்டணம் நிர்ணயித்து சமர்பிக்கும். இதையடுத்து ஆணையம், மக்கள் கருத்து கேட்பு கூட்டத்தை நடத்தி மின் கட்டண உயர்வை நிர்ணயம் செய்யும்.
பெரும்பாலும் புதுச்சேரி அரசின் மின்துறை நிர்ணயிக்கும் கட்டணத்தையே ஆணையம் ஏற்று அதற்கான அனுமதியை வழங்கும்.
கடந்த ஏப்ரல் மாதம் முதல் யூனிட்டுக்கு 45 பைசா வீதம் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது.
இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து அரசே மின் கட்டண உயர்வை ஏற்கும் என அறிவித்தது. இதன்படி ரூ.35 கோடி மின்துறைக்கு அரசு மானியமாக வழங்குகிறது.
இந்த நிலையில் கடந்த அக்டோபர் 1-ந் தேதி முதல் மின் கட்டணம் யூனிட்டுக்கு 20 பைசா உயர்த்தப்பட்டது. ஒரே ஆண்டில் 2 முறை கட்டணத்தை உயர்த்துவதா? என அரசியல் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.
இதையடுத்து இந்த மின் கட்டண உயர்வையும் அரசே ஏற்கும் என அறிவித்துள்ளது. இதற்கான கோப்பு ஆளுநர் அனுமதிக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த அனுமதி கிடைத்தால் மின்துறைக்கு அரசு ரூ.10 கோடி வழங்கும். நுகர்வோருக்கு கட்டணம் உயராது என தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் 2025-2030 வரை 5 ஆண்டுகளுக்கு மின் கட்டணத்தை உயர்த்த புதுச்சேரி அரசின் மின்துறை இணை ஒழுங்குமுறை மின்சார ஆணையத்திடம் அனுமதி பெற்றுள்ளது.
இதன்படி நடப்பு ஆண்டில் வீட்டு உபயோக மின் கட்டணம் முதல் 100 யூனிட்டுக்கு ரூ.2.90, 101 முதல் 200 வரை ரூ.4.20, 201 முதல் 300 வரை ரூ.6.20, 301 முதல் 400 வரை ரூ.7.70, 400க்கு மேல் ரூ.7.90 என கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது.
இந்த கட்டணம் 1.10.2025 முதல் முன்தேதியிட்டு வசூலிக்கப்பட உள்ளது. வழக்கமாக மின் கட்டணம் முதல் 100 யூனிட், 101 முதல் 200, 201 முதல் 300, 300க்கு மேல் என கட்டணம் நிர்ணயிக்கப்படும். தற்போது புதிதாக 301 முதல் 400, 400-க்கு மேல் என புதிய சிலாப்பும் உருவாக்கப் பட்டுள்ளது.
இதன்படி குறைந்தபட்சமாக ஒரு யூனிட்டுக்கு 20 பைசா மின் கட்டணம் உயர்த்தப் பட்டுள்ளது. இதற்கு அரசு மானியம் வழங்குமா? என இனிமேல்தான் தெரியவரும்.






