என் மலர்
புதுச்சேரி

வங்கதேச பயங்கரவாதிகள் புதுச்சேரியில் ஊடுருவல்?- தொழிற்சாலைகளில் ஆய்வு நடத்த உத்தரவு
- பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார், சம்பந்தப்பட்ட நபர்களை தமிழகம் முழுவதும் தேடி வருகின்றனர்.
- புதுச்சேரியில் உள்ள தொழிற்சாலைகளில், புலம்பெயர்ந்த தொழிலாளர்களை நியமிப்பதில் விழிப்புடன் கண்டிப்புடன் இருக்க வேண்டும்.
புதுச்சேரி:
தமிழகம் மற்றும் அசாம் போலீசார் கடந்த 15-ந் தேதி தமிழகத்தில் சென்னை செம்மஞ்சேரியில் பயங்கர சதித்திட்டத்துடன் தங்கி இருந்த பயங்கரவாதி அபுசலாம் அலியை கைது செய்தனர்.
இதன் தொடர்ச்சியாக திருப்பூர், சேலம், நாமக்கல், கோவை, பொள்ளாச்சி உள் ளிட்ட ஊர்களில் வங்க தேசத்தினர் 45 பேர் போலி ஆதார் கார்டு பெற்று தமிழகத்தில் தங்கி இருப்பது தெரியவந்தது. இதில் பலர் கைது செய்யப்பட்டு ஜாமின் விடுதலை பெற்று சிறப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் இதில் தொடர்புடைய 45 பேரை காணவில்லை என்பதால் தமிழக போலீசார் அவர்களை பல இடங்களில் தேடி வருகின்றனர். அவர்களில் பலர் ஜமாத்உல் முஜாஹி தீன் மற்றும் அன்சூர்ல்லா பங்களா டீம் பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
அதன்படி பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார், சம்பந்தப்பட்ட நபர்களை தமிழகம் முழுவதும் தேடி வருகின்றனர்.
மேலும் தமிழகத்தில் தங்கி தொழிற்சாலைகளில் பணிபுரியும் வடமாநில தொழிலாளர்களிடம் அதிரடி சோதனை நடத்தி பதிவேடுகள், ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களை ஆய்வு செய்து வருகின்றனர்.
இதற்கிடையே புதுச்சேரியில் வட மாநில தொழிலாளர் என்ற போர்வையில் சதித்திட்டத்துடன் வங்கதேச பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் போலி ஆதார் கார்டு மூலம் ஊடுருவி இருக்கலாம் என புகார் வந்தது.
இதனை தொடர்ந்து புதுச்சேரி அரசு தொழிலாளர் துறை தொழிற்சாலை மற்றும் கொதிகலன் கண்காணிப்பு பிரிவின் கண்காணிப்பாளர் முரளி அனைத்து தொழிற்சாலைகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
அதில் வங்கதேசத்தை சேர்ந்த சிலர் போலி ஆதார் அட்டைகளை பெற்று தமிழகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தங்கி இருப்பதாகவும், அது குறித்து தமிழக போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இது போன்ற சூழலில் புதுச்சேரியில் உள்ள தொழிற்சாலைகளில், புலம்பெயர்ந்த தொழிலாளர்களை நியமிப்பதில் விழிப்புடன் கண்டிப்புடன் இருக்க வேண்டும்.
உங்கள் தொழிற்சாலைகளில் ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ள புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் பதிவுகளை சரி பார்க்கவும் இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது. அப்படி ஏதேனும் வட மாநில தொழிலாளர்கள் என்ற போர்வையில் உரிய பதிவேடுகள் ஆவணங்கள் இன்றி யாரேனும் சட்ட விரோதமாக தங்கி இருப்பது கண்டறிந்தால் உடனே காவல்துறைக்கு தெரிவித்து சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






