என் மலர்
புதுச்சேரி

கூட்டம் சேர்க்க திணறும் அரசியல் கட்சிகளிடையே புதுச்சேரியிலும் சாதித்து காட்டிய த.வெ.க.
- போலீசார் பல்வேறு கட்டுப்பாடுகளை பொதுக்கூட்டத்துக்கு விதித்திருந்தனர்.
- நேற்று கல்லூரி, பள்ளிகள் இருந்தும், பலரும் கூட்டத்தில் பங்கேற்றனர்.
புதுச்சேரி:
நாடு முழுவதும் அரசியல் கட்சிகளுக்கு கூட்டம் சேர்ப்பது கடும் சவாலாக உள்ளது.
தமிழகம், புதுச்சேரியில் அரசியல் கட்சிகள் ஊர்வலம், பொதுக்கூட்டம் பேரணி ஆகியவற்றுக்கு தினக்கூலி, குவார்ட்டர், பிரியாணி வழங்கி அழைத்து வருகின்றனர். அவர்களை அழைத்து வர வாகனங்களும் ஏற்பாடு செய்ய வேண்டும்.
இந்த நடைமுறை நீண்ட காலமாக புதுச்சேரியில் நடந்து வருகிறது. மக்களுக்கான போராட்டத்துக்கு கூட கூட்டம் சேர்ப்பது எளிதான காரியமாக இருந்தது இல்லை. ஆனால் த.வெ.க. நடத்திய பொதுக்கூட்டத்துக்கு தானாகவே முன்வந்து மக்கள் திரளாக பங்கேற்றனர்.
போலீசார் பல்வேறு கட்டுப்பாடுகளை பொதுக்கூட்டத்துக்கு விதித்திருந்தனர். வாகனங்களில் வந்தவர்களை அம்பேத்கர் சாலையில் தடுத்து நிறுத்தினர். இருப்பினும் வாகனங்களை கிடைத்த இடத்தில் நிறுத்திவிட்டு பொதுக்கூட்டத்துக்கு நடந்தே வந்து பங்கேற்றனர்.
இதில் பங்கேற்றவர்களில் 90 சதவீதத்தினர் 30 வயதுக்குட்பட்ட இளைஞர்கள், பெண்கள்தான். நேற்று கல்லூரி, பள்ளிகள் இருந்தும், பலரும் கூட்டத்தில் பங்கேற்றனர். இதில் சிலர் தங்களின் கல்லூரி, பள்ளி சீருடையுடன் வந்திருந்தனர்.
பொதுக்கூட்டத்தை பொறுத்தவரை பாஸ் கொடுத்ததைவிட அதிகமானோர் வந்திருந்தனர்.
ஏற்கனவே விக்கிரவாண்டி, மதுரையில் நடந்த த.வெ.க. மாநாடு மற்றும் திருச்சியில் நடந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் த.வெ.க. தொண்டர்கள் மட்டுமல்லாமல் பொது மக்களும் திரளானோர் கலந்து கொண்டனர்.
தற்போது புதுவையில் 5 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு இருந்த நிலையில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் த.வெ.க. பொதுக்கூட்டத்தில் பங்கேற்றனர்.
கூட்டம் சேர்க்கவே திணறும் அரசியல் கட்சிகள் மத்தியில் பெரும் கூட்டத்தை த.வெ.க. கூட்டி சாதித்து காட்டியுள்ளது.






