என் மலர்tooltip icon

    இந்தியா

    அரியானாவில் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய கார்: பெண் பத்திரமாக மீட்பு
    X

    வெள்ளத்தில் சிக்கிய காரையும், அதில் இருந்த பெண்ணை மீட்கும் முயற்சியில் இளைஞர்கள் ஈடுபட்டதையும் படத்தில் காணலாம்.

    அரியானாவில் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய கார்: பெண் பத்திரமாக மீட்பு

    • வடகிழக்கு மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.
    • பல இடங்களில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    சண்டிகர் :

    வடகிழக்கு மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில் நேற்று அரியானாவில் கனமழை வெளுத்து வாங்கியது. காலை முதலே மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் பல இடங்களில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    அந்த வகையில் பஞ்ச்குலா மாவட்டத்தில் கொட்டித்தீர்த்த பேய் மழையால் அங்குள்ள காக்கர் ஆற்றில் அபாய அளவை தாண்டி வெள்ளம் பாய்ந்தது. இந்த காட்டாற்று வெள்ளத்தில் ஆற்றங்கரையோரம் நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்று அடித்து செல்லப்பட்டது.

    காரில் கோவிலுக்கு வந்த பெண், கோவிலில் இருந்து திரும்பி வந்து, காரில் அமர்ந்திருந்தபோது,திடீர் வெள்ளம் வந்து காரை இழுத்து சென்றது. இதை கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

    எனினும் மீட்பு குழுவினர் வருவதற்குள் கார் காட்டாற்று வெள்ளத்தின் நடுவே சிக்கிக்கொண்டது. இதையடுத்து, வெள்ளத்தில் சிக்கிய காரில் ஆபத்தான நிலையில் இருந்த பெண்ணை கயிறு கட்டி மீட்க உள்ளூர் மக்கள் முடிவு செய்தனர்.

    அதன்படி அங்கிருந்த இளைஞர்கள் சிலர் ஒரு கம்பத்தில் கயிற்றை கட்டி, அதை பிடித்து மெல்ல மெல்ல நகர்ந்து, பெருக்கெடுத்து ஓடிய வெள்ளத்தின் நடுவே சிக்கிய காரை அடைந்தனர். அதன் பின்னர் நீண்ட போராட்டத்துக்கு பின் காரில் இருந்த பெண்ணை பத்திரமாக மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். உடனடியாக அந்த பெண் அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். அவர் தற்போது நலமுடன் இருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இதனிடையே காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய பெண்ணை கயிறு கட்டி பத்திரமாக மீட்டதை சிலர் செல்போனில் வீடியோ எடுத்து சமூகவலைத்தளங்களில் பதிவிட்டனர். பதைபதைக்க வைக்கும் அந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.

    Next Story
    ×