என் மலர்
இந்தியா

பெண்ணிடம் அத்துமீறல்: பெங்களூரு போன்ற பெரிய நகரில் இதுபோன்று நடக்கத்தான் செய்கிறது- கர்நாடக மந்திரி சர்ச்சை பேச்சு
- ஆளில்லா தெருவில் நடந்த சென்றபோது வாலிபர் அத்துமீறல்.
- பெங்களூரு போன்ற ஒரு பெரிய நகரத்தில், இது போன்ற சம்பவங்கள் இங்கே, அங்கே என நடக்கத்தான் செய்கின்றன.
கர்நாடகாவின் பெங்களூருவில் ஒரு தெருவில் பெண் ஒருவர் தனது தோழியுடன் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த வாலிபர் ஒருவர் திடீரென அத்துமீறி அந்த பெண்ணை வலுக்கட்டாயமாக கட்டிப்பிடித்தார். அத்துடன் தொடக்கக்கூடாத இடங்களில் தொட்டு பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார். பின்னர் சுதாரித்துக் கொண்ட அந்த பெண் வாலிபரை தள்ளிவிட்டு தப்பி சென்றார்.
சிசிடிவி மூலம் இந்த விவகாரம் தெரியவந்தது. அந்த வாலிபர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வரும் நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக கர்நாடகா மாநில உள்துறை மந்திர ஜி. பரமேஷ்வரா தெரிவித்த கருத்து கடும் விமர்சனத்தை எழுப்பியுள்ளது.
கர்நாடகா மாநில உள்துறை அமைச்சர் ஜி. பரமேஷ்வரா இது தொடர்பாக கூறியதாவது:-
மழை மற்றும் குளிரைப் பொருட்படுத்தாமல் போலீசார் தொடர்ந்து 24 மணி நேரமும் பணியாற்றி வருகின்றனர். அதனால்தான் பெங்களூருவில் அமைதி நிலவுகிறது. பெங்களூரு போன்ற ஒரு பெரிய நகரத்தில், அங்கே ஒன்று, இங்கே ஒன்று என இதுபோன்ற சம்பவங்கள் நடக்கத்தான் செய்கின்றன.
ஒவ்வொரு பகுதியிலும் ரோந்துப் பணி ஒழுக்கமான மற்றும் பயனுள்ள முறையில் நடக்க வேண்டும் என்று நான் போலீஸ் கமிஷனரிடம் வலியுறுத்தியுள்ளேன். நாங்கள் சட்டப்படி நடவடிக்கை எடுக்கிறோம். பீட் (Beat) முறையை மிகவும் பயனுள்ளதாக மாற்ற வேண்டும். அதனால்தான் நான் இது குறித்து போலீஸ் கமிஷனரிடம் உத்தரவிட்டுள்ளேன்.
இவ்வாறு பரமேஷ்வா தெரிவித்தார்.
பெரிய நகரில் அங்கொன்றும், இங்கொன்றுமாக இதுபோன்ற சம்பவம் நடக்கத்தான் செய்கிறது என்ற பரமேஷ்வா கருத்து கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2017ஆம் ஆண்டு இதேபோன்று பெண்களுக்கு எதிராக பாலியல் தாக்குதல் தொடர்பாக இதுபோன்று அலட்சியமாக பதில் அளித்தார். பரமேஷ்வரா தொடர் குற்றவாளி. அவரை ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மந்திரி பதவியில் இருந்து ராஜினாமா செய்ய வேண்டும் என பாஜக வலியுறுத்தியுள்ளார்.






