என் மலர்
இந்தியா

ஓய்வுக்குப் பிறகு எந்தப் பதவியையும் ஏற்கப்போவதில்லை.. சஞ்சீவ் கன்னா பேச்சு
- நீதித்துறையில் உண்மை பற்றாக்குறையாக இருப்பது கவலை அளிக்கிறது.
- பல்வேறு பின்னணிகளைச் சேர்ந்தவர்கள் உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளாக மாறுகிறார்கள்.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி (CJI) சஞ்சீவ் கன்னா இன்றுடன் (செவ்வாய்க்கிழமை) ஓய்வு பெற்றார். உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் இன்று அவருக்கு பிரியாவிடை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது. இதில் புதிய தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்ட பி.ஆர்.கவாய் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்வில் பேசிய சஞ்சீவ் கன்னா, "நீதித்துறை அமைப்பு வழக்கறிஞர்கள் மற்றும் நீதிபதிகளால் ஆனது. பொதுமக்களிடம் நீதியின் மீது நம்பிக்கையை திணிக்க முடியாது. அதை சம்பாதிக்க வேண்டும்.
நீதித்துறையில் உண்மை பற்றாக்குறையாக இருப்பது கவலை அளிக்கிறது. உண்மைகளை மறைக்கவிட்டால் வழக்கில் வெற்றி பெற முடியாது என நம்புகிறேன். வழக்கறிஞர்கள் தங்கள் மனசாட்சியைக் காத்துக் கொள்ள வேண்டும். பல்வேறு பின்னணிகளைச் சேர்ந்தவர்கள் உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளாக மாறுகிறார்கள்.
அந்தப் பன்முகத்தன்மை நீதிமன்றம் நல்ல முடிவுகளை எட்ட உதவுகிறது. நீதிபதி பி.ஆர். கவாய் எனக்குப் பெரும் ஆதரவாக இருந்துள்ளார். நான் அவரிடம் ஒரு நல்ல தலைமை நீதிபதியைப் பார்க்கிறேன். அவர் அடிப்படை உரிமைகள் மற்றும் சுதந்திரத்திற்காக நிற்பார்" என்று தெரிவித்தார்.
மேலும் செய்தியாளர் சந்திப்பில் பேசிய சஞ்சீவ் கன்னா, 'ஒய்வுக்குப் பிறகு எந்தவொரு பதவியையும் ஏற்கப்போவதில்லை என்றும் மாறாக சட்டத் துறையில் எதையாவது செய்யலாம்'' என இருப்பதாகவும் சஞ்சீவ் கன்னா தெரிவித்தார்.
நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான ஊழல் குற்றச்சாட்டு விசாரணை குறித்து பதிலளித்த அவர், ''நீதித் துறையின் சிந்தனை தீர்க்கமானதாக இருக்க வேண்டும். இந்த வழக்கில் உள்ள நிறை மற்றும் குறைகளை ஆராய்ந்து பகுத்தறிவுடன் நாங்கள் முடிவு செய்கிறோம். நீங்கள் செய்தது சரியா? தவறா? என்பதை எதிர்காலம் உங்களுக்குச் சொல்லும்'' எனக் கூறினார்.
இந்தியாவின் 51வது தலைமை நீதிபதியாக பணியாற்றிய சஞ்சீவ் கன்னா கடந்த ஆண்டு நவம்பர் 11 ஆம் தேதி பொறுப்பேற்றார். இதற்கு முன்பு, அவர் 2005 ஆம் ஆண்டு டெல்லி உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவும், பின்னர் நிரந்தர நீதிபதியாகவும் பணியாற்றினார். அவர் ஜனவரி 19, 2019 அன்று உச்ச நீதிமன்ற நீதிபதியாகப் பதவியேற்றார்.






